மனிதனின் கதை
அறிவியலாற்றுப்படை பாகம் 4
முனைவர் என்.மாதவன்
கிராமத்துச் சாலைகளில் வயல்வெளிப் பகுதிகளில் மாலை வேலைகளில் இரு சக்கரவாகனத்தில் பயணித்துப் பாருங்கள். பாசப்பறவைகளாய் பல பூச்சிகளும் வந்து கண்களைக் கொஞ்சும். எங்கிருந்துதான் வருமோ? நல்ல வேளை கண்ணாடி அணிந்திருந்தாலோ சரியான தலைக்கவசம் அணிந்திருந்தாலோ தப்பிக்கலாம்.
அழைப்பிதழ் இல்லா விசேஷத்துக்கு வரும் உறவினர்களாய் இவ்வாறு ஏன் பூச்சிகள் வருகின்றன. இதற்கான ஆய்வுகளும் நடந்துள்ளன. ஏற்கனவே பாக்டியாரிக்களில் துவங்கி கடல் வாழ் உயிரினங்களின்வழியாக உயிர்கள் பரிணாமம் பெற்றதைப் பார்த்தோம். குறைந்த அளவிலான உணர்வுகளே கொண்ட இந்த உயிரினங்களுக்கு வெளிச்சமும் வெப்பமும் அத்தியாவசியமானவை. (நமக்கும்தான்). பகலில் கிடைக்கும் இது மாலை வேளைகளில் கிடைக்காமல் போகும்போது தவிக்கும் தவிப்புதான் அது. அவைகளுக்குப் பாதுகாப்பான இடமாக அவைகள் செட்டில் ஆனபிறகு இந்த பிரச்சனை இராது. கவனித்திருக்கலாம்.
என்னாடா இவையெல்லாம் என பின்னாளில் கார்லஸ் லின்னேயஸ் (1707-1778) வந்து நீ அப்பர் பர்த்துக்குப் போ, நீ லோயர் பர்த்துக்குப் போனு குடும்பங்களாகப் பிரிக்கும் வரை இப்படிப்பட்ட நாலு கால், இரண்டுகால் ஆறுகால் உயிரினங்கள் பல்கிப்பெருகிக்கொண்டிருந்தன. வாய்ப்பிருக்கும்போது இவர் வரலாற்றையும் பார்ப்போம். தற்போது மனிதர்களின் பரிணாமத்துக்கு வந்துவிடுவோம்.
நாம் பகிரப்போகும் அனைத்துமே பல லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்பு நடந்தவை. வழக்கம்போல் வருஷ தலைவலிகள் பிற்சேர்க்கையாக அட்டவணையாக அளிப்போம். ஆப்பிரிக்கா கண்டம் வளமையான தாவரங்களும் உயிரினங்களும் பரிணமிக்க ஏற்றதாக இருந்தது. காரணம் உலகில் பெரும்பாலான காலநிலைகளும் இங்கு நிலவும் வண்ணம் அதன் அமைவிடம் உள்ளது. இருண்ட கண்டம் என்று கூட அழைக்கப்பட்டது. நிலநடுக்கோடு, கடகரேகை, மகரரேகை என மூன்று கோடுகளும் கடக்கும் ஒரே கண்டம் இதுதான்.
நமது மூதாதையர்கள் முதலில் கனிகளை மட்டும் உண்ணும் வாலில்லாக் குரங்கினராக ஆப்பிரிக்காவில் பரிணமித்தனர். இந்த மகாராஜாக்கள் மரத்தைவிட்டு கீழே இறங்காமல் அங்குமிங்கும் தாவி தர்பார் நடத்தி உண்டு களித்து குரங்குகள் பலவற்றை ஈன்று குதுகலித்திருக்கின்றனர். இவ்வாறு பல்கிப்பெருகிய குரங்குகள் துவம்சம் செய்ததில் இவ்வாறான கனிதரும் மரங்கள் பலவும் அழியத் தொடங்கின.
வேறு வழி சங்கமா? சாப்பாடா ? சங்கத்தைக் கலைங்கடான்னு சமவெளியில் நடக்கத் தொடங்கினர். இது சவான புல்வெளி என்று சொல்லப்படுகிறது. மரத்தில் நான்கு கால்களில் நடந்தது சரி ஆனால் சமவெளியில் நான்கு கால்களில் நடப்பது எளிதாயிருக்கவில்லை. இப்படியேதான் நாம அடிமைப்பெண் எம் ஜி ஆர் மாதிரி நகரனுமான்னு கொஞ்சம் கொஞ்சமா நிமிர்ந்து நடக்கத் தொடங்கின.
கைகளும் கால்களும் ஒரே மாதிரியாக இருந்த நிலையில் மெல்ல எழுந்து நடக்கத் தொடங்கிய பிறகு கால்கள் கொஞ்சம் வலீமை பெறவேண்டியதாயிற்று. உடலில் பளுவால் கால்களின் விரல்கள் கொஞ்சம் குட்டையாகி பாதங்கள் வலிமை பெறத் தொடங்கின. இந்த பரிணாமமும் அடைய இலட்சக்கணகான வருடங்கள் ஆயின.
இப்படி ஆப்பிரிக்காவிலேயே எவ்வளவு நாட்கள் நடந்துகொண்டிருப்பது. கொஞ்சம் கொஞ்சமாக ஐரோப்பா பக்கமும் ஆசியா பக்கமும் நடக்கத் தொடங்கினர்.
இதனிடையே தற்செயலாக நெருப்பின் பயன்பாடு கண்டுபிடிக்கப்பட இறைச்சியை சாப்பிடும் பழக்கமும் ஏற்பட்டது. இவ்வாறு இறைச்சியை சாப்பிட ஏதுவாக பற்களிலும் மாற்றங்கள் ஏற்பட்த் தொடங்கின. பலவகையான உணவு வகைகளின் சேர்க்கையால் இவ்வாறான குரங்குகளின் மூளையும் வளர்ச்சி பெறத் தொடங்கின. புதுப்புது உணர்வுகள் கைவரப்பெற்றன. நெருப்பின் கண்டுபிடிப்பு பல்வேறு வகையான விலங்குகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளவும் பயன்பட்டது. இயற்கைத் தேர்வு, வலியது வாழும், வாழ்வதற்கான போராட்டம் என்ற வகையில் உயிர்களின் பரிணாம வளர்ச்சி நடைபெற்றுவருகிறது. இந்த ஐட்டங்களை கொஞ்சம் விரிவாக அடுத்த பாகத்தில் பார்ப்போம்.
மொத்தத்தில் ஒரு வாலில்லாக் குரங்கு இனத்திலிருந்து இன்றைக்கிருக்கும் மனிதர்கள் பரிணமித்திருப்பதாக நிருபிக்கப்பட்டுள்ளது. இதனை யாரும் மண்டபத்தில் எழுதிக்கொடுக்கவில்லை, மாறாக பின்னாளில் வரப்போகும் சார்லஸ் டார்வின் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் உலகம் சுற்றி பலவகையான எலும்புக்கூடுகளையும், மண்டையோடுகளையும் ஆராய்ச்சி செய்து சொல்லப்போகிறார். மேலும் பல்வேறு இடங்களிலும் ஆய்வு செய்யும்போது போது கிடைக்கும் எலும்புகள் மண்டையோடுகள் போன்றவற்றை ஒப்பீடு செய்துபார்த்தும், கார்பன் டேட்டிங்க் செய்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எல்லாம் அறிவியல் ஆய்வுமுறைகள் வழியாகவே நிருபிக்கப்பட்டுள்ளன. இத்தனை லட்சக்கணக்கான வருட வரலாறு கொண்ட மனிதர்கள் தாங்கள் வாழ்வது கொஞ்ச நாள்தான் என்றாலும் தானும் ஆடி தன்னைச் சுற்றியிலுள்ளோரையும் ஆட்டுவிக்கின்றனர். இந்த பாகத்தை ஐன்ஸ்டின் அவர்களின் கருத்தோடு முடிப்போம்.
இரண்டாம் உலகப்போர் அணு ஆயுத வீச்சுடன் முடிவுக்கு வந்தது நமக்குத் தெரியும். அந்த நேரம் அணுவின் ஆற்றல் தொடர்பாக கண்டறிந்தவர்கள் பலரும் வருத்தத்தில் இருந்தனர். அவர்களில் முக்கியமானவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் அவர்கள். பத்திரிக்கையாளர்கள் ஒருமுறை அவரிடம் இரண்டாம் உலகப்போர் இவ்வாறு கோரமாக முடிந்துவிட்டதே. ஒருவேளை மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று நடந்தால் என்ன வகையான ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்று கேட்டனர்.
