மனோன்மணியம் கோடகநல்லூர் சுந்தரசுவாமிகள் குறித்து தமிழகத்திற்கு பெரிய அறிமுகம் தேவையில்லை.அவரது குரு கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள். சுந்தரம் பிள்ளைக்கு சைவ அனுபூதி நெறியை உணர்த்தியவர்.சுந்தரம்பிள்ளையின் பரமாத்துவித சைவஒருமை நெறிக்கு வித்திட்ட கோடகநல்லூர் சுந்தரம் பிள்ளை தத்துவராயர் ஞானவழிப் பரம்பரையைச் சேர்ந்தவர்.
தமிழ்நாட்டில் அத்வைதத்தை வளர்ப்பதில் தனிப்பெருமை கொண்டவர் தத்துவராயர்.தமிழ்நாட்டில் வெகுசன வேதாந்தம் பரப்பியவரில் முதண்மை பங்கு தத்துவராயரைச் சாரும்.ஏனெனில் அத்வைதத்தினை வடமொழியின் துணை கொண்டு ஓதியுணர வேண்டுமோயொழிய நாட்டு மொழிகளின் துணை கொண்டு உணரலாகாது என்ற கொள்கை இருந்தது. தத்துவராயர் வருகைக்குப் பின்பு தமிழ்நாட்டில் ஒரு உயர்குடி வர்க்கத்தில் மட்டுமே இருந்த அத்வைதத்தினை பெரும்பாலான சாதாரண மக்களுக்கும் கொண்டு போய் சேர்த்ததால் வெகுசன வேதாந்தத்தின் கர்த்தா தத்துவராயர் ஆவார்.
பொதிகைச் சித்தர் மரபு நாராயண தேசிகர் கூட தத்துவராயர் கொள்கை வேதாந்த நெறி வழியில் வந்தவர்.யார் இந்த தத்துவராயர்.வாருங்கள் 15 ம் நூற்றாண்டுக்குச் செல்வோம்.
தாய் மாமன்,மருமகன் என்கிற உறவைக் கொண்டவர்கள் சொருபானந்தர் மற்றும் தத்துவராயர்.அவ்விருவரும் வடமொழி தென்மொழி இரண்டிலும் வல்லவர்கள்.மிகச் சிறந்தபிரம்மச்சாரிகளாக இருந்து வேதாந்த சாஸ்திரம் யாவையும் படித்து ஐயம்திரிபற அவற்றின் பொருளை ஆராய்ந்து தத்துவ பரிசீலனை செய்துவந்தார்கள்.
சொரூபமாக இருந்து தத்துவத்தை வழிநடத்தியதால் சொருபானந்தர் என்றும் தத்துவராயர் என்றும் பெயர் வழங்கலாயிற்று.
இவர்கள் இருவரும் தக்க குருவினைத் தேடிச் சென்று யாருக்கு முதலில் தக்க குரு வாய்க்கிறதோ, அக்குருவினிடத்தில் கற்ற வித்தையை மற்றவருக்கு ஆசிரியராக நிச்சயித்துக் கற்றுக் கொடுக்கலாம் என தீர்மானித்து இருவரும் இரு திசைகளாக பிரிந்து சென்றனர்.
தென் திசையை நோக்கி சொரூபானந்தரும், வட திசையை நோக்கி தத்துவராயரும் இருவேறு திசைகளில் பிரிந்து சென்று பல மலை ,நதி மற்றும் புராதான இடங்களை நோக்கி அலைந்தனர்.
தென் திசையை நோக்கி சென்று கொண்டிருந்த சொரூபானந்தர் காவேரி நதிதீரத்தில் திருச்சி சமயபுரம் தாண்டி மண்ணச்சநல்லூர் செல்லும் வழியில் திருப்பைஞ்ஞீலி தாண்டி திருவெள்ளரைக்கு நடுவில் கோவர்த்தனம் அருகே தனது உடம்பு முழுவதும் வியர்க்கவும், நா தழுதழுக்கவும், கண்களில் நீர் பெருகக் கண்டும் தக்க குரு இந்த இடத்தில் இருப்பதாக சில லட்சணங்கள் மூலம் தெரிய வருகிறது.
சொரூபானந்தர் ஊர்க்காரர்களிடத்தில் இந்த ஊரில் பெரியவர்கள் யாரும் இருக்கிறாரா என்று விசாரிக்க, அந்த இடத்திலுள்ளவர்கள் நாணற்புதர்காட்டில் பெரியவர் ஒருவர் இருக்கிறார். அவரது பெயர் சிவப்பிகாச சுவாமி.திருவாரூரைச் சேர்ந்தவர். சொரூபானந்தர் அப்பெரியவரைக் கண்டு வணங்க, உன் வருகைக்காகவேத்தான் நான் காத்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு சொரூபானந்தருக்கு அனுக்கிரகம் வழங்கி சீடராக சேர்த்துக் கொண்டார்.
