நூறு ஆண்டுகளாக தொழிற்சங்க உரிமை? – எஸ். கண்ணன்
ஆசு எனைக் கண்டதும், அழகிய மில்லினை மோசம் செய்தது ஏன் மொழிகுவாய் என்றான் கொடிய பல செய்து கூலியாட்களை மடியும் விதத்தினில் வருத்தி வந்ததனால் வேலையை நிறுத்தினர்; வேண்டுவ கேட்டுளேன்;
நாலு தினத்தினில் நன்மையாம், என்றேன் படையின் செருக்கை பகர்ந்தான், எழுந்தேன் படையிலாரிடத்து பகர்தல் நன்றன் றென்றே! வீ. அரசு தொகுத்த வ.உ.சி. நூல் திரட்டு பக்கம் 69 1908ம் ஆண்டு வாக்கில், வ.உ.சி அன்றைய நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆஸ் (பிரிட்டிசைச் சார்ந்தவர்) இடம் தூத்துக்குடி கோரல் பஞ்சாலை தொழிலாளர் போராட்டத்தின் போது நடத்திய உரையாடலை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.
05.03.1908 தேதியில், இந்து நாளேடு வெளியிட்ட செய்தி பின்வருமாறு. வெள்ளையர் ஆதரவாளரான, ரெங்கசாமி என்பவர், சுதேசி ஈடுபாடு கொண்ட சவர தொழிலாளியிடம் சென்றார். அந்த தொழிலாளி வந்தவரிடம், தூத்துக்குடியில் மக்கள் எழுச்சியை அடக்க வெளியூரில் இருந்து போலீசை தருவிக்க கோரியது உண்மை தானா? எனக் கேட்ட போது, ரெங்கசாமி இது உன் வேலை அல்ல எனக் கூறியுள்ளார். அப்படியானால் உமக்கு சவரம் செய்வது எனது வேலையல்ல என சென்று விட்டார். மற்ற சவர தொழிலாளர்களிடம் சென்ற போது அவர்களும் மறுத்து விட்டனர். குதிரை வண்டி ஓட்டுபவர்கள் வண்டி ஓட்ட மறுத்தும், உணவு விற்பவர்கள் அவருக்கு உணவு விற்க மறுத்தும், சலவைத் தொழிலாளி சலவை செய்ய மறுத்தும், கோரல் மில் தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்ததாக, குறிப்பிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை தொழிலாளர்கள் ஏராளமான மனக் குமுரலுக்கு ஆளாகி போராட்டங்களை முன்னெடுத்த போது, தலைமைச் செயலாளர் 1904 ஜனவரி 29 அன்று 6 தொழிலாளர் பிரதிநிதிகளுடன் உரையாடல் நடத்தி, கேசுவல் லீவ், உணவு இடைவேளை நேரம் ஆகியவற்றை முறைப்படுத்தியதாக பேரா. வீரராகவன் தனது ஆய்வறிக்கையில் பதிவு செய்துள்ளார்.
இது போன்ற வரலாற்று செய்திகள் நமக்கு, சுயமரியாதையை, நம்நாட்டின் மீதான பற்றை மேம்படுத்துகிறது. இப்படியான வரலாறு, அடுத்தடுத்த தலைமுறையினரின் உரிமைகளை ஓரளவு மேம்படுத்தியதும் உண்மை. தூத்துகுடி மட்டுமல்ல, சென்னை பி அண்டு சி மில் தொழிலாளர்கள் 14 ஆயிரம் பேர் கலந்து கொண்ட வேலைநிறுத்தம் சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மாறுமோ என்ற அச்சம் நிறைந்த நேரத்தில், தலைமை தாங்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாகினர். வெள்ளை நீதியரசர்கள் தொழிலாளர் உரிமை குறித்தும் பேசினார்கள். 1918 ஏப்ரல் 27, இந்தியாவிலேயே பதிவு செய்யப் பட்ட முதல் தொழிற்சங்கமாக மெட்ராஸ் லேபர் யூனியன் இருந்தது. பி.பி. வாடியா தலைவராகவும், தமிழ் தென்றல் திரு.வி.க பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப் பட்டு செயல்பட்டனர்.
டிராம்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் 1919 மார்ச் 15, 16 தேதிகளில் தீவிரமாக நடந்த போது, இரண்டு பாதிரியார்கள் மத்தியஸ்தம் செய்ய முன் வந்தனர். நிறுவன தலைவர் சிம்ப்சன், தொழிலாளர்களுடன் மட்டும் பேசுவேன், வெளியாட்களுடன் பேசமாட்டேன் என்றார். எங்கள் தலைவர்கள் இல்லாமல் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்த முடியாது என்றனர். எனவே வேலைநிறுத்தம் தொடர்ந்ததாக செய்திகள் உள்ளது. பின் நடுவர் மன்றம் தலையீட்டின் படி ஊதிய உயர்வு வழங்க உறுதி செய்யப்பட்டு, வேலைநிறுத்தம் முடிக்கப்பட்டது.
இது சென்னை போன்ற இடங்களில் மட்டுமல்ல, நெல்லிக்குப்பம், ஈஸ்ட் இந்தியா சர்க்கரை ஆலையில்1939 காலத்தில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் போன்ற போராட்டங்களை நடத்திய போது, மிகக் கொடிய அடக்குமுறையை எதிர் கொண்டனர். அதே 1939 மதுரை மீனாட்சி மில்லிலும், 1930 களில் மிகக்கொடிய தாக்குதலை எதிர் கொண்தாக விக்கிரமசிங்கபுரம் பஞ்சாலை தொழிலாளர்களின் போராட்டம் இருந்தது. திண்டுக்கல் போன்ற மாவட்த்தில் தோல் பதனிடும் தொழிலாளர்கள் எப்படி ஒடுக்கப் பட்டனர். சமூக ரீதியாகவும், உழைப்பு சுரண்டல் மூலமாகவும், நடைபிணங்களாக இருந்த மக்களை, மனிதர்களாக மாற்றியது தொழிற்சங்கம் என்பதை விடுதலைபோர் காலத்திலேயே காணமுடியும். . செல்லதுரை என்ற பேராசிரியரின் “தமிழ்நாட்டில் தொழிலாளி வர்க்கம் 1918-1947” என்ற ஆய்வு நூலில் குறிப்பிடுகிறார்.
தனியார் ஆலைகள் மட்டுமல்ல. ரயில்வே நிர்வாகத்தை பிரிட்டிஷார் நேரடியாக நடத்தி வந்தனர். ஒருபுறம், மிண்டோ மார்லி அல்லது செம்ஸ் போர்டு சீர்த்திருத்தங்கள், ராயல் கமிஷன் பரிந்துரைகள் என்பதெல்லாம் இருந்த போதும், சுரண்டி பழகியவர்கள் நிறுத்துவது இல்லை. ரத்த வாடை கண்ட புலியும், கருவாடு ருசி கண்ட பூனையும் அடங்கி இருக்க முடியாது. மூலதன குவிப்பு வெறி கொண்ட ஏகாதிபத்தியம் இதற்கு விதி விலக்கல்ல. ரயில்வே தொழிலாளர்கள் அப்படித் தான் சுரண்டப்பட்டனர். இதை எதிர்த்த போராட்டத்தை தொழிற்சங்கம் துவங்கிய போது, உருவான துப்பாக்கிசூடு 1944, செப்டம்பர் 5 பொன்மலையில் நடந்தது. இப்போதும் கூட அந்த திடல் வாயிலில் உள்ள கேட், துப்பாக்கிகள் துளைத்த தடங்களுடன், ரத்த சாட்சியாய் அங்கு நிற்கிறது. ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் உள்ள சுவர்கள், வெறி கொண்ட டயரின் துப்பாக்கி தோட்டாக்கள் போல், பொன்மலையின் ஆதாரமும், போராட்டத்தில், தொழிலாளி வர்க்கத்தின் வடுக்கள் ஆகும்.
