அண்மையில் முகநூலில் சர் சி.வி.ராமன் அவர்களது சாதி.மத,கடவுள் நம்பிக்கைகள் குறித்து தோழர் சியாமளம் காஸ்யபன் ஒரு விவாதம் நடத்தினார். அதில் ராமன் குறித்து அவர் கூறியதில் சில பகுதிகள்
“ஒளி.” பற்றிய ஆராய்ச்சிக்கு முன் ராமன் அவர்கள் “ஒலி “பற்றியும் அதன் aqcuestic பற்றியும் ஆராய்ந்துவந்தார். தேவலாயத்தில் கட்டிட அமைப்பு, விதானம், தூண்கள் ஆகியவை எதிரொலி கேட்காமல் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதைஆராயவே அவர் சபைக்கு சென்றார்.
அவரது மனைவி லோகசுந்தரி அம்மையார் திருசபையில் காலையில் இசைக்கப்படும் மேற்கத்திய காயர் இசையை கேட்க அங்கு செல்வது வழக்கம். இயற்கையாகவே அவர் இசையில் குறிப்பாக வீணை வாசித்து வருபவர்.
.’……..ஆராய்சிக்காக அவர் எடுத்துக். கொண்ட கருவிதான் வீணை…… இந்தக் கலைஞர்கள் தந்தி செய்ய பயன்பட்ட உலோகம்,அதன் கனம் ,அதன் இழுவிசை, அது எழுப்பும் ஒலி ,அந்த ஒலியை வாங்கும் காது அமைப்புஆகியவற்றை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அவர்களிடம் சோனோமீட்டார் போன்ற கருவிகள் எதுவும் இல்லை.
இந்தவிந்தையை ஆராயமுற்பட்டார் ராமன்.’
(சி.வி.ராமன் நூற்றாண்டு விழாவின் போது மதுரைப் பல்கலைக்கழக மல்ட்டி மீடியாத் துறை வெளியிட்ட குறும்படம்)
‘ராமன் அவர்கள் தன் நெற்றியில் எந்த விதமான மதச் சின்னமும் கூடாது என்று நினைப்பவர். அதேசமயம் மரபு ரீதியான பழக்க வழக்கங்களை விரும்புவார்.’
‘சொர்க்கம் நரகம்,மறுபிறப்பு,அமரத்துவம் என்பதெல்லாம் இல்லை. மனிதன் பிறக்கிறான்; வாழ்கிறான்; இறக்கிறான் என்பது மட்டுமே உண்மை. ஆகவே அவன் வாழ்க்கையை முறையாக வாழ வேண்டும். ’(A.Jeyraaman Ayyaasaamy ( 1989) page 143)
‘கடவுள் என்று ஒருவர் இருந்தால் நாம் அவரை பூமியில் தேட வேண்டும். அங்கு இல்லையென்றால், தேடுமளவுக்கு அவர் மதிப்பு வாய்ந்தவர் இல்லை. வானவியல் மற்றும் இயற்பியலில் வளர்ந்துகொண்டே போகும் கண்டுபிடிப்புகள் மேலும் மேலும் கடவுள் குறித்த புரிதல்களாக தோன்றுகின்றன.’
(Rajender Singh – indian scienist and religion 2010)
———————–
சி.வி.ராமனின் வேறு சில பண்புகள் மற்றும் அறிவியல் ஆய்வு குறித்த கருத்துகள் கபில் சுப்பிரமணியம் என்பவர் 2017இல் ஸ்க்ரோல்.இன் இதழில் எழுதிய கட்டுரையில் காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.
இருபதாம் நூற்றாண்டு இயற்பியல் வரலாற்றில் ராமனது வாழ்க்கை, கால முரணாகத் தோன்றலாம். அறிவியல் தொழில்மயமாக மாறிக்கொண்டிருந்தபோது அவர் அதை ஒரு ஆர்வமாகக் கொண்டிருந்தார். குவாண்டம் இயற்பியலோடு ஒப்ப முயற்சிக்கும் செவ்வியல் இயற்பியலாளராக அவர் இருந்தார். பெரும் செலவு, இயந்திரங்கள், நிபுணர் கூட்டம் ஆகியவை கொண்ட பிரம்மாண்ட அறிவியலுக்கு இயற்பியல் ஆய்வுகள் மாறிக்கொண்டிருக்கும்போது குறைந்த பட்ஜெட் ஆய்வாளராக அவர் இருந்தார்.
