பல்துறை அறிஞர் ஏ.ஜி.நூரானி (1930-2024) நம்மை விட்டுப் பிரிந்தார்
டி.கே. ராஜலட்சுமி
ஃப்ரண்ட்லைன்
2024 ஆகஸ்ட் 30
2010 ஏப்ரல் 23 அன்று புது தில்லியில் ஏ.ஜி.நூரானி
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இருபத்தியொன்பதாம் நாள் தனது தொன்னூற்றி மூன்றாவது வயதில் மும்பையில் உள்ள தனது வீட்டில் காலமான அப்துல் கஃபூர் மஜீத் நூரானியை அறிஞர், வழக்கறிஞர், வாழ்க்கை வரலாற்றாசிரியர், வரலாற்றாசிரியர், அரசியல் விமர்சகர் என்று பலரும் பலவிதமாக அறிந்து வைத்துள்ளனர்.
நூரானி அல்லது கஃபூர்பாய் என மிகப் பிரபலமாக அறியப்பட்ட அவர் பல்துறை அறிஞராகத் திகழ்ந்து வந்தார். அரசியலமைப்புச் சட்டத்தின் மீது கூர்மையான ஞானம் கொண்டவராகவும், பல்வேறு துறைகளில் மிகச் சிறந்த எழுத்தாளராகவும் இருந்த அவர் மிகவும் ஆழ்ந்த நீதி உணர்வு கொண்டவராக இருந்தார். மதச்சார்பின்மை, சமத்துவம் உள்ளிட்ட முற்போக்கான கருத்துகளை உறுதியுடன் கடைப்பிடித்து வந்த அவரது எழுத்துகள் உள்நாட்டு அரசியல், நீதித்துறை, சமகாலம் மட்டுமல்லாது வரலாற்றுக்கால சர்வதேச உறவுகள் வரை பரவியிருந்தன.
உச்ச நீதிமன்ற முன்னாள் வழக்கறிஞரான நூரானி பம்பாய் உயர் நீதிமன்றத்திலும் பணியாற்றியுள்ளார். தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், தி ஹிந்து, ஃப்ரண்ட்லைன், எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி, டைனிக் பாஸ்கர் உள்ளிட்ட பல முன்னணி பத்திரிகைகளுக்கு அவர் எழுதி வந்தார். ஃப்ரண்ட்லைனில் தொடர்ந்து வெளியான அவரது நன்கு ஆய்வு செய்யப்பட்ட பத்திகள் தகவல் மற்றும் நுண்ணறிவுக் களஞ்சியமாக இருந்தன. காஷ்மீரைப் பற்றி பல விரிவான கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். தன்னுடைய வாதங்களை உறுதிப்படுத்திக் கொள்ள ஆவணக்காப்பகங்களிலுள்ள ஆவணங்களை நூரானி பயன்படுத்தி வந்தார். மனித வரலாற்றில் பத்து பெரிய சோகங்களில் ஒன்று என அவரால் விவரிக்கப்பட்ட இந்தியப் பிரிவினைக்கு வழிவகுத்த செயல்முறைகளைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார்.
நூரானியுடன் தனக்கிருந்த நீண்டகாலத் தொடர்பை தி இந்து குரூப் ஆஃப் பப்ளிகேஷன்ஸின் இயக்குனரான என்.ராம் நினைவு கூர்ந்தார். மறைந்த அறிஞருக்குச் செலுத்திய அஞ்சலிக்குறிப்பில் ராம் ‘புத்திசாலித்தனம், பல்துறை அனுபவம் கொண்டவராக, துணிச்சல், சுதந்திரம், முக்கியமான பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தியவராக இருந்த கஃபூர் நூரானி பத்திரிகையாளருக்கான பத்திரிகையாளராக இருந்தார். குடிமக்களுக்கான உரிமைகள் – குறிப்பாக பேச்சு, கருத்து சுதந்திரம் மீதான நம்பிக்கையில் அவர் மலையைப் போல உறுதியாக இருந்தார். தன்னுடைய அறிவு மற்றும் அனுபவத்தால் மரியாதைக்குரிய வழக்கறிஞராக இருந்த அவரால் அந்தச் சுதந்திரத்தை, பத்திரிகை வெளியீடுகளை ஒருபோதும் சிக்கலில் சிக்க வைக்காமல், இந்தியாவின் தாராளவாத பேச்சு சுதந்திரத்தை நீதித்துறையால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்கு உயர்த்தி பயன்படுத்திக் கொள்ள முடிந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் தகராறு (1947-2012), 370ஆவது சட்டப்பிரிவு, இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக, சாவர்க்கர் மற்றும் ஹிந்துத்துவா, பாபர் மசூதி, அமைச்சர் இழைத்த தவறுகள், குடிமக்களின் உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தரமான ஆய்வுகளை மேற்கொண்ட நூரானி அறிவார்ந்த பத்திகளை, புத்தகங்களை எழுதினார் என்றும் ராம் கூறினார். ‘நீண்டகாலம் ஃப்ரண்ட்லைனின் மதிப்புமிக்க பங்களிப்பாளராக இருந்த கஃபூர், அந்தப் பத்திரிகையில் தன்னுடைய இடத்திற்காகப் போராடுவார். முன்கூட்டியே தனது பங்களிப்புகளைத் திட்டமிடும் அவர் காலக்கெடுவிற்குள் தனது பிரதியை வழங்கி விடுவார் என்பதால் அவரை முழுமையாக நம்பியிருக்கலாம். எப்போதாவது ஒரு பிரச்சனையில் தனது பங்கை அளிக்கத் தவறி விட்டால், அதை தன்னுடைய தனிப்பட்ட தோல்வி என்றே அவர் எடுத்துக் கொள்வார். கஃபூர் மிக அற்புதமான நண்பர். முழு வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார். அவரது மறைவு இந்தியப் பத்திரிகை உலகிற்கு பேரிழப்பு’ என்றும் ராம் தெரிவித்தார்.
நூரானியைப் பற்றி இந்தியாவின் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி ‘இந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க மனிதர்களில் அவரும் ஒருவர்’ என்று விவரித்தார். ‘தொழில்ரீதியாக நூரானி ஒரு வழக்கறிஞர், ஆனால் அவரது பணி ஒரு சாதாரண வழக்கறிஞரைக் காட்டிலும் கூடுதலாகவே இருந்தது’ என்றார். நூரானியின் பணியை நினைவு கூர்ந்த அன்சாரி, சர்வதேச உறவுகள் – குறிப்பாக இந்தியா-பாகிஸ்தான் விஷயங்களில் சிறப்பான பணிகளைச் செய்வதில் நூரானி நிபுணத்துவடன் இருந்தார் என்று கூறினார். மறைந்த அறிஞருடன் நெருக்கமான நட்புடன் இருந்த அன்சாரி, சில சுவாரஸ்யமான அம்சங்களைப் பகிர்ந்து கொண்ட பின்னர் ‘நூரானி அனைவராலும் மதிக்கப்படுபவராக இருந்தார். இருபுறமும் உள்ள அரசியல் தலைமைகள், அறிவுஜீவிகளால் விரும்பத்தக்கவராக இருக்க வேண்டிய அவசியம் அவருக்கு இருந்ததில்லை’ என்றார்.
‘அவர் செய்த வேலைகள், அவர் எழுதிய புத்தகங்கள் தனித்து நிற்கும். காஷ்மீர் தகராறு குறித்த அவரது கட்டுரைகளின் தொகுப்பு இரண்டு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டது. ஆனால் விடாமுயற்சியுடனான அவரது ஆய்வுகள் அதற்கும் மேலாக தொடர்ந்து தனித்துவத்துடன் இருக்கின்றன. அவரது மறைவில் நாம் மிகச் சிறந்த ஆளுமையை இழந்திருக்கிறோம். அவரது இறுதிப் படைப்புகளில் ஒன்றாக பாபர் மசூதி பற்றிய புத்தகம் அவரால் எழுதப்பட்டது. அதில் போதுமான அளவு அவர் ஏற்கனவே எழுதி முடித்துள்ளார்’ என்று அன்சாரி தெரிவித்தார்.
தனிப்பட்ட சில நிகழ்வுகளையும் அன்சாரி நினைவு கூர்ந்தார். தில்லிக்கு வருவதை நூரானி அதிகம் விரும்பினார். இந்தியா சர்வதேச மையத்தில் உள்ள அவருக்கான அறை நன்கு அறியப்பட்டது. ‘நல்ல உணவை அவர் விரும்புவார். பல பத்தாண்டுகளுக்கு முன்னர் எங்கள் நட்பு அப்படித்தான் தொடங்கியது. பழைய தில்லியின் உணவகங்களில் தன்னுடன் சேர்ந்து கொள்ள வேண்டுமென்று என்னைத் தூண்டுவார். மிகச் சிறந்த நண்பர். இந்தியா-பாகிஸ்தான் பற்றி மட்டுமல்லாது பிற உண்மைகளைப் பற்றிய அவரது நினைவுகளும் குறிப்பிடத்தக்கவையே. அவரைப் பிடிக்கவில்லை என்றாலும், எல்லையின் இருபுறமும் உள்ள அரசியல்வாதிகள் அவரை மதித்து வந்தனர்’ என்று அன்சாரி கூறினார்.
மிகவும் ஆழ்ந்த நீதி உணர்வு கொண்டவராக இருந்த நூரானி சர்வதேச உறவுகள் குறிப்பாக இந்தியா-பாகிஸ்தான் விவகாரங்கள், காஷ்மீர் தகராறு போன்றவற்றில் முழுமையான ஞானம் கொண்டவராக அறியப்பட்டார்.
காஷ்மீர் தகராறு: 1947-2012, 370ஆவது சட்டப்பிரிவு:ஜம்மு-காஷ்மீரின் அரசியலமைப்பு வரலாறு, இந்தியாவில் அரசியலமைப்பு சார்ந்த கேள்விகள், அமைச்சரின் தவறான நடத்தை, அதிபர் முறை, ப்ரெஷ்நேவின் ஆசிய பாதுகாப்பிற்கான திட்டம், பகத் சிங் விசாரணை, ஹைதராபாத் அழிவு, பாபர் மசூதி பிரச்சனை உட்பட பல புத்தகங்களை நூரானி எழுதியுள்ளார். பத்ருதீன் தியாப்ஜி, ஜாகிர் ஹுசைன் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் எழுதியுள்ளார். பிற்காலத்தில் லெஃப்ட்வேர்ட் பப்ளிகேஷன்ஸ் உடனான அவரது தொடர்பு ஆர்எஸ்எஸ்,பாஜக: வேலைப் பங்கீடு, இஸ்லாம் மற்றும் ஜிஹாத், சாவர்க்கர் மற்றும் ஹிந்துத்துவா: கோட்சே தொடர்பு, ஆர்எஸ்எஸ்: இந்தியாவிற்கு கேடு என்று பல புத்தகங்களுக்கு வழிவகுத்துக் கொடுத்தது.
