சமூகப் பிரச்சினைகளினூடே மேலெழும் மானுடம்: வி.ஜீவகுமாரனுடைய நாவல்களை முன்வைத்த பார்வை – அ.பௌநந்திதமிழ் நாவலிலக்கியப் புலத்தில் பலராலும் அறியப்பட்ட எழுத்தாளராக வி.ஜீவகுமாரன் விளங்குகிறார். யாழ்ப்பாணத்தில் பிறந்து டென்மார்க்கில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். தமிழ் மொழிப் புலமை மட்டுமின்றி வேறு மொழிகளிலும் – குறிப்பாக டெனிஸ், ஆங்கிலம் -புலமையுடையவராகக் காணப்படுகிறார். அவரது எழுத்துகளைச் வழிநடத்திச் செல்வதில் புலம்பெயர் நாடுகளின் சமூக, பொருளாதார, கலாசாரப் பின்னணியும் மொழித் தாக்கமும் முக்கியத்துவம் பெற்று நிற்கின்றன என்பதால் இவை பற்றி இங்கு குறிப்பிடுவது தவிர்க்க முடியாததாகின்றது. தனது படைப்புகளுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுக்கொண்ட ஜீவகுமாரன் மொழிபெயர்ப்பு, கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல், நாவல் போன்ற இலக்கியத் துறைகளில் பங்காற்றிவருகின்றார். எனினும், புனைகதை இலக்கித்திலேயே காத்திதரமான கவனத்தைச் செலுத்தி வருகிறார் என்பது தெளிவு.

மக்கள்…மக்களால்…மக்களுக்காக – 2009
சங்கானைச் சண்டியன் (குறுநாவல்) – 2009
கோமதி (குறுநாவல்) – 2009
கடவுச்சீட்டு – 2014
குதிரை வாகனம் – 2017 ஆகிய மூன்று நாவல்கள் மற்றும் இரண்டு குறுநாவல்களைப் படைத்துள்ளார். குறுநாவல்கள் இரண்டும் சங்கானைச் சண்டியன் என்கின்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

மேலே குறிப்பிடப்பட்ட படைப்புகளில் சங்கானைச் சண்டியன் தவிர ஏனையவை புலம்பெயர் தேசத்து அனுபவங்களை அதிகம் சிலாகித்துக் கொள்கின்றன. மக்கள்…மக்களால்…மக்களுக்காக… என்ற நாவல், ஈழத்துத் தமிழ் போராட்டம் இலங்கையைத் தாண்டி புலம்பெயர் நாடுகளில் எவ்வாறு உருமாற்றம் பெற்றன என்பதை வெளிப்படுத்தும் வகையில் அர்ப்பணிப்போடுகூடிய காதல் ஒன்றின் பின்னணியில் புனையப்பட்டுள்ளது. சங்கானைச் சண்டியன் என்பது சண்டின் ஒருவனின் வன்மம், வெறித்தனம் ஆகியவற்றின் பின்னணியில் அவனது காதல், மானுடநேயம் பற்றிப் பேசுகின்றது. கோமதி, இலங்கையிலிருந்து டென்மார்க்கிற்கு வாழ்க்கைப்பட்டுச் செல்லும் கோமதி என்கிற பெண்ணின் வாழ்க்கைத் தோல்வியினூடே மானுடம் போசுகின்றது. கடவுச்சீட்டு நாவல், ஈழத்திலிருந்து புலம்பெயர்து செல்பவர்களின் துயரங்களையும், அவர்களுக்குப் புலம்பெயர் தேசங்களில் பிறக்கின்ற பிள்ளைகள் அத்தேச சமூகப் பின்னணியில் வாழ முற்படுகின்றபொழுது எழும் தலைமுறை முரண்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு நகர்த்தப்பட்டுள்ளது. குதிரை வாகனம், யாழ்ப்பாணத்தில் பரம்பரைப் பெருமையோடு வாழ்ந்த குடும்பம் புலம்பெயர் தேசத்தில் அடுத்த தலைமுறை வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளத் தயாராகிறது என்பதை நட்பின் புனிதத் தன்மை கெடாமல் நகர்த்திச் செல்கின்றது.

