அருள்செல்வன் தொகுத்த “அ.முத்துலிங்கத்தின் திருட முடியாத கதைகள்” புத்தகம் | A.Muthulingathin Thiruda Mudiyatha Kathaigal Tamil Book Review | துரை. அறிவழகன் | www.bookday.in

அருள்செல்வன் தொகுத்த “அ.முத்துலிங்கத்தின் திருட முடியாத கதைகள்” – நூல் அறிமுகம்

“அ.முத்துலிங்கத்தின் திருட முடியாத கதைகள்” – நூல் அறிமுகம்

ஐந்து மணிக் குருவி என்று ஒரு குருவியுண்டு இலங்கையில். மற்ற பறவைகளைப் போல் இதற்கும் இரண்டு இறக்கைகள் தான். ஆனால் இமயமலையை சுற்றி வரும் வலிமை கொண்டவை அவை.

இலங்கை கொக்குவில் கிராமத்தில் பிறந்த நவீனத் தமிழ் எழுத்தாளர் *அ.முத்துலிங்கம்* அவர்கள் ஐந்து மணிக்குருவியின் சிறகுகளைப் பெற்றவர்.

தனது பணியின் பொருட்டு பல்வேறு நாடுகளைச் சுற்றி வந்துள்ள இவரின் வாழ்வியல் அனுபவங்கள் இந்தத் தொகுதியில் 22 கதைகளாக விரிவு கண்டுள்ளன. நூலாசிரியரின் தனித்த அனுபவக் கதைகளை தொகுத்து நமக்கு அளித்துள்ளார் இதழியல் துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் பெற்ற அருள்செல்வன் அவர்கள்.

ஆப்பிரிக்கா, சியரா லியோன், சோமாலியா, கனடா, அமெரிக்கா…. என பல்வேறு நிலப்பரப்பு மனிதர்களும், அவர்களின் பண்பாடு மற்றும் நம்பிக்கைகளும் இந்தத் தொகுப்பிலுள்ள கதை நிலங்களில் காட்சி பெறுகின்றன.

புலம்பெயர் வலியின் ஊடாக, நம்பிக்கை, இழக்கப்படாத அற வேர்கள், காதல் உணர்வுகள் என பல்வேறு பரிமாணங்களைச் சுமந்த மனிதர்கள் இந்தத் தொகுப்பு முழுமையிலும் காணக் கிடைக்கிறார்கள்.

தொகுப்பின் முதல் கதையான “பத்து நாட்கள்” கதையின் நிலம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத். கதையின் நாயகன் பெட்டிக் கடை ஒன்றின் உரிமையாளனான எளிய மனிதன் நவாஸ் மற்றும் அவனுடைய ஏழ்மை உணர்வும்.

அமெரிக்காவைத் தோற்றுவித்த பிதாமகர்களில் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்ளின் கூற்று ஒன்று உண்டு. “தன்மானம் வெளியேறிவிடுவதால் ஏழைகள் எப்போதும் வளைந்து தான் காணப்படுவார்கள். எங்காவது வெறும் சாக்குப்பை நிமிர்ந்து நிற்குமா?”

இக்கூற்றை நிருபிக்கும் ஒரு வாழ்வியல் காட்சி தான் இக்கதை. அமைதியாக உட்கார்ந்து இருக்கும் ஓநாய் ஒன்றைப் பார்த்தவுடன் மிரண்டு ஓடும் மான்களின் மரபணுக்களில் ‘பயப்படு’ எனும் தகவல் எழுதப்பட்டுள்ளது என்பது விஞ்ஞானிகளின் கருத்து. மனிதர்களில் சிலரிடமும் இப்படியானவர்கள் இருப்பதை ஊடுபாவாக்கி இக்கதையை கட்டமைத்து உள்ளார் ஆசிரியர்.

“சுவருடன் பேசும் மனிதர்” கதை, கனடாவில் வாழும் ஒரு ஈராக்கிய நாட்டைச் சேர்ந்த முடிதிருத்தம் செய்யும் ஒருவரைப் பற்றிய கதை. மொழியை ஓர் ஆழமான, வேறு கோணத்தில் அணுகும் பார்வையுடன் மலர்ந்துள்ள கதை இது. ஒரு மொழி வாழ அம்மொழிக்கான தனி நாடு இருக்க வேண்டும் எனும் கருத்தை மென்மையாகப் பேசுகிறது இந்தக்கதை.