வடக்கு நோக்கிச் சென்ற தத்துவராயர் பலமொழி, பலதேசம், பல இஸ்லாமிய சூபி மார்க்கங்கள் உட்பட கண்டும் தக்க குரு கிடைக்காமல் மறுபடியும் தென்னாடு நோக்கி தனது மாமன் சொரூபானந்தரைக் காண திரும்பிவிட்டார். அதற்குள் குரு அனுகிரகம் அடைந்து கற்ற வித்தையை தத்துவராயருக்கு சொல்லிக் கொடுக்க சம்மதித்தார்.
தத்துவராயருக்கு சில பக்குவம் அடையும் வரை பொறுமை காக்க வேண்டினார் சொரூபானந்தர்.அதற்கு சில பரீட்சைகள் நடக்கும். ஒரு தடவை சொரூபானந்தர் அப்பியாசம் பண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் தைலம் கொண்டு வரச் சொல்லி ஏவளாலரை ஏவிவிடும் வேளையில் அருகிலிருந்த தத்துவராயர் அந்த நாளன்று அமாவாசை என்பதால் “அம்” என்று வாயிலிருந்து வந்தவுடன் சொரூபானந்தர் மிக்க கோபத்துடன் “விதிவில்லகென்ற சங்கல்பத்தை கடந்த நமக்கும் விதிவிலக்குண்டோ என்று கத்தி விட்டு என் அருகில் நிற்காதே என்று கோபமாகிவிட்டார்.
சொரூபானந்தரின் கோபக்கனலை தாங்க முடியாத தத்துவராயர் மனம் நொந்து போய் தாரை தாரையாய் கண்ணிர் பெருகி தனது குரு மீதும், குருவினுடைய குரு மீதும் உருகி உருகி துதிப்பாடல்களாக சிவப்பிரகாச வெண்பா, திருத்தாலாட்டு, பிள்ளை திருநாமம், மும்மணிக்கோவை, நான்மணிமாலை, கலிப்பா, சிலேடையுலா, கலிமடல், அஞ்ஞவதைப்பரணி, மோகவதைப்பரணி போன்ற சிற்றிலக்கிய வடிவில் பிரபந்தங்களைப் பாடித் தள்ளினார்.
இவ்வளவு பாடினாலும் தந்து குரு சொரூபானந்தரை கவர முடியவில்லை. ஒரே வார்த்தையில் விருப்பமில்லாதவர் போல, “மயிருள்ளவன் வாரி முடிக்கிறது போல, வாயுள்ளவன் பாடியனுப்புகிறான்” என்று தத்துவராயரை பொருட்படுத்தாமல் கூறிவிட்டு கடந்து சென்று விட்டார்.
கண்டு கொள்ளாத குருவினுடைய சந்நிதானத்தில் எப்படித்தான் இடம் பெறுவதன்றெ தத்துவராயர் மிகவும் மனம் நொந்த நிலையில் ஆசாரியரின் தரிசனத்துக்கு ஏங்கிய நிலையில் தாயைக் காணாத இளம்பிள்ளை நிலையில் அழுது புரண்டு முகம் வீங்கிய நிலையில் மனச் சஞ்சலமுற்று அரற்றிய மன நிலையில் சாவதைத் தவிர வேறு வழியில்லை என்றெண்ணிய தத்துவராயர் குருவின் அனுக்கிரகம் கிடைக்காத விரக்தியில் பாடுதுறையில் திருவடி மாலையைப் பாடிக் கொண்டே இறக்கப் போகும் வேளையில் சொரூபானந்தருக்கு மற்ற சீடர்கள் மூலம் தத்துவராயர் நிலை குறித்தான தகவல் போய்ச் சேர்கிறது.
சொருபானந்தர் தத்துவராயரை வந்து சந்திக்கும்படி வேண்டுகிறார். தகவல் அறிந்த தத்துவராயர் என்னை வரச் சொல்லி கட்டளையிட்டாரே என்ற பேரானந்தத்தில் போற்றி மாலை, புகழ்ச்சி மாலை, திருவருட்கழன்மாலை முதலானவைகளை படித்துக் கொண்டே வந்து குருவை வந்தடைகிறார்.
இது வரை படித்து வந்த துதிமாலைகள் அனைத்தும் சாஸ்திரம் மிகவும் கற்றவர்களுக்கும், உனக்குமே உதவுமேயன்றி சாதாரண சனங்களுக்கு உதவாது.உலகுக்கு உதவும் வகையில் பாடியருள குரு வேண்டினார்.
உலகுக்கு உதவும் வகையில் மோகவதை பரணியில் ஒரு படலமாக சசிவண்ண போதம் பாடி குருவிடம் சமர்ப்பித்தார்.சசிவண்ண போத பாகத்தை எண்ணி குரு மகிழ்ந்தார்.இந்த சசிவண்ண போதம் நூலே தமிழ்நாட்டில் வேதாந்தம் கற்க விரும்பும் ஒவ்வொருவரும் அடிப்படையாக கற்கும் வேதாந்த நூல் ஆகும்.
போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை கொன்ற படைவீரனைப் போற்றிப் புகழ்பாடுவதே பரணி என்னும் பிரபந்தம். ஆனால் வீரம் என்பதை கனவிலும் அறியாத உங்கள் குரு மீது எப்படி பரணி பாடினீர் என்றதற்கு “ நீர் சொல்லும் அகங்கார யானை கண்ணுக்குப் புலப்படாது. ஆயினும் சீடனுடைய அகங்காரம் என்னும் யானையை கொல்வதற்கு அநேக நாள் பிடிக்கும்.சீடர்களுடைய அகங்காரம் என்னும் யானையை எனது குரு கொன்றதால் பாடினோம் என்றார்.
தத்துவராயர் 18 மரபு வகை சிற்றிலக்கியங்களில் பாடியவர்.பாடுதுறையில் 138 தலைப்புகளில் 1140 பாடல்கள் அருளியவர். இப்பாடல்களில் அன்றைய தமிழ்நாட்டு நாட்டுப்புற விளையாட்டுக்கள், இசைக்கருவிகள், கூத்து வகைகள், சாதிப் பெயரில் பாடல் வகைகள், இலக்கிய வகைகள் ஆகிய அனைத்தும் பொதுமக்களின் மரபிலிருந்தும், வாயமொழி வழக்காற்றுகளிலிருந்தும் பாடல் வடிவமாக வேதாந்தத்தை கொண்டு சென்றவர் தத்துவராயர்.
தத்துவராயர் பாடல்கள் சிலவற்றை சங்கீர்த்தனம் முறையில் நாமசங்கீர்த்தனம், சிவசிவ, சரணம் சரணம்,, நமோநம போன்ற ஈற்றடிச் சொல் வருமாறு அமைந்த பாடல்களை இசைத்தன்மையில் பஜனை மரபு தோன்றுவதற்கு காரணமாக அமைந்தன.
பாம்பாட்டி, பிடாரன், பகடி, பகவதி, பறை, குரவை, கழங்கு, ஊசல், போன்ற இசை கூத்து பாடல் வகையில் பாடுதுறையில் இருக்கிறது.
தச்சன் பாட்டு, செட்டியார் பாட்டு, பிடாரன் பாட்டு, அம்பட்டன் பாட்டு, வண்ணான் பாட்டு, முதலியார் பாட்டு, பார்ப்பானும் பறைச்சி பாட்டு போன்ற தொழில் அடிப்படையில் உருவான சாதிப் பெயர்களை தலைப்பாக கொண்ட பாட்டுகளும் அடங்கும். தத்துவராயர் காலத்தில் சாதிய மேலாதிக்கம் மிகுந்ததை காணமுடிகிறது. சாதி வேறுபாடற்ற , அனைவரும் சமம் என்ற அடிப்படையில் மக்கள் யாவரும் ஒன்று அதுவே அத்வைதம் என்பதை முன் வைக்கும் விதமாக பாடினார் தத்துவராயர்.
தத்துவராயர் திரட்டிய சிவப்பிரகாச பெருந்திரட்டு மற்றும் குறுந்திரட்டு மூலம் உலகானுபவ விசயங்களினை தொகுத்தருளினார். சிவப்பிரகாச பெருந்திரட்டு மூலம் தமிழ் சங்க இலக்கிய முதல் தத்துவராயர் காலத்து வரையிலான பல்வேறு நூல்களில் எத்தனையோ அத்வைத நூல்கள் தமிழ்நாட்டில் வெளியானதை முதன்முதலாக அறிய முடிந்தது. சூத சங்கிதையில் உள்ள ஈசுவர கீதையை தமிழில் மொழிபெயர்த்தார்.
முதன்முதலாக கோ.வடிவேல் செட்டியாரின் பார்வையில் வெளிவந்த 1912 ல் வெளிவந்த தத்துவராயர் அருளிய சிவப்பிரகாசர் பெருந்திரட்டு நூலினை 1998 வாக்கில் கண்டு படித்தேன்.பின்பு 12 வருடங்கள் கழித்த பின்பு 2010 ம் ஆண்டுவாக்கில் தத்துவராயர் சமாதியை பார்க்க வேண்டும் என்று மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது.500 வருடத்திற்கு முன்பு இருந்த வேதாந்தி தத்துவராயர் சமாதியை தரிசிக்க தக்க நாள் தேடிக் கொண்டிருந்தேன்.
தத்துவராயருக்கு முதன்முதலில் ஜீவசமாதியைக் கண்டறிந்து 1895 வாக்கில் கோவில் எழுப்ப முயற்சி எடுத்தவர் சிதம்பரம் கோவிலூர் மடாதிபதி பொன்னம்பலம் சுவாமிகள்.
