எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "சீரியசா கொஞ்சம் சிறார் இலக்கியம்" கட்டுரை | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “சீரியசா கொஞ்சம் சிறார் இலக்கியம்” கட்டுரை

சீரியசா கொஞ்சம் சிறார் இலக்கியம்

– உதயசங்கர்

குழந்தைகளைப் பற்றிய சமூகத்தில் இருக்கும் தாழ்வான பார்வையே சிறார் இலக்கியம் பற்றியும் இருக்கிறது. ஏனெனில் குழந்தைகள் அடிப்படை உளவியலைக் கட்டமைக்கும் சிறார் இலக்கியத்தைப் பற்றி யாரும் பொருட்படுத்துவதில்லை. ஒரு குழந்தையின் மனதில், அதன் உணர்வுநிலைகள், அறிவுநிலைகள், வாழ்க்கை குறித்த கருத்துருவாக்கங்கள், தத்துவம், அன்றாடச் செயல்பாடுகள் எல்லாவற்றிலும் சிறார் இலக்கியம் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும். ஆனால் பெரியவர்கள் தாங்கள் குழந்தைகளாக இருக்கும்போது தங்களுக்குக் கிடைத்த சிறார் இலக்கியமே சிறந்த தென்ற ஆழமான நோஸ்டால்ஜியாவில் இருக்கிறார்கள். அதனால் தான் வாழ்க்கையின் மாற்றங்களைக் குறித்தும் அதன் விளைவுகளைக் குறித்தும் அறிவியல் பூர்வமாக ஆராயாமல், “ எங்க காலத்தில் எல்லாம் என்றோ அந்தக் காலத்தில்.. என்றோ பொற்காலத்தில் வாழ்ந்த தாக கற்பனையாகச் சொல்கிறார்கள். மனிதர்களுக்கு உண்மையை விட புனைவுணர்வின் மீது இயல்பாக ஈர்ப்பு இருப்பதும் யதார்த்தத்தை எதிர்கொள்ளவோ, அறிவுச்செயல்பாடு என்ற புராசெஸுக்குப் பழக்கப்படாத தும் காரணமாக இருக்கலாம்.

அப்படித்தான் சிறார் இலக்கியம் பற்றி எந்தப் பெரியவர்களிடம் பேசினாலும் அந்தக் காலத்தில் அம்புலிமாமா கதைகள், ரத்னபாலா கதைகள், பஞ்ச தந்திரக்கதைகள், ஈசாப் நீதிக்கதைகள் என்று பேசத் தொடங்குவதைப் பார்க்கலாம். அப்போதே கூட அந்தக் கதைகளெல்லாம் குழந்தைகளுக்கானதில்லை. முழுக்க முழுக்க அரசர்கள் காலத்தை மீண்டும் மீண்டும் கற்பனையா மீளுருவாக்கம் செய்கிற கதைகள். நவீன ஜனநாயக யுகத்தில் அந்தக் கதைகளுக்கு எந்தப் பொருத்தப்பாடுமில்லை. நாம் ஒரு போதும் சாணக்கியர் காலத்திற்கோ, சேர,சோழ, பாண்டியர் காலத்திற்கோ திரும்பிப் போகப் போவதில்லையே.

சமகாலத்தில் சிறார் இலக்கியம் எப்படி வருகிறது? எந்த மாதிரியான கதைகளைக் குழந்தைகள் வாசிக்கிறார்கள்? எந்த மாதிரியான வாழ்க்கை நடைமுறைகளை, அறநெறிகளை அவற்றிலிருந்து பெறுகிறார்கள்? அவையெல்லாம் உலகின் சமகாலத்தைப் பிரதிபலிக்கின்றனவா? பகுத்தறிவும், அறிவியல் மனப்பாங்கும் கொண்ட இலக்கியமாக வெளிவருகிறதா? வாழ்க்கையில் எந்த மாதிரியான விழுமியங்களை முன்வைக்கிறது? என்பதைக் குறித்தெல்லாம் பெரியவர்களுக்கு அக்கறை இல்லையோ என்று தோன்றுகிறது.