இந்தத் தொகுப்பிலுள்ள மிக முக்கியமான கதையாக எனக்குப்படுவது “புளிக்க வைத்த அப்பம்” கதையாகும். யூத குடும்பத்தினர் வீட்டிற்கு விருந்துக்கு சென்ற ஒருவரின் அனுபவம் இக்கதையின் நிலம். யூதர்களின் வலி, பண்பாடு, இரண்டாம் யுத்த காலம் என பல்வேறு பரிமாண இழைகளால் நெய்யப்பட்ட கட்டுமானம் இக்கதை. புது விருந்தாளிகளுக்கு ‘புளித்த மாவில்’ தயாரித்த பதார்த்தத்தைப் பரிமாறுவது ‘யூத’ கலாச்சாரத்தில் முக்கியமான ஒன்று எனும் அடிப்படையின் மேல் கட்டமைக்கப்பட்ட வலிமையான கதை இது என்று சொல்ல வேண்டும். கறுவா போட்டு புளித்த மாவில் தயாரிக்கப்பட்ட இழுபடும் கேக் என பரிமாறப்படும் சிறப்பு யூத கலாச்சாரப் பதார்த்தம் ஒன்றின் பெயர் ‘அரணிகலுஸ்கா”. இதனைக் குறித்த உரையாடலின் பின்னணியில் விரிவு கொள்கிறது யூதர்களின் துன்பியல் வரலாறு.

யூதர்களின் சம்பிரதாயங்கள் குறித்தும் பேசிச் செல்கிறது இக்கதை. “பிணத்தைச் சுற்றும் துணியை மட்டும் தான் தைக்கலாம். பறந்து கொண்டிருக்கும் மரண தேவதை யாராவது ஒருவர் உடை அணிந்திருக்கும் போதே அதைத் தைப்பதைக் கண்டால் அந்த ஆள் இறந்து போக வேண்டியவர் என நினைத்து அவரது உயிரைப் பறித்துவிடும்” என்பது யூதர்களின் நம்பிக்கை. இது போன்ற பல்வேறு நிலங்களின் மக்கள் சம்பிரதாயங்களை இந்தத் தொகுப்பு வழியாக அறியத் தருகிறார் ஆசிரியர்.

இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஜெர்மன் படைகள் சலோனிக்காவுக்குள் நுழைந்த நாளிலிருந்து நரகமாக மாறிவிட்ட யூதர்களின் வாழ்க்கையை ‘புளிக்க வைத்த அப்பம்’ கதை ரத்தமும் சதையுமாக காட்சிப் படுத்துகிறது. கதையின் இறுதியில் ‘பாஸோவர்’ எனும் 3400 வருடங்களுக்கு முன்பு எகிப்தில் யூதர்கள் அடிமைகளாக இருந்த காலம் குறித்து பேசப்படுகிறது.

‘பாஸோவர்’ நாட்கள் எனும் 7 நாட்கள் யூதர்களின் விரத நாட்கள். அந்த நாட்களில் புளித்த மாவில் செய்யப்பட்ட எந்த உணவையும் அவர்கள் சாப்பிடுவதில்லை. உலகெங்கும் விரட்டப்பட்ட மக்களின் நினைவை சுமக்கும் நாட்கள் அவை. நேற்றைய துயரங்களுக்காகவும், நாளைய நம்பிக்கைகளுக்காகவும் யூதர்கள் விரதம் இருக்கும் நாட்கள் அவை. ஒரு இனத்தின் வலியையும், புலம்பெயர் அவலத்தையும், மனித மேன்மையையும் ஒருசேர செறிவாகப் பேசும் தொகுப்பின் ஆகச் சிறந்த கதை இது.

ஆயிரம் வருடங்களாக சீனாவில் பிரபலமாக நடைபெற்று வரும் ‘சிள்வண்டுகள் சண்டை’…
சிறுவர்களை அடமானம் வைக்கும் ஆப்பிரிக்க வாழ்க்கை…
அமெரிக்காவில் குடியேறிய நார்வே நாட்டுக்காரனின் ஆயிரம் வருடத்து களிம்பேறிய மானுடப் பண்பு… என தீராத வியப்பை அளிப்பவை இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள்.

பன்னாட்டுத் தேதிக் கோட்டை கடக்கும் போது, பயணிக்கும் திசையைப் பொறுத்து ஒரு நாளைக் கூடுதலாகவோ, குறைவாகவோ பெறக்கூடிய மனிதர்களை இந்தத் தொகுப்பில் நாம் சந்திக்கிறோம்.

அ. முத்துலிங்கத்தின் கதைகளுக்குள் பயணிக்கும் ஒருவர் தன் வேர் நிலத்தின் நினைவுகளை இழந்து வேறு நிலத்தின் நினைவுகளுடன் சஞ்சரிப்பது திண்ணம். அந்த அற்புத அனுபவத்தைப்பெற இந்த நூலுக்குள் ஒருவர் பயணிக்க வேண்டியது அவசியமாகும்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:அ.முத்துலிங்கத்தின் திருட முடியாத கதைகள்
தொகுப்பாசிரியர்:அருள்செல்வன்
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்
விலை:₹.320
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 துரை. அறிவழகன்

புத்தகம் வாங்க: www.thamizhbooks.com

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *