2020 அக்டோபர் 17, ஒரு வரலாற்றுச்சிறப்பு மிக்க தினமாகும். அது, முந்தைய சோவியத் யூனியனில் தாஷ்கண்ட் நகரில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை நூறு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தினத்தைக் குறிக்கிறது.
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒரு நூறாண்டு காலத்தில் சென்ற 20ஆம் நூற்றாண்டில் 80 ஆண்டுகளும், இப்போதைய 21ஆம் நூற்றாண்டில் முதல் இருபது ஆண்டுகளும் கடந்திருக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சியின் பிறப்பும் வளர்ச்சியும், இந்தியாவில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்துடன் பின்னிப்பிணைந்திருக்கிறது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மிகச்சிறந்த மற்றும் மிகவும் தீவிரமான போராளிகள் பலர் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்கள். ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கையில் உறுதியான அதன் பங்களிப்பே அதற்குக் காரணமாகும். ஆரம்பத்திலிருந்தே கடும் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளான ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட்டுகள், பல ஆண்டு காலம் தங்கள் வாழ்க்கையை சிறையிலேயே கழித்தார்கள். பலர், நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களில், குறிப்பாக, 1945-47களில் இரண்டாம் உலகப் போருக்குப்பின் நடைபெற்ற பிரம்மாண்டமான மக்கள் கிளர்ச்சிக் காலத்தில், தியாகிகளானார்கள். 1943இல் நடைபெற்ற கட்சியின் முதல் அகில இந்திய மாநாட்டில் கலந்துகொண்ட 138 பிரதிநிதிகள், சிறையிலிருந்த மொத்த காலம் 414 ஆண்டுகள் என்பதைப் பார்த்தோமானாலேயே கம்யூனிஸ்ட்டுகள் மீது ஏவப்பட்ட ஒடுக்குமுறையையும் அவர்களின் தியாகத்தையும் தெரிந்துகொள்ள முடியும்.
தொழிலாளர்களும், விவசாயிகளும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் விடுதலை செய்யப்பட்டால் மட்டுமே பூரண ஸ்வராஜ்யம் என்பது முழுமையாக அர்த்தமான ஒன்றாக இருக்க முடியும் என்று கம்யூனிஸ்ட்டுகள் நம்பினார்கள். கம்யூனிஸ்ட்டுகள், தேசிய இயக்கத்திற்குள் தொழிற்சங்கங்களின் மூலமாகத் தொழிலாளர்களையும், விவசாய சங்கங்கள் மூலமாக விவசாயிகளையும் ஈர்ப்பதற்கும் ஸ்தாபனப்படுத்துவதற்கும் முக்கியமான பங்களிப்பினை மேற்கொண்டார்கள்.
சுதந்திரத்திற்குப் பின்னர், புதிய ஆளும் வர்க்கம் (முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவக் கூட்டணி), ஜனநாயகப் புரட்சியின் பணிகளை முழுமை பெறச் செய்வதற்குப் பதிலாகத் தன் முதுகைத் திரும்பிக்கொண்டுவிட்டது. பெரு முதலாளிகளின் தலைமையிலான முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவக் கூட்டணி ஆட்சி அதிகாரத்தை, தொன்மையான நில உறவுகளின் நுகத்தடியிலிருந்து விவசாயிகளை விடுவிப்பதற்குப் பதிலாக, நிலப்பிரபுக்களுடன் சமரசம் செய்து கொண்டு, அவர்கள் மீது முதலாளித்துவ சுரண்டலைத் திணிக்கும் விதத்தில், முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையைப் பயன்படுத்திக் கொண்டது. அது பின்பற்றிய கொள்கைகள் பெரும் ஏகபோக முதலாளிகளுக்கும், கிராமப்புற பணக்காரர்களுக்கும் ஆதரவானதாக இருந்தது.
