noolarimugam: oor er uzhavan - yesudoss நூல் அறிமுகம்: ஓர் ஏர் உழவன் - இரா.இயேசுதாஸ்

நூல் அறிமுகம்: ஓர் ஏர் உழவன் – இரா.இயேசுதாஸ்

"ஓர் ஏர் உழவன்" என்ற பெயரில் திரு.இரா.பாலகிருஷணன் இ.ஆ.ப.அவர்கள் எழுதிய நூலை ரோஜாமுத்தையாஆராய்ச்சி நூலகம்,பாரதி புத்தகாலயம், திருச்சி களம் இலக்கிய அமைப்பு ஆகியன இணைந்து அண்மையில் வெளியிட்டுள்ளன.முகப்பு ஓவியம் டிராட்ஸ்கி மருது. 208 பக்கங்கள் ..விலை ரூ200/ கனமான தடித்த அட்டை..தரமான…
Challenges faced in contemporary language politics (Tamil Nationalism) Article by Writer Sa. Tamilselvan. Book Day, Bharathi Puthakalayam

சமகால மொழி அரசியலில் எதிர்கொள்ளும் சவால்கள் – ச. தமிழ்ச்செல்வன்



வீழ்ந்துவிடா வீரம்! மண்டியிடா மானம்!!” என்பதைத் தன் முழக்கமாகக் கொண்டுள்ள திரு. சீமான் தலைமையிலான ‘நாம் தமிழர் கட்சி’ தன்னைத் தமிழின மீட்புக்கான கட்சி எனப் பிரகடனம் செய்து இயங்கி வருகிறது. அண்மையில் நடை பெற்ற சட்டமன்றத்தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட அந்தக் கட்சி 30,41,974 (6.6%) வாக்குகள் பெற்று தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. சமூக வலைத்தளங்களில், சீமானின் அறிவியல் பார்வையற்ற அதிரடிப் பேச்சுக்கள் ஒரு பகுதியினரால் கலாய்க்கப்பட்டாலும், மற்றொரு பகுதி இளைஞர்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.

தமிழ்த்தேசிய அரசியலின் ஒரே முகம் சீமான்தான் என்று சொல்லிவிட முடியாது. அவர் பேசுவதெல்லாமே தமிழ்த்தேசிய அரசியல் என்றும் சொல்ல முடியாது. தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சி, தமிழ்த்தேச விடுதலை இயக்கம், தமிழ்ப்புலிகள் இயக்கம், மே-17 இயக்கம் போன்ற, அளவில் சிறிய இயக்கங்களும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக வாழ்வுரிமைக்கட்சி போன்றவையும் அவ்வப்போது திராவிட முன்னேற்றக்கழகமும் தமிழ்த்தேசிய அரசியலை/அதன் பல்வேறு கூறுகளை முன்னெடுத்துப் பேசுவதைப் பார்த்திருக்கிறோம். பார்த்தும் வருகிறோம்..

மொழியை அரசியல் அணிதிரட்டலுக்கான ஆயுதமாகப் பயன்படுத்தும் இயக்கங்கள் எல்லாமே தமிழ்த்தேசிய அரசியல் முன்னெடுப்பதாகக் கொள்ளலாம். வர்க்கத்தை அவர்கள் அடிப்படையாக கொள்வதில்லை. மக்கள் கொண்டிருக்கும் பல அடையாளங்களிலும் மொழி அடையாளமே அடிப்படை எனக்கொண்டு அவர்களின் அரசியல் அமைகிறது. வகுப்புவாத இயக்கங்களும் கூட தமிழ்த் தேசியத்தை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள். அதற்கேற்பவும் சில தமிழ்த் தேசியர்கள் பேசியிருக்கின்றனர்.

1959 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (தமிழ்நாடு கமிட்டி)யின் 5-ஆவது மாநில மாநாட்டு அறிக்கையில் அன்றைக்கு வளர்ந்து கொண்டிருந்த தி.மு.க பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டது:

“இந்தியாவின் இதர சில மாகாணங்களில், காங்கிரஸ் கொள்கையினால் அதிருப்தி அடைந்த மக்களை வகுப்புவாதக் கட்சிகள் ஆகர்ஷிக்க முடிகிற மாதிரி, தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில், தவறான கோஷத்தினடிப்படையில் மக்களில் சில பகுதி யினரை தி.மு.க. திரட்ட முடிகிறது. இந்தக் கட்சியின் பால் அனுசரிக்கப்படவேண்டிய கொள்கை, தமிழ் நாட்டில் ஒரு முக்கியமான அரசியல் பிரச்சினையாகும்.

பூர்ஷுவா கட்டுக்கோப்புக்குள்ளேயே, தேர்தல்களை லட்சியமாகக் கொண்டு, பிரச்சாரத்தையே பிரதான வேலையாக வைத்து, ஒரு பூர்ஷ்வா ஸ்தாபன அமைப்பாகத்தான் தி.மு.க. உருப்பெற்று வருகிறது. வர்க்க ஸ்தாபனங்களை வளர்க்க விரும் பாததால், காங்கிரஸ் கட்சியுடன் அடிப்படையான கொள்கைகளில் மோதல் ஏற்பட இடமில்லை .”

அதே அறிக்கை மேலும் குறிப்பிடுவது:

“இவர்களுடைய சமூக அஸ்திவாரத்தைப் பின் வருமாறு நிர்ணயிக்கலாம்: கிராமங்களில் பண வசதியுள்ள விவசாயிகளின் பையன்கள், பள்ளிப்படிப்பு முடிந்து கிராமத்திலிருக்கும் இளைஞர்கள், சில மத்தியதர விவசாயிகள், சிறு தொழில் நடத்துப் வர்கள், மாணவர்கள், ஸ்தாபன ரீதியாகத் திரட்டப்படாத நகர உழைப்பாளிகளில் ஒரு பகுதி, சர்க்கார் சிப்பந்திகளில் கணிசமான பகுதி, பள்ளி உபாத்தியாயர்களில் ஒரு பகுதி, மேற்கூறிய பகுதிகளிடம் தி.மு.க. மேலும் பரவினால் ஆச்சரியப்படுவதற் கில்லை. இவர்களை அஸ்திவார மாகவும் பிரச்சாரக் கருவிகளாகவும் கொண்டு, இதர தொழிலாளிகள் விவசாயிகளிடம் இவர்கள் செல்வாக்கு நுழைவதும் சாத்தியம். சிற்சில இடங்களில் இது நடைபெற்றும் வருகிறது. –

சாதாரண ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பிரச்னைகளை எடுத்துப் போராட்டங்களை ஒடு முக்கிய அரசியல் வேலையாக திமுக நடத்து தில்லை. பொதுக்கூட்டங்கள், பத்திரிகைகள், பிரசுரங்கள், கலை நிகழ்ச்சிகள் மூலம் பிரச்சாரம்தா ‘அவர்களுடைய பிரதான கட்சி வேலையாயிருக்கிறது.

முதலாளித்துவ வளர்ச்சி ஏற்றத்தாழ்வா இருப்பதும், தமிழ் மக்களை வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, முதலிய பல நெருக்கடிகளுக்கும் ஆளாக்கும் காங்கிரஸ் சர்க்காரின் கொள்கைகளும் நடைமுறையும், திமுக இயக்கம் வளர்வதற்கான சூழ்நிலையை அளிக்கின்றன. தமிழ் மறுமலர்ச்சி, பிரதேச தொழில் வளர்ச்சி, தமிழ் இன எழுச்சி, முதலியவற்றிற்கு தவறான ரூபத்தைக் கொடுத்து இவர்கள் மக்களிடம் ஆதரவு பெற முடிகின்றது. பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த இந்திய மக்களின் விடுதலை ஆர்வத்திற்கு ஒப்பாக, வடநாட்டு ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் தமிழனின் விடுதலை இயக்கமாக, தமிழ்நாட்டு நிலைமையை சாமர்த்தியமாகவும், கவர்ச்சிகரமாகவும் திமுக தலைமை வர்ணித்து, மக்களைத் திசை திருப்பி விடுகிறது.”

இந்த வரலாற்று இணைகளைத் தொட்டுக்காட்டுவது அச்சுறுத்த அல்ல. ஆனால் இந்த அறிக்கை ஆய்வு செய்தது போல,. நா.த.க. உள்ளிட்ட தமிழ்த்தேசிய அரசியலை இன்று முன்னெடுக்கும் அமைப்புகளில் இணைந்துள்ள இளைஞர்கள், பொதுமக்களின் வர்க்கப்பின்னணி சமூகப்பின்னணி பற்றியெல்லாம் ஆய்வு செய்து புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

Challenges faced in contemporary language politics (Tamil Nationalism) Article by Writer Sa. Tamilselvan. Book Day, Bharathi Puthakalayam

ஆகவே தமிழ்நாட்டில் பல இயக்கங்களும் தங்கள் வளர்ச்சிக்குத் தேவை என்று கருதும் போதெல்லாம் தமிழ் இன அல்லது தமிழ் இனவாத அரசியல் முழக்கங்களைக் காலம் தோறும் எழுப்பியே வந்திருக் கின்றன. சில சந்தர்ப்பங்களில் சில பிரச்னைகளில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியும் தமிழ்த்தேசிய வாதிகளின் நிலைபாட்டுக்கு நெருக்கமான நிலைப்பாட்டை எடுத்ததுண்டு. ஆகவே தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஒரு வரலாறு தமிழ் மண்ணில் இருக்கிறது. ஒரு கட்சி சார்ந்ததாக மட்டும் அது இருக்கவில்லை. பல இயக்கங்களும் கையிலெடுப் பதும் கீழே போடுவதுமான தன்மையுடன் அது இருந் துள்ளது. அந்தந்தக் காலச் சூழலுக்குள் வைத்து அவற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மார்க்சும் எங்கெல்சும் வாழ்ந்த காலத்தில் ஐரோப்பாக்கண்டம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருந்த ஒரு பிரச்னை தேசிய இனப்பிரச்னை. முதல் உலகப்போரை நோக்கி இட்டுச்சென்ற ‘சந்தைக்கான’ முதலாளித்துவ, பிரபுத்துவப் பங்கீட்டுச் சண்டைக்காலத்தில் ஆக்கிரமிப்பு யுத்தங்களின் மூலம் தேச எல்லைகள் அழிக்கப்படுவதும் மீண்டும் மீண்டும் புதிய தேசங்கள் உருவாக்கப் படுவதும் சிதைக்கப்படுவதுமான நிகழ்வுப்போக்கில். முன்னுக்கு வந்தவை ஆட்சி மொழி, பயிற்றுமொழிப் பிரச்னையும் அதை ஒட்டிய தேசிய இனப் பிரச்னையும்தான். எனவே, தேசிய இனப்பிரச்னை குறித்து ஆழமான கவனத்தை மார்க்சும் ஏங்கெல்சும் செலுத்தினர் என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை .

உலகின் முதல் காலனியாக்கப்பட்ட நாடான அயர்லாந்தின் வரலாற்றில் துவங்கி ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் வரலாறுகள் எல்லாவற்றையும் ஆழமாக ஆய்வு செய்து பல கட்டுரைகளை எழுதினர். ருஷ்ய தேசிய இனத்தின் ஒடுக்கு முறைக்கு ஆளான பல்வேறு தேசிய இனங்களின் பிரச்னைகள் குறித்து லெனின் தொடர்ந்து கவனம் செலுத்தினார்.

மார்க்சியவாதிகளிடத்தும் மார்க்சியவாதிகளாக ஆக விரும்புவோரிடத்தும் தேசிய இனப்பிச்னை குறித்துக் காணப்படும் வேலைத்திட்ட ஊசாலாட்டங் களைப் பரிசீலனை செய்யும் நோக்கத்துடன் தோழர் லெனின் 1913 செப்டம்பர் 5 பிராவ்தா இதழில் எழுதிய “மொழிப்பிரச்னை குறித்து மிதவாதிகளும் ஜனநாயக வாதிகளும்” என்கிற கட்டுரை, மொழி மற்றும் தேசிய இனம் சார்ந்த பிரச்னையை மார்க்சியர் எப்படி அணுகவேண்டும் என்பதற்கான வழிகாட்டும் வாசகங்களைக் கொண்டுள்ளது. அக்கட்டுரையின் சில பகுதிகளை இங்கு பார்க்கலாம்: –

“தேசிய இனங்களின், மொழிகளின் சமத்துவத்தை அங்கீகரிக்காத, அதற்காகப் போராடாத எவரும், எல்லாவிதமான தேசிய இன ஒடுக்குமுறையையும் சமத்துவமின்மையையும் எதிர்த்துப் போராடாத எவரும் மார்க்சியவாதி அல்ல, ஜனநாயகவாதியுங்கூட அல்ல. அது சந்தேகத்துக்கு இடமில்லாதது”

“ பாட்டாளி வர்க்கம் குறித்துப் பேசுகையில் ஒட்டு மொத்தமாய் உக்ரேனியக் கலாசாரத்தை ஒட்டுமொத்தமாய் ருஷ்யக் கலாசாரத்துக்கு எதிராய் வைத்திடுவதானது, முதலாளித்துவ தேசியவாதத்தின் நலனை முன்னிட்டு வெட்கமின்றிப் பாட்டாளி வர்க்க நலன்களுக்குத் துரோகமிழைப்பதே ஆகும்.”

” ஒரு தேசிய இனத்தின் தொழிலாளர்கள் மற்றொன்றின் தொழி லாளர்களிடமிருந்து தனியே பிரிக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுவதையும், மார்க்சிய ”ஒன்று கலத்தல்” மீதான எல்லாத் தாக்குதல்களையும், பாட்டாளி வர்க்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் ஒட்டு மொத்தமாய் ஒருதேசியக் கலாசாரத்தை ஒருமித்த தாய் இருப்பதாகப் பாவிக்கப்படும் இன்னொரு தேசிய கலாசாரத்துக்கு எதிராய் வைப்பதற்கான எந்த முயற்சிகளையும், இன்ன பிறவற்றையும் எவ்விதத்திலும் ஆதரித்து நிற்பதானது, முதலாளித்துவ தேசியவாதமே ஆகும். இந்த முதலாளித்துவ தேசியவாதத்தை எதிர்த்து ஈவிரக்க மற்ற போராட்டம் நடத்துவது அத்தியாவசியக் கடமையாகும்.”

இம்மூன்றும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்ததாக நம்முடைய பார்வை இருக்க வேண்டும். இவற்றில் முதல் பத்தியை மட்டும் எடுத்துக்கொண்டு இனவாத எல்லைக்கும் போகக் கூடாது. எந்தத் தேசிய இனமானாலும் அந்தந்த தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்க ‘ஒன்று கலத்தலின்’ மீது நின்றே தேசிய இன விடுதலையைப் பேச வேண்டும் என்கிற வழிகாட்டுதலை லெனின் தருகிறார். இந்தப்பார்வையை உட்கொண்டே நாம் தமிழ்த்தேசியத்தின் வரலாற்றுத் தடங்களைப் பார்க்க வேண்டும்.