பொன்னம்பலம் சுவாமிகள் தத்துவராய சுவாமிகளின் நூலின் மேல் உள்ள ஈடுபாட்டால் அவரது சமாதி எங்குள்ளது என்பதை விசாரித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவரை எறும் பூதூரிலிருந்து தரிசிக்க வந்த சாதாரண பக்தர் இன்று மாலை காட்டு சாமிக்குப் போய் விளக்கு ஏற்ற வேண்டும் என்று சொல்லி விட்டு கிளம்ப எத்தனிக்கும் போது பொன்னம்பலம் சுவாமிகள் அந்த சாதாரண பக்தனின் வார்த்தை நீண்ட நாள் தேடிக் கொண்டுருந்த சுவாமிகளுக்கு விடை கிடைத்தது.
விருத்தாசலத்திற்கும் சிதம்பரத்திற்கும் இடையில் சேத்தியாதோப்பு கூட்டு ரோடு அருகே எறும்பூதூர் அருகே காட்டுக்குள் தத்துவராயர் சமாதிக் கோவில் சிதிலமடைந்து, அழிக்கப்பட்டு, கள்ளிப் புதருக்குள் மறைந்திருப்பதைக் கண்டார்.
வெள்ளாற்றில் அணை கட்டுவதற்காக அக்காலத்தில் ஆங்கிலேய அரசு தத்துவராயர் சமாதிக் கோவிலின் முன்மண்டபப் பிரகாரம், பாவுக்கல், வரிக்கல் எடுக்க முனைந்த போது பொன்னம்பலம் சுவாமிகள் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார். அச்சமயத்தில் ஒரு கருநாகம் இருந்து சீறவும் ஆங்கிலேயர்கள் கோவிலில் இருந்து கல் எடுக்கும் முயற்சியை கைவிட்டனர்.
உய்யக்கொண்டான் சிறுவயல் சுப்பிரமணியன் செட்டியார் கண் நோயால் அவதிப்பட பொன்னம்பலம் சுவாமிகள் கைங்கர்யத்தால் பூரண குணமடைந்து கண்ணொளி பெற்றார்.இதற்கு ஈடாக பர்மா சென்று பெரும் பொருள் ஈட்டிய சுப்பிரமணிய செட்டியார் தத்துவராயருக்கு கருங்கல்கோவில் கட்டி முடித்தார்.இது நடந்தது 1895 ம் ஆண்டு.
கும்பகோணத்தில் இருந்து சென்னை வரும் வேளை பயணத்தில் சேத்தியாதோப்பு கூட்டு ரோட்டில் இறங்கி ஆட்டோ பிடித்து தத்துவராயர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றேன்.ஆட்டோ ஓட்டுனர் காட்டுக் கோவிலா என்றார்.ஆமாம் என்று சொன்னேன்.
காலை 11.00 மணிவாக்கில் ரோட்டு முனையில் இறக்கிவிட முனையிலிருந்து ஒரு ஐந்து நிமிட அளவில் தத்துவராயர் சமாதி சென்றடைந்தேன்.கோவிலுக்கு முன்பாக பெரிய தெப்பக்குளம்.அழகான கருங்கற்களால் கட்டப்பட்ட கோவில்.கோவில் மூடப்பட்டிருந்தது.கோவிலினை ஒட்டி சிதம்பரம் கோவிலூர் மட நிர்வாகத்தின் கீழ் பள்ளிக்க்கூட மாணவர்களுக்கான விடுதி அலுவலகம் இருந்ததை கண்டேன்.பூசாரி இல்லை.அனைத்தும் பூட்டியே இருந்தது.
நான் சென்று சேர்ந்த காலை வேளையில் மயான அமைதியாக இருந்தது தத்துவராயர் ஜீவ சமாதி . கோவில் அருகே உள்ள தெப்பக் குளத்தின் கரையில் பழமையான அரசமரத்தின் நிழலில் கொஞ்சம் நேரம் அயர்ந்து உட்கார்ந்து சுற்றி இருக்கும் பசுமையான வயல் வெளியின் காற்றும், சலசலக்கும் அரச மரத்தின் இசையையும் ரசித்துக் கொண்டிருந்தேன். யாருமற்ற தனிமையில் 500 வருடத்திற்கு முன்பாக தத்துவராயர் இந்த இடத்தில் எப்படி வந்து சமாதியானார்.நாம் ஏன் இவரைத் தேடி இந்த நாளில் வரவேண்டும். குரு சொரூபானந்தர் மவுனத்தின் சாட்சியாக இருந்து கொண்டு தத்துவத்தை இயக்கி பல பெரு நூல்களினை தத்துவராயர் மூலம் கொண்டு வந்து தமிழ் உலகில் சாதாரண் பொதுசனங்களும் வாய்மொழி வழக்காறு மூலமாக வேதாந்தம் பரவ காரணமாக இருந்த சிறு விதை இந்த இடத்தினை தேர்ந்தெடுத்து நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறாரே என்று பல எண்ணங்கள் மனதில் தத்துவராயரைக் குறித்தே மனவோட்டம் ஓடிக் கொண்டிருந்தது.
வயல் வெளியே தங்கது ஆடுகளையும், மாடுகளையும் மேய்த்துக் கொண்டிருந்த நபர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தத்துவராயர் சமாதி குறித்து ஊர்க்காரர்களிடம் பேசிப் பார்த்தால் ஒரே வரியில் அது சிவன் கோவில் என்ற ஒரே வார்த்தையில் சொல்லி விட்டு கடந்து செல்லும் நிலையில்தான் இருந்தார்கள்.
அவர்களிடம் நாம் குறை ஏதும் கண்டுபிடித்து குறை கூறுவதற்காக இதை நான் சொல்லவில்லை. ஆனால் தத்துவராயர் பாடிய சிவப்பிரகாசர் பெருந்திரட்டு மற்றும் குறுந்திரட்டு நூல் அச்சில் ஏறாமல் இருந்திருந்தால் தத்துவராயர் ஒருவர் இருந்திருப்பார் என்பது பண்டிதர்கள் மட்டுமே அறிந்த விசயமாகச் சுருங்கி இருக்கும்.
நான் அயர்ந்து இயற்கையை ரசித்து கொண்டிருக்கும் வேளையில் என்னைப் போன்ற இயல்புடைய ஒருவர் தத்துவராயர் கோவிலை நோக்கி வந்தார்.நான் அவர் அருகே சென்று எந்த ஊர் என்றேன்.நெய்வேலி என்றார். நெய்வேலியிலிருந்து சைக்கிள் வாகனத்தில் வந்தவர் அரசாங்க ஊழியரும் கூட. மனது நிம்மதிக்காக வந்து இச் சமாதியில் உட்கார்ந்து விட்டுப் போவேன் என்று என்னிடம் கூறி விட்டு என்னையும் விசாரித்தார். அவர் சொன்னதன் பேரில் விருத்தாசலம் சென்று தத்துவராயர் எழுதிய சசிவண்ணணையும் பார்த்து விட்டு செல்லுங்கள் என்றார்.
எனக்கு ஏற்கனவே அப்படி ஒரு திட்டமும் இருந்தது.ஆனால் சரியான இடம் எது என்று தெரியாமல் இருந்த போது அவர் வழிகாட்டிய இடம் விருத்தாசலம் அருகே உள்ள கோபுராபுரம் என்ற கிராமம்.அவரிடம் விடை பெற்றுக் கொண்டு நேரிடையாக சென்னை வந்து சேர்ந்து விட்டேன்.
பின்பு சில மாதங்கள் கழித்து கணபதி பதிப்பகம் மூலம் அமரர்.திரு.தியாகராஜன் அவர்கள் தமிழகத்தில் உள்ள வேதாந்த மடங்கள் தோறும் கண்டறிந்து அவற்றை ஆவணப்படுத்தி வருபவர். நானும் அந்த பணியின் காரணமாக பல வருடங்களாக வேதாந்த மடங்கள் எங்கெங்கு இருக்க்கின்றன், எந்த நிலையில் இருக்கின்றன என்பதை கள ஆய்வு செய்து வருபவன் என்பதை அவரும் அறிந்திருந்தார். குறிப்பாக தமிழகத்தில் வேதாந்த மடங்கள் மூலம் வந்திருக்கும் அனைத்து தாண்டவராயசுவாமிகளின் கைவல்ய நவநீத உரைகள் அனைத்தையும் கண்டறிந்து அச்சில் ஏற்றி மீள்பதிவு செய்து அனைத்து உரைகளினையும் நன்கொடையாக மட்டுமே வழங்கியவர் கைவல்ய நவநீத சேவையாளர் மருந்தாளுநர் திரு. தியாகராஜன் அவர்கள்.
தியாகராஜன் அவர்கள் ஒருநாள் திடீரென போன் செய்து தத்துவராயர் சமாதி செல்ல இருக்கிறேன்.நீங்களும் என் கூட வரவேண்டும் என அன்பு கட்டளை இட்டார்.தத்துவராயர் சமாதிக்கான் இரண்டாம் கட்ட பயணம்.ஆனால் ஆச்சரியம் என்னவெனில் தத்துவராயர் எழுதிய சசிவண்ண போதம் எழுதிய சசிவண்ணன் கோவிலுக்கு செல்லப் போகிறோம் என்பதை முதலில் என்னிடம் தெரிவிக்கவைல்லை.
கோவிலூர் வேதாந்த மடத்தில் தமிழில் வேதாந்தம் கற்க விரும்புபவர்கள் அடிப்படையாக 16 நூல்கள் படிக்க வேண்டும்.அதில் ஒரு முக்கிய நூல் தத்துவராயர் எழுதிய சசிவண்ணபோதம்.
அரிச்சந்திரன், சிரவணன் கதை மாதிரி சசிவண்ணன் வாழ்வில் நடந்த உண்மைக் கதை கொண்டே வேதாந்தத்தில் சசிவண்ண போதம் சாத்திர நூலினை உருவாக்கினார் தத்துவராயர்.
சசிவண்ணன் என்ற பெயருடையோன் அவனது துர்நடத்தையினால் தீராநோயுற்று வருந்தும் நிலையில் இருப்பான்.தனது மகனின் துன்ப நிலையைக் கண்டு வருந்திய தந்தையை ஒரு அன்பர் வழிகாட்டுதலின் பேரில் ஒரு ஞானியிடம் அழைத்து கொண்டு போக சொல்வார்.சசிவண்ணனை தனது தந்தையான பாகயஞ்ஞன் ஞானியான நந்திபாராயணரிடம் அழைத்துச் செல்வார்.ஞானியின் விழிபட தீரா நோயிலிருந்து பூரண குணமடைந்து விடுவான் சசிவண்ணன். அதாவது ஞானிகளுக்கு பணிவிடை செய்வதன் மூலம் சாதனங்களை அடையலாம் என்பதை சசிவண்ண போதத்தில் கீழ்க்கண்டவாறு வருமாறு
“புணர்ந்த பாவ மெலாம்பரி பூரணம்
உணர்ந்த ஞானி விழிபட ஓடுமே”
தமிழ் வேதாந்தத்தில் மிகவும் அடிப்படையாக கற்கபட வேண்டிய நூல் சசிவண்ண போதம்.கோவிலூர் வேதாந்த மடத்தில் முறையாக பயிலும் போது 16 நூல்களில் மூன்றாவது பாடமாக இந்த நூலினை கற்க வேண்டும்.இந்த சசிவண்ண போத நூலிற்கு பல உரைகள் இருக்கிறது.
குறிப்பாக பிறைசை அருணாசல சுவாமிகள்உரை, ஈசூர் சச்சிதானந்த சுவாமிகள் உரை, கோ. வடிவேலு செட்டியார் உரை, திருவாரூர் தட்சணாமூர்த்தி சுவாமிகள் உரை, மதுரை கோ.சித. சிவானந்த சுவாமிகளின் 41 செய்யுள்களுக்கான விருத்தியுரை, காஞ்சிபுரம் ஆ. செங்கல்வராய முதலியார் எழுதிய தத்வபிரகாசினி உரை, திருப்பூவனம் காசிகாநந்த ஞாநாச்சார்ய சுவாமிகளின் பதார்த்த பாஸ்கரன் உரை போன்ற மற்றும் பல எண்ணிலடங்கா உரைகள் சசிவண்ண போதம் நூலினுக்கு பெரியவர்களால் அணிவகுத்துள்ளது என்பதால் இதன் மூலம் தெரிகிறது தத்துவராயர் அருளிய இந்த நூல் எவ்வளவு சிறப்பானது என்று.
இந்த நூலின் நாயகன் சசிவண்ணன் ஜீவ சமாதிக் கோவிலைக் காணப் போகிறோம் என்பதை மறைந்த தியாகராஜன் அவர்கள் முன்கூட்டியே எனக்கு தெரிவிக்கவில்லை. அதிகாலை 5.00 மணிக்கு விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் இறங்கி நேராக குமாரதேவர் மடத்துக்குச் சென்று காலைக்கடன்களை முடித்து குளித்து விட்டு உடனடியாக கிளம்புங்கள் என்றார். எங்கு பழமலை நாதர் கோவிலுக்கா என்றேன்.போய்ச் சேரும் போது நீங்கள் அறிவீர்கள் என்றார்.
பேருந்து நிலையத்தில் அதிகாலையில் கோபுராபுரம் (கோபர்வதம்) செல்வதற்கான வண்டியை விசாரிக்கும் போதே தெரிந்து கொண்டேன்.நாம் சத்தீசுவரம் கோவிலுக்கு செல்லப் போகிறோம் என்று.பின்ன என்ன கரும்பு தின்னக் கூலியா?தத்துவராயர் எழுதியா நூலின் நாயகனை காணவேண்டுமே. தமிழ் வழி பயிலும் வேதாந்த நூலின் அடிப்படை நாயகனாயிற்றே என்ற சந்தோசத்தில் பேருந்து வர நீண்ட நேரம் பிடிக்கும் என்பதால் ஆட்டோவை அமர்த்தி விருத்தாசலத்திலிருந்ரது சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள கோபுராபுரம் சென்று கோவிலை அடைந்து தரிசனம் செய்தேன். கோவிலினுள் சசிவண்ணனுக்கு ஒரு சிறிய கோவிலும் அதன் எதிரே சசிவண்ணனின் குரு நந்திபாராயணருக்கும் சிறு கோவில் கட்டப்பட்டிருந்தது.
பிரம்மம் அறிந்த ஞானிகளின் ஞான திருஷ்டியில் படுவதால் பாவங்கள் நிச்சயமாக ஒழியும் என்ற கருத்தினை வலியுறுத்தும் பாப நாயகனான சசிவண்ணனின் கோவிலும், பாவங்களினை நிக்கிய நந்திபாரயண்ரின் தரிசனமும் தத்துவராயர் மூலம் நடக்கிறது என மனதில் நினைத்துக் கொண்டு வழிபட்டு வெளியே வந்தேன்.
