எழுச்சி ஊட்டும் எண்ணங்கள் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள்:
நூல் : எழுச்சி ஊட்டும் எண்ணங்கள்
ஆசிரியர் : ஏபிஜெ அப்துல் கலாம்
தமிழில் : வெ பொன்ராஜ் ஆர் சுவாமிநாதன்
மு பரமாத்மா
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் சென்னை
பக்கம் : 122
விலை : ரூ. 100
முதல் பதிப்பு : டிசம்பர் 2010
நான்காம் பதிப்பு : ஆகஸ்ட் 2015
இந்தியாவின் இணையில்லா முன்னாள் குடியரசுத் தலைவர் தனித்தன்மை வாய்ந்த அறிவியல் வித்தகர் அப்துல் கலாம் அவர்களின் உயர்ந்த எண்ணங்களை ஊட்டும் சிந்தனைகள் தமிழ் கூறும் நல் உலகத்திற்குப் பயன்பட வேண்டி எழுதப்பட்டுள்ளது இந்நூல்.
வாழ்க்கைப் பயணத்தை மகிழ்ச்சியடைய வைக்கும் குழந்தைகள் முதல் தேசத்தின் வளர்ச்சியைக் கட்டமைக்கும் குடிமகன்கள் வரை ஒவ்வொருவரும் அவரவர் கடமைகளை உணர்ந்தும் தேசத்திற்கான முன்னேற்றத்திற்கு பாடுபடும்படியான எண்ணங்கள் நூல் முழுவதும் விரிந்து மானுடத்தின் வழிகாட்டியாக ஒளிர்கிறது.
தான் செல்லும் இடமெல்லாம் எதிர்கால தலைமுறையினறாம் மாணவர்களையும் குழந்தைகளையும் உற்சாகமூட்டியும் அவர்களுக்கான நல்வழிகளைக் காட்டியும் தனது வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொண்ட அப்துல் கலாம் அவர்களின் சிந்தனைகள் எல்லா தளத்திலும் நின்று முழுமையான கற்றலையும் அனுபவங்களையும் நமக்குள் கடத்துகிறது.
ஆன்மீகம் அறிவு கல்வி தொழில்நுட்பம் அரசியல் என பல தளங்களில் கூறப்பட்டுள்ள இந்தக் கருத்துக்கள் வாசிக்கும் ஒவ்வொருவரின் எண்ண ஓட்டத்திலும் கலந்து விட்டால் தேசத்தின் வளர்ச்சி என்பது மிகச் சிறந்த வளர்ச்சியாகவும் முழுமையான வளர்ச்சியாகவும் மாறும் என்பதில் ஐயமில்லை.
நூலில் இருந்து சில மேற்கோள்கள்;
குழந்தை தனது மனசாட்சிக்கு
ஊறு விளையாத வகையில் தனக்குத்தானே நாணயமாக
நடந்து கொள்வதே
அக்குழந்தையை
ஞானமும் விவேகமும் உடைய
அறிவார்ந்த குடிமகனாக்கும்.
கனவு எண்ணம் செயலாக்கம் என்ற தத்துவப் பாதையைத்தான்
நான் ஒவ்வொரு மாணவனிடமும்
மீண்டும் மீண்டும் கூறி
மனதில் ஆழப் பதிய வைக்க பரிந்துரைக்கிறேன்.
ஒவ்வொரு ஆசிரியரும்
தன் வாழ்நாள் முழுவதும்
தன்னிச்சையாக கற்றுணரும் தனிப்பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
“நான் எதற்காக நினைவு கூரப்பட வேண்டும்”
இதற்கான பதில்
உங்களுக்கு ஒரு பக்கத்தை
மனித வரலாற்றில் தோற்றுவிக்கும்
எல்லா வழிகளிலும் மக்களை
மேன்மை அடையச் செய்ய
நேர்மைத்திறம் கொண்ட
தலைவர்கள் வேண்டும்
அதேசமயம் நேர்மைத்திறத்துடன் செயல்பட்டால்
பிரச்சனைகள் தோல்விகள் வந்தாலும் முடிவில் நேர்மை தான் வெற்றி பெறும் என்ற எண்ணத்தை
மக்கள் மனதில் பதிய வைக்க தொலைநோக்கு கொண்ட தலைவர்கள் தேவை.
நமக்கு திறன் இல்லை எனும் உணர்வு
நம் மனதில் இருந்து எழும்
தோல்வி மனப்பான்மையாகும்
தோல்வி மனப்பான்மையை
தோல்வி அடையச் செய்து
வெற்றி பெற வேண்டும் என்ற
உணர்வு வேண்டும்.
விழிப்புணர்வு பெற்ற அறிவார்ந்த சமுதாயம் என்பதை அடைய
வாழ்க்கை நெறிமுறை சார்ந்த கல்வி, மதத்தின் கோட்பாட்டில் இருந்து தெய்வஞானத்தை அடையும் நிலை, பொருளாதார முன்னேற்றத்துடன் கூடிய அனைவரையும் உள்ளடக்கிய சமதர்ம சமுதாயம் அடைய
முப்பரிமாணங்கள் என்ற
ஒன்றான நிலையை எய்தி
செயல் வடிவம் பெறுகிறதோ
அன்றுதான் அமைதியான வளம்மிக்க விழிப்புணர்ச்சி பெற்ற
அறிவார்ந்த சமுதாயம் தோன்றும்.
கற்பனை மிகுந்த
புதுப்புது படைப்புகள்தான்
மனித எண்ண அலைகளின் அஸ்திவாரம் அது எப்பொழுதும் தொடர்ச்சியான பரிமாணத்தின் வளர்ச்சியில்
முன்னிலை வகிக்கும்
நமது கல்விமுறை
என்றைக்கு ஓர் இளைஞனை
நீ எனக்கு என்ன செய்வாய்
என்று கேட்பதற்குப் பதிலாக
நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்கும் மனநிலையை
அடைய வைக்கிறதோ
அன்றே எதிர்கால தலைவர்களை நாட்டுக்கு அளிக்கும்
குழந்தைப் பருவத்தில்
கற்பிக்கப்படும் தரமான நற்கல்வி பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட கல்வியை விட வாழ்க்கைக்கும் சமுதாயத்திற்கும் மிக முக்கியமானது
நமது நேர்மையான உழைப்புதான்
நமக்கு வழிகாட்டும் அறிவு விளக்கு
நாம் கடினமாக உழைத்தால்
நாம் அனைவரும் வளமடையலாம். மேலான எண்ணங்களை
பேணி வளருங்கள்
செயல் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் நேர்மையான முறைகளே
நமது வழிகாட்டியாகட்டும்
விஞ்ஞானம் தொழில்நுட்பம்
ஆன்மீகம் போன்ற முப்பரிமாணம் வாழ்க்கையில் அறிவு தீபம் ஏற்ற வேண்டும்
இந்த லட்சியத்தை அடைய
ஒவ்வொன்றும் தன்னில் கலந்து
ஆன்மீக உணர்வில் தெளிந்து
அறிவு சார்ந்த சமுதாயத்தின்
அடித்தளமாக மாற வேண்டும்
கற்பதற்கு சிந்திக்கும் திறனும்
கற்பனை செய்வதற்கு எண்ண சுதந்திரமும் தேவை
இவ்விரண்டையும் ஓர் ஆசிரியர்
எளிதாக பயிற்றுவிக்க வேண்டும்
ஒரு தனி மனிதனை விடவும்
ஓர் அமைப்பை விடவும்
நாடு தான் மிக உயர்ந்தது
என்ற எண்ணம் நம் அனைவருக்கும் வரவேண்டும்
ஒரு வளர்ந்த நாட்டின் அடையாளம் அனைத்தும் உள்ளவர்கள்
கடின உழைப்பின் மூலம்
தங்களுக்கும்
வசதி இல்லாதவர்களுக்கும்
இடையே உள்ள
இடைவெளியைக் குறைக்க
பாடுபட்டு அவர்களை
மேம்பாடு அடையச் செய்வதாகும்
நம்மை அனைவரும்
நினைவு கூறும் வகையில்
ஒரு பெரும் செல்வத்தை
நம் வருங்கால சந்ததியினருக்கு
நாம் விட்டுச் செல்லும்
உரிமையும் பொறுப்பும்
நம் அனைவருக்கும் உள்ளது
கல்வியின் நோக்கம்
அக்கல்வியைக் கற்றிடும்
இள மாணவர்களின் உள்ளங்கள்
தமது வாழ்நாள் எல்லாம்
தமக்குத் தேவையான கல்வியைத் தொடர்ந்து சுயமாகத் தாமே
கற்றிடும் திறமுடையவர்களாக
ஆக்குவதுதான்
வாழ்நாள் முழுவதும்
அனுதினமும்
நேர்மையாய் துணிவாய்
உண்மையாய் உழைக்கிறவன்
கரங்களே அழகிய கரங்கள்.
தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டிட எதிர்காலத்தை சிறப்பாக உருமாற்றிட குழந்தைகளின் மனங்களுக்குள் நல் எண்ணங்களையும் தேசப்பற்றையும் அறிவின் தளத்தில் நின்று புகுத்துதல் ஒன்றே வழியமைக்கும் என்பதை அப்துல் கலாம் நூலில் திறம்பட எடுத்துரைக்கிறார்.வளரும் குழந்தைகள் மட்டுமல்ல பொதுநலத்தின் மீதான அக்கறை கொண்டிருக்கும் ஒவ்வொரு குடிமகனும் வாசிக்கவேண்டிய நூல் இது என்பதில் ஐயமில்லை.
நூல் அறிமுகம் எழுதியவர்:

இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