தமிழ்த்தேசியத்தின் தடங்கள்:

கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரிகளான எல்லிஸ், பர்னல், ரிச்சர்ட் கிளார்க் போன்றோர் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் மக்கள் பின்பற்றும் சட்டங்கள், வழக்கங்கள் ஆகியவற்றின் தொகுப்பையே ‘திராவிடம்’ என்றனர். ஆனால் அறிஞரும் கிறித்துவ மிசனரியுமான ராபர்ட் கால்டுவெல்தான் முதன் முதலாக ‘திராவிடம் என்பது தமிழ் உள்ளிட்ட பல மொழிகள் அடங்கிய மொழிக்குடும்பத்தைக் குறித்தது என்று சொன்னார். (மொழியாகிய தமிழ்-ந.கோவிந்தராஜன் – க்ரியா பதிப்பகம்)

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் எனத்துவங்கி
“கன்னடமுங் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம் வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!” என்கிற பாடலை (இன்று நம் தமிழ்த்தாய் வாழ்த்து) மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடுவதற்கு அடியெடுத்துக் கொடுத்தவர் கால்டுவெல்.

ஆங்கிலேயர்களுக்கு அதுகாறும் எல்லாமே சமஸ்கிருதம் தான். சமஸ்கிருதம் தான் இந்தியாவின் மொழிகளுக்கெல்லாம் தாய் என்றே ஐரோப்பிய அறிவுலகம் நம்பியது. மாக்ஸ் முல்லர் போன்ற வர்கள் வடமொழி இலக்கியம் – பண்பாடு – கலை என்பதைத் தாண்டித் தெற்கு நோக்கித் திரும்பவே இல்லை. திராவிட மொழிகளை வடநாட்டார் ‘பைசாச பாகதம்’ அதாவது ‘பேய்களின் மொழி’ என்றே பேசி வந்தனர். இதற்குப் பின்னால் ஒரு மொழி அரசியல்’ இருந்தது. அதை உடைத்து தமிழ்மொழியின் சிறப்புகளையும் அதன் செறிவுமிக்க இலக்கியங்களையும் ஐரோப்பாவுக்கு எடுத்துச் சென்றவர்கள் கிறித்துவப் பாதிரிமார்களே.

1606-ல் இத்தாலியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த ராபர்ட்டி நொபிலி, 1700-ல் இத்தாலியிலிருந்து வந்து தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கண்ட வீரமாமுனிவர் என்ற கான்ஸ்ட ன்டின் ஜோசப் பெஸ்கி, 1709-ல் ஜெர்மனியிலிருந்து வந்து தமிழ் கற்றுத் தொண்டாற்றிய சீகன் பால்கு, 1796-ல் இங்கிலாந்திலிருந்து வந்திறங்கி திருக்குறளின் முதல் 13 அதிகாரங்களுக்கு ஆங்கி லத்தில் உரை எழுதிய எல்லிஸ் துரை, 1814-ல் ஜெர்மனியிலிருந்து வந்து திரு நெல்வேலியில் ‘சாந்தபுரம் -சந்தோஷபுரம்’ முதலிய பன்னிரண்டு கிராமங்களை உண்டாக்கிய இரேனியுஸ் அடி கள், 1838-ல் இங்கிலாந்திலிருந்து வந்து திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் என்று தமிழுக்குத் தொண்டாற்றித் தமிழ் மக்களை கிறித்துவத்துக்கு ஈர்த்த பாதிரிமார் பலர். –

கிறித்தவ மதமாற்றங்களுக்கு எதிர்வினையாகவும் கிறித்துவமும் தமிழும் என்பதற்கு மாற்றாகவும் சைவமும் தமிழும் என முழங்கித் தமிழ் அரசியலை முன்னெடுத்தார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறுமுக நாவலர். அவருடைய குரலை தமிழ் நாட்டில் இயங்கிய சைவ மடங்களும் எதிரொலித்துத் தமிழ் அரசியலை (சைவத்தைக் காப்பதற்காக) அதன் ஆரம்ப வடிவில் பரவலாக்கினர். 1848 ஆம் ஆண்டில் ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியா சாலையை அமைத்தார். சென்னைக்கு வந்து அச்சு இயந்திரம் வாங்கிச்சென்று சைவ நூல்களைப் பதிப்பித்தார்.

சைவ மத அரசியலோடு பிணைந்ததாக இருந்த இப்போக்கைத் தமிழ் மொழிசார்ந்த இயக்கமாக மாற்றித் துணை புரிந்தவை இரண்டு அம்சங்கள். ஒன்று கால்டுவெல் துவக்கிவைத்த ஆரிய – திராவிட எதிர்நிலை மற்றொன்று 19 ஆம் நூற்றாண்டில் துவங்கியிருந்த அச்சுப்பதிப்பு இயக்கம். 1894 ஆம் ஆண்டு எட்டுத்தொகையினுள் ஒன்றான புறநானூறு மூலமும் உரையும் தமிழ்த்தாத்தா எனப் பின்னர் அடையாளப்பட்ட உ.வே.சாமிநாதையர் அவர்களால் பதிப்பிக்கபட்டது. 1000, 2000 எனப் பிரதிகள் அச்சிடப்பட்டு மக்களிடம் பரவியது. தமிழின் தொன்மையும் செறிவும் குறித்த பெருமித உணர்வு பரவிட இது ஒரு ஊக்கமாக அமைந்தது.

“பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயிற் துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றித் துலங்குவாயே” என்று மகாகவி பாரதி உ.வே. சா.வைப் போற்றியதும் இக்காலத்தில்தான்.

பாண்டித்துரைத்தேவர் 1905 ஆம் ஆண்டு நான்காம் தமிழ்ச்சங்கம் என்கிற அமைப்பை உருவாக்கினார். தமிழ் மொழி சார்ந்த விவாதங்களை அது முன்னெடுத்தது.

தனித்தமிழ் இயக்கம்

Challenges faced in contemporary language politics (Tamil Nationalism) Article by Writer Sa. Tamilselvan. Book Day, Bharathi Puthakalayam

அப்போது எழுதப்பட்டு வந்த தமிழ் உரைநடை மணி பிரவாளமாக இருந்தது. மணி ஒன்றும் பவளம் ஒன்றும் அடுத்தடுத்துக் கோத்து உருவாக்கப்படும் மாலையைப் போலத் தமிழ்ச்சொல் ஒன்று வட சொல் ஒன்றென அடுத்தடுத்துப் பயன்படுத்தி எழுதுவது மணிப்பவளம் என்னும் கலப்படத்தமிழ் நடையாகும்.

இத்தகைய நடையால் தமிழுக்குக் கேடுவிளையும் எனக்கண்ட தமிழறிஞர் மறைமலை அடிகள் 1916 இல் துவக்கிய இயக்கமே ‘தனித்தமிழ் இயக்கம்’.

வேதாச்சல சுவாமிகள் என்கிற தன்னுடைய பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றினார். தன் குடும்பத்தின் அத்தனை பேருடைய பெயர்களையும் திருஞான சம்பந்தன் – அறிவுத் தொடர்பன், மாணிக்கவாசகம் – மணிமொழி, சுந்தரமூர்த்தி – அழகுரு என்று மாற்றப்பட்டன. அவருடைய தங்கை பெயர் திரிபுர சுந்தரி – முந்நகரழகி என்று மாற்றப்பட்டது. மருமகன் பெயர் குஞ்சிதபாதம் – அது தூக்கிய திருவடியாயிற்று.

வெறும் பெயர் மாற்றத்தோடு நில்லாமல், ஆரி யத்தை நீக்கிய தமிழ்த்திருமணம், திருவள்ளுவர் ஆண்டுமுறை, தமிழர் மதம், தமிழரின் நான்மறை முதலிய கோட்பாடுகள் இவ்வியக்கத்தால் முன்வைக்கப்பட்டன. தமிழ்முறைத்திருமணம் என்கிற வழக்கம் இன்றளவும் தொடர்வதைப் பார்க்கிறோம்.

மறைமலை அடிகள், பாரதிதாசன், கா.சுப்பிர மணியபிள்ளை, வ.சுப்பையாபிள்ளை, தேவநேயப் பாவாணர், கா.அப்பாதுரையார், சி.இலக்குவனார், இளவழகனார்,வ.சுப.மாணிக்கனார், கி.ஆ.பெ. விசுவநாதம் போன்ற அறிஞர்கள் தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களாக இருந்தனர். பல்வேறு சிந்தனைப்போக்கு உள்ளவர்களான இவர்கள் தனித்தமிழ் என்கிற ஒரு நிகழ்ச்சி நிரலில் ஒன்றுபட்டி ருந்தனர். பல இதழ்களும் தனித்தமிழ் இயக்கத்தை முன்னெடுக்கத் துணை புரிந்தன. மறைமலை அடிகளாரின் “அறிவுக்கடல்” திருவி.க. நடத்திய நவசக்தி,பாவாணர் நடத்திய ‘தென் மொழி’ பாவேந்தர் நடத்திய ‘குயில்’ கி.ஆ.பெ. விசுவநாதத்தின் ‘தமிழர் நாடு’ போன்றவை அவ்விதழ்கள். தனித்தமிழ் இயக்கம் போலவே அதே காலத்தில் பாவாணர் ‘உலகத் தமிழ் இயக்கம்’ என்கிற அமைப்பையும் வ.சுப.மாணிக்கனார் ‘தமிழ்வழிக் கல்வி இயக்கம்’ என்கிற இயக்கத்தையும் நடத்தினர்.

‘தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல் பின்னணி’ என்கிற சிறு நூலில் இவ்வியக்கம் பற்றிய தன் பார்வைகளை பேராசிரியர் கா.சிவத்தம்பி முன் வைத்துள்ளார். “பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அடையாளங்களை மீட்டெடுத்தல், பகுத்தறிவு இயக்கம் முன்னெடுத்த சாதி மறுப்பு, பெண் விடுதலை, பார்ப்பனியத்துக்கு எதிராகக் கிளர்ந்த ‘தென்னிந்திய நலவுரிமைச்சங்கம்’ எனப்பல்வேறு அசைவியக்கங்கள் ஊடாடிய தமிழ்ச்சூழலில் தமிழ், சைவம் என்னும் பின்னணியில் வரும் மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்கத்தை நிறுவினார்.” என்பது அவர் கருத்து.

நீண்ட காலமாகத் தமிழ் நிலப்பரப்பில் அந்நியர் ஆட்சி நடைபெற்று வந்த பின்னணியில் ஆட்சி மொழியாகத் தெலுங்கு, மராட்டியம், உருது, பாரசீகம் பின்னர் ஆங்கிலம் முதலியன கோலோச்சியுள்ளன. மக்கள் மொழியாகத் தமிழே இருந்தாலும் அது எப்போதும் ஆட்சிமொழி ஆனதில்லை. இந்த நெடிய மொழித்திணிப்பு வரலாற்றுக்கான எதிர்வினையாகவும் ஏக்கத்தின் வெளிப்பாடாகவும் தனித்தமிழ் இயக்கத்தைக்காண வேண்டும். இதில் ஒரு நியாயப்பாடு இருப்பதை நாம் புறக்கணிக்க முடியாது.

தோழர் ப. ஜீவானந்தம் அவர்களின் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது:

“தனித்தமிழ்ப்போக்கால் லாபம் உண்டா? உண்டு என்பது என் கருத்து. இதனால் தமிழ்மொழி வளர்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் கிடைக்கிறது. ஆனால் இதை அளவுக்கு மீறி மொழி வெறியை எட்டுமளவுக்குக் கொண்டுபோகக்கூடாது.கூடுமான வரைக்கும் எல்லாவற்றையும் தமிழிலே, அழகான, எளிய தமிழிலே, எளிதாகப் புரியக்கூடிய தமிழிலே சொல்ல வேண்டும். வேண்டாத இடத்தில் வலிந்து கொண்டு வருவது கூடாது என்ற முறையில் தனித்தமிழ்ப்போக்கு சரியே” என்றார் ஜீவா.

இந்தித்திணிப்பு எதிர்ப்பு இயக்கங்கள்

Challenges faced in contemporary language politics (Tamil Nationalism) Article by Writer Sa. Tamilselvan. Book Day, Bharathi Puthakalayam

தமிழ்த்தேசிய அரசியல் அலை ஓய்ந்துவிடாமல் காத்த இயக்கங்களில் முக்கியமானவை இந்தி எதிர்ப்பு இயக்கங்கள் எனலாம். 1937-38 காலகட்டத்தில் ராஜாஜி தலைமையிலான அரசு 125 பள்ளி களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியபோது இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் எழுந்தது.

சுதந்திர இந்தியாவில் 1950இல் உருவான இந்திய அரசியலமைப்புச்சட்டம் 15 ஆண்டுகளுக்கு ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக இந்தி அல்லது ஆங்கிலம் இருக்கும் என்றும் 15 ஆண்டுகளுக்குப் பின் ”அல்லது ஆங்கில” என்கிற வாசகம் நீக்கப்படும் என்றும் கூறியது. இது நேருவின் வாக்குறுதி: மீண்டும் 1965 இல் இந்திப் பிரச்னை எழுந்தது. போராட்டமும் வீறு கொண்டு எழுந்தது. கல்லூரி மாணவர்கள் களத்தில் குதித்தனர். பக்தவச்சலம் அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர். ராஜாஜி உள்ளிட்ட பல கட்சித்தலைவர்கள் போராட்டத்தை ஆதரித்தனர். இரு மாதங்கள் வரை நீடித்த இப்போராட்டத்தில் 70 க்கு மேற்பட்டவர்கள் இறந்தனர், கொல்லப்பட்டனர். அதிகாரபூர்வமாக 70 பேர் என்றாலும் 500 பேர்வரை இறந்திருக்கலாம் என்ற கருத்து வலுவாக உள்ளது.

இதன் தாக்கம் 1967 தேர்தலில் வெளிப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தது.ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடரும் திருத்தம் இந்திராகாந்தி பொறுப்புக்கு வந்தபின் கொண்டுவரப்பட்டது.

மொழியுணர்வும் மொழிசார்ந்த அரசியலும் இப்போராட்டங்களால் சூடு தணியாமல் தொடர்ந்தது. உதவியது ஒன்றிய அரசின் பிடிவாதமான மொழிக்கொள்கை எனலாம்.