நூரானியிடம் இருந்த ஆழ்ந்த நீதி உணர்வால் மையத்தில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகள் காஷ்மீர் பிரச்சனையை நியாயமாகக் கையாளவில்லை என்ற நம்பிக்கையே அவரிடம் தென்பட்டது. அப்போதைய காங்கிரஸ் தலைமையால் பதினோரு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட ஷேக் அப்துல்லாவை நூரானி வழக்கறிஞராக இருந்து சட்டப்பூர்வமாகப் பாதுகாத்தார். ஜம்மு காஷ்மீரின் முதல் பிரதமர் அப்துல்லா. 1953ஆம் ஆண்டு அந்தப் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார். காஷ்மீர் கனெக்டட் என்ற இணையதளத்தில் ‘தி ஷேக் வெர்சஸ் தி பண்டிட்: தி ரூட்ஸ் ஆஃப் தி காஷ்மீர் டிஸ்ப்யூட்’ என்ற தலைப்பில் 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கட்டுரையில், அப்துல்லாவை ஜவஹர்லால் நேரு நடத்திய விதம் குறித்து எழுதிய தனது விமர்சனம் பற்றி நூரானி கவலைப்படவில்லை. மோடி தலைமையிலான அரசால் 2019ஆம் ஆண்டில் 370ஆவது சட்டப் பிரிவு இறுதியாக ரத்து செய்யப்பட்டது. அப்போது அந்தச் செயலை ‘வஞ்சகமானது’, ‘அரசியலமைப்பிற்கு விரோதமானது’ என்றே நூரானி குறிப்பிட்டார். தனது வார்த்தைகளை அவர் மென்று விழுங்கவில்லை. சட்டப்பிரிவு ரத்து, அதன் நேர்மை, சட்டபூர்வமான தன்மை மற்றும் அந்தச் செயல்பாட்டில் மாநிலத்தின் சுயாட்சி சீரழிக்கப்பட்டது ஆகியவற்றைக் கண்டித்து பல கட்டுரைகளை அவர் தொடர்ந்து எழுதினார்.
ஏ.ஜி.நூரானியின் சட்டப் பிரிவு 370: ஜம்மு-காஷ்மீரின் அரசியலமைப்பு வரலாறு புத்தகம்
சட்டப்பிரிவு 370: ஜம்மு-காஷ்மீரின் அரசியலமைப்பு வரலாறு புத்தகத்தில் அப்துல்லாவுக்கும் பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையிலான கடிதப் பரிமாற்றத்தை நூரானி தந்துள்ளார். அது மக்கள் விருப்பத்தை அப்போதைய ஒன்றிய அரசின் முற்றிலும் புறக்கணித்ததை வெளிக்காட்டியது. அந்தப் புத்தகம் அந்தக் காலகட்டத்து முக்கிய அரசியல் தலைவர்களுக்கிடையே நடைபெற்ற மிகவும் அரிய, இதுவரையிலும் வெளிவராத கடிதப் பரிமாற்றங்களால் நிரம்பியுள்ளது. புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சில கடிதங்கள் மற்றும் மேற்கோள் காட்டப்பட்டுள்ள குறிப்புகள் 370ஆவது சட்டப்பிரிவின் வீழ்ச்சி நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கியதைக் காட்டின. அப்துல்லாவை நூரானி பாதுகாத்தது சட்ட வரலாற்றை உருவாக்கியதைப் போல பம்பாய் உயர்நீதிமன்றத்தில் மு.கருணாநிதியைப் பாதுகாத்ததும் அதிகம் பேசப்பட்ட நிகழ்வாக இருந்தது.
கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அரசியல் தலைவர்கள் பலரும் நூரானியின் பங்களிப்புகளை நினைவு கூர்ந்து, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினருமான பிருந்தா காரத், மிகச் சிறந்த அறிவுஜீவி, எழுத்தாளர் என்று நூரானியை விவரித்தார். நுணுக்கமான ஆய்வின் அடிப்படையிலான தனது பல வெளியீடுகள் மூலம் ஆர்எஸ்எஸ், அதன் சித்தாந்தம் மற்றும் பாஜகவுடன் அதன் தொடர்பு உள்ளிட்ட நச்சுப் பணிகளை குறைவின்றி முழுமையாக நூரானி வெளிப்படுத்தியுள்ளார். தான் எழுதிய ஒவ்வொரு வார்த்தையிலும் மதச்சார்பின்மை மற்றும் உண்மைக்கான காரணத்தை அவர் வெளிப்படுத்தினார் என்று பிருந்தா காரத் குறிப்பிட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்திய மற்ற தலைவர்களில் தேசிய மாநாட்டுத் தலைவர் உமர் அப்துல்லா, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஓவைசி ஆகியோர் அடங்குவர்.
வலதுசாரி பழமைவாதம், ஹிந்துத்துவா அரசியலின் வளர்ச்சி, தாராளவாத கருத்துகள், பேச்சு சுதந்திரம் மற்றும் மாற்றுக்கருத்துகள் மீதான தாக்குதல் போன்றவற்றில் இந்தியா எடுத்திருக்கும் பாதை மீது நூரானி குறிப்பாக அக்கறை கொண்டிருந்தார்.
நூரானியுடன் பணிபுரிந்த தனது அனுபவத்தை லெஃப்ட்வேர்ட் புக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியர் சுதன்வ தேஷ்பாண்டே நினைவு கூர்ந்தார். ‘ஏஜி நூரானியை வாசிப்பதற்கு கூர்மையான, வற்புறுத்தும், மறுக்க முடியாத வாதத்தை உருவாக்கும் திறனைக் கற்றவராக இருக்க வேண்டும்; அவரது எழுத்துகளைப் பதிப்பிப்பதற்கு உண்மைச் சரிபார்ப்பை நேர்த்தியான உரைநடையுடன் இணைக்கும் கலையைக் கற்றிருக்க வேண்டும். லெஃப்ட்வேர்டில் நூரானியின் நான்கு புத்தகங்களை வெளியிட்டதில் நாங்கள் பெருமைப்பட்டோம். அவருடைய ஆசிரியராக இருக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. என்னுடன் நட்புடன் இருப்பதற்காக வயது மற்றும் அந்தஸ்தின் படிநிலைகளை ஒதுக்கி வைத்து எளிமையுடன் இருந்த கஃபூர்பாயை மிகுந்த கண்ணியம், பழைய உலக அழகு கொண்ட மனிதராக தனிப்பட்ட முறையில் நான் என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன். அனைத்திற்கும் மேலாக தில்லிக்கு அவர் வரும் ஒவ்வொரு முறையும் சாலையோரத்தில் உள்ள சாட்வாலாக்களுக்கு நாங்கள் சென்றதன் நினைவுகள் எப்போதும் என்னுடனே இருக்கும். கலை, உணவு ஆகியவற்றில் தலைசிறந்த சாட் அறிவாளி என்று ஒருவர் இருந்தால், அது நிச்சயம் கஃபூர்பாய்தான்’ என்று தேஷ்பாண்டே கூறினார்.
நூரானி தேர்ந்தெடுத்துக் கொண்ட பகுதிகள் நாட்டிற்கு உள்ளே, வெளியே ஏற்பட்ட முக்கியமான முன்னேற்றங்கள் மீதான அவரது அக்கறையைப் பிரதிபலித்தன. குறிப்பாக வலதுசாரி பழமைவாதம், ஹிந்துத்துவ அரசியலின் வளர்ச்சி, தாராளவாத கருத்துகள், பேச்சு சுதந்திரம் மற்றும் மாற்றுக்கருத்துகள் மீதான தாக்குதல் போன்றவற்றில் இந்தியா எடுத்திருக்கும் பாதை மீது நூரானி மிகுந்த அக்கறையுடன் இருந்தார். அவரை அன்புடன் விவரித்த ஒரு பத்திரிகையாளர் ‘அவர் ஒரு விசித்திரமான மேதை’ எனக் குறிப்பிட்டார். முதலில் தட்டச்சுப்பொறியை அதற்குப் பின்னர் கணினியைப் பயன்படுத்துவதில் தனக்கிருந்த வெறுப்பை அவர் வெளிப்படுத்தியதாக ஃப்ரண்ட்லைனில் உள்ள சக ஊழியர்கள் நினைவு கூர்ந்தனர். கைகளால் மிகத் தெளிவாக எழுதப்பட்ட அவரது கையெழுத்துப் பிரதிகள் ரீம் கணக்கில் இருக்கும். அதுதான் நூரானியின் வழக்கம்.