இத்தகைய நிலைமைகளைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் அரசு தொழிலாளர் நிலைமைகளை ஆய்வு செய்ய ராயல் கமிஷன் அமைத்தது. அதற்கு முன்னதாக செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் வெளிவந்தது. இவை இந்திய நாட்டில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து மதிப்பீடுகளை செய்தது. அதை சீர் செய்ய சில சீர்திருத்தங்களையும் முன்வைத்தது. ராயல் கமிசன் ஆலைத் தொழிலாளர்களின் வாழ்வியலில் பின்பற்ற வேண்டிய சமூக பொருளாதார மாற்றங்கள் குறித்த பரிந்துரை முக்கியமானதுபோராட்டங்களே இந்த நெருக்கடியை பிரிட்டிஷ் அரசுக்கு அளித்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், காலனி நாடுகளில் கழிவிரக்கம் இன்றி ரத்தம் உறிஞ்சி மூலதனத்தை குவிக்கிறது என்ற விமர்சனத்திற்கு உலக அரங்கில் தள்ளப் பட்டது.
வ.உ.சி உரையாடல் நடந்து 116 ஆண்டுகள் முடிந்த பின்னரும், பிரிட்டிசார் அரசியல் அதிகாரம் செலுத்துவது முடிவுக்கு வந்தாலும், நாடு விடுதலை பெற்று 77 ஆண்டு விழாக்களை கொண்டாடினாலும், தொழிற்சங்கம் அமைப்பது சட்ட விரோதமாக பாவிக்கப்படுவது நீடிக்கிறது.
தொழிற்சங்கம் முதலீட்டிற்கு எதிரியல்ல:
சாம்சங் இந்தியா, ஸ்ரீபெரும்புதூர் நிறுவனத்தில் தொழிலாளர்கள் மூன்று வாரங்களாக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். தொழிலாளர் துறை அமைச்சர், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளர் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தை உள்ளிட்டு 5 கட்டங்களும் முன்னேற்றமாக இல்லை. ஆனாலும் தொழிற்சங்கம் பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காண முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறது. சட்டமும் அதையே வலியுறுத்துகிறது. நீதிமன்றத்திற்கு சென்றாலும் பேசி பார்த்தீர்களா? இந்த நீதிமன்ற வழிகாட்டுதல் படி மீண்டும் ஒருமுறை பேசிப் பாருங்கள் போன்ற உதாரணங்களை தொழிற்சங்க ஊழியர்கள் ஏராளமாக கண்டுள்ளனர். சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் இந்த அனுபவங்களை கூடுதலாக பெற்றுள்ளது.
சாம்சங்கில் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்து மூன்று மாதங்களாக, பதிவு எண் மற்றும் சான்றிதழுக்காக காத்திருக்கும் பின்னணியில் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. நிறுவனம் உள்ளே, ஒரு கமிட்டி அமைத்து இருப்பதாகவும், அதை ஏற்க வேண்டும் என கட்டாயம் செய்த நிலையில், ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற அச்சத்தில், தொழிற்சங்கத் தலைவர் முத்துக்குமாரிடம் முறையீடு செய்த போது, தவிர்க்க முடியாமல் வேலை நிறுத்தம் என்ற முடிவு மேற்கொள்ளப் பட்டுள்ளது. தமிழ்நாட்டு முதலமைச்சர் அமெரிக்காவிற்கு சென்று முதலீடுகளை ஈர்க்கும் பயணத்தில், இப்படி ஒரு வேலைநிறுத்தம் தேவையா? என சிலர் கேட்கின்றனர். முதலைமைச்சரின் முயற்சியை சீர்குழைக்கும் நோக்கில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறவில்லை. தொழிற்சங்கத்திற்கு துளியளவு சிந்தனையும் அவ்வாறு இல்லை.