தன்னுடைய சமகாலத்தவர்கள் போல அவர் தேசப்பற்றை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை. அந்நிய ஆட்சியின்போது காங்கிரஸ் கட்சி அமைத்த தேசிய திட்டக் குழுவில் பணியாற்ற மறுத்துவிட்டார். இருந்த போதிலும் விடுதலையடைந்த பின் நேருவின் புதிய அரசு அவருக்கு ‘தேசிய பேராசிரியர்’ என்ற பட்டத்தை வழங்கியது. இதனால் பணி ஓய்வுக்குப் பின்னும் அவர் முழு ஊதியம் பெற முடிந்தது. ஆனால் ராமன் இந்த பிரியத்திற்கு ஒருபோதும் கைம்மாறு செய்ததில்லை. 1948இல் நேரு அவரது சோதனை சாலைக்கு வருகை தந்தபோது, ராமன் ஒரு தாமிரப் பாத்திரத்தை புற ஊதாக்கதிர்களால் ஒளிர செய்திருந்தார். அதை நேரு தங்கம் என நினைத்து ஏமாந்தார். நேருவின் ஆளுமையில் உள்ள தவறை சுட்டிக்காட்டுவது போல ‘பிரதம மந்திரி அவர்களே, மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்று ராமன் ஓங்கி அடித்தார். (ஆயிஷா இரா நடராசன் அவர்கள் புத்தகம் பேசுது இதழில் எழுதிய ஒரு கட்டுரையில் காலியம் உலோகம் கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில், அறிவியலாளர்கள் காலியத்தால் செய்யப்பட ஸ்பூனை விருந்தினர்களுக்கு கொடுத்ததையும் அவர்கள் தேநீரில் அதைவிட்டு கலக்கியதும் அது கரைந்து மறைந்ததையும் குறிப்பிட்டிருந்தார். அறிவியலாளர்கள் குறும்புக்காரர்கள் போல)
நேரு டிராம்பேயில் அணு ஆராய்ச்சிக் கழகம், ஸிஎஸ்ஐஆர் சோதனை சாலைக் கழகங்கள் போன்ற தனித்துவமான நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் அதே சமயம் பல்கலைக்கழக ஆய்வுகளுக்கு சொற்ப தொகையே ஒதுக்குவதுமான கொள்கையைக் கொண்டிருந்தார். இதன் மீது ராமனுக்கு சினம் ஏற்பட்டது. இதற்கு ‘நேரு-பாட்நகர் விளைவு’ என்று பெயரிட்டார். ‘ஷாஜகான் தன்னுடைய மனைவி மும்தாஜைப் புதைப்பதற்கு தாஜ்மஹாலைக் கட்டியதுபோல பாட்நகர் அறிவியல் சாதனங்களைப் புதைப்பதற்கு சோதனைசாலைகளைக் கட்டினார்’ என்று விமர்சனம் செய்தார்.
நேருவின் ‘பயனுள்ள நடைமுறை ஆய்வுகள்’ (useful applied research) என்கிற கொள்கை அழுத்தம் தவறானது என்றும் அடிப்படை ஆய்வுகள் அரசாங்கம், தொழில்துறை மற்றும் ராணுவ அழுத்தங்களிலிருந்து மட்டுமல்ல ஆசிரியப் பணி அழுத்தங்களிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார். ‘அறிவியலாளர்கள் கோபுர உச்சியிலிருந்து இறங்கி வரவேண்டும்’ என்று நேரு சொன்னதற்கு, கோபுரத்தின் உச்சியிலிருப்பவர்கள்தான் அதிகம் கவனிக்கப்படவேண்டும்; அவர்களின் இருப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் மனித இனம் கடமைப்பட்டுள்ளது என்றும் பதிலளித்தார்.
பிரும்மாண்ட அறிவியல் என்பதையும் அவர் விமர்சனம் செய்தார். அவர் இறப்பதற்கு சில மாதங்கள் முன் 1970இல் அப்பல்லோ11 நிலவில் இறங்கியது குறித்து கேட்டதற்கு ‘எதற்காக அவர்கள் நிலவுக்குப் போவதற்கு பணத்தை வீணாக்குகிறார்கள்.அவர்கள்தான் ஏற்கனவே பைத்தியக்காரர்களாக இருக்கிறார்களே?’ என்று சொன்னாராம்.இங்கு ராமன் லூனார் என்ற நிலவைக் குறிக்கும் வார்த்தையையும் பைத்தியத்தைக் குறிக்கும் லுனட்டிக்ஸ் என்கிற வார்த்தையையும் சிலேடையாகப் பயன்படுத்துகிறார். அவரைப் பொறுத்தவரை ஏழையாகப் பிறந்தவர்கள்தான் பணத்தின் அருமையைப் புரிந்தவர்கள். வசதியானவர்கள் பணத்தை வீணாக்குபவர்கள்.
அறிவியலை உப்புக் கண்டம் போடும் இன்றைய சூழலில் நேரு பட்நாகர் விளைவே பரவாயில்லை போலிருக்கு
சி.வி ராமனின் அண்ணன் மகன் சந்திரசேகரும் நோபிள்பரிசு பெற்றவர் .