கழிவுநீர் வாய்க்கால் என்கிற சாக்கடை
– மா.ச.இளங்கோமணி
சாக்கடைகள் எப்போது வந்திருக்கும். தோராயமாகக் கணக்கெடுத்தால் கூட சிந்து சமவெளி பகுதியில் கழிவு நீர் வெளியேற சாக்கடைகள் பயன் படுத்திக் இருக்கின்றனர். சுற்றுச்சூழலின் வளமைக்கான பயன்பாட்டிற்கான செயலாகவே சாக்கடைகள் அமைந்தன. அதனால் தான் அதன் கழிவு நீரை கூட பாசன நீர் நிலைகளில் இணைத்திருந்தனர். கால மாற்றம் ஜனப்பெருக்கம் நீர் நிலைகள் மாசடைந்து வருகின்றன.
ஒவ்வொரு வீடுகளில் இருந்து வெளியேறும் பாத்திரம் தேய்த்த கழிவுநீர், குளித்து வெளியேறும் கழிவுநீர், பிற உபயோகங்களில் வெளியேறும் கழிவுநீர் வாராங்கல் என்கிறார் சாக்கடைக்கு வந்து சேர்ந்து ஓடை வழியாகக் குளங்களுக்குச் செல்கின்ற அமைப்பாகவே அமைத்திருப்பர். தற்போதைய சாக்கடைகள் மிக மோசமான நிலையில் இருக்கின்றது. பாதாள சாக்கடை செயலற்று போனதால் தான். நம் யதார்த்த வாழ்க்கையில் மனிதனை அகத்தூய்மையைப் போல புறத்தூய்மையை ஒழுக்கத்தோடுப் பின்பற்ற சுத்தமிட்டு கொள்ளும் ஒரு சமூக அமைப்பாகும். ‘கூழானாலும் குளித்துக்குடி, கந்தையானாலும் கசக்கி கெட்டு’ என்பார். இந்தச் சமூக
அமைப்பிற்குள் புறச் சுத்தங்களில் வெளிப்பாடாக குளித்தல் என்கிற ஒழுக்கம் பின்பற்றப்படுகிறது. குளித்தல் உடலை குளிர்வித்தலின் ஒரு படியாகும்.
தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் பறவை, விலங்கு , மனிதர் போன்ற ஜீவராசிகளிடமும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. அவற்றிலிருந்து வேறுபட்ட மனிதன் கழிவு நீர் வெளியேற்ற வாராங்கால் அமைத்து கொண்டான். மனித வளர்ச்சியில் இந்தக் கழிவு நீர் சாக்கடைகள் உருவாக்கக் காரணத்தைக் கண்டறியும்
முகமாக எழுதப்பட்டது. தோன்றுதொட்ட நாகரிக வளர்ச்சியின் பால் உருவான சுகாதார அமைப்பைக் கழிவுநீர் வாய்க்கால் உருவாக்கம் அமைந்தது. கிராமங்களில் இந்தச் சிரமம் இல்லை. வீட்டுக் கழிவுநீர் நிலத்திடம் நேரடியாகச் சென்று அடைவதைப் போல அமைத்துக் கொள்கின்றனர். ஆனால் அதுவே நகர நாகரீக பெருக்கத்தினால் சாக்கடைகள் என்கிற கழிவுநீர் வாய்க்கால் வர ஆரம்பித்தது. ஒழுங்கமைப்பு கட்டட கலைகளை நிறுவி கழிவு நீர் வெளியேற்றும் கால்வாய்கள் வடிவமைக்கப்பட்டது. ஜனப்பெருக்கங்கள், வசதி வாய்ப்புகளோடு கூடிய நகர அமைப்பு வடிவமைக்கின்ற போதே நகரின் கழிவுநீர் வெளியேற்ற கால்வாய் அமைப்பும் வந்து விடுகிறது என்பதாகக் கருத்து முன் வைத்தாலும் இந்த நகர நாகரிகத்தின் முதுகெலும்பாகவே இந்தக் கழிவு நீர் சாக்கடைகள் அமைகின்றது.