ஒன்று இந்திய தொழிற்சங்க சட்டம் 1926ன் படி, சங்கத்தை உடனடியாக பதிவு செய்வது, இரண்டு நிர்வாகம் தொழிற்சங்கத்துடன் தொழிலாளர் துறை அலுவலகத்தில், அதிகாரிகள் முன்னிலையில், தொழிற்சக்கத்தின் கோரிக்கைகள் மீது பேசுவது, ஆகிய இரண்டிலும், எந்த ஒரு, தேச விரோத, நிறுவன விரோத அணுகுமுறையும் இல்லை. இதன் காரணமாகத் தான் தொழிற்சங்கம் சாம்சங் நிறுவனத்தை எதிர்க்கவில்லை. அதன் அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்கிறோம். அடுத்து தமிழ்நாட்டில் 1960 காலகட்டத்தில் சிம்ப்சன் போராட்டத்தின் போது, தோழர். வி.பி. சிந்தனை கத்தியால் குத்தி படுகொலை செய்ய முயற்சி செய்த குண்டர்களை சென்னை நகரம் கண்டது. 2008ல் ஹூண்டாய், 2010ல் பாக்ஸ்கான் ஆகிய போராட்ட காலத்திலும் அடக்குமுறைகளும், கைதுகளும், அ. சவுந்தரராஜன் மற்றும் இ. முத்துக்குமார் ஆகியோருக்கு, இடப்பட்ட கைவிலங்குகளும் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கியது. முதலாளிகளுக்காக காவல்துறை ஏவப்படுவது கடும் விமர்சனத்திற்கு ஆளாகியது. பாராட்ட களம் அந்த விமர்சனத்தை தூண்டியது. அதைத் தொடர்ந்து கலைஞர் முதல்வராக இருந்த போது தொழிற்சங்க அங்கீகாரச் சட்டம் இயற்றுவது குறித்து, கேரளா, மகராஷ்ட்ரா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அதிகாரிகளை அனுப்பி ஆய்வும் மேற்கொண்டார். ஆனால் ஆட்சி மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், செயல்படவில்லை. தற்போது ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ள தொழில் உறவு சட்ட தொகுப்பு 2020, தொழிலாளர்களுக்கு பாதகமான பல அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தாலும், தொழிற்சங்க அங்கீகாரத்தை வலியுறுத்துகிறது. தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படும் நிறுவனங்களில் முரண்பாடுகள் இருந்தால் பேசி தீர்வு காண்பது, இல்லையென்றால், தொழிலாளர் துறையில், தொழிற் தாவா வழக்கு எழுப்புவது என்ற நடைமுறை உள்ளது.
சாம்சங் ஏன் மறுக்கிறது?
கொரிய சொல்லகராதியில் சாம்சங் என்றால் மூன்று நட்சத்திரங்கள் என பொருள். இன்று உலகம் முழுவதும், லட்சக்கணக்கான விற்பனை மையங்கள் மூலம் கோலோச்சும் நிறுவனம் ஆகும். உற்பத்தி செய்யாத பொருளே இல்லை எனும் அளவிற்கு மின்னணு சாதனங்கள் துறையில் சாதித்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் நிறுவனம், டி.வி, வாஷிங்மெஷின், ரெப்ரிஜிரேட்டர், ஏ.சி போன்ற வீட்டு பயன்பாட்டு பொருள்களை உற்பத்தி செய்கின்றது. ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு பொருளிலும் உற்பத்தி அளவு உயர்ந்து கொண்டே செல்கிறது. திறன் படைத்த தொழிலாளர்கள், நிர்வாகம் தீர்மானிக்கும் இந்த உற்பத்தி அளவை, பணிச்சுமை அதிகம் என்ற நிலையிலும், சாதித்து வருகின்றனர்.