மொழிவாரி மாநிலங்களுக்கான போராட்டம்

இந்தியா என்பது பல்வேறு மொழிவழி தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்திருந்தாலும், விடுதலையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த காலத்தில் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி அக்கருத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதில்லை. ஆனால் இந்தியாவின் பல்வேறு வட்டா ரங்களில் வாழ்ந்த மக்களின் வேட்கையாகவும் கனவாகவும் அது இருந்தது. விடுதலைப்போராட்டத்தில் எல்லாப்பகுதி மக்களையும் இணைக்க வேண்டிய தேவை இருந்ததால் எல்லா மொழிகளுக்குமான சமத்துவம் பேணப்படும் என்று சொல்லி வந்தது. 1928இல் அனைத்துக்கட்சிகள் மாநாட்டில் அமைக்கப்பட்ட நேரு கமிட்டி முன் வைத்த அறிக்கை மொழி சார்ந்து உண்மையிலேயே ஜனநாயகப் பூர்வமாகப் பேசியது:

“ஒரு பிராந்தியம் தன்னைத் தானே பயிற்று வித்துக் கொள்வதற்கும், தனது சொந்த மொழியின் மூலமாக தனது அன்றாட வேலைகளைச் செய்து கொள்வதற்கும், ஒரு மொழிவாரி மாநிலம் அவசிய மாக இருக்க வேண்டும். அது பல மொழிகளைக் கொண்ட பகுதிகளாக இருக்குமானால், தொடர்ந்து சிக்கல்கள் ஏற்படுவதோடு, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயிற்று மொழி மற்றும் பணி மொழிகளும் இருக்கும். எனவே, மொழிவாரி அடிப்படையில் பிராந்தியங்களைப் பிரித்து அமைக்கவேண்டியது மிகவும் அவசியமாகும். கலாச்சாரத்தின் பல்வேறு விசேஷத் தன்மைகளுடனும் இலக்கிய அம்சங்களுடனும் இணைத்து செல்வது மொழியாகும். மொழிவாரி மாநிலங்களில், இந்த அனைத்து அம்சங்களும் அந்த பிராந்தி யத்தின் பொதுவான வளர்ச்சியில் உதவிகரமாக இருக்கும்” (எஸ்.ஆர்.சி. அறிக்கை , பக். 13). –

Challenges faced in contemporary language politics (Tamil Nationalism) Article by Writer Sa. Tamilselvan. Book Day, Bharathi Puthakalayam

இந்த அறிக்கையின் ஒரு வார்த்தைக்குக்கூட காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு உண்மையாக இருக்கவில்லை. உறுதிமொழிகளுக்குத் துரோகம் இழைத்தது. தேச ஒற்றுமை, தேசப்பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, ஐந்தாண்டுத்திட்டம் இதெல்லாம்தான் முக்கியம் என்று சொல்லி தட்டிக்கழித்துக்கொண்டே வந்தது. இதற்கிடையே மக்கள் போராட்டங்கள் வெடித்தன. ஆந்திர இயக்கம் பொட்டி ஸ்ரீராமுலுவின் 58 நாட்கள் உண்ணா விரதத்துக்குப் பிறகான மரணத்தை ஒட்டித் தீவிரமா னது. நாடெங்கும் மொழிவாரி மாநிலங்களுக்கான வெகுஜன எழுச்சியில் கம்யூனிஸ்ட்டுகள் முன்னிலை பாத்திரம் வகித்தனர். வன்முறையால் ஒடுக்க முயன்று தோற்ற நேரு அரசாங்கம் கடைசியில் 1953இல் மாநிலங்கள் சீரமைப்புக் கமிஷனை அமைத்து 01-11-1956 அன்று மொழிவாரி மாநிலங்களை அமைத்தது. 

“தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை” என்கிற நூலில் தோழர் லெனின் எழுதியுள்ள இப்பகுதி இவ்விடத்தில் பொருத்தி வாசிக்கத் தோதாக உள்ளது:

“ருஷ்யாவில் தேசிய இயக்கங்கள் தோன்றி யிருப்பது இதுதான் முதல் தடவையல்ல; அது இந்த நாட்டுக்கு மட்டுமே உரித்தான அம்சமும் அல்ல. உலகம் முழுவதிலும் முதலாளித்துவமானது நிலப் பிரபுத்துவத்தின் மீது இறுதி வெற்றி கொள்ளும் காலகட்டம் தேசிய இயக்கங்களுடன் இணைந்துள்ளது. விற்பனைப் பண்ட உற்பத்தியின் – முழுவெற்றிக்கு உள்நாட்டு மார்க்கெட்டைப் பூர்ஷ்வாக்கள் கைப்பற்ற வேண்டியது அவசியம்; ஒரே மொழி பேசும் மக்களைக் கொண்ட, அரசாங்க ரீதியில் ஐக்கியப்படுத்தப்பட நிலப்பரப்புகள்’ அதற்கு வேண்டும்; அம்மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்றுத் திகழ்வதற்கும் முட்டுக்கட்டையாக உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும்.

இங்கேதான் தேசீய இயக்கங்களின் பொருளாதார அடித்தளம் இருக்கிறது. மனித உறவு களுக்கு மிகமிக முக்கியமான சாதனம் மொழி. நவீன முதலாளித்துவத்துக்கு ஏற்ற அளவில் உண்மையிலேயே சுதந்திரமான, விரிவான வாணி கத்துக்கும், மக்கள் சுதந்திரமாகவும் விரிவாகவும் பல்வேறு வர்க்கங்களாக அமைவதற்கும், பெரிய உடைமையாளனுக்கும், விற்போருக்கும் வாங்குவோருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துவதற்கும் மிகமிக முக்கிய மாகத் தேவையான சூழ்நிலைகள், மொழியின் ஐக்கியமும் தடையற்ற வளர்ச்சியும் தான்.

ஆகவே ஒவ்வொரு தேசீய இயக்கத்தின் போக்கும் நவீன முதலாளித்துவத்தின் தேவைகள் மிக நன்றாகப் பூர்த்தி செய்யப்பட வாய்ப்புள்ள தேசீய அரசுகள் அமைப்பதற்கான வழியிலானது. மிகமிகத் தீர்க்கமான பொருளாதாரக் காரணிகள் – இந்த இலக்கை நோக்கி இட்டுச் செல்லுகின்றன.”

இந்தியாவில் நிலப்பிரபுத்துவத்தை வெற்றி கொள்ளாமல் அதனுடன் சமரசம் செய்து கொண்டு தன் கூட்டாளியாகக் கொண்ட இந்தியப் பெரு முதலாளி வர்க்க அரசு பல்தேசிய மொழிகளின் 1. வளர்ச்சிக்குப் பாடுபட மறுத்து ஒற்றை இந்தி மொழியைத் திணித்துத் தன் ஒரே மார்க்கெட்டைப் பிடிக்க முயன்றது எனலாம்.

அடையாள அரசியலின் முக்கியமான ஒரு தேவை – அல்லது கூறு என்னவெனில் நாமல்லாத மற்றமை ஒன்றை எதிர் நிலையில் நிறுத்தி நாம் தமிழரல்லவோ என்கிற அணிதிரட்டலைச் செய்வது. காவிரி நதிநீர்ப் பங்கீடு ஒரு தீராப்பிரச்னையாக கர்நாடகத்துக்கு எதிராக தமிழ் உணர்வைத் தூண்டுகிறது. முல்லைப்பெரியார் அணைப் பிரச்னையில் கேரளம் எதிர்நிலையாக நாம் என்ற உணர்வூட்ட உதவுகிறது.

கச்சத்தீவு, நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், நீட் தேர்வு எனத் தமிழ் மக்கள் பாஜக அரசினால் வஞ்சிக்கப்படுவதான உணர்வு தொடர்ந்து நீடிக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக லட்சோப லட்சம் இளைஞர்கள் ஆணும் பெண்ணுமாகத் திரண்டதில் மற்ற அம்சங்களோடு தமிழ்த்தேசிய அரசியல் கூறும் அதில் உண்டு . இவற்றில் பல மாநில எல்லைசார் பிரச்னைகள், சில அறிவியல் சார்ந்த பிரச்னைகள், சில ஒன்றிய அரசின் கார்ப்பொ ரேட் அடிவருடிக் குணத்தால் வரும் பிரச்னைகள். எல்லாவற்றையும் தமிழ்த்தேசிய அரசியல் தனதாக்கிப் பேசும் வல்லமை கொண்டுள்ளதுஎந்தப்பக்கமிருந்து பந்து வந்தாலும் ஓடி ஓடி அடித்துவிடுகிற மட்டைப்பந்து வீரனைப்போல.