கம்யூனிஸ்ட் கட்சி, ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்னும் முழக்கத்தை முன்வைத்து, அதனை நிறைவேற்றும் விதத்தில், நிலச்சீர்திருத்தங்களுக்கான போராட்டத்தையும் கிராமப்புற விவசாய உறவுகளை ஜனநாயகப்படுத்துவதற்கான கடமைகளையும் கையில் எடுத்துக்கொண்டது. இந்தப் போராட்டங்கள் முதலில் கேரளாவில் கம்யூனிஸ்ட் அமைச்சரவை அமைவதற்கும், பின்னர் மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங்கள் அமைவதற்கும், அவற்றின் மூலமாக நிலச்சீர்திருத்தங்களை அமல்படுத்தவும் இட்டுச் சென்றன. சுதந்திரத்திற்குப் பின்னர், ஆரம்ப காலங்களில் நிலச்சீர்திருத்தங்களை இந்திய அரசியலில் மையக் கட்டத்திற்குக் கொண்டுவந்ததற்கு, கம்யூனிஸ்ட் கட்சியே காரணமாகும்.
அடுத்து, கம்யூனிஸ்ட்டுகள் மேற்கொண்ட மிகப்பெரிய போராட்டங்களில் மிக முக்கியமானது மொழிவழி மாநிலங்கள் அமைவதற்கான போராட்டமாகும். சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, மொழிவழி மாநிலங்களை உள்ளடக்கிய இந்திய ஒன்றியத்தைக் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அமைப்பதற்கான ஒரு திட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் வகுத்துத் தந்தார்கள். அரசியல் அமைப்பு முறையில் மதச்சார்பின்மையையும், ஜனநாயகத்தையும் மிகவும் உறுதியுடன் பாதுகாப்பவர்களாக கம்யூனிஸ்ட்டுகள் மிளிர்ந்தார்கள். மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் சமமாகப் பார்ப்பது என்றும், அரசிலும், அரசியலிலும் சம அளவில் தலையிடுவதற்கான உரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியும் இதர மதச்சார்பற்ற முதலாளித்துவக் கட்சிகளும் வியாக்கியானம் செய்து வந்த அதே சமயத்தில், கம்யூனிஸ்ட்டுகள் அரசிடமிருந்தும், அரசியலிலிருந்தும் மதத்தைத் தனியே பிரித்திட வேண்டும் என்று எவ்வித ஊசலாட்டமுமின்றி உறுதியுடன் நின்றார்கள். மதச்சார்பின்மைக் கொள்கையில் கம்யூனிஸ்ட்டுகள் எந்த அளவிற்கு உறுதியுடன் நின்றார்கள் என்பது, மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் பல்வேறு காலங்களில் இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங்களில் அவர்கள் ஆற்றிய பங்கால் சோதித்துப் பார்க்கப்பட்டன. இது தொடர்பாக மேற்கு வங்கத்தில் 34 ஆண்டு கால இடது முன்னணி அரசாங்கத்தின் ஆட்சி ஒரு முன்னுதாரணமாக அமைந்திருந்தது.
1990களில் இந்துத்துவா சக்திகள் தலைதூக்கிய சமயத்தில், கம்யூனிஸ்ட்டுகளும், இடதுசாரிக் கட்சிகளும் மட்டுமே அயோத்தி தாவா போன்ற பிரச்சனைகளில் எவ்விதமான சமரசத்திற்கும் இடங்கொடாது மதவெறி சக்திகளை எதிர்த்து உறுதியுடன் நின்றன. நாட்டில் ஜனநாயகத்தை விரிவான முறையிலும், ஆழமான முறையிலும் கொண்டு செல்வதற்கு கம்யூனிஸ்ட் இயக்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறது. ஆளும் வர்க்கங்கள், ஜனநாயகத்தையும், அரசமைப்புச்சட்டம் மக்களுக்கு அளித்துள்ள உரிமைகளையும் கட்டுப்படுத்திட எப்போதும் முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கின்றன. ஆரம்பத்திலிருந்தே, கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட தடுப்புக் காவல் சட்டங்களை எதிர்த்து வந்திருக்கின்றனர், ஜனநாயக உரிமைகளையும், குடிமை உரிமைகளையும் பாதுகாத்திடவும் கோரி வந்திருக்கின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அவசரநிலைப் பிரகடனத்தை எதிர்த்தது. அதன் முன்னணி ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் சிறைப்படுத்தப்பட்டார்கள்.