கடவுச்சீட்டு'' ஒரு பார்வை – மேமன்கவி- | Jeevakumaran

கொழும்பில் வந்து குடியேறிய யாழ்ப்பாணக் குடும்பம் ஒன்று 1958, 1979, 1983 ஜூலை இனக் கலவரத்தினால் பட்ட துன்பங்களும் காடையர்களின் அடாவடித்தனங்களும், அரசியல் நாடகங்களும், சொத்திழப்புகளும் கப்பலில் ஏற்றப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டமையும் மட்டுமின்றி சிங்களக் மக்கள் தமிழ் மக்களை எப்படிக் காப்பாற்றினார்கள் அவர்களது மானுடம் எவ்வாறு காணப்பட்டது என்பதையும், 1981இல் யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டமையையும் மக்கள்…மக்களால்…மக்களுக்காக என்ற நாவலில் ஜீவகுமாரன் பதிவுசெய்துள்ளார். “இனம், மதம், மொழி என்பவற்றைக் கடந்து மனித நேயத்துடன் அப்பாவிற்கு உதவிய அந்த ராலாமி குடும்பத்தையும், சிவராசா வீட்டு இருபத்தைந்தாவது கலியாண வீட்டில் சந்தித்த அந்த என் தேசத்து உறவையும் மனம் ஒப்பிட்டுப் பார்தது.” என்கிற கதை சொல்லியின் வாக்கு மூலம் தமிழ் மக்களிலும் மானுடத்தை மறந்தவர்கள் உள்ளனர் என்பதையும் சிங்கள மக்களிலும் தனது உயிரைக் கொடுத்து தமிழ் மக்களைக் காக்க முனைந்த மானுடர்கள் உள்ளனர் என்பதையும் பதிவு செய்கிறது.

2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவும், ஒரு நாளே அறிமுகமான பஞ்சாப் பெண்பிள்ளைகள் இருவர் அதனால் இறந்தபோது இந்த இளைஞன் படும் துயரமும், தாய்லாந்தில் விலைமாது வீட்டில் தங்கியிருந்து அவளை பாலியல் ரீதியாக அணுகாது அவர்களுக்கு காசு கொடுத்து அவர்களோடு சமைத்து சாப்பிட்டு அவர்களிடத்தில் உயர் மதிப்பைப் பெறுமளவிற்கு அவனது மனிதம் உயர்ந்து நிற்கிறது. விலைமாதுக்களிடத்திலும் மனம் என்ற ஒன்று உள்ளது; அவர்களின் வறுமை பாலியல் தொழிலுக்கு அவர்களை நிர்ப்பந்திருக்கிறது என்ற தோரணையில் அவ்விடயம் பேசப்படுகிறது.

இளவயதில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி கற்பிக்கும் இளைஞர் ஒருவனுக்கு அவனது வீட்டுக்கு வேலை செய்ய வரும் தாழ்த்தப்பட்ட சமூகத்துப் பிள்ளை ஒன்றுடன் காதல் அரும்புகிறது. கொழும்பில் வளர்ந்த அந்த இளைஞனது காதல் பெண்பிள்ளை வீட்டாருக்குத் தெரியவர அவர்கள் 16 வயதேயான அந்தப் பிள்ளைக்கு அதே சமூகத்து இளைஞனைத் திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்த நிலையில் கணவன் கலவரத்தில் இறந்து போகிறான். வெளிநாடு சென்ற இந்த இளைஞன் தான் திருமணமே செய்யாதிருந்து குற்ற உணர்வோடு ராசாத்தி என்கின்ற அந்தப் பெண்ணுக்கும் பிள்ளைகளுக்கும் யாருக்கும் தெரியாது வெளிநாட்டிலிருந்கொண்டு பண உதவி செய்கிறான். அது மட்டுமின்றி தான் அனுப்பும் பணத்தை வைத்து போரினால் ஆதரவற்றவர்களுக்கு உதவும்படி கேட்டக்கொள்கிறான் அந்த மனிதநேயம் மிக்க இளைஞன்.

“அதேபோல எனது டென்மார்க் சொத்துக்கள் அனைத்தும்… இலங்கைக் காசுக்கு எப்பிடியும் இரண்டு கோடி வரும்… போரால் கால், கை இழந்து அகதி முகாம்களில் வாழும் இளம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்குப் பயன்பட வேண்டும். அவர்கள் எந்த இயக்கங்களில் இருந்தவர்களாயும் இருக்கலாம்… அல்லது கிபீர் விமானங்களின் குண்டடிகளில் பாதிக்கப்பட்டவர்களாய் இருக்கலாம். அதனை ராசாத்தியும் அவள் இல்லாத காலங்களில் அவளின் பிள்ளைகளுமே நிர்வகிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.” என்று அவன் எழுதும் மரண சாசனம் அவனது மனிதநேயத்தை எடுத்துக்காட்டும் முக்கிய சான்றாகிறது.

பல்வேறு போராட்ட இயக்கங்களின் இயங்கு நிலையில் புலம்பெயர் தேசமொன்றில் வாழும் ஒருவனின் வாழ்வியலினூடும், ஈழத்துப் போர்ச்சூழலில் கால் ஒன்றைப் போரில் இழந்த மகனோடு வாழும் இராசாத்தி என்கிற பெண்ணின் வாழ்க்கையூடாகவும் அவர்கள் இருவரிடத்திலும் பின்னாளில் தொடரும் அன்பு உடல்சார்ந்ததாக அன்றி, செய்த தவறுக்குப் பிராயச் சித்தம் தேடும் மானுட மனத்தின் தவிப்புகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ராசாத்திக்கு காசு அனுப்பும் விடயம் அவனது தந்தைக்குத் தெரிந்திருந்த போதும் நீண்ட நாட்களாக மகனுக்கு அதைச் சொல்வில்லை என்கிறபோது தந்தையின் மனிதப் பண்பு மேலெழுகின்றது.

“மற்றது தம்பி… நீ டென்மார்க்கிற்குப் போய் இரண்டொரு வருசத்துக்குப் பிறகு கொமேசல் பாங்க் மனேஜரைச் சந்திச்சனான். அவன் என்ரை பழைய கூட்டாளி. அவன்தான் சொன்னவன் நீ இப்பவும் செல்லத்துரையன்ரை பெட்டைக்கு காசு அனுப்பி அதுகளைப் பாக்கிறனீ எண்டு… எனக்கு உன்னைக் கையெடுத்துக் கும்பிட வேணும் போல கிடந்தது…” என்று கூறும்போது அவரது மானுடநேயத்தின் மாண்பினைக் கண்டுகொள்ள முடிகிறது.

இவற்றைவிட இந்தியன் ஆமியின் வருகையும் அதனால் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய இன்னல்களும், 1995 இல் யாழ் குடாநாடு முழுவதும் ஒரே இரவில் வடமராட்சிக்கும் தென்மராட்சிக்கும், பின்னர் சிலர் வன்னிக்கும் இடம்பெயர்ந்த அவலம், முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை போன்ற விடயங்களும் பக்கச்சார்பற்ற மனிதநேயத்துடன் பேசப்பட்டுள்ளன.

இந்த இளைஞன் டென்மார்க்கில் தன்னிடத்தில் வலிய வந்து கதைத்த இயக்க உறுப்பினர்களிடம் கேள்வி கேட்டதற்காகவும், விடுதலைப் போராட்டங்கள் பாகம் – 2 என்ற தொடரை இணையத் தளம் ஒன்றில் தொடர்ச்சியாக எழுதியதற்காகவும், அமுதா நாயர் என்ற பெயரில் இணையவழி தன்னுடன் தொடர்புகொண்ட பெண் உண்மையில் அமுதன் நாயன் என்கிற ஆண் என்றும் அவன் பல சட்டவிரோத செயல்களோடு தொடர்புடையவன் என்றும், இந்திய உளவுப்படையாகிய ரா -வின் ஆள் என்றும் தெரியாதிருந்தது. இந்நிலையில் டென்மார்க்கில் இயங்கிய இயக்க உறுப்பினர்கள் அவற்றை அறிந்து கொண்ட போதும் அவர்கள் அவனைக் கொலை செய்ய ஆயுதமெடுக்கின்ற துயர நிலையை நாவல் பதிவு செய்கிறது. இந்நிலையில் மக்கள்… மக்களால்… மக்களுக்காக… ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் போக்கு விமர்சத்திற்குள்ளாக்கப்படுகிறது.

கடவுச்சீட்டு நாவல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்த தமிழ், சுபா ஆகிய இருவரும் இலங்கையில் ஏற்பட்ட போர் நெருக்கடி நிலையிலிருந்து தப்பிக்கொள்ள யு.எல் 553 விமானத்தில் வெளிநாட்டுக்கு களவாகச் சென்று வெளிநாட்டு வாழ்க்கை வெறுத்து சில வருடங்களின் பின் யு.எல்.554 விமானத்தில் இலங்கைக்குத் திரும்பி வந்து வெளிநாடு செல்லும் கடவுச்சீட்டை விமான நிலைய மலசலகூடக் குழிக்குள் கிழித்தெறிந்து விட்டு வரும் வரையான பின்னணியில் புலம்பெயர் வாழ்வின் அசைவுகளையும் அவலங்களையும் பேசி நிற்கின்றது.

ஜெர்மனி அகதி முகாமுக்குப் போய் அங்கிருந்து காட்டுவழி, தண்ணீர் நிறைந்த அகழியில் சென்று பின்னர் பன்றிகள் ஏற்றப்பட்ட லொறியின் நடுவிலும் பெற்றோர் பௌசரிலும் கொண்டு செல்லப்பட்டு டென்மார்க்கை அடையும் துன்பியல் நாவலின் தொடக்கத்தில் வாசகரைக் கலங்க வைக்கிறது. தமிழ், சுபா போன்றோர் பன்றிகள் ஏற்றிய வண்டியில் தாங்கொணாத் துயரங்களை அனுபவித்து எல்லையைக் கடக்கிறார்கள். ஆனால், கூடவந்த செல்லத்துரை போன்றோர் பெற்றோல் பௌசரில் சென்று மூச்செடுக்க முடியாது இந்துவிடுகின்றனர். “அதுதானே பிளான் தம்பி. அவளையும் என்னுடைய ஐஞ்சு குமரையும் கொண்டு வந்திட்டுத்தானே மற்ற வேலைகள் பார்ப்பன். தம்பியவை சொல்லறன் என்று குறைநினைக்கப்படாது. உங்களுக்கு கலியாணம் நடந்திருக்கும். ஆனால், என்னுடைய மனுசி வைக்கிற ஒரு இறால் சொதியோடை உயிர் வாழலாம். அப்படியொரு கைப்பக்குவம் அவளுக்கு.” என்ற கனவோடு புறப்பட்ட செல்லத்துரை இறந்தபோது மனித மனங்கள் துயரால் துடித்துப் போகின்றன.புலம்பெயர்ந்து போன முகாம்களில் இன, மன பேதமற்ற ஒற்றுமை, உதவி, ஒத்தாசை, உறவு, வறுமை, அந்நாட்டு மொழியைக் கற்பதிலுள்ள சவால்கள், நிறத் துவேசம், தமது சொந்த சமய சம்பிரதாயங்களைப் பின்பற்றுவதிலுள்ள சவால்கள், சொந்த ஊர் மற்றும் உறவுகள் பற்றிய ஏக்கம், தனிமை அதனால் ஏற்படும் மன அழுத்தம் ஆகியவை நாவலில் பரவலாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்து சென்றபோதும் சாதி பற்றி சிந்தனை அவர்களது எண்ணத்திலிருந்து விலகவில்லை என்பதை, முகாம்களில் வாழும் தமிழர்கள் அவர்களது கிராமம், வட்டாரம், தெரு, தெரிந்தவர்கள் என்று விசாரித்து சாதியை உறுதிப்படுத்த எடுக்கும் எத்தணங்களையும் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். இவை தவிர போய்ச்சேர்ந்த நாடுகளில் நடைபெறும் பிறந்தநாள் விழாக்கள், சாமத்தியச் சடங்குகள், திருமண விழாக்கள் பற்றியும் அவற்றின்போது ஈழத்துச் சாதியம் பற்றிய தொடர்ச்சி எவ்வாறு மேலெழுகின்றது என்பதையும் ஆசிரியர் காட்டத் தவறவில்லை. தாழ்த்தப்பட்ட சமூகத்து இளைஞன் செந்திலுக்கும் கௌரி அன்ரியின் மகள் சிவாஜினிக்கும் இடையில் காதல் மலர்வதும் அதனை மனிதநேயத்துடன் தமிழ் பார்ப்பதும், ஆனால் சுபா அதற்று எதிரான கருத்தைக் கொண்டிருப்பதும், பின்னர் இவர்களின் காதலை அறிந்த சிவாஜினியின் பெற்றோர் அவளை சொல்லாமல்கொள்ளாமல் லண்டனுக்கு அனுப்பி வேறொரவனுக்குத் திருமணம் செய்து வைப்பதும் இதையறிந்த செந்தில் தற்கொலை செய்துகொள்வதும் புலம்பெயர் தேசங்களிலும் எமது நாட்டின் சாதியச் சிந்தனை எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றது என்பதைக் காட்டுகின்றது. ஆனாலும், தமிழ் வீட்டு துடக்குக் கழிப்பில் கௌரி அன்ரி வேண்டுமென்றே கிளாசில் தேநீர் கொடுத்தமைக்காக கொளரி அன்ரியை பழிவாங்கும் நோக்கிலேயே அவளின் மகள் சிவாஜினியை திட்டமிட்டு செந்தில் காதலித்தான் என்றும் அவனே அந்த ஆத்திரத்தில் கௌரி வீட்டுக் கண்ணாடியை கல்லால் எறிந்து உடைத்தான் என்றும் செந்திலின் நண்பர்கள் கூறுகின்றபோது அந்தப் பாத்திரம் பற்றிய மதிப்பு தமிழிடத்தில் சரிந்து விடுகிறது. இந்த இடத்தில் தமிழின் மானுடநேயம் விமர்சனத்திற்குள்ளாவதையும் அவதானிக்கலாம். செந்தில் பலரின் பார்வையிலும் பரிதாபத்துக்குரிய பாத்திரமாகக் கடந்து செல்கிறான்.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற நாடுகளில் தமிழர்கள் சிலர் தப்பான விடயங்களில் ஈடுபட்டமையையும் நாவலாசிரியர் வெளிப்படுத்தத் தவறவில்லை. கடவுச்சீட்டு நாவலில் வரும் கரினா என்ற டெனிஸ்கார பெண் – ஒரு கால் சற்று ஊனம் – தமிழர்கள் டெனிஸ் மொழி கற்கும் பாடசாலையில் சுத்திகரிப்புத் தொழிலாளியாகப் பணிபுரிகிறாள். அங்கு படித்த இலங்கைப் இளைஞன் ஒருவன் அவளைக் காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு அவளுக்குச் சொல்லாமல்கொள்ளாமல் கனடாவுக்கு ஓடிப்போய்விடுகிறான். அவளுக்குப் பிள்ளை பிறந்தபோது தமிழும் சுபாவும் சென்று பார்ப்பதும் ஆறுதல் வார்த்தைகளைப் பகிர்வதும்கூட அவர்களது மானுடநேயத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன.

டெனிஸ்மொழி கற்பிக்கும் பாடசாலையின் டெனிஸ்நாட்டு ஆசிரியை ஒருவர் தமிழுடன் தனது வீட்டில் தனியே சந்தித்தபோது “பயப்பிடாதை தமிழ். நான் உன்னைக் கற்பழிக்க மாட்டன். மாறாக நீயாக விரும்பி வந்தால் ஏற்றக்கொள்ளவும் தயங்க மாட்டேன்.” என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தியபோதும் தமிழ் சுபாவுக்குத் துரோகம் நினைக்கவே விரும்பதவனாய் அங்கிருந்து வெளியேறுவதும் தமிழ் என்ற பாத்திரத்தினூடாக வெளிப்படும் மானுடத்தை கோடிட்டுக்காட்டுகின்றது. அது மட்டுமின்றி இந்த விடயமும், டென்மார்க் நாட்டுப் பெண்களின் அரைகுறை ஆடைக் கலாசாரமும், திருமணம் பற்றிய அவர்களது பார்வையும், மது, டிஸ்கோரெக்கற்றுகளுக்குச் செல்வது போன்ற பல்வேறு விடயங்கள் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற பலரால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தமையையும் அவர்கள் தமது பிள்ளைகளின் எதிர்காலம் இந்த நாட்டில் எப்படி அமையப்போகிறது? அவர்கள் எவ்வாறு இவற்றைக் கடந்து அல்லது இவற்றுக்குள் மூழ்கிப் போகப்போகிறார்கள்? என்று தவித்தைமையையும் நாவலின் பல இடங்களில் காணலாம். இரு பண்பாட்டு முரணிலைக்குள் அகப்பட்டுக்கொண்டு தவிக்கப்போகும் எதிர்காலச் சந்ததி பற்றிய நாவலாசிரியரின் தீர்க்கதரிசனம் பின்னாளில் தமிழ் – சுபா தம்பியரின் குடும்பத்திலேயே ஏற்பட்டு ஒரு புயலை உருவாக்கிவிடுகிறது.

“ஏன் தமிழ்?… இங்கே உள்ள எல்லாரையும் பென்ரா ரீச்சராய் பாக்கிறியள்? எல்லாப் பொம்பிளையளும் இங்குள்ள சில தினசரிப் பத்திரிகைகளில் 9ஆம் பக்கத்தில் நிர்வாணப் படத்துக்குப் போஸ் குடுக்கிறவையா?” என்ற சுபாவின் கேள்விக்கு,

“ஆனால், இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளுற சுதந்திர மனப்பான்மை உள்ள நாட்டிலை எங்கடை அடுத்த சந்ததி வாழப்போகுது எண்டது தான் அபாயம் சுபா.” என தமிழ் பதிலளிப்பது சமூக முரண்பாட்டின் ஒரு பரிமாணத்தைக் காட்டிநிற்கின்றது.என்னதான் டெனிஸ் காலாசாரத்தில் வாழ்ந்தாலும் புலம்பெயர்ந்து சென்ற பெற்றோரிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் தமிழ் கலாசாரத்தின் உறவுப் பிணைப்பு இறுக்கமாக இருப்பதை தமிழ் – சுபா ஆகியோருடைய பெற்றோர் மற்றும் பிள்ளைகளிடத்தில் காணப்படும் தொடர்பு வெளிக்காட்டிநிற்கிறது. ஆனாலும், புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்த புதிய தலைமுறையிடம் அதன் தொடர்ச்சி பற்றிய உசாவல் மேலெழுவது தவிர்க்க முடியாததாகின்றது.

“எங்களைப் பதினெட்டு வயது வரேக்கை டெனிஷ்காரர் போலை வீட்டைவிட்டுப் போகச் சொல்ல மாட்டியளோ” என லக்ஷனாவும் சுமிதாவும் ஒன்றாகக் கேட்பதும் அதற்குத் தாய் சுபாவும் தமிழும் அப்படிச் செய்ய மாட்டோம் என்று கூறுவது இங்கு கவனிக்கத்தக்கது.

டென்மார்க்கில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தங்கராஜா – சிவமதி தம்பதிகளின் குடும்ப முரண்பாடு காரணமாக அவர்களது பிள்ளைகளை நகரசபை பொறுப்பேற்றுக் கொண்டபோது அந்த மொழிபெயர்ப்பை மேற்கொள்ளும் பொறுப்பிலிருந்த சுபா அவர்களது குடும்பத்துக்காக வருந்துகிறாள். பெற்றோரைப் பிரிந்து பிள்ளைகள் வாழவேண்டிய நிலைக்காக மிகவும் துன்பப்படுகிறாள். இது சுபா பிறர் மீதும், அவர்களது குழந்தைகள் மீதும் கொண்டுள்ள மனிதாபிமானத்தோடு கூடிய இரக்கத்தைக் காட்டி நிற்கிறது. இந்த இரக்க குணம் மிக்க தமிழுக்கும் சுபாவுக்கும் பிந்த பிள்ளைகள் தடம் மாறிச் செல்வதும் அதனைப் பெற்றோர் கட்டுப்படுத்த முற்படுகின்றபோது ஏற்படுகின்ற குடும்ப முரண்பாட்டையும் நாவலில் இறுதிப்பகுதியில் காணலாம்.

மூத்தமகள் சுமிதா ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்போது கர்ப்பமடைவதும் பின்னர் நகர சபையாரின் பாதுகாப்பில் உள்ளபோது தந்தையைப் பழிவாங்கவேண்டும் என்றே டேவிட் என்ற இளைஞனுக்கு கர்ப்பமாவதும், இளைய மகள் லக்ஷனா 18 வயது முடிந்த அன்றே காவல்துறையையும் தான்விரும்பிய அரேபிய முஸ்லிம் இளைஞனையும் வீட்டுக்கு அழைத்து அவனோடு சென்று விடுகின்றமையும் மனிதாபிமானத்தோடு வாழ்ந்த பெற்ரோராகிய தமிழையும் சுபாவையும் நிலைகுலையச் செய்யவே அவர்கள் இருவரும் நிரந்தரமான இலங்கைக்குத் திரும்பிவிடுகின்றனர். தமது டென்மார்க் கடவுச்சீட்டை இலங்கை விமானநிலைய மலசலகூடக் குழிக்குள் கிழ்த்தெறிந்து விட்டு வருமளவிற்கு அவர்கள் பாதிக்கப்படுவதற்கு அவர்களது மனிதாபிமானத்தோடு கூடிய வாழக்கையின் எதிர்பார்ப்புகள் தோற்றுவிட்டமையே காரணம் என்று எண்ணத் தோன்றுகிறது.

53557.JPG

குதிரைவாகனம் என்ற நாவல் இலங்கையின் யாழ்ப்பாணக் கிராமம் ஒன்றில் பரம்பரைப் பெருiபேசி வாழந்த சண்முகத்தார் என்பவரது குடும்பத்தின் ஐந்து தலைமுறை சார்ந்தவர்களின் வாழ்வியலும் சிந்தனையோட்டமும் எவ்வாறுமாற்றம் பெற்று சமுதாய மாற்றத்துடன் முட்டிமோதுகின்றன என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றது. கதைக்களம் யாழப்பாணக் கிராமம் ஒன்றையும் டென்மார்க்கையும் கொண்டமைந்துள்ளது. சண்முகத்தார் கோவிலுக்குச் செய்துகொடுத்த குதிரைவானம் அவர்களது பரம்பரையின் – குடும்பத்தின் கௌரவ அடையாளமாகக் கொள்ளப்படுவதோடு ஆரம்பத் தலைமுறை அந்தக் கௌரவத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டு வாழ முற்படுவதையும் தொடர்ந்து வரும் தலைமுறை சில நெகிழ்ச்சியோடு அவற்றைப் பேண முற்படுவதையும் இறுதித் தலைமுறை அவற்றைக் கேள்விக்குட்படுத்துவதையும் நாவல் வெளிப்படுத்தி நிற்கின்றது. மனித உணர்வுகளின் சிறு அசைவுகளையும் நாவல் அழகாக வெளிப்படுத்துகிறது. புனிதமான நட்பு, பெற்றோரின் அந்த நட்பு அறுந்துவிடக்கூடாது என்பதற்காகத் தமது காதலைத் தியாகம் செய்து வாழும் பிள்ளை, பிள்ளையின் காதலுக்கு தடையாக அமைந்துவிட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டதே என்று ஏங்கித் தவிக்கும் தந்தை, சிங்கள வேலைக்காரப் பெண்ணுக்குப் பிறந்த குழந்தையை தத்தெடுத்தது மட்டுமின்றி அதற்குப் பின்னர் தங்களுக்கு ஒரு பிள்ளை வேண்டாமென்று அவளைத் தமது பிள்ளையாகவே பேணி வளர்க்கும் பெற்றோர், கணவனுக்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்த பவித்திரா போன்ற மனைவி, பவித்திராவை மனைவியாகப் பெற்றதை எண்ணி எப்போதும் மகிழும் கணவன் மற்றும் மாமன், மாமி என்று நாவலின் கதை முழுவதிலும் பரம்பரைக் கௌரவம் பற்றிய கருத்தியலும் மனிதாபினமும் விரவி வெளிப்பட்டு நிற்கின்றன.

காதில் கடுக்கன் போட்டுக்கொண்டு வந்ததற்காக கணபதியின் காதை சண்முகத்தார் அறுத்ததை அவரது பெருமையாகப் பேசும் அதேவேளை, அவரது பரம்பரையில் வரும் அடுத்த தலைமுறை அவற்றை விமர்சனத்திற்குட்படுத்துவதையும், கோவில் கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குடித்ததற்காக முஸ்லிம் ஒருவனை அடித்துத் துன்புறுத்தில் உடன்பாடற்றிருக்கும் மானுடநேயமுள்ள புதிய தலைமுறை சண்முகத்தாரின் பரம்பரையில் தோன்றிவிட்டமையை நாவலாசிரியர் பதிவுசெய்கிறார்.

யாழப்பாணத்து கிராமம் ஒன்றில் நடைபெறும் திருவிழா, அதன்போதான கரகம், காவடி, சிலம்பம், சுருள்வாள் சுற்றுதல், தீப்பந்தம் சுற்றுதல், மேளச்சமா, அன்னதானம், கோவில் வழிபாடு, நம்பிக்கை, நேர்த்திக்கடன் போன்ற பண்பாட்டுக் கூறுகளையும் போர், இராணுவக் கெடுபிடிகள், அதனால் ஏற்பட்ட புலப் பெயர்வு, புலம்பெயர்ந்து செல்லும் நாடுகளில் ஏற்படும் அவலம் ஆகியவற்றையும் நாவலின் கதைநகர்வினூடே வெளிப்படுத்தியுள்ள பாங்கு வாசகர்களைக் கதையோடு கட்டிப்போட்டுவிடுகிறது.

Welcome To TamilAuthors.com

சங்கானைச் சண்டியன் என்ற குறுநாவல் முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்துச் சமூகத்தை அப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களிலும் சண்டியர்கள் ஒரு காலத்தில் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தார்கள் என்பதையும் அவர்களைச் சமூகத்திலுள்ள அரசியல்வாதிகளும் சமூக அந்தஸ்துடையவர்களும் தமது சுய தேவைக்காக எப்படிப் பயன்படுத்தினர் என்பதையும் அவற்றையும் தாண்டி அவர்களுக்குள்ளும் மனிதநேயம் குடிகொண்டிருந்தது என்பதையும் மிக அழகாக சங்கானைச் சண்டியன் என்ற பாத்திரத்தினூடாக ஜீவகுமாரன் வெளிப்படுத்துகிறார்.

சங்கானைச் சண்டியன் தவம் என்ற பெண் மீது காதல்கொண்டு அவளை கடத்திச் செல்ல முற்பட்டபோது அவளது ஒரு கை வெட்டுப்பட்டு விடுகிறது. எனினும், அவன் அவளிடத்தில் கொண்ட காதல் கொஞ்சமும் குறையாது அவளை இறுதிவரை பிரியாது வாழும் வாழ்வின் போக்கில் சண்டியனின் காதல் வசப்பட்;ட மெல்லுணர்வுகள் வெளிப்படுகின்றன. அவள் தாய்மையடைந்தபோது அவளிடத்தில் காட்டும் பாசமும் பரிவும் பிள்ளை பிறந்ததும் பிள்ளையிடத்தில் ஏற்படும் பிணைப்பும் அவனிடத்திலுள்ள அன்பின் ஆழத்தை விகசிக்கின்றன. அவற்றையும் தாண்டி அயல் வீட்டு சின்னக்கிளியக்காவும் சின்னராசாவும் சண்டியனுக்கும் மனைவி தவத்திற்கும் எந்த எதிர்பார்ப்புமின்றி உதவிகள் செய்வதும் அவர்களது மகள் சாந்தினியை சண்டியன் சகோதரிபோல் நோக்குவதும் அவளை கற்பழித்துக் கொன்ற தனது நண்பனாகிய மொட்டையனைக் கொலை செய்வதும் அவனது வன்மத்தோடுகூடிய நேர்மைத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. தனக்கு விசுவாசமாக இருந்த துரையண்ணைக்குத் தானே கொள்ளி வைப்பதும் அவர் எதிர்பார்த்தது போல தான் வாழவேண்டும் என்று எண்ணுவதும்கூட அவனது மானுடநேயத்தின் அடையாளமாக வெளிப்படுகின்றன.

கோமதி – குறுநாவல்
கோமதி என்கிற குறுநாவல்

கோமதி என்கிற குறுநாவல் பேசுகின்ற விடயம் சற்றுவேறுபட்டது. டென்மார்க்கில் வாழும் ஆணொருவனுக்கு வாழ்க்கைப்பட்டுச் சென்று பைத்தியமான அபலைப் பெண்ணொருத்தியின் துன்பத்தை இரத்தமும் சதையுமாகப் பதிவுசெய்கின்றது. டென்மார்க்கில் குடியேறியிருந்து சுரேனுக்கு, போராட்டத்தில் இணைந்து விலகியிருந்து கோமதியை சிங்கப்பூர் கூட்டிச்சென்று திருமணம் செய்துவைக்கிறார்கள். பாலியல் சார்ந்த உறவில் மிருகம்போல் செயற்படும் அவனது நடத்தைகள் திருமணத்தின் பின் பலோத்காரம் என்று சொல்லப்படுகின்ற அளவிற்குச் சென்றுவிடுகிறன. கோமதி தாய்மையடைந்திருக்கிறாள். வயிற்றில் இரட்டைப் பிள்ளைகள். பிள்ளைகள் பற்றிய பெரிய எதிர்பார்ப்போடு காத்திருக்கும் கோமதிக்குச் சொல்லாமல் சுரேன் ஏமாற்றி கருக்கலைப்புச் செய்துவிடுவதால் அவளது மனனிலை பாதிக்கப்பட்டு அவள் பைத்தியமாகிவிடுகிறாள். மனிதாபிமானமேயற்ற சுரேனுக்கு வாழ்க்கைப்பட்டு அவளது வாழ்க்கை அள்ளுண்டு போகிறது. ஒரு தாதி மற்றும் மனனல வைத்தியர் அவளிடம் காட்டும் அன்பின் ஒரு துளியைத்தானும் அவன் தனது மனைவிக்குக் கொடுக்கவில்லை.

“சுரேனோ அதனை அவளுக்குப் பருக்குவதோ… அல்லது எழுப்பிக் கொடுப்பதுவோ எனத் தடுமாறுவதைப் பார்த்த நேர்ஸ், கோமதியின் தலையைத் தூக்கி தனது மடியில் வைத்துக்கொண்டு… அவளின் தலையை ஒரு கையால் வருடியபடி… தேநீரைப் பருக்கினார்.” என்று நாவலாசிரியர் முன்வைக்கும் கூற்று அவனது குணவியல்பிற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டாக அமைகிறது. ஆனால், இக்குறுநாவலில் வரும் மனனல வைத்தியர் ஜானகி அவளிடத்தில் ஒரு வைத்தியராக மட்டுமன்றி சகோதரிபோல நடந்து அவளை, பெற்றோர் இல்லாமல் போரால் சீரழிந்து வரும் பிள்ளைகளுக்கு ஊழியம் செய்ய வழிப்படுத்துகிறார். இங்கு ஜானகியின் மானுடப் பண்பு மட்டுமன்றி அதனை ஏற்று சமூகப்பணி செய்யப் புறப்பட்ட கோமதியின் மானுட நேயமும் மதிக்கப்படவேண்டியதாகிறது.

ஜீவகுமாரனது நாவல்களில் சங்கானைச் சண்டியன் தவிர்ந்த ஏனையவை புலம்பெயர் நாடுகளையும் (குறிப்பாக மென்மார்க்) இலங்கையையும் கதைக் களமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளன. இலங்கை அரசியல், உள்நாட்டுப்போர், அதனால் ஏற்பட்ட விளைவுகள், புலம்பெயர் கலாசாரம், அதனை எதிர்கொள்ளும் எதிரிடை மாந்தர்களின் பார்வை, சாதியம் தொடர்பான தலைமுறைச் சிந்தனை மாற்றம் போன்ற பல விடயங்கள் அவ்வக்காலத்து சமூக, பொருளாதார, பண்பாட்டுச் சூழல்களில் நகர்த்திச் செல்லப்பட்டுள்ளன. பாத்திர வார்ப்பு, கதைப்பின்னல், களத்துக்கும் பாத்திரத்துக்கும் ஏற்ற மொழிக் கையாட்சி சார்ந்த விடயங்களில் வாசகனின் உந்தலைத் தடை செய்யாத வகையில் நாவல்கள் புனையப்பட்டுள்ள. எனினும், சில இடங்களில் கூறியது கூறலாக சில சம்பவங்கள் மாற்றமின்றி இடம்பெற்றுள்ளன என்பதையும் அவதானிக்க முடிகிறது. எடுக்காட்டாக மக்கள்… மக்களால்… மக்களுக்காக நாவலிலும் (பக்.58-59) கடவுச்சீட்டு நாவலிலும் (பக்.13-14) யாழப்பாண நூலக எரிப்பு தொடர்பான விடயம் ஒரே மொழிநடையில் கூறப்பட்டுள்ளமையை முன்வைக்கலாம். அதேபோல ஏணியும் பாம்பும் விளையாட்டை உவமையாகக் கூறுதல், இந்தியாதி இந்தியாதி இந்தியாதி (இவைபோன்ற என்ற கருத்தில்) என்ற சொற்றொடரைக் கையாளுதல் போன்ற விடயங்களையும் அவதானிக் முடிகின்றது. சம்பவத்தின் அவசியம் கருதியும் நாவல்கள் எழுதப்பட்ட காலத்தினதும் களத்தினதும் தன்மைகருதியும் இவற்றை அவர் கையாண்டுள்ளார் என்று சமாதானம் செய்துகொண்டு இவற்றைத் தாண்டி நோக்குகின்றபோது வி.ஜீவகுமாரனது நாவல்கள் ஒரு காலகட்டத்தின் இருப்பினையும், காலவோட்டத்தினால் ஏற்படும் அசைவுகளின் அந்தரங்கங்களையும் வெளிப்படையாகப் பேசுவதில் சிறந்து விளங்குகிறார். அத்தோடு அவரது நாவல்ளில் பேசப்படும் சமூகப் பிரச்சினைகளினூடே மானுடம் மேலெந்து நிற்கிறது என்று துணிந்து கூறலாம்.

அ.பௌநந்தி

 

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)