சில அறிவியல் உண்மைகள்:

தமிழ்த்தேசிய அரசியலை எதிர்கொள்ளல் பற்றிய இறுதிப்பகுதிக்கு முன்னால் சில அறிவியல் உண்மைகளைக் குறித்துக்கொள்வது நல்லது. தமிழ்த் தேசியர் காலம் காலமாக முழக்கமாகவே எழுப்பிவரும் சில உணர்ச்சிகரமான வாதங்களை அறிவியலால் எதிர்கொள்ளலாம்.

“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி” நம் தமிழ்க்குடி என்பது ஒன்று. சேரன் செங்குட்டுவன் இமயம் வென்றான் இமயத்தில் கல்லெடுத்து கனகவிசயர் தலையில் ஏற்றித் தெற்கே கொண்டு வந்து கண்ண கிக்குச் சிலை வடித்தான்” என்பது இன்னொன்று. இந்த வசனங்களை எள்ளி நகையாடுவதால் எந்தப் பயனும் இல்லை . இதை நம்பும் ஒரு பகுதி மக்களுக்கு அறிவியல் பூர்வமான விளக்கங்கள் சொல்லி வென் றெடுப்பதே நம் கடமை. ஆப்பிரிக்காக் கண்டத்துடன் ஒட்டியிருந்த இந்தியத்தட்டு அங்கிருந்து பிரிந்து நகர்ந்து வந்து ஆசியத் தட்டுடன் மோதியபோது உருவான மண் மேடுதான் இமயமலை. அங்கே உள்ள கல்லால் எதையும் செய்ய முடியாது. மண் கட்டிபோல உடைந்து நொறுங்கும் தன்மைதான் இமயமலைக் கல்லுக்கு உள்ளது.ஆகவே சேரன் செங்குட்டுவன் விந்திய சாத்பூரா. மலைகளிலிருந்து கல் கொண்டு வந்தான் என்று சொன்னாலாவது நம்பலாம்.

இன்னொரு நம்பிக்கை – இது இன்றுவரை ஆழமாக தமிழ்ச்சமூக உளவியலில் ஊடுருவி யுள்ளது இலங்கைக்குத் தெற்கே அண்டார்டிகா வரை விரிந்திருந்த குமரிக்கண்டம் அல்லது லெமூரி யாக்கண்டத்தில்தான் முதல் மனிதன் தோன்றினான். அவன் தமிழன். இக்கருத்து 1930-4 களில் துவங்கிய தமிழியக்க அறிஞர்களான மொழிஞாயிறு தேவ நேயப்பாவாணர், பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரையார் துவங்கி இன்று யூ ட்யூப்பில் “ஆதி மொழி தமிழ். ஆதி மனிதன் தமிழன்” என முழங்கும் சீமான் வரை உயிர்த்திருக்கிறது.

புவியியல் அறிஞர் சு.கி.ஜெயகரன் அவர்களின் ‘மணல் மேல் கட்டிய பாலம்’ நூலில் உள்ள “குமரிக்கண்டம்-லெமூரியாக்குழப்பம்” என்கிற கட்டுரையின் இப்பகுதி இம்முழக்கங்கள் வெறும் கற்பிதங்கள் எனக் காட்டுகின்றன.

Challenges faced in contemporary language politics (Tamil Nationalism) Article by Writer Sa. Tamilselvan. Book Day, Bharathi Puthakalayam

“பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தான் எழுதிய குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு (1941) நூலில் லெமூரியாக் கண்டம் பற்றியும் அதன் நில அமைப்பு, அதில் வாழ்ந்த உயிரினம், மக்கள் பற்றியும் விவரங்களைத் தருகிறார். “இலெமூரியாக் கண்டத்தில் கிழக்குப் பகுதியின் மேல்பகுதியில் சில உயர்ந்த மலைகளே இன்று பஸிபிக் கடலின் தீவுகளாகியிருக்கின்றன. எரிமலைகளும், நில அதிர்ச்சியும் அக்கண்ட முழுமையும் என்றும் குலுக்கிக் கொண்டே இருந்தன. இலெமூரிய வாழ்க்கைக்காலம் நடுக்கற்காலமாகும். உள்நாட்டுச் சதுப்பு நிலங்களிலும், கடற்கரையோரங்களிலும், டினோஸர்கள் வாழ்ந்தன. ஊன்வெறியால் அவை உறுமும் பொழுதும், மரஞ்செடி கொடிகளை நெரித்து அவை நடக்கும் அரவம் கேட்கும் போதும் இலெமூரிய மக்கள் கவலையும், முன்னெச்சரிக்கை யும் கொள்வர்; இலெமூரிய மக்கள் தற்கால மக்களை – விட நெட்டையானவர்; ஆறடிக்கு மேற்பட்டு ஏழடி வரையிலும் அவர்கள் உயர்ந்திருந்தனர்; உடலின் எடை 160 – 200 கல் என்று கூறப்படுகிறது.” மேற்கூறிய தகவல்கள் அறிவியல் ஆதாரமற்றவை என்பது தெளிவு. இதில் முக்கியமான குழப்பம் டைனோஸர்களையும் ஆதி மனிதயினத்தையும் சமகாலத்தவராக்கியது. டைனோஸர்கள் அழிந்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரே மனித இனம் தோன்றியது என்பது நாமறிந்த அறிவியல் தகவல்.”

குமரிக்கண்டத்தின் வரைபடத்தைக்கூட கற்பனையாக வரைந்துள்ள நம் முன்னோர்கள், அப்படத்தில் குறிக்கப்படும் 700 காத தூரம் என்பது அண்டார்டிகாவையும் தாண்டி பூமிக்கு வெளியே வரை நீள்வதைக் கணக்கிடவில்லை. பய வர்க்கப்போரை நடத்தும் பாதையில் செல்லாத இயக்கங்களுக்கு, இத்தகைய கற்பிதங்கள் தேவைப்படுகின்றன. சமூகமும் இவற்றில் ஆவேசம் கொண்டு ஆசுவாசம் அடைகிறது போலும்.

அறிவியல் கண்டுபிடிப்புகள் இன்றைக்கு மனித குலத்தின் தோற்றமும் பரவலும் பற்றிப் புகைமூட்டமாயிருந்த சித்திரத்தை மேலும் மேலும் தெளிவாக்கி வருகின்றன. மரபணு ஆராய்ச்சியின் மூலம் ஆதிமனிதர்களான ஹோமோ சேப்பியன்கள் உருவான இடம் ஆப்பிரிக்கா என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அறிவியலாளர் சு.கி.ஜெயகரன் எழுதிய “மூதாதையரைத் தேடி..” (காலச்சுவடு பதிப்பகம் முதற் பதிப்பு – 1991) என்கிற நூலிலிருந்து எடுக்கப்பட்ட இப்பகுதி மேற்படிக் கற்பிதமாக கருதுகோள்களை உடைக்கிறது: 

“மரபியல் ஆய்வுகளும், தொல்லியலாய்வு களும் ஆதிமனித இனம் தோன்றியது ஆப்பிரிக்கா என்பதை உறுதி செய்வதால் அக்கண்டமே மானுடத்தின் தொட்டிலாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ 100,000 ஆண்டுகட்கு முன் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஹோமோ செபியன் இனக்கூட்டத்திலிருந்து தற்கால மனிதர் தோன்றினர் என்பது ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது. இதுவரை தெற்காப்பிரிக்காவில் நடத்தப்பட்ட அகழாய்வு களால் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லுயிரெச்சங்கள், எவ்வாறு ஹோமோ எரக்டஸிலிருந்து பழம் CourCuir Coulu (Archaic Homo Sapian) பரிணமித்து, அதன் வழித் தோன்றலான ஹோமோ செபியன் (தற்கால மனிதன்) உருவானான் என் பதைக் காட்டுகின்றன. இப்பரிணாம வளர்வின் பல்வேறு கட்டங்களைக் காட்டும் தடயங்கள் பல கிடைத்துள்ளன.