முன்பு ஃப்ரண்ட்லைனில் பணிபுரிந்த லைலா பவதம் மும்பையில் பல ஆண்டுகளாக நூரானியுடன் தொடர்பில் இருந்தார். பேனா மற்றும் காகிதம் மூலமாகவே நூரானி நன்றாகச் சிந்தித்ததாக அவர் கூறினார். ‘முதல் வரைவு மோசமாக இருக்கும் என்றாலும், அது உண்மையில் அவரது துல்லியமான மனதைப் பற்றிய அற்புதமான பார்வையாகவே இருக்கும். சரியான வார்த்தை, சிந்தனை, உணர்ச்சியை அவர் தேடித்தேடிக் கண்டுபிடித்தார். உண்மையில், அவர் உண்மைகளைப் பற்றி இருந்ததைப் போலவே நல்ல எழுத்தையும் இடைவிடாமல் பற்றியிருந்தார். சின்னஞ்சிறிய தகவல்களைத் தேடுவதில் அவரிடமிருந்த உறுதிப்பாடு எவரையும் பிரமிப்படையச் செய்து விடும். வாழ்நாள் முழுக்க அவர் எழுதிக் கொண்டே இருந்தார். அவரது பிற்காலங்களில் எழுதுவது மட்டுமே அவரது வாழ்க்கையாக இருந்தது. எழுதி முடிக்காமல் சாஹிப் தனது உணவைச் சாப்பிட மாட்டார் என்று அவரது உதவியாளரான கயூம் கூறுவார். அறிவுத்திறன், மரியாதை இருக்கும் வரை எல்லா வகையான சகவாசத்தையும் அவர் அனுபவித்தார். அவரது சொந்த பழக்கவழக்கங்கள் மற்றொரு சகாப்தத்தின் தாக்கத்தைக் கொண்டிருந்தன என்றாலும் தான் விரும்பாதவர்களின் தொடர்பை அவரால் அறுத்தெறிந்து கொள்ள முடிந்தது. அவர் மீது குறைகூற எதுவுமில்லை. அவர் முழுக்க முழுக்க வெளிப்படையானவராக ஒளிவு மறைவின்றியே இருந்தார்’ என்று லைலா பவதம் கூறினார்.
நூரனியைப் பற்றிய தனது நினைவுகளை புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், கல்வியாளருமான பிரபாத் பட்நாயக்கும் பகிர்ந்து கொண்டார். ‘கஃபூர் நூரானியின் எழுத்துக்களை நான் முதன்முதலில் எக்கனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி வார இதழில் கண்டேன். பின்னர் அவரது படைப்புகளை நான் அப்போது தொடர்புடனிருந்த லெஃப்ட்வேர்டு புக்ஸின் மூலம் வெளியிட்டபோது தனிப்பட்ட முறையில் அவரைச் சந்தித்தேன். அவரது எழுத்துக்களில் உள்ள தகவல்களின் உண்மைத்தன்மையை எப்போதும் முழுமையாக நம்ப முடியும்; உண்மையில் அந்த அர்த்தத்தில் அவர் அனைவரிடமிருந்தும் தனித்தே நின்றார். அந்தப் பண்பு அவரது ஆராய்ச்சியின் நுணுக்கம், அறிஞராக அவர் எழுதிய அனைத்திலும் இருந்த நேர்மை, நடுநிலைமைக்கான மகத்தான முயற்சியின் விளைவாகவே இருந்தது. கஃபூர் நூரானியின் இழப்பு சமகால இந்தியா பற்றிய அறிவுசார் உரையாடல் மீது விழுந்திருக்கும் பேரடியாகும்’ என்று பட்நாயக் கூறினார்.
நூரானியின் நீண்ட, முழுமையான வாழ்க்கை பெரும்பாலானோர் அனுபவித்ததற்கும் கூடுதலாகவே இருந்திருக்கலாம். ஆனால் அதே காரணத்திற்காகவும், அவர் உருவாக்கிய அபரிமிதமான வேலையின் காரணமாகவும் அவரது மறைவு மிக விரைவில் ஏற்பட்டிருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது. இன்னொரு நூரானி பிறக்க வாய்ப்பில்லை என்றும் தோன்றுகிறது.
நன்றி: ஃப்ரண்ட்லைன்
தமிழில்: தா.சந்திரகுரு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மொழிபெயர்ப்பாளருக்கு நன்றி.
மேதையின் இழப்பு ஈடுசெய்யப்பட முடியாதது.
எழுத்து வேந்தருக்கு
இதயபூர்வ அஞ்சலி.