இன்று குழந்தைகளை மின்னணுசாதனங்களின் செயலிகள் வளர்க்கின்றன அல்லது பழமையான சிந்தனைகளையும் மதிப்பீடுகளையும் கொண்ட பஞ்ச தந்திரக்கதைகள் உள்ளிட்ட இத்யாதிகள் வளர்க்கின்றன. மின்னணு சாதனங்களின் வளர்ப்பு எதைப் பற்றியும் எந்த அறிவுமில்லாத ரசிகர் கூட்டங்களை உருவாக்குகிறது. பழமையான சிந்தனைகள் மதவெறி சக்திகளிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. இவர்களில் விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் பிற்போக்கான இரண்டு போக்குகளுக்கும் குழந்தைப் பருவத்திலேயே களம் அமைக்கப் பட்டுவிடுகிறதென்பதைச் சொல்லித் தான் தீரவேண்டும்.

தாங்கள் சிறுவயதில் வாசித்தவை, ஆத்திச்சூடி, திருக்குறள், கொன்றை வேந்தன், வெற்றி வேந்தன், , நாலடியார், புராணங்கள், இதிகாசங்கள் பைபிள், குரான், இவை மட்டும் தான் குழந்தை இலக்கியம் என்று சொல்லித்தருபவர்கள், அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் ஒழுக்கத்துடனும், கீழ்ப்படிதலுடனும், நன்னெறிகளுடனும் வளர வேண்டுமென்றால் இவற்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் பொதுச்சமூகத்திடம் எப்போதுமேயிருக்கிறது.

இத்தகைய சூழலில் தான் குழந்தைகள் மீது அக்கறையுள்ள சிறார் இலக்கியப் படைப்புகள் வெளிவருகின்றன. ஆனால் குழந்தைகள் இவற்றைக்கண்டைவது வாசிப்பது எல்லாம் பெரும் தடைகளைக் கடந்து செல்ல வேண்டிய பெரும்பயணமாகி விடுகிறது.

பெரியவர்கள் அவர்கள் விரும்பும் நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசிப்பார்கள். அது பிடித்திருக்கிறதா இல்லையா என்பதை அபிப்பிராயமாகச் சொல்லி விடுவார்கள். உதாரணத்துக்கு கவிதைகளை மட்டும் வாசிப்பவர்கள் கவிதை நூல்களை அவரே தேர்ந்தெடுத்து வாசிக்கிறார். அவருடைய ரசனைக்கேற்ப பிடித்திருக்கிறது பிடிக்கவில்லை என்று சொல்லிவிடுகிறார். நாவலை மட்டும் வாசிக்கிறவர்களுக்கு நாவலை மட்டும் தேர்ந்தெடுத்து வாசிக்க முடியும். இது அனைத்து இலக்கிய வகைமைகளுக்கும் பொருந்துமென்றாலும் இந்தக் கருத்து வகைமை சார்ந்த தில்லை. முதலில் அடிப்படையான பிரச்னையென்பது சிறார் இலக்கியத்தை நேரிடையாகக் குழந்தைகள் தேர்ந்தெடுக்க முடியாது. அத்துடன் அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதல்களைச் செய்ய வேண்டிய ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சிறார் இலக்கியம் தெரியாது. அவர்கள் வாசிப்பதுமில்லை.