ஐன்ஸ்டின் அவர்கள் மூன்றாம் உலகப்போர் ஏன்ன ? நான்காம் உலகப்போரில் பயன்படுத்தப்போகும் ஆயுதத்தை வேண்டுமானால் கூறட்டுமா என்று கேட்டாராம். பத்திரிக்கையாளர்கள் மிகவும் உற்சாகமாகினராம். அவர் சொன்ன பதில் இதுதான். ”நான்காம் உலகப்போரின் ஆயுதம் கல்தான்” எப்படி என நிருபர்கள் கேட்டதற்கு “ ஒருவேளை மூன்றாம் உலகப்போர் என்று மூண்டால் உலகம் முழுவதுமே அழிந்துவிடும். பின்னர் மீண்டும் உயிர்கள் பரிணாமம் பெற்று அப்படி பரிணமிக்கும் ஒரு குரங்கு மற்றொரு உயிரினத்தை கல்லால்தானே அடிக்கும்” என்றாராம்.
இன்றும் உலகில் ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இதனை மீண்டும் நினைவுகூர்தல் நலமே. எது எப்படியோ மனிதர்கள் மகத்தானவர்களாக மாறிய பிறகு பொதுநலத்தைக் காட்டிலும் வீட்டிலும் நாட்டிலும் சுயநலமே மிகுவதால் இப்படிப்பட்ட போர்ப்பதற்றங்கள் உண்டாகின்றன. போர்ப்பதற்றங்களால் உருவாகும் சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தொடர்ந்து பேசுவோம். பின்வரும் அட்டவணை குறிப்பிடப்படும் வருடங்கள் குறித்து பல விமரிசனங்கள் உண்டு. ஆனால் வரிசைக் கிரமமாக பரிணாம வளர்ச்சி இக்காலகட்டத்தில் உருவானதை மூதாதையர்களின் உடலியல் மாற்றங்கள் உறுதி செய்கின்றன.
சில முக்கியமான தகவல்கள்
வ.எண் | வகை | காலம் சுமார் | சிறப்பியல்பு | மாதிரிகள் காணப்பட்ட இடங்கள் |
1 | டிரையோபிதேகஸ் | 8 மில்லியன் ஆண்டுகள் | குரங்கு மனிதர்கள் இருவருக்குமான முதாதையர் | ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா,இந்தியா |
2 | ராமாபித்திகஸ் | 4 மில்லியன் | பற்கள் வலிமையாகின கைகள் பயன்பாடு, கொஞ்சம் நிமிர்ந்தனர் | ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா |
3 | ஆஸ்ட்ரலோபித்திகஸ் | 2 மில்லியன் ஆண்டுகள் | கற்களை பயன்படுத்தினர் | தெற்கு அப்பிரிக்கா |
4 | ஹோமோ எரக்டஸ் | 1.5 மில்லியன் ஆண்டுகள் | குகைகளின் வாழ்ந்தனர், எலும்பு மற்றும் மரத்தாலான கருவிகளைப் பயன்படுத்தினர் | ஜாவா, சீனா |
5 | ஹொமோ சேப்பியன்ஸ் நியாண்டர்தால் | 45,000 முதல் 80,000 ஆண்டுகள் | மனிதர்களையொத்த அளவிலான மண்டையோடு, | உலகின் பல்வேறு இடஙகள் |
6 | ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் | 10,000 முதல் 75,000 வரை | குறைந்த அளவிலான தாடை, சிறிய மண்டையோடு | ஐரோப்பா |
கட்டுரையாளர்:
முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார்
முந்தைய தொடரின் கட்டுரையை வாசிக்க: அறிவியலாற்றுப்படை 3: பூமியின் கதை – முனைவர் என்.மாதவன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
வாலில்லாத காரணத்தால் மனிதனானான் -ஒரு
வரம்பில்லாத கொடுமைகளால் மீண்டும் வானரமேயானான்
என்று நான் எப்போதோ எழுதிய கவித்துளி நினைவுக்கு வருகிறது.
அறிவியலாற்றுப்படை சரியான புரிதலுக்கு ஒரு கொடை.
நன்றி தோழர்
சிறப்பான ஒரு கட்டுரை. உரைநடையை சலிப்பில்லாமல் வாசிக்க தூண்டும் நடை.தகவலாற்றுப்படை இங்கு அறிவியலாற்றுப் படையாக மலர்ந்திருப்பது மகிழ்ச்சிமுனைவர் இரா.ஹேமலதா,செங்கல்பட்டு
மிக்க நன்றி
Pingback: அறிவியலாற்றுப்படை 5: மூளையின் பரிணாமம்