முப்பது ஆண்டுகளுக்கு முன், ஆளும் வர்க்கங்கள், நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கியபின்னர், முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையின் அனைத்து வடிவங்களும் மாறின. காங்கிரஸ் கட்சி, பாஜக மற்றும் இதர அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் நவீன தாராளமய அணுகுமுறையைத் தழுவிக்கொண்டன. எனினும், கம்யூனிஸ்ட்டுகள் நவீன தாராளமயக் கொள்கைகளையும், அவ்வாறு மாறுவதன் ஒரு பகுதியாக ஏகாதிபத்திய ஆதரவு நிலை எடுப்பதையும் உறுதியுடன் எதிர்த்து வந்திருக்கிறார்கள். வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகளில் பணிபுரிந்து வந்த கம்யூனிஸ்ட்டுகள், இக்கொள்கைகளுக்கு எதிர்ப்பை அணிதிரட்டுவதில் முக்கிய பங்கினை வகித்து வந்திருக்கிறார்கள். நவீன தாராளமயக் கொள்கைகளின் மூலம் தொழிலாளர்கள் மீது ஏவப்பட்ட தாக்குதலைத் தடுத்து நிறுத்திடவும், விரிவான அளவில் தொழிலாளர் வர்க்க ஒற்றுமையைக் கட்டி எழுப்பிடவும் கம்யூனிஸ்ட்டுகள் செயல்பட்டு வந்திருக்கிறார்கள்.
ஒன்றுபட்ட தொழிலாளர் வர்க்க இயக்கம் கடந்த முப்பதாண்டுகளில் நவீன தாராளமயக்கொள்கைகளின் பல்வேறு அம்சங்களுக்கு எதிராக இதுவரை 19 பொது வேலை நிறுத்தங்களை நடத்தி இருக்கிறது. இருபதாவது ‘ஒருநாள் பொது வேலைநிறுத்தம்’ வரும் நவம்பர் 26 அன்று நடைபெற விருக்கிறது.
ஆளும் வர்க்கங்கள், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் இடதுசாரி இயக்கத்தின் மீது கொண்டிருக்கும் பகைமையின் விளைவாக, அவற்றின் முன்னணி ஊழியர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. 1970களில் மேற்கு வங்கத்திலும், அதன்பின்னர் பத்தாண்டுகள் கழித்து திரிபுராவிலும் அரைப் பாசிச அராஜகம் தலைவிரித்தாடியது. இங்கே வர்க்கப் போராட்டங்கள் மிகவும் உக்கிரமாக நடைபெற்றதன் வெளிப்பாடே இவற்றுக்குக் காரணங்களாகும். இவ்விரு மாநிலங்களிலும், கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான பயங்கரவாத மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் மீண்டும் நடக்கத் தொடங்கியிருக்கின்றன.
கேரளாவிலும்கூட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான முன்னணி ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் உட்பட ஆளும் வர்க்க சக்திகளினால் கடந்த சில ஆண்டுகளாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
பெண்களின் விடுதலைக்காக ஓர் ஒருங்கிணைந்த திட்டத்தை வடிவமைப்பதிலும், அனைத்து முனைகளிலும் பெண்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதிலும் கம்யூனிஸ்ட்டுகள் முன்னோடிப் பங்கினை வகித்திருக்கிறார்கள். பெண்களின் உண்மையான விடுதலைக்கு, அவர்களுக்கெதிரான சமூக ஒடுக்குமுறைக்கும் மற்றும் ஆணாதிக்க அமைப்பு முறைக்கும் முற்றுப்புள்ளி வைப்பது அவசியமாகும். 1931இலேயே, கம்யூனிஸ்ட்டுகளின் செயல்பாடுகளுக்கான வரைவு மேடையானது, நாட்டில் சாதி அமைப்பு முறை மற்றும் தீண்டாமையை ஒழித்துக்கட்டுவதை உயர்த்திப்பிடித்திருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகள் வர்க்கப் போராட்டத்துடன், சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் ஒருங்கிணைத்திட வேண்டும் என்று கோரி இருக்கிறார்கள்.