இந்தச் சாக்கடைகள் இல்லாது போகும் போது நகரத்தின் முக்கால்வாசி பகுதி நாற்றம் அடிக்கும் நிலைமைக்குத் தான் தள்ளப்பட்டு இருக்கும். நாகரிகத்தின் விளைவின் இந்தக் கழிவு நீர் ஓடைகள் இதைப்பற்றி சிந்து சமவெளி நாகரிகத்திலே கழிவு நீர் வெளியேற்ற செய்திருக்க கால்வாய்கள் அமைத்து இருக்கின்றனர் என்கிற செய்தியும் நாம் காண வேண்டியது உள்ளது. இதனை சிந்து சமவெளி மக்கள் குளியல் அறை கொண்ட வீடுகளையும் கழிவு நீர் கால்வாய்கள் கொண்ட அகலமான வீதிகளையும் திட்டமிட்டு கட்டி இருக்கின்றனர் .
நீரின் தேவையும் அதன் பயன்பாடும் புற ஒழுக்க அமைப்பினைச் சுத்தம் செய்யும் நிலையில் வைத்திருக்கின்றனர். குளித்தல், பிறகு உபயோகங்களுக்குப் பயன்படுத்துதல் நீரின் அவசியம் உள்ளது. வடிநீர் கால்வாயைச் சுத்தம் செய்வதற்கென்று இழி நிலையில் உள்ள சக்கலியர்களைப் பயன்படுத்திக் கொண்டனர். தோல் பதனீடு தொழில் செய்தும் தோலினாலான பைகள் (எண்ணெய்க் கொண்டு செல்வதற்காக பயன்படுத்தியது), ஆயுதங்களில் உரையில் இடுவதற்கும் தோல்பைகளும் செய்திருக்கின்றனர். மேலும் உடை என்கிற முறையில் போர்க்களத்தில் கவசங்களாக தோல் ஆடைகளையும் செய்திருக்கின்றனர். இதைத் தாண்டி இன்னும் பல்வேறு நிலையும் இருந்திருக்கிறது. கிணறுகளில் தண்ணீர் இறைக்கும் தோல் பை, செருப்பு, கால்நடைகளுக்கான கயிறுகள்,கழுத்தில் மணிகள் கட்டத் தேவையான வார், மாட்டை ஓட்டுபவனுக்கு தோலான சட்டை, கொல்லர்களுக்கு துருத்தின் பை, தேர் வட கயிறு, முரசு, தப்பட்டை இப்படி ஏராளம்.

இழிநிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் ஆனதால் அவர்களை அப்படியே துப்புரவு தொழிலுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். மேலும் தோல் பைகளின் உபயோகம் குறைந்தமையும் ஒரு காரணமாகும். சென்னையில் துப்புரவுப் பணிக்கு ஒப்பந்த முறையில் ஆட்களை எடுத்து இருக்கின்றனர் . சென்னையில் கருப்பர் நகரம் துப்புரவு அற்ற நிலையில் இருப்பதையும் இதனை ஒழுங்குப்படுத்தி கிழக்கிந்தியக் கம்பெனி ஆலோசனை செய்ததன் விளைவாக, இந்த ஒப்பந்த கூலிகள் உருவானார்கள் இதனைப் பற்றி கூறும் போது, “கோட்டையிலும் கருப்பர் பட்டணத்திலும் துப்புரவு வேலைகளைச் செய்வதற்காக மார்க்கவ முதலி என்றவருக்கு ஒப்பந்த அடிப்படையில் நலப் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. இந்த ஒப்பந்தம் மூன்றாண்டுக் காலம் நீடிக்கும் வகையில் செய்யப்பட்டிருந்தது அதன் படி அவருக்கு 4,950 வராகன்கள் கிடைக்கும்”1 என்பதாக ப.சிவனடி பதிவு செய்கிறார்.