தத்துவராயர் காலத்துக்கு முன்னதான ஏதோ ஒரு காலத்தின் கதாசிரியன் சசிவண்ணம் போதம் முலம் தத்துவராயரல் அறிமுகமாகி, பின்பு அவரது காலடி தடத்தை நோக்கிய பயணத்தில் தத்துவராயரையும் தரிசித்து, அதன் பின்பு தத்துவராயரின் குருவான சொரூபானந்தரின் ஜீவசமாதி சேந்த மங்கலத்தில் இருக்கிறது என குறிப்பு இருந்தாலும் எந்த சேந்த மங்கலம் என்று தெரியாமல் இன்று வரை மனம் சொருபானந்தரின் ஜீவ சமாதியை தேடிக் கொண்டிருக்கிறேன்.
அதே வேளையில் சொருபானந்தரின் குருவான திருவாரூர் சிவப்பிரகாச சுவாமிகளுடைய ஜீவ சமாதி கோ. வடிவேல் செட்டியார் பார்வையுடன் வெளியாகிய சிவப்பிரகாச பெருந்திரட்டு நூலில் முன்னுரையாக தத்துவராயர்-சொருபானந்தர் ஜீவிய சரித்திரத்தைப் படித்துவிட்டு சொரூபானந்தர் தென் திசை நோக்கிய பயணத்தில் திருச்சி சமயநல்லூர் அருகே மண்ணச்சநல்லூர் செல்லும் வழியில் திருப்பைஞ்ஞிலிக்கும் திருவெள்ளரைக்கும் நடுவில் கோவர்த்தனகிரியில் சொருபானந்தர் தனது குருவினை சந்தித்தாக பதிவைக் கண்டு அதே திசையில் போய் அந்த இடத்தை நான் விசாரித்து விட்டு திருவாரூர் சிவப்பிரகாசரின் ஜீவசமாதியக் கண்டறிந்து மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்ச் சேர்ந்தேன்.
திருவெள்ளறை புகழ்பெற்ற பெருமாள் கோவில் ஆதி திருவரங்கம் என்பர்.இக் கோவிலுக்கு முன்பாக அரை கி.மீ.முன்னதாக காட்டு வழியினுள் ஒற்றையடிப் பாதை வழியாகச் சென்றால் சிறு குன்று ஒன்று இருக்கிறது குன்றின் மேல் முருகன் கோவில் இருக்கிறது.முருகன் கோவிலுக்கு முன்பாக சொருபானந்தருடைய குருவான சிவப்பிரகாசர் ஜீவசமாதியைக் கண்டேன்.சமாதியைச் சுற்றிலும் பொட்டல் காடும், முள் நிறைந்த நெருஞ்சிக் காடும், கள்ளிக்காடாக காட்சி அளிக்கிறது.கரடு முரடான கரட்டுக்காட்டு மேட்டில்தான் சிவப்பிரகாசர் சமாதி அமைந்திருக்கிறது.அந்த இடமும் பொளபொளக்கும் கானல் நீர்வெயிலில் மயான அமைதியில் இருந்தது.சமாதி அருகே ஒரு குளம் இருக்கிறது.அந்த குளத்தில் நாணல் முளைக்கும் என்கிறார்கள்.
திருவெள்ளறை கோவிலுக்கு வரும் தினசரி ஆயிரம் பக்தர்களில் ஒருவர் கூட இந்த சமாதிக் கோவிலுக்கு வருவதில்லை என்பது நெருஞ்சி முட்கள் நிறைந்த காட்டைக் கொண்டே அறியலாம். சமாதிக்கு முன்பாக வணங்கி விட்டு தத்துவராயர் அருளிய இந்த சமாதியின் நாயகனான சிவப்பிரகாசரும், தன்னுடைய குருவான சொருபானந்தரின் குருவின் பெயரால் 1912 ல் வெளியான 2821 செய்யுட்கள் நிரம்பிய சிவப்பிரகாச பெருந்திரட்டு நூலின் மகிமை அறிந்தவர்களுக்கு இச்சமாதியின் தற்போதைய நிலை குறித்து விசனம் கொள்ளும். அச்சமாதியில் ஆடு மாடு மேய்க்கும் நபர்கள் அவரது பெரும் ஆளுமை புரியாது சாதரணமாக இந்த சமாதிக்கருகே விளையாடிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது
சென்னை இராஜரத்தின முதலியார் அவர்களது முயற்சியால் , காஞ்சிபுரம் நிச்சல இராமனந்த சுவாமிகள் பெருந்திரட்டை அச்சிட ஆலோசனை வழங்கியதையும், கோ. வடிவேல் செட்டியார் மற்றும் மங்கலம் சண்முக முதலியார் அவர்களது மேற்பார்வையினால் சசிதானந்த அச்சுக்கூடம் மூலமாக வந்த நூலின் வழியே இந்த ஜீவசமாதியைக் கண்டறிந்தேன்.