நாட்டில் நவீன தாராளமயக் கொள்கையும், இந்துத்துவா சக்திகளும் இணைந்து வளர்ச்சி பெற்றிருப்பது கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், அனைத்து இடது மற்றும் ஜனநாயக சக்திகளுக்கம் ஆழமான அளவில் சவாலாக எழுந்துள்ளது. நவீன தாராளமய முதலாளித்துவம் வர்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் கலவையில் எண்ணற்ற மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது. இவற்றில் சில தொழிலாளர் வர்க்கம் மற்றும் விவசாய வர்க்கத்தின் இயக்கங்களில் கடும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி இருக்கின்றன. தனியார்மயக் கொள்கைகளை அனைத்துத்துறைகளிலும் கொண்டுவர ஆட்சியாளர்கள் துடித்துக்கொண்டிருப்பது, இடைத்தட்டு வர்க்கங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் காலத்தில் இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங்களும் தங்களுடைய மாற்றுக் கொள்கைகளை அமல்படுத்துவதில் ஆழமான முறையில் கட்டுப்பாடுகளையும், வரையறைகளையும் ஏற்படுத்தி இருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி சக்திகளும் இந்தப் பிரச்சனைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, புதிய உத்திகளையும், முழக்கங்களையும் வடிவமைத்துச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன.
2014இல் மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின், குணாம்சரீதியான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நாட்டில் முதன்முதலாக, பாசிஸ்ட் ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் கட்டுப்படுத்தக்கூடிய இந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையிலான ஒரு கட்சி கடந்த ஆறு ஆண்டுகளாக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக, மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் நலன்கள் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. விடுதலைப் போராட்டத்தில் எவ்விதமான பங்கினையும் செலுத்தாத ஓர் அரசியல் சக்தி, ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் மதச்சார்பின்மைக் கொள்கை சிறிதும் இல்லாத ஓர் அரசியல் சக்தி இப்போது ஆட்சியில் அமர்ந்துகொண்டு, அரசமைப்புச்சட்டத்தை ஒழித்துக்கட்டுவதிலும், எதேச்சாதிகார ஆட்சியை நடத்துவதிலும் தீவிரமாக இருக்கிறது. இவை அனைத்தையும் தன்னுடைய பிற்போக்கான தேசியவாதக் கொள்கை என்ற பெயரில் செய்துகொண்டிருக்கிறது. இவர்களின் போலி தேசியவாதத்தை, உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்பு, மதச்சார்பின்மை மற்றும் உள்ளீடான தேசியவாதக் கொள்கையுடன் எதிர்த்துநின்று முறியடித்திட வேண்டிய சவால் நம்முன் உள்ளது.
கம்யூனிஸ்ட்டுகள் இதனைச் செய்யக்கூடிய அளவிற்கு சிறந்தமுறையில் பயிற்சி பெற்றிருப்பவர்கள். ஏனெனில் அவர்கள், சுதந்திரத்திற்காக ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை நடத்திய பாரம்பர்யத்தைக் கொண்டவர்கள். நிச்சயமாக அவர்கள் இதனைச் சிறந்தமுறையில் முன்னெடுத்துச் செல்வார்கள்.
இந்த நேரத்தில் அனைத்துக் கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி சக்திகளின் ஒற்றுமையைக் கட்டி எழுப்பும் கடமை மிக முக்கியமானதாகும். அதன் மூலம் இதர ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளையும் அணிதிரட்டிட வேண்டும்.
மார்க்சிசம்-லெனினிசம் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அடித்தளமாக இருந்து வருகிறது. 1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டதென்பது, திருத்தல்வாதத்திற்கு (revisionism) எதிராக நடைபெற்ற ஒரு நீண்டநெடிய போராட்டத்தின் விளைவாகும். அவ்வாறு அமைக்கப்பட்டபின், கட்சி, இடது அதிதீவிரவாதத்திற்கு (Left adventurism) எதிராகவும் போராட வேண்டியிருந்தது. இந்திய சமூகத்தின் துல்லியமான நிலைமைகளுக்கு மார்க்சிச-லெனினிசத்தைப் பிரயோகித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு கட்சித் திட்டத்தை உருவாக்கியது. அதன் கொள்கைகள் சோசலிசத்திற்கான பாதைக்கு வசதி செய்துதரக்கூடிய விதத்தில் மக்கள் ஜனநாயகத்தை எய்துவதேயாகும். அது, இந்தியாவில் புரட்சிகர இயக்கம் வர்க்கச் சுரண்டலிலிருந்தும், சமூக ஒடுக்குமுறையிலிருந்தும் விடுவிக்கப்பட்ட ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்பக்கூடிய விதத்தில் சமூகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்லக்கூடிய அறிவியல்பூர்வமான சித்தாந்தம் மற்றும் நடைமுறையை உறுதியாகப் பற்றி இருக்கிறது.
(அக்டோபர் 14, 2020)