இரண்டாவது குழந்தைகள் நேரிடையாகப் புத்தகங்கள் வாங்கிவிட முடியாது. பெரியவர்கள் தான் புத்தகங்களை வாங்கிக் கொடுப்பார்கள். அவர்களை நல்வழிப்படுத்தியதாக நினைக்கும் புத்தகங்களையே அவர்கள் வாங்கிக் கொடுப்பார்கள். அடுத்த தாக புத்தகச்சந்தையில் புத்தகங்களை, வாங்கிக் கொடுக்கக்கூடிய மத்திய தர வர்க்கம் ஆங்கிலவழிக்கல்வி மோகத்தினால் திசை மாறிவிட்டது. அதனால் அவர்கள் தமிழ்ப்புத்தகங்களின் பக்கம் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. வாங்கிக் கொடுப்பதில்லை. அவர்களுடைய குழந்தைகளில் 99% சதவீதக் குழந்தைகளுக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாது. அத்துடன் பெற்றோர் ஆங்கிலப்புத்தகம் போல ரிச்சாக இல்லையே என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து சுலபமாக தமிழ்க்குழந்தை இலக்கியத்தைத் தாண்டிச் சென்று விடுவார்கள்.

எந்தப் பொருளாக இருந்தாலும் அதன் உற்பத்தியைத் தீர்மானிப்பது சந்தையே. அதனால் தான் 60-70 களில் தமிழ்வழிக்கல்வி பரவலாக இருந்த காலத்தில் 50 பத்திரிகைகளும், 300 எழுத்தாளர்களும் இருந்த குழந்தை இலக்கிய வெளியில் இப்போது மிகச் சில பத்திரிகைகளே வெளிவந்து கொண்டிருக்கின்றன, 50 க்கும் குறைவான எழுத்தாளர்களே தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

சர்வதேச சந்தைக்கும் மாநிலச் சந்தைக்குமான வேறுபாடு சிறார் இலக்கியத்தையும் பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால், இங்கே படைப்புகள், புத்தக வெளியீடுகள், அதன் வடிவமைப்பு, விலை, எல்லாம் ஏன் மிகக் குறைந்த தரத்திலேயே இருக்கிறதென்பதைப் புரிந்து கொள்ளலாம். சந்தைப்பெருக்கமே எந்தப் பொருளுற்பத்தியையும் பெருக்கும். அதுவே சிறந்த எழுத்தாளர்களையும் சிறந்த படைப்புகளையும் உருவாக்குமென்ற எளிய உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்.

அடுத்தது பெற்றோர்கள், ஆசிரியர்களின் மனநிலை. கதைப்புத்தகம் வாசிப்பது வேஸ்ட்…குழந்தைகள் என்றாலே பாடம், பள்ளிக்கூடம், மார்க்கு, ரேங்கு, இத்தியாதி….

அப்படியே சில பெற்றோர்கள் வாங்கிக் கொடுக்க முன்வந்தால் அவர்களுக்கு எதை வாங்கிக் கொடுப்பது என்று தெரியாது. எதுக்கு வம்பு? காலங்காலமாகச் சொல்லப்படுகிற பஞ்சதந்திரம், தெனாலி ராமன், பீர்பால், முல்லா, அப்பாஜி, ராமாயணம், மகாபாரதம், புராணக்கதைகளை வாங்கிக் கொடுக்கிறார்கள். அடுத்தது ஆசிரியர்கள், கதையா கிலோ என்ன விலை? என்று கேட்பவர்கள் தான் அதிகம். அவர்களுக்கும் சமகாலத்தில் யார் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்? என்ன புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன? என்று தெரியாது. தேவையுமில்லை என்ற எண்ணம் கொண்டவர்கள் தான் அதிகம்.

இப்போது மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஆமை வேகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்துக்குக் கூட அரசு எடுத்த நடவடிக்கைகள் மிகமுக்கியமான காரணம். ஆனாலும் மக்களின் பொதுப்புத்தியில் சிறார் இலக்கியம் குறித்து மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே சிறார்களிடம் இலக்கிய வாசிப்பு சென்றடையமுடியும்.