மேலும், பழம் ஹோமோ செபியன்கள் அப்போது உருவாகிக் கொண்டிருந்த சஹாரா, கலஹாரி பாலைவனங்களைத் தவிர்த்து அவற்றின் ஓரங்களிலிருந்த மலை, வனப்பகுதிகளிலும், அட்லாண்டிக் கடற்கரையையொட்டி கானகங்கள் இருந்த பகுதிகளிலும் ஏறத்தாழ 200,000 ஆண்டு களுக்கு முன் வாழ ஆரம்பித்தனர். கடற்கரை யோரம் வாழ்ந்த ஆதியினம் ஆழமற்ற கடற்பகுதி களில் கிடைத்த நத்தைகள், மீன்கள் போன்ற புரதச்சத்து அதிகம் கொண்ட உணவை உண்ண ஆரம்பித்தனர். இதனால் இவர்களது மூளையளவு பெருத்தது என அறியப்படுகிறது. இந்த இனத்தின் வழித்தோன்றல்களே ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிய ஹோமோ செபியன்கள்.

Challenges faced in contemporary language politics (Tamil Nationalism) Article by Writer Sa. Tamilselvan. Book Day, Bharathi Puthakalayam
Image Courtesy: MtDNA | genetics | Britannica

தாய்வழி வரும் மிட்டோகோண்டிரியல் டி.என்.ஏக்களின் (Mt DNA) ஆய்வுகளும் தந்தை வழிவரும் Y குரோமோசோம் டி.என்.ஏக்களின் ஆய்வுகளும் தற்கால மனிதர் 100,000 மற்றும் 20,00,00 ஆண்டுகட்கு முன் ஆப்பிரிக்காவில் உருவானதை உறுதிப்படுத் துகின்றன. அவர்களின் வழித்தோன்றல்களான தற்கால மனிதர் தலைநிலம் வழியாக ஐரோப்பாவிற்கும், கடற்கரையை ஒட்டிய பகுதிகளின் வழியாக இந்தியா, இந்தோ னேஷியா மற்றும் ஆஸ்திரேலியா வரையும் 50,000 – 60,000 ஆண்டுகளுக்கு முன் குடியேறினர். அக்கால கட்டத்தில் கடல் மட்டம் 100மீ.க்கும் அதிகமாக தாழ்ந்திருந்ததால், கண்டச் சரிவுகளின் (Contimental Shelf) பெரும்பகுதி நிலமாயிருந்தது. கடற்கரைகள் இன்றிருப்பதைவிட வெகுவாக அகன்றிருந்தன அப்பகுதிகளின் வழியாகவும் ஆதிமனிதக் குடியேற்றங்கள் ஏற்பட்டன.”

இது தொடர்பான அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாவற்றையும் தொகுத்து எளிய மொழியில் டோனி ஜோசப் என்கிற எழுத்தாளர் “ஆதி இந்தியர்கள்” என்கிற நூலில் அளித்துள்ளார். “கடந்த சில ஆண்டுகளில், உலகம் முழுக்க ஆயிரக் கணக்கான பண்டைய டி.என்.ஏ. மாதிரிகள் படியெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டிருக் கின்றன. இவற்றின் முடிவுகளை வைத்து யார், எங்கு, எப்போது இடம்பெயர்ந்தார்கள், அவற்றின் மூலம் உலகின் பெரிய மக்கள் தொகைக் குழுக்கள் எப்படித் தோன்றின என்பன குறித்த துல்லியமான வரைபடத்தை உருவாக்க முடிந்திருக்கிறது.” என்று சொல்லும் டோனி ஜோசப் ஆப்பிரிக்காவிலிருந்து இந்திய நிலப்பரப்புக்குள் சுமார் 65,000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தவர்களே முதல் இந்தியர்கள் என்கிறார். 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்குள் நுழைந்த ஈரானின் ஸாக்ரோஸ் மலைப்பகுதியைச் சேர்ந்த உழவர் குழுவை இரண்டாவது இந்தியர்கள் என்கிறார்.

இந்த முதல் இரண்டு குழுக்களும் கலந்து உருவாக்கிய விவசாயப்புரட்சியே ஹரப்பா நாகரிகத்தை நோக்கி இட்டுச்சென்றது. கிழக்கு ஆசியாவிலிருந்து காசி,முண்டாரி போன்ற ஆஸ்த்ரோ -ஆசிய மொழிகளைக் கொண்டு வந்த குழு மூன்றாவது இந்தியர்கள். மத்திய ஆசியாவிலிருந்து நான்காவதாக வந்து சேர்ந்த, ஆரியர் என்று தம்மைக்கூறிக்கொண்ட குழுவை நான்காவது இந்தியர் என்கிறார். இன்று இந்தியாவில் வாழும் நாமெல்லோருமே இந்த நான்கு இந்தியர்களின் கலப்பில் உருவாகி வழிவழியாக வந்தவர்களே. 

இந்த நூல் சங் பரிவாரங்களால் கடுமையாகத் தூற்றப்பட்டு வருவதே இதன் உண்மைத்தன்மைக்கு ஆதாரம் எனலாம். ஆரிய இனம் இந்தியாவின் பூர்வ குடி என்கிற சங் பரிவாரத்தின் கப்ஸாக்களையும் இந்நூல் அடித்து நொறுக்குவதால் சங்கிகள் மூலத்தில் மிளகாய் அரைத்துப் பூசியதுபோல இந்நூலுக்கு எதிராகக் கூக்குரலிட்டு வருகிறார்கள். இத்துடன் சு.கி.ஜெயகரன் எழுதிய “குமரி நில நீட்சி” என்கிற புத்தகம் குமரிக்கண்டம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை என்பதற்கான அடுக்கடுக்கான அறிவியல் ஆதாரங்களைத் தந்துள்ளது. இந்த இரு நூல்களையும் சேர்த்து வாசிக்க வேண்டும். இவ்விரு புத்தகங்கள் சில முக்கியமான முடிவுகளுக்கு நம்மை இட்டுச்செல்கின்றன.

தமிழ் இனத்தின் வரலாறு தெற்கேயிருந்து அல்ல. ஆதி மனிதன் தமிழன் அல்லன். உலகின் எல்லா மனிதர்களும் ஆப்பிரிக்காவிலிருந்து நடந்து நடந்து பரவியவர்களே.

அப்படியானால் நாம் யார்? தமிழர்களாகிய நாம் எங்கிருந்து வந்தோம்? –

“Journey of a Civilization Indus to Vaigai’ (ஒரு நாகரிகத்தின் பயணம்- சிந்து வெளியிலிருந்து வைகை வரை) என்கிற தன் ஆய்வு நூலில் திரு. ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் மேற்குறிப்பிட்ட நூல்களின் தொடர்ச்சியாக புதிய கருதுகோள் ஒன்றை முன் வைக்கிறார். ஹரப்பா நாகரிகம் சிதைந்த பிறகு அங்கிருந்த மக்கள் எங்கே சென்றார்கள்? வடக்கிலிருந்து நகர்ந்து நகர்ந்து அவர்கள் தெற்கே வந்தார்கள். ஊர்ப்பெயர் ஆய்வுகள் மற்றும் சங்க இலக்கியத்திலுள்ள அகச்சான்றுகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு இதை அவர் நிறுவுகிறார். ஹரப்பா விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்று என்கிறார். தமிழி, கொற்கை, வஞ்சி போன்ற ஊர்ப்பெயர்கள் ஆப்கானிஸ்தான் தொடங்கி தமிழகம் வரையிலும் நெடுகிலும் இருக்கின்றன.

