சூரியனைச் சுற்றும் கார்
சாலைகளில் கார்கள் ஓடுவதை நாம் தினமும் பார்க்கின்றோம். தற்போது பறக்கும் கார்களும் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கி விட்டது. பறக்கும் கார் எனச் சொன்னாலே பலருக்கு ஆச்சரியம் ஏற்பட்டு விடுகிறது. இதைவிட ஆச்சரியம் என்னவென்றால் ஒரு கார் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஆம், உண்மைதான்.
ஒருவர் காரில் ஏறிக்கொண்டு சூரியனை நோக்கிச் செல்ல முடியாது. சூரியனைச் சுற்றிவரவும் முடியாது. ஆனால் ஒரு காரை சூரியனை நோக்கி அனுப்பி, சூரியனைச் சுற்றிவர செய்ய முடியும். இது சாத்தியம் என்பதை விண்வெளி அறிவியல் நிரூபித்துள்ளது. டெஸ்லா ரோட்ஸ்டர் (Tesla Roadster) என்ற ஒரு கார் சூரியனைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது. இது எலான் மஸ்க் என்பவரின் காராகும்.
எலான் மஸ்க்
எலான் மஸ்க் (Elon Musk) என்பவர் ஒரு தொழிலதிபர் மற்றும் உலகின் பணக்காரர்களில் ஒருவர் ஆவார். இவர் 1971 ஆம் ஆண்டு ஜூன் 28 அன்று தென்னாப்பிரிக்காவில் பிறந்தார். இவர் கனடாவிலும், அமெரிக்காவிலும் படித்தார். இவர் 1999 ஆம் ஆண்டில் பேபால் (Paypal) என்ற ஒரு நிதி நிறுவனத்தைத் தொடங்கினார். பிறகு 2002 ஆம் ஆண்டில் 100 மில்லியன் டாலர் பணத்தில் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) என்ற விண்வெளி நிறுவனத்தைத் தொடங்கினார்.
இவர் 2003 ஆம் ஆண்டில் டெஸ்லா மோட்டார்ஸ் என்ற குழுமத்தையும் தொடங்கினார். இது டெஸ்லா ரோட்ஸ்டர் என்ற எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்களைத் தயாரித்தது. இது மின்சாரத்தால் இயங்கும் கார் ஆகும். இது அதி வேகமாக இயங்கக் கூடியது.
இதில் லித்தியம் அயன் பேட்டரி – செல்கள் இடம் பெற்றுள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்தால் 393 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்யலாம். இதன் விலை ஒரு கோடி ரூபாய் ஆகும். இந்தக் கார் 30 நாடுகளில் விற்பனைச் செய்யப்படுகிறது. மேலும் இவர் 2023 ஆம் ஆண்டில் மஸ்க் xAI என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தையும் நிறுவினார்.
ஸ்பேஸ் எக்ஸ்
ஸ்பேஸ் எக்ஸ் என்பது அமெரிக்காவில் இயங்கக்கூடிய ஒரு விண்வெளிப் பயண சேவை நிறுவனம் ஆகும். இது விண்வெளித் துறையில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இது ஒரு தனியார் நிறுவனம் ஆகும். இது நாசாவைப் போலவே விண்வெளி ஆராய்ச்சியில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது.
விண்வெளிப் போக்குவரத்துச் செலவுகளைக் குறைத்து, இறுதியில் செவ்வாய் கிரகத்தில் ஒரு நிலையான காலணியை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. இதற்காக ஒரு ராக்கெட் தளத்தையும் அமைத்துக் கொண்டது. இந்த நிறுவனம் பல ராக்கெட்டுகளை உருவாக்கி விண்வெளியில் செலுத்தி வருகிறது.
பால்கன்
இந்த நிறுவனம் பல ராக்கெட்டுகளைத் தயாரித்தது. அதற்கு பால்கன் (Falcon) எனப் பெயரிட்டது. இந்த ராக்கெட் பலமுறை பரிசோதனைச் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பால்கன் 9 என்ற ராக்கெட் தயாரிக்கப்பட்டது. இந்த ராக்கெட் ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டதாக அமைந்தது. ராக்கெட் வரலாற்றில் இது ஒரு புதிய சாதனையைப் படைத்தது.