அடுத்ததாகப் பதிப்பகங்கள், பெரியவர்களுக்கானப் புத்தகங்களைப் போடும்போது பதிப்புக்குழு வைத்து அந்தப் பிரதியை நாலைந்து பேர் வாசித்து, சரி செய்து பதிப்பிப்பவர்கள் குழந்தைகளுக்கான இலக்கியம் என்றால் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. பணம் வாங்கிக் கொண்டும் வாங்காமலும், கண்டமானிக்குப் புத்தகங்களைப் பதிப்பிக்கிறார்கள். அவையெல்லாம் குழந்தைகளுக்கானதா? குழந்தைகள் மொழியில் எழுதப்பட்டிருக்கிறதா? என்ன மாதிரியாக எழுதப்பட்டிருக்கிறது? என்றெல்லாம் கவலையே படுவதில்லை. சந்தையைப் பிடிக்கும் அவசரம் மட்டுமே இருக்கிறது.

மேலே குறிப்பிட்ட பதிப்பகங்கள் ஒருவகை என்றால் எந்த அறமுமற்ற பதிப்பகங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொழிற்சாலையில் மோல்டிங்க்கில் பொருள்களை உற்பத்தி செய்வதைப் போல இராமாயாணம், மகாபாரதம், நன்னெறி, அறநெறி, அறிவுரை, பஞ்சதந்திரம், பீர்பால், முல்லா, தெனாலி, திருக்குறள் கதைகள், ஆத்திச்சூடிக்கதைகள், புறநானூற்றுக்கதைகள், நாடோடிக்கதைகள், நீதிக்கதைகள், நன்னெறிக்கதைகள், அறிவூட்டும் கதைகள், நல்வழிக்கதைகள், முன்னேற்றக் கதைகள், வெற்றிக்கதைகள், என்ற விதவிதமான அடைமொழியில் புத்தகங்களைக் குவித்து வருகின்றனர். பலநேரங்களில் ஒரே கதை தெனாலியாகவும் பீர்பாலாகவும் டால்ஸ்டாயாகவும் காந்தியாகவும் முல்லாவாகவும் மாறுவேடம் போட்டு வருகின்றன. இவற்றுக்கு அரசின் நூலக ஆணையும் கிடைக்கிறது. மாவட்டங்களிலிருக்கும் கல்வித்துறை அதிகாரிகளின் ஆதரவுமிருக்கிறது.

இதனால் பள்ளி கல்லூரிகளில் மகாவிஷ்ணுக்களோ, கிறித்துவ, இஸ்லாமிய மதபோதகர்களோ நுழைகிறார்கள். குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை விதைக்கிறார்கள். அனைத்து மதங்களிலும் இப்படியான செயல்பாடுகளே நடக்கின்றன. மதங்களினால் மட்டும் தான் மனிதனை அறமுள்ளவனாக மாற்றமுடியுமென்ற ஆழமான கருத்தும் மக்களின் பொதுப்புத்தியில் ஊறிக்கிடப்பதும் இத்தகைய பிற்போக்குத் தனங்களுக்குக் காரணமாக அமைகிறது.. .

குழந்தைகள் தானே என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வார்கள் என்ற மேலாண்மை மனநிலையில் அறிவியல்பூர்வமில்லாத, கலை நேர்த்தியில்லாத, கதை போன்ற கதைகளை எழுதுபவர்களும், சொல்பவர்களும் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள்.
புதிய சந்தை புதிய நுகர்வோர் என்று சிறார் இலக்கியத்தின் மீது பாயத்தயாராகிக் கொண்டிருக்கிற பதிப்பகங்களும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.

புதிதாகப் படைப்பவர்களுக்கும், குழந்தை வாசகர்களுக்குமிடையில் பாலமாக இருக்க வேண்டிய விமர்சகர்கள், நீதிபதிகளாக மாறி எதுவுமே சரியில்லை என்று சொல்லி கொஞ்சநஞ்சம் வாசிப்பையும் தடுக்கிறவர்களாக மாறுகிறார்கள்.

இவற்றையெல்லாம் தாண்டித்தான் சிறார் இலக்கியம் தட்டுத் தடுமாறிக் குழந்தைகளிடம் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறது.

இதற்கு குழந்தைகள் என்ன செய்ய முடியும்?

📚 எழுதியவர்:

எழுத்தாளர் உதயசங்கர்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *