01
மர்யம் நான் இல்லாத
கணங்களில் வாசல் வந்து
எனது நினைவுகளை அழைத்துப் போய்விடுகிறாய்
மர்யம்
ஏதாவது ஒரு நாள்
எனது காடுகளைக் கடந்து செல்லுமுன்னம்
உன்னை பிடிப்பதற்கு
முயன்றுதான் பார்க்கிறேன்.
வனத்தை பறவை
நெஞ்சினில் சுமப்பது போலவே
நினைவுகளை நான்
ஸ்பரிசித்து வளர்க்கிறேன்.
எனக்கும் உனக்குமான உறவு
நிராகரிக்கப்பட்ட முத்தங்களினால்
இணைக்கப்பட்டதுமல்ல
உயர்ந்த மது கோப்பை ஒன்றின்
சுவையினால்
இணைக்கப்பட்டதுமல்ல
அன்பின் மைய நீரில்இருந்து
ஸ்பரிசித்து உணரப்பட்டது
ஏ…..மர்யமே
விட்டுச் செல் எனது நினைவுகளை
சலனமற்றிருக்கிறது மனக் குளம்.
**********************************************
02.
நேற்றும் சில நட்சத்திரங்களைக் கடந்து செல்லக் கிடைத்தது.
கடந்து செல்லும்போது
சில மலைகளையும்
சில மேகங்களையும்
கடந்து செல்ல வேண்டியிருந்தது
யார் யாரோ யோசிக்கலாம்
இப்படிக் கடந்து செல்லும்
நான் யாரென
நான் பறவையென்பதா
நான் காற்று என்பதா
நான் என் மர்யத்தின்
நினைவு என்பதா
ஆழத்தின் அறிதலை
மனப் பேழை நிரப்பி
நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
சில நேரம்
குகை ஒன்றுனுள் ஓவியமாய் இருக்கிறேன்
சில நேரம்
ஆதி நிறத்தின்
வண்ணமாய் இருக்கிறேன்
சில நேரம்
சலனங்களைப் பருகிய
பெருங் காடாய் இருக்கிறேன்
நான் யார் என்பதை
நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
உங்களது ஒவவொரு முடிவிலும்
காலத்தையும் வாழ்வையம்
கடந்து செல்கிறேன் நான்.
**************************************
03.
திடீரென இரண்டு பறவைகள்
தூக்கத்தில் இருந்த
என்னை எழுப்பின
சன்னல் திறந்து கிடந்தது
அதன் வழியாக
ஏழு வானங்களையும் தாண்டி
ஒரு எல்லையை அடைகிறேன்
என்னிடம்
தேவதை ஒருத்தி ஆடை ஒன்றைத் தருகிறாள்
ஆடை அந்த இடத்திற்குத் தக்கவாறு
என்னை
மாற்றிக் கொள்கிறது.
பின் இரண்டு அறைகள் காட்டப்பட்டன
அதில் உள்ள
இருவரில் ஒருவருடன் பழகுதலுக்காக பணிக்கப் பட்டேன்
ஒன்றில் கடவுளும்
மற்றொன்றில் ஷைத்தானும் இருந்தார்கள்
நான் கடவுளைத் தேர்ந்தெடுத்தேன்
****************************************************
A.Nasbullah
Kinniya
Srilanka
Mobile:0094 776751510