பொதுவாக ராக்கெட்டுகள் செயற்கைக்கோள் மற்றும் விண்கலங்களை ஏவிய பிறகு எரிந்து கடலில் விழுந்து விடும். பல அடுக்கு ராக்கெட்டுகள் அனைத்துமே ஒன்றின் மீது ஒன்றாக பொருத்தப்பட்டு இருக்கும். இந்த ராக்கெட் இலக்கை நோக்கி உயரே செல்ல செல்ல ஒவ்வொரு அடுக்கு ராக்கெட்டும் பணி முடிந்த பின்னர் தனியே கழண்டு தீப்பிடித்து எரிந்து அழிந்து விடும். ஆனால் இந்த பால்கான் 9 என்ற ராக்கெட் தீப்பிடித்து எரிவது கிடையாது.
இந்த பால்கன் 9 என்ற ராக்கெட்டின் அடிப்புறப் பகுதி தனியே கழன்று, மிக மெதுவாக தரையில் வந்து அமரும். அதாவது குறிப்பிட்ட இலக்கில், இடத்தில் இறங்கும். ராக்கெட் யுகம் தோன்றி 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. இப்படி இறங்கிய இந்த ராக்கெட்டை மீண்டும் மீண்டும் எலான் மஸ்க் பயன்படுத்தினார்.
இந்த ராக்கெட் சரக்கு மற்றும் விண்வெளி வீரர்களைப் பூமியின் சுற்றுப் பாதையில் கொண்டு சென்று சேர்த்தது. இது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவப்பட்டது. இது 2020 ஆம் ஆண்டில் மனிதர்களை ஏவுவதற்கான முதல் வணிக ராக்கெட் என்ற தகுதியைப் பெற்றது.
இந்த ராக்கெட் இரண்டு நிலைகளைக் கொண்டது. முதல் நிலை (பூஸ்டர்), இரண்டாம் நிலை மற்றும் பேலோடை (பொருள்) முன்னரே தீர்மானிக்கப்பட்ட வேகம் மற்றும் உயரத்துக்கு கொண்டு செல்கிறது. அதன் பிறகு இரண்டாவது நிலை அதன் இலக்கு சுற்றுப்பாதையில் பேலோடை துரிதப்படுத்துகிறது. பூஸ்டர் மீண்டும் பயன்படுத்த வசதியாக செங்குத்தாக தரை இறங்கும் திறன் கொண்டது.
இந்தச் சாதனை முதன் முதலில் 2015 ஆம் ஆண்டு டிசம்பரில் நிகழ்த்தப்பட்டது. 2024 ஆம் ஆண்டு ஜூலை 12 இன் நிலவரப்படி பால்கன் 9 ராக்கெட்டின் பூஸ்டர்கள் 314 முறை வெற்றிகரமாக தரை இறங்கியுள்ளன. வரலாற்றில் அதிக ஏவுதல்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பு பதிவைக் கொண்ட அமெரிக்க ராக்கெட் என்ற தகுதியை பால்கன் 9 பெற்றுள்ளது.
பால்கன் ஹெவி
பால்கன் ஹெவி (Falcon Heavy) என்பது ஒரு கனரக ஏவுகணை வாகனம் ஆகும். இது பகுதி மறு பயன்பாடுடன், சரக்குகளைப் பூமியின் சுற்றுப்பாதை மற்றும் அதற்கு அப்பால் கொண்டு செல்ல முடியும். இது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ராக்கெட் ஆகும். இது 70 மீட்டர் உயரம் கொண்டது. இது சுமார் 64 டன் எடையை சுமந்து செல்லக்கூடிய ராக்கெட் ஆகும். உலகின் மிகப் பெரிய பிரமாண்டமான ராக்கெட் இதுவாகும்.
இது ஒரு மைய மையத்தைக் கொண்டுள்ளது. அதில் இரண்டு பால்கன் பூஸ்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் மைய மையத்தின் மேல் இரண்டாவது நிலை உள்ளது. இது குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அப்பால் மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டெஸ்லா கார்
பால்கன் ஹெவி ராக்கெட்டின் முதல் பரிசோதனை 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 அன்று நடைபெற்றது. இந்த ராக்கெட்டில் செயற்கைக்கோள் அல்லது விண்கலம் எதுவும் பேலோடாக வைக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக எலான் மஸ்கிற்குச் சொந்தமான ஒரு செர்ரி சிவப்பு டெஸ்லா ரோட்ஸ்டர் கார் பொருத்தப்பட்டது. இதற்கு முன்பு இவர் வேலைக்குச் செல்வதற்காக இந்தக் காரைப் பயன்படுத்தினார்.
காரின் ஓட்டுனர் இருக்கையில் விண்வெளி வீரர் உடை அணிந்த முழு மனித உருவ பொம்மை வைக்கப்பட்டது. இது முழு அளவிலான மனித மேனிக்வின் (Mannequin) ஆகும். இதற்கு ஸ்டார்மேன் (Starman) எனப் பெயரிடப்பட்டது. இது வலது கையை ஸ்டீரிங் மீதும், இடது முழங்கை திறந்த ஜன்னல் மீதும் வைக்கப்பட்டிருந்தது. வாகனத்தின் சர்க்யூட் போர்டில் “இது பூமியில் மனிதர்களால் தயாரிக்கப்பட்டது” என்ற செய்தி எழுதி இருக்கிறது.
டாஷ்போர்ட்டில் “பீதி அடைய வேண்டாம்” என்றும் எழுதப்பட்டுள்ளது. இது வேற்றுக்கிரக வாசிகளுக்குச் சொல்லப்படும் தகவல் ஆகும். மேலும் இத்திட்டத்தில் பணிபுரிந்த ஊழியர்களின் பெயர்களைக் கொண்ட ஒரு தகடு காரின் அடிப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. காரில் பின்னணி இசையுடன் ஒரு பாடலும் இசைத்துக் கொண்டிருந்தது.
கார் மற்றும் ஸ்டார்மேன் ஆகியவற்றின் மொத்த எடை 1300 கிலோ ஆகும். இதன் ஏவுதல் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 அன்று நடைபெற்றது. காருக்குள் அனைத்துப் பக்கங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றின் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது.
இது ஏவப்பட்ட 9 மாதங்களுக்குப் பிறகு டெஸ்லா ரோட்ஸ்டர் கார் செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுப் பாதைக்கு அப்பால் பயணித்தது. இது 2018 ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று சூரியனைச் சுற்றத் தொடங்கியது. இது ஒரு நீள் வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றுகிறது. இந்தக் கார் ஒரு மணி நேரத்திற்கு 41,236 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்தக் கார் ஒருமுறை சூரியனைச் சுற்றி வர 557 நாட்கள் ஆகிறது.
இது சூரியனைச் சுற்றும் போது 248,890,000 கிலோமீட்டர் தொலைவு தூரத்தில் இருந்து, சூரியனுக்கு நெருக்கமாக 147,523,000 கிலோமீட்டர் வரை வந்து செல்கிறது. இதன் சுற்றுப் பாதை வியாழன் மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு இடையில் அமைந்துள்ளது. இந்தக் கார் தற்போது பூமியிலிருந்து சுமார் 105,038,664 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தக் கார் இதுவரை கிட்டத்தட்ட 3.93 முறை சூரிய சுற்றுப் பாதைகளை முடித்துள்ளது.
இந்தக் காரின் சுற்றுப்பாதை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது 2047 ஆம் ஆண்டு, பூமிக்கு மிக அருகில் வந்து செல்ல போகிறது. அப்போது பூமியிலிருந்து 5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் கார் இருக்கும். இது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட 13 மடங்கு அதிகமாகும்.
எதிர்காலம்
இந்தக் கார் சூரியனைச் சுற்றிவர எஞ்சினோ, எரிபொருளோ கிடையாது. இயற்கை விதிக்கு உட்பட்டு பூமி மற்றம் இதர கிரகங்கள் எப்படி சூரியனைச் சுற்றி வருகிறதோ, அது போலவே இதுவும் சுற்றி வருகிறது. இந்தக் காரின் கார்பன் ஃபைபர் பாகங்கள், டயர்கள், பெயிண்ட், பிளாஸ்டிக் மற்றும் தோல் ஆகியவை ஒரு வருடத்தில் அழிந்து விடும். அதே நேரத்தில் இதன் அலுமினிய சட்டகம், மந்த உலோகங்கள் மற்றும் கண்ணாடிகள் ஆகியவை அப்படியே இருக்கும். இது தற்போது சூரியனின் செயற்கைக்கோளாக மாறியுள்ளது எனக் கூறலாம்.
இந்தக் கார் மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் விண்வெளியில் பயணம் செய்யும். அடுத்த 15 மில்லியன் ஆண்டுகளுக்குள் அது பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து எரிந்துவிடும் என்கின்றனர். அந்தக் காரை ஆய்வு செய்வதற்காக ஒரு சிறிய விண்கலத்தை ஏவி, காரைப் பிடித்து பூமிக்கு திரும்பவும் கொண்டு வர வாய்ப்புள்ளது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
கட்டுரையாளர் :
– ஏற்காடு இளங்கோ
Ref.
1. சூரியனை சுற்றி வரும் கார் – தினத்தந்தி
2. Wikimedia
3. சூரியனை மொத்தமாக சுற்றி வந்து பேட்டரி கார்… by Shyamsundar
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.