தனி ஒரு தொழிலாளி தனக்கான கூலியை பேரம் பேச முடியாது. எனவே கூட்டாக முயற்சிக்கின்றனர். அதற்கு சங்கம் என்ற அமைப்பு மிகுந்த ஒத்திசைவாக இருக்கிறது. இந்த பின்னணியில் தொழிற்சங்கம் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்று என்கிறார். வி.இ. லெனின். ஆனால் இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்களும், அரசு அதிகாரிகளும் தொழிற்சங்கம் நடைமுறையில் உள்ள சுரண்டலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். எது துன்பத்தையும், கொடுமையையும் விளைவிக்கிறதோ அதையே கையடக்க தொழிற்சங்கம் மூலம் செய்து விட எத்தனிக்கிறது, சாம்சங் போன்ற நிறுவனங்கள். அதுவும் முடியாத பட்சத்தில், கமிட்டி என்ற ஒரு குழுவை உருவாக்கி, பேரம் பேச ஏற்பாடு செய்கின்றனர். கமிட்டி அமைக்க பட்ட எந்த ஒரு இடத்திலும், தொழிலாளர் அடமானம் வைக்கப் படாமல் இல்லை.
சாம்சங் 14 நாடுகளில் 32 ஆலைகளை கொண்டுள்ளது. கொரியாவில், ஏராளமான வசதிகள், ஊதியம், வீடு, வேலைநேரம், வேலைநாள் ஆகியவற்றில் வழங்கியுள்ள நிலையில், அங்கு சங்கம் அமைக்கும் உரிமைக்கான போராட்டம் நடந்தது. இந்தியாவில், மிகைப்பணி உள்ளிட்டவைக்களுக்கு நியாயமான பணப்பலன்கள் இல்லாது, உள்ள தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைப்பது, அதுவும் 17 ஆண்டுகள் முடிந்த நிலையில், தவிர்க்க முடியாத ஒன்றானது. இது போன்ற சட்ட விரோத செயல்கள் தொடருவதற்கு, நியாயமான தொழிற்சங்கம் எப்படி பூசி மெழுக இடம் கொடுக்க முடியும். இங்கு 1919களில் சிம்ப்சன் என்ற டிராம்வே தொழில் அதிபர் கூறியது போல், வெளியாட்களுடன் பேச முடியாது என்கிறது சாம்சங். 105 ஆண்டுகளாக திருந்தாத, தன்னை ஜனநாயகப் படுத்திக் கொள்ள முன்வராத முதலாளித்துவ சிந்தனை. சம்சங் மூலம் வெளிப்படுகிறது.
அரசு தரப்பு, ஆத்தா வையும், காசு கொடு, சந்தைக்கு போகனும் என்ற 16 வயதினிலே சினிமா வசனம் போல், வேலைநிறுத்தத்தை கைவிடுங்கள், எல்லாவற்றையும் நிவர்த்தி செய்கிறோம் என்கின்றது. திரும்ப திரும்ப எத்தனை முறை கூறினாலும், சட்ட உரிமையை விட்டுக் கொடுக்க கேட்கிறோமே, நாம் சட்டத்தின் ஆட்சியைத் தான், நடத்துகிறோமா? சட்டத்தை நிலை நாட்டும் பொறுப்பு இருப்பதை உணர்ந்தால் தான், சில தீர்வுகளாகவது கிடைக்கும். இதில் அரசு முதலீடுகளையும், தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளையும் சமமாக கருத வேண்டும். முதலீட்டிற்காக உரிமைகளை விட்டுக் கொடுப்பது சரியாக இருக்காது. மனிதகுலம் தசாப்தங்கள் கடந்து பார்க்கையில் முன்னேறியதாக மட்டுமே இருக்க வேண்டும்.
கட்டுரையாளர் :
எஸ். கண்ணன்
மாநில துணைப்பொதுச் செயலாளர் சி.ஐ.டி.யு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.