அந்த ஊர் பிரமுகர்களிடத்தில் இந்த தத்துவராயர் பரமபரை குறித்தான செய்திகள் குறித்து விசாரிக்கையில் யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை. பெருந்திரட்டு
ஜீவிய சரித்திரத்தில் குறிப்பிடப்பட்ட நாணற் புதற்காடு தற்போது இல்லை.அதே வேளையில் ஞானிகள் பெரும்பாலும் நதி தீரத்தையொட்டி வாழ்வார்கள். அதன்படி சொருபானந்தர் இக் குருவை சந்தித்த வேளையில் ஆறு இருப்பதாக தெரிகிறது. ஆனால் அதன் அருகே காவிரியின் கிளைநதியான உப்பாறு ஓடிக் கொண்டிருந்த வழித்தடம் தற்போது மாறியிருக்கிறது என அறிய முடிகிறது.இந்த உப்பாறுதிருவெள்ளறை ஒட்டிய பெரமங்கலம் என்ற ஊரின் வழியே நதித்தடம் இருக்கிறது.அந்த நாளில் பிராமண மங்கலம் ஆக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
தத்துவராயர் எழுதிய நூல்கள் அச்சில் வெளியே வந்த காரணத்தால் சுமார் 500 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த ஞானிகளின் பாதையை கண்டறிந்து இத்தருணத்தில் இருந்து அக்காலப் பெருவெளிக்குள் உணர்வினை மட்டுமே கொண்டுசென்று அந்த இடத்தில் நம்மை இணைத்துக் கொண்டு பயணிப்பது ஒரு அலாதியான சுகமே.
அப்படியான மரபுசார் வேர்களைத் தேடியே முன்னவர்களை கண்டறிய இந்த தற்கால எனது ஊனுடம்பு வாகனமாகி சிறு தத்துவத் துளியைத் தொட எத்தனிக்கும் பயணமாக தத்துவராயரின் அடிச்சுவட்டு பயணம் என் வாழ்வில் மறக்கமுடியாது. முடிவில்லா இந்த பயணத்தில் தத்துவராயர் குரு சொருபானந்தர் ஜீவசமாதி நூலில் உள்ளபடி சேந்த மங்கலம் என்று குறிப்பிட்டாலும் இன்னும் என்னால் நடுவில் உள்ளவரை தரிசிக்க இயலாமல் இருக்கிறது.
உதவிய நூல்கள்
- வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய புலவர் புராணம்
- சு. வேங்கடராமன். அறியப்படாத தமிழ் இலக்கிய வரலாறு. மீனாட்சி புத்தக நிலையம். மதுரை.
- பி. இராஜரத்தினமுதலியார். 1912. சிவப்பிரகாசப் பெருந்திரட்டு. (கோ. வடிவேலு செட்டியார் பார்வையிட்டது). சச்சிதானந்த அச்சியந்திரசாலை
- காசிகாநந்த சுவாமிகள். 1963. சசி வந்ந போதம், பதார்த்த பாஸ்கரன் உரை. ஹரிசமய திவாகரம் பிரஸ், மதுரை.
வணக்கம்.ஐயா தாங்கள் சேந்தமங்கலம் சென்றுவிட்டீர்களா.நாமக்கல் அருகே ஒரு சேந்தமங்கலம் உள்ளது.அங்கேயும் அத்துவித அனுபூதி பெற்ற மகான்களின் அதிஷ்டானங்கள் உண்டு.முயற்சி செய்து பாருங்கள்.குருவே துணை.நன்றி
சசிவண்ணபோதம் pdf வடிவில் கிடைக்குமா?
கடகுஞ்சரம் பண்ணி உள் நின்றொருத்தன் என்று தொடங்கும் பாடலை என் அம்மா அடிக்கடி பாடுவார். அந்தப் பாடல் சசிவண்ணபோதத்தில் தான் உள்ளது என்பது எனக்கு தெரியும்.
புத்தகம் இருந்தால் pdf வடிவில் அனைவருக்கும் பயனுள்ளதாக பகிர்வது நல்லதாக இருக்கும்.
பி டி எப் இல்லை
வணக்கம். நான் முனைவர் பட்ட ஆய்வாளராக ஆய்வுப் பணியை மேற்கொண்டு வருகிறேன். தங்களது பதிவு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது.
தத்துவராயரின் சசிவண்ணபோதம் மற்றும் பாடுதுறை உரையுடன் எங்கு கிடைக்கும் ஐயா. தத்துவராயரின் பிற சிற்றிலக்கிய நூல்களும் உரையுடன் கிடைக்க வாய்ப்புள்ளதா?
https://www.tamilvu.org/library/nationalized/scholars/pdf/literature/chachivanna_pootam.pdf
இந்த இணைப்பில் உள்ளது
Dear sir can you share google map is sri siva prakasam swami adhistanam