நேரடியான கிழக்கிந்திய ஆங்கில அரசு ஆட்சி வருவதற்கு முன்பாக கிழக்கிந்தியக் கும்பினி கம்பெனி ஒழுங்குப்படுத்துவதிலும் தன்னை பயன்படுத்தி இருக்கிறது. மேலும் இவர் மேற்பார்வையில் “மாதம் 50 வராகன் ஊதியம் பெறும் தோட்டி (scavanger) என்கிற பதவி வகித்த ஓர் ஐரோப்பியரின் கீழ் வேலை செய்ய வேண்டும்”2 என்று கூறுகின்றார். இதிலிருந்து தோட்டி என்கிற சொல் அமைப்பு உருவாக்கம் இருக்குமோ என யோசிக்க வைக்கிறது. இதன் பின்னர் வந்த பிரிட்டிஷ் ஆட்சியில் சென்னை நகர் முன்னேற்றத்திற்கு “சாக்கடைகள் 1872 க்கு பிறகு உருவானது. 1882 சாக்கடைத்திட்டம் நிறைவேற்றப்பட்டது”3 என்றும் கூறப்பட்டுள்ளது என்று v.கந்தசாமி தமிழ்நாட்டில் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும் என்கிற நூலில் பதிவு செய்கிறார். இதற்கு முன்பாகத் துப்புரவு தொழிலாளர்கள் உருவாக்கப்பட்டு இருப்பதை யுகிக்க முடிகிறது. பின்னர் சாக்கடைகள் நெறிப்படுத்தும் முறையில் உருவாகி வேலைபாடுகள் கொடுக்கப்பட்டு இருப்பதாக உணர முடிகிறது. இதனை, இவை மட்டுமின்றி பெருகிவரும் நகர அமைப்பில் சாக்கடை திட்டத்தோட ஆரம்பம் ஆனது.
“மதுரை நகரில் நிலத்திற்கு அடியில் கழிவுநீர் செல்வதற்காகப் பெரிய சுருங்கை அமைக்கப்பட்டிருந்தது; கழிநீர் செல்லும் அவ்வழி ஒரு யானை செல்லத்தக்க வசதி பெற்றிருந்தது”4 மா.இராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார். கழிநீர் செல்வதற்கு நிலத்திற்கு அடியில் சாக்கடைகள் இருந்திருக்கலாம். ஆனால் அதில் யானை செல்வதற்கு அளவுக்கு இருப்பதாகக் குறிப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மேலும் அருந்ததியர் சமூகம் எப்படி இந்தத் துப்புரவுப் பணியாளர்களாக மாற்றப்பட்டனர் என்கிற எந்த எச்சமும் வரலாற்றில் இல்லாமல் மறைக்கப்பட்டு இருக்கிறது. ஏதோ ஒரு சில வரையறைகளை வைத்து யுகித்துக்கொள்ள முடிகிறது. அந்த அடிப்படையில் தோல் பதனீடு செய்பவர்கள் இழி தொழிலாகப் பார்க்கப்பட்டிருக்கிறது. வடபால் மாவட்டங்களில் இவ்வாறான இழிவாகக் கருதப்பட்டவர்களான மோச்சி, சண்டாலர், பங்கி போன்றோர்களை இத்தொழிலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர் என்று பார்க்க முடிகிறது. செருப்பு தைப்பவர்கள் தோல் பதனீடு செய்வதில்லை என்பதையும் நோக்க வேண்டும். சக்கிலியர்கள் வண்டிகளையும் ஏர்களையும் இழுக்கும் மாடுகளுக்காக கழுத்துச் சேணம் தயாரித்திருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டியது உள்ளது. மேலும் கிராமங்களில் சாகுபடிக்கு கிணறு தோண்டியவர்களுக்குத் தோட்டி ( தோண்டு,- வெட்டு) என்கிற பெயர் இருந்துள்ளது.
தொழில் பேதமை உருவாகுவதற்கு மேட்டிமையரின் அதிகாரத் தோரணையும் அடக்கு முறையும் காரணமாக இருந்திருக்கும். மலம் அள்ளுதல், கால்வாய்களை சுத்தம் செய்தல் போன்ற தொழில்கள் நகர நாகரிகம் தோன்றிய பின்னர் தானே ஏற்பட்டிருக்க முடியும்? அதிலும் ‘தோட்டி’ வேலை என்கிற பணியே மனிதன் நாகரிக உலகில் தலையெடுத்த பின்பு தானே ஏற்பட்டிருக்க முடியும்? அப்படியாயின் அது ஒரு தொழில் என்ற நிலை தாண்டி சாதியாகத் கருதப்படும் நிலை எப்படித் தோன்றியது?”5 சு.பொ.அகத்தியலிங்கம் கூறுவதன் மூலம் இடையில் சாதிய அடக்கு முறையும் இழி நிலை பெருமும் அதிகார ஆதிக்கமும் இருந்திருக்கின்றது.
தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்கிற புத்தகத்தில் இரண்டாம் தொகுதியில் சச்சடி என்பவர்களைப் பற்றி குறிப்பிடும் போது “துப்புரவுப் பணி புரியும் ஹட்டிகள்” என்று குறிப்பிடுகிறார். தற்போது துப்புரவுப் பணி செய்யும் சக்கிலியர் துப்புரவுப் பணி செய்ததாக எட்கர் தர்ஸ்டன் பதிவு செய்யவில்லை.
“1869 ஆம் ஆண்டு அரசு துப்புரவு கமிஷனரின் ஆறாவது ஆண்டு அறிக்கையின் படி உள்நாட்டு இராணுவ வீரர்களில் 1000க்கு 46 நபர்களுக்கு மேக நோய் இருந்திருக்கிறது”6. என்கிற குறிப்பின் மூலம் துப்புரவுக்கு தனி கமிஷன் உருவாக்கப்பட்டு இருந்ததை அறியப்படுகிறது. “கண்டோண்மென்டில் வசிக்கும் விலை மகளிர், உரிமை பெற்று அங்கு இருக்கும் துப்புரவு தொழிலாளி, தெருவைச் சுத்தம் செய்பவர்களை விட உயர்ந்தவர்கள் என்ற செருக்குடன் வாழ்ந்தனர்”7 என்கிறார். துப்புரவு தொழிலாளர்கள் நிலையினை இதன் மூலம் புரிந்து உணர வேண்டும். துப்புரவு தொழிலை கேவலமாக பார்க்கும் நிலையை இங்கே காண முடிகிறது
சாக்கடை கழிவுகளைச் சுத்தம் செய்யும் இழி தொழிலுக்கு ஆட்படுத்தப்பட்டனர் அருந்ததியர் சமுதாயத்தினர். அருந்ததியர்கள் பற்றிய தகவல் வரலாற்றில் ஆங்காங்கே இடம்பெற்று இருந்தாலும் அவர்கள் தமிழ்நாட்டுக்கு குடியேறியவர்கள் இவர்களைப் பற்றி “விஜயநகர பேரரசு காலத்தில் படைகளோடு வந்தவர்கள் விஜயநகரப் பேரரசால் குடி ஏற்றப்பட்டவர்கள் என்றாலும் கூட இன்றைக்கும் அவர்களுக்கு ஆந்திராவோடு கொள்வினை கொடுப்பினை கூட இல்லை”8 என்ற குறிப்பு இடம்பெறுகிறது
வசதிகள் எதுவும் இன்றியும் நாற்றம் எடுத்துக் கொண்டிருக்கும் குப்பைகளை வாருவதற்கும் கழிவு நீரை அகற்றுவதற்கும் கம்பெனி அரசாங்கம் எடுத்துக் கொண்ட முயற்சிகள் தொடக்கத்தில் பயனற்று போயின என்று கே.கே. பிள்ளை குறிப்பிடுகிறார். இந்தப் பதிவு காலனி காலத்தில் கும்பினி ஆட்சியர் பல முயற்சிகள் எடுத்திருப்பதின் மூலம் துப்புரவுக்கென்று ஆட்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
1.ப.சிவனடி., இந்திய சரித்திரக் களஞ்சியம்., ( பதிப்பு; அ.வெண்ணிலா)., ப.236
2. மேலது., பக்கமும் இடமும்
3.v.கந்தசாமி., தமிழ்நாட்டில் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும் ., ப.
4. மா.இராசமாணிக்கனார்., ப.89
5. சு.பொ.அகத்தியலிங்கம்., சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள்., ப.32
6. உங்கள் நூலகம் செப்டம்பர் 2019., ப.14
7. மேலது.,ப.15
எழுதியவர் :
✍️ – மா.ச.இளங்கோமணி
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அற்புதமான தகவல் 👏🏻