Challenges faced in contemporary language politics (Tamil Nationalism) Article by Writer Sa. Tamilselvan. Book Day, Bharathi Puthakalayam

பிடிமண் எடுத்துவருவதுபோல மக்கள் இடம் பெயரும்போது புதிய குடியேற்றங்களுக்கு தம் ஊர்ப்பெயரையே வைப்பது மரபு. அதன் வழித் தம் ஊர் நினைவுகளையும் அந்த வாழ்வையும் மீட்டெடுத்துக்கொள்கிறார்கள். சங்க இலக்கியம் அது எழுதப்பட்ட சமகாலத்தைப் பற்றிய இலக்கியமாக மட்டும் இல்லாமல் மீள் நினைவுகளையும் பேசுகிறது. இமயமலையில் உள்ள எருதுகளைப்பற்றியும் தார்ப்பாலைவனத்து ஒட்டகங்கள் பற்றியும் மேற்கிலிருந்து வீசும் வெப்பக்காற்று பற்றியும் அது பேசுவதெல்லாம் இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்குமான இலக்கியமாக அது இருப்பதை நிறுவுகிறது என்கிறார். வைகைக் கரையின் கீழடி வரையிலான தொல்லியல் ஆய்வுகளையும் வரலாற்றுத் தரவுகளையும் கொண்ட மிக முக்கியமான ஆய்வாக இந்நூல் விளங்குகிறது.

ஆக, கதை இப்போது தமிழ்த்தேசியர்களின் கற்பிதங்களையும் காலி செய்து விட்டது. நம்முடைய மூதாதையரும் ஆப்பிரிக்க மண்ணில் தோன்றியவரே. கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தேயெல்லாம் மனிதர்களே தோன்றியிருக்கவில்லை. டினோசர்கள் தோன்றி அழிந்த பிறகுதான் இந்தியத்தட்டு ஆப்பிரிக்காவிலிருந்து பிரிந்து நகரத்துவங்கியது. அப்போது மனித இனமே தோன்றியிருக்கவில்லை.

இன்றைக்கும் தமிழ்நாட்டின் குமரிப்பகுதியில் மலையாளம், தமிழ் என இருமொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதியில் கன்னடமும் தமிழும் பேசும் மக்கள் இருக்கின்றனர். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் தெலுங்கும் தமிழும் புழங்குகின்றன. மதுரையில் சௌராஷ்ட்ரா, தமிழ் என இருமொழியாளர்கள். ஆந்திராவிலிருந்து நாயக்க மன்னர்கள் இங்கு ஆண்ட காலத்தில் புலம் பெயர்ந்து வந்து தமிழ்நாட்டின் கரிசல் வட்டாரத்திலும் கோவைப்பகுதியிலும் குடியேறிய மக்கள் இன்றளவும் தெலுங்கும் தமிழும் பேசுகிறார்கள், உருதும் தமிழும் என இருமொழி பேசும் இஸ்லாமியத் தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே தமிழர்கள் என்பதை மறுக்கும் தமிழ்த் தீவிர தேசியவாதிகளும் இருக்கிறார்கள். எளிய அருந்ததியர் மக்களைக்கூடத் தெலுங்கர்கள் எனச்சொல்லி வெளியேறச்சொல்லும் குரல்களை நாம் கேட்டிருக்கிறோம். மொழித்தூய்மை வாதம் இனத்தூய்மை வாதம் பாசிசத்தை நோக்கித்தான் இட்டுச்செல்லும்.

அடையாள அரசியலை எதிர்கொள்ள

தமிழ் மொழிக்கென்று சில தனித்தன்மைகளும் செறிவான எழுத்துப்பாரம்பரியமும் உலகில் எம் மொழியிலும் காணக்கிடைக்காத திணைக்கோட்பாடும் பெருமளவுக்கு மதச்சார்பற்ற சங்க இலக்கியமும் போன்ற சிறப்புகள் உள்ளன. அவற்றுக்காக நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். அவற்றைப் பேசவும் வேண்டும். ஒடுக்கும் தேசிய இனம் ஒடுக்கப்படும் தேசிய இனம் என்கிற உரையாடல் மார்க்சியத்தில் உண்டு. பொருளாதாரச் சுரண்டல் அல்லாத பிறவகைச் சுரண்டல்களும் மார்க்சிய உரையாடலில் உண்டு. அவற்றை அறிவியல்பூர்வமாக முன்னெடுப்பது அவசியம். 

எப்போதும் அடையாள அரசியல் எழுப்புகின்ற முழக்கங்கள் கோரிக்கைகளில் அடையாள அரசியல் அல்லாத சில நியாயமான பிரச்னைகளும் இருக்கும். ஆவேசமான உணர்ச்சிகளுக்கு அப்பால் துலக்கமாகும் அத்தகைய கோரிக்கைகள் மீது அக்கறை காட்ட வேண்டும்.

தமிழ்த்தேசிய இயக்கத்திற்கு நீண்ட கால வரலாறு இருக்கிறது. அது ஒருபடித்தானதாகவோ, இடையறாத் தொடர்ச்சி உடையதாகவோ இல்லை என்றபோதும். எப்போது என்ன பெயரில் தமிழ்த் தேசிய அரசியல் எழுந்தாலும் இந்த வரலாற்றி லிருந்து நெருப்பெடுத்துத் தங்கள் பந்தங்களை அவர்கள் பற்ற வைப்பார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களைப் பின் தொடரும் எளிய மக்களுடன் அவர்களைப் பொருட்படுத்தி உரையாடலைத் தொடர வேண்டும்.

நன்றி: மார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ் (ஜூலை)

Baktavatchala Bharathi's Thamizhaka Varalattril Urum Seriyum Book Review By Prof. Keerai Tamilan. Book Day is Branch of Bharathi Puthakalayam

தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும் – முனைவர் கீரைத்தமிழன் 

தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும் பக்தவத்சல பாரதி பாரதி புத்தகாலயம் பக்கங்கள் : 86 விலை : ரூ. 80 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/ மானுட வரலாற்றில் எழுதப்பட்டவைகள் தவிர்த்து இன்னும் எழுதப்படாத வரலாற்றுச் செய்திகள் எண்ணற்றுக் கிடக்கின்றன. தமிழர் வரலாற்றிலும் தமிழ்…
Indus Valley - Vaigai Cultures ‘Bridge’ of Sangam Literature Connects - R. Balakrishnan IAS. Frontline interview in Tamil Translation. Book Day

சிந்துவெளி – வைகை பண்பாடுகளை சங்க இலக்கியம் என்ற ‘பாலம்’ இணைக்கிறது  – ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்

எழுத்தாளர், கவிஞர் மற்றும் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான ஆர்.பாலகிருஷ்ணனுடன் அவருடைய சமீபத்திய ஆங்கில நூலான ‘ஒரு நாகரிகத்தின் பயணம்: சிந்துவெளி முதல் வைகை வரை’ (Journey of a Civilization: Indus to Vaigai) குறித்து நடத்தப்பட்ட நேர்காணல்.…
Maxim Gorky Memorial Day Speech Writer Udhayasankar. He is Russian and Soviet writer, a founder of the socialist realism literary method.

முற்போக்கு இலக்கியத்தின் கொடிக்கப்பல் *மாக்சிம் கார்க்கி*

எழுத்தாளர் உதயசங்கர் Alexei Maximovich Peshkov (Russian: Алексей Максимович Пешков[1] 28 March [O.S. 16 March] 1868 – 18 June 1936), primarily known as #MaximGorky (Russian: Максим Горький), was a Russian and…