“பாதரஸ ஓநாய்களின் தனிமை” சிறுகதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்
‘ஒரு திருடனைத் தண்டிப்பதற்கு முன்பாக, அவன் பசியால் வாடியதை, வேலையில்லாது திண்டாடியதை கரிசனமுடன் விசாரித்ததுண்டா எந்த நீதிபதியாவது..?’ – ஃபிடல் காஸ்ட்ரோ – ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என்ற நூலில்..! இந்தத் தொகுப்பும் தொகுப்புக்கான கதைகளின் தேர்வும் ஃபிடலின் இந்தக் கேள்வியிலிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும்.
விளிம்பு நிலை வாழ்க்கைமுறை, விளிம்பு நிலை மாந்தர்களைப் பற்றிய பதிவுகள் புனைவுகளாக வெளிவரத் தொடங்கிய கால கட்டத்தில் கூட ‘திருடர்கள்/களவாணிகள்’ பற்றிய புனைவுகள் பெரிதளவில் வெளிப்படவில்லை. வெளிவந்த ஒரு சிலவுமேகூட சுய சாதி, சொந்த மண் ஆகிய தளங்களில் இருந்து உருவாகி வந்தவையே. அவற்றில் சிலவற்றில் ஒரு விதத் திருவுருவாக்கும் முயற்சிகளும் இருந்தன. பிற்பாடு அப்பிரதிகளை இனவரைவியல் நோக்கில் வாசித்ததும் நேர்ந்தது. அதுவே அவற்றுக்கான நியாயமும் கூட. அந்த வகையில் களவு/திருட்டு பற்றிக் கதையாடும் பல்தரப்பட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தெரிவு செய்து தொகுப்பாகக் கொண்டு வந்த வகையில் இத்தொகுப்பே இதில் முதல் முன்னெடுப்பெனக் கருதுகிறேன்.
அந்த வகையில் இந்தத் தொகுப்பானது புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா தொடங்கி ஆதவன் தீட்சண்யா, சுரேஷ்குமார இந்திரஜித் வரையிலான வெவ்வேறு காலகட்டத்தையும் வெவ்வேறு கலாச்சாரத் தளங்களையும் கொண்ட புனைவு எழுத்தாளர்களின் கதைகளை ‘களவை’ முதல் அடிப்படையாகக் கொண்டு ஒரு படித்தான தொகுப்பாக ஒருங்கிணைக்க முயற்சிக்கிறது. அதில் பெரும்பான்மையான வெற்றியையும் அடைந்துள்ளது.
களவை ஒரு சாகசமாகவும், ஒரு மந்திரக்காரனின் தேர்ந்த வித்தையாகவும், ரசவாதம் செய்யும் கலையாகவும் romanticize செய்யும் கதைகளும் உள்ளன. பசியின் காரணமாக, வறட்சியின்/பஞ்சத்தின் காரணமாக மேற்கொள்ளப்படும் ஒரு தற்காலிக விடுதலைச் செயல்பாடாக உருவகிக்கும் கதைகளும் உள்ளன. திருடுபவர்களின் அந்நேரத்திய, திருட்டுக்கு முந்தைய/பிந்தைய மனப்போராட்டங்களைப் பேசும் கதைகளும் உள்ளன.
மாறாக, திருட்டை திணை வாழ்வியலின் விதிமுறையாக வாய்த்த மக்கள் அதற்கான நியதிகளையும், விழுமியங்களையும், விதிமுறைகளையும் உருவாக்கி அதை ஒரு வாழ்க்கை முறையாகவே இயல்பாக்கிக் கொள்ளும் மனிதர்களைப் பற்றிய கதைகளும் உள்ளன. புதுமைப்பித்தனின் ‘சங்குத்தேவனின் தர்மம்’, கோணங்கியின் ‘பாதரஸ ஓநாய்களின் தனிமை’, எம்.எஸ்.சண்முகத்தின் ‘பூட்டுப் பாம்படம்’ போன்ற கதைகள் இத்தகையன.
சி.சு.செல்லப்பாவின் ‘குற்றப்பரம்பரை’ Criminal Tribes Act (CT Act) எனப்படும் கைரேகைச் சட்டத்தின் கொடுமையை பாதிக்கப்பட்டவர் வாய்மொழியாகப் பேசினாலும் இறுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சி அதை அகற்றிடும் என்ற பிரச்சாரத் தொனியுடன் ஆசிரியரின் இலட்சியத்தையும் முன்வைத்து முடிகிறது.

ஜி.நாகராஜனின் ‘இளிந்த ஜாதி’ கதை, திருட்டை ஒரு கூடுதல் செயல்பாடாகக் கதை நாயகன் ‘மைலு’வுக்கு வழங்கிவிட்டு வேறொரு காத்திரமான விசயத்தை வெளிப்படுத்துகிறது. அரசாங்க அலுவலகத்தில் கடைநிலை ஊழியனாகப் பணிபுரியும் மைலு, ரொம்ப ‘ரோசனைக்காரன்’. ஆபிசர் சேட்டை செய்தால் கேட்கும் விதத்தில் கேட்பவன். ஆனால் பெண்கள் விசயத்தில் பெரு மோகி. அங்கங்கமாக வர்ணிக்கும் அழகு உபாசகன். கண், மூக்கில்லாத முகத்தில் ஓர் ஓட்டை மட்டும் வாயாகக் கொண்ட குரூபி ஒருவன் ஒரு பெண்ணுடன் யாசகம் கேட்டபடி செல்வதைக் கண்ணுற்று அந்தக் கோர முகத்தைப் பார்த்து பதட்டமடைகிறான். பைத்தியம் பிடித்தது போலாகிறான். தன்னை ‘இளிந்த சாதி, இளிந்த சாதி’ என அரற்றியவாறு ஓடுகிறான். மிகப்பெரிய உளவியல் தாக்கத்தைப் பற்றிப் பேசும் இக்கதை தொகுப்பின் சிறந்த கதை என்பேன் – மேலோட்டமாகப் பார்க்கையில் இது இத்தொகுப்பின் அடிநாதமான ‘களவை’ மையப்படுத்தியதாக இல்லாதது போலத் தெரியும் – ஆனால், களவு x யாசகம், அழகு x குரூரம் போன்ற பல இருமை எதிர்வுகளை முன்னிருத்தி பெரும் தத்துவ விசாரத்தை புனைவின்வழியே முன்வைக்கிறது.
ஜெயகாந்தனின் ‘ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது’ கதையில் வரும் திருடனும் அவளிடம் சாக்லெட் திருடிக் கொண்டுவரச் சொல்லும் ராஜி பாப்பாவும் – வண்ணநிலவனின் ‘திருடன்’ கதையில் வரும் திருடனும் அவனுக்கு உதவி செய்யும் நிறைசூலி அமலியும் எனக்கு வேறு வேறு நபர்களாகத் தெரியவில்லை. மனிதனின் ஆதார சுருதியான எதிர்பார்ப்பற்ற அன்பை விதைப்பவர்கள் – எக்காலத்துக்குமானவர்கள்.
தனுஷ்கோடி ராமசாமியின் ‘சரஸ்வதி பூஜை’ கதை – ஒரு மரபு சார்ந்த இடதுசாரி லட்சியப் பார்வையுடன் இருந்தாலும் தட்டையான சொல்லாடல் செயற்கை மேல்பூச்சுடன் சுமாரான கதையாக எஞ்சுகிறது. சோ.தர்மனின் ‘சத்தியங்கள்’ கதையும் கூட அவ்வாறானதுதான் – ஆனால் உயிர்ப்புமிக்க உரையாடல்களின் வழியாகவும் இயல்பான மக்கள் மொழியினாலும் இக்கதை சற்று மேம்பட்டுத் துலங்குகிறது.
களவின் ரஸவாதங்களையும் மாயாஜாலங்களையும் ஒரு மந்திரவித்தைக்காரனின் மொழியில் கலா சாகசங்களாக்குகின்றன தஞ்சை பிரகாஷின் ‘திண்டி’யும் கோணங்கியின் ‘பாதரஸ ஓநாய்களின் தனிமை’யும், ஜனகப்ரியாவின் ‘ஆளரவமும்’.
திருட்டையே தொழிலாகக் கொண்ட ஒரு சமூகத்தில் – ஒரு நிலப்பரப்பில் – அதன் வம்சாவழி வந்த வாரிசொருவன் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் காவல் அதிகாரியாக நியமனம் பெற்று வந்த நடப்பியல் மாற்றத்தை அதன் உள்ளார்ந்த சமூகப் பொருளாதார அரசியலை இயல்பான மொழியில் வாசகனுக்குக் கடத்துகிறது வேல.ராமமூர்த்தியின் ‘இருளப்ப சாமியும் 21 கிடாயும்’ கதை. எத்தனை முறை வாசித்திருந்தாலும், இந்தக் கதையின் இறுதியில் சேது சப்-இன்ஸ்பெக்டர் உடுப்பில் திண்ணைக்கு வரும்போது எல்லோரும் பதறியெழுந்து, தோளில் கிடந்த துண்டைக் கையில் எடுத்தபடி திண்ணையைவிட்டு இறங்கிக் கீழே நிற்கும் காட்சி உண்டாக்கும் பதற்றமும் துணுக்குறுதலும் இப்படி ஆகிப்போச்சே இந்த வாழ்க்கை என்ற பரிதவிப்பும் இப்பவாவது இப்படி ஓர் ஆள் வந்தானே என்ற நிறைவும் ஒரு சேர உணர்வாக்கம் கொள்வது வேல.ராமமூர்த்தியின் எழுத்தின் வன்மைக்கான சான்று.
திருடிப் பிடிபட்ட பச்சை இருளனை மோகித்து உடன் சென்ற ஜமீன் இளவரசியின் கதையை தொன்மை சார்ந்து முன்வைக்கிறது பவா.செல்லத்துரையின் ‘பச்சை இருளன்’ கதை.
கஞ்சா போதையில் தற்காலிமாகத் திருடன் அரசனாவதையும் மீண்டும் எதார்த்தத்துக்குத் திரும்புவதையும் அவருக்கே உரிய பாங்கில் ‘பறக்கும் திருடனுக்குள்..’ கதையில் சுரேஷ்குமார இந்திரஜித் பேசுகிறார்.
திருடுவதற்காக வெளிக்கிடும் திருடன் முழுநிலவின் ஒளி மயக்கத்தில் திருடும் எண்ணத்தை தன்னையறியாமல் கைவிட்டுத் திரும்பும் மனவெளித் தோற்றங்களை உதயசங்கரின் ‘நிலவில் குளித்தவன்’ கதையும்,
கடும் பஞ்ச காலத்தில் ஒரு வாய் தட்டையின்றி தவிக்கும் கால்நடைக்காகத் திருடி மாட்டிக்கொள்ளும் கோபாலுக்குப் பிறக்கும் பெண் குழந்தையை நம்பிக்கையின் கீற்றாக ஏந்தும் கிராமத்து மனிதர்களின் உளவியலை சு.வேணுகோபாலின் ‘புத்துயிர்ப்பு’ம், (கோபால் உணரும் வெக்கையையும் பஞ்சத்தையும் வாசிக்கும் நம்மையும் உணரச் செய்கிறது வேணுகோபாலின் எழுத்து.)
சனிக்கிழமை தோறும் புடவைகளை மட்டுமே திருடும் பாரம்பரியத்தில் வந்த முத்துராஜ் தனது தாத்தா உதவிய பெண்ணின் சந்ததிகளின் வீட்டிலேயே தங்கி திருட நினைப்பதும் பின் மனம் மாறிக் கிளம்பிவிடுவதும் இறுதியில் எல்லாம் கனவா நனவா என்ற மனமயக்க நிலையை தனக்கேயான இருத்தலியல் கதை சொல்லும் பாணியில் பேசும் எஸ்.செந்தில்குமாரின் ‘சனிக்கிழமைத் திருடன்’ கதையும்,
அடுத்த வேளை சோற்றுக்கு வழியின்றி உடன்பிறந்தவளாய் பழகும் வேடம்மாளின் உறவினன் தோட்டத்தில் கிழங்கு திருடலாமா வேண்டாமா என்ற பொன்னியின் மனக்குழப்பத்தை கதையோட்டமாகக் கூறும் ஆதவன் தீட்சண்யாவின் ‘களவு’ கதையும் திருடுபவர்கள்/திருடமுயல்பவர்களின் மனவோட்டங்களை மனப்போராட்டங்களை எழுத்தாக்கிய விதத்தில் கவனிக்க வைக்கின்றன.
மாறாக, சுந்தரபாண்டியனின் ‘களவு’ கதையானது, திருட்டு கொடுத்தவரின் மனநிலையைப் பற்றிப் பேசுகிறது. தன் வீட்டுக் கதவை உடைத்து டிரங்குப் பெட்டிக்குள் இருந்த பத்துப் பவுன் நகையைத் திருடியது அதுபற்றி நன்றாக அறிந்த உள்ளூர் உறவினர்களில் யாரோ ஒருவர்தான் எனப் புரிந்து கொள்ளும் சண்முகக் கோனார் சுற்றத்தார் திருட்டை கணடுபிடிக்கச் சொல்லும் ஒவ்வொரு உத்தியையும் திருடியவனின் மனநிலையை எண்ணி தயங்கியபடி மறுப்பதன் வழியே ஊசலாடும் அவரின் மனநிலை எளிமையாக எடுத்துவைக்கப்படுகிறது.
ஜி.நாகராஜனின் ‘இளிந்த ஜாதி’யைப் போலவே, கண்மணி குணசேகரனின் ‘சுருக்கு’ கதையும் தொகுப்பின் அடிச்சரடான ‘களவை’ ஒரு கூடுதல் நடவடிக்கையாக மட்டுமே கொண்டு, ஆண் பெண் உறவு, கணவன் மனைவிக்கிடையிலான சந்தேகம் ஏற்படுத்தும் விளைவு, கடும் ஒடுக்கத்துக்குள்ளாகும் முத்தலட்சுமி என்ற பெண் தன்னிலையானது சாவை விடுதலையாகக் கருதி தூக்கிட்டுக் கொள்வதற்கு முன் ‘காட்டுக்காரனை வச்சிருக்கா’ என்று அவதூறு தூற்றியதற்கு பதிலியாக வனக்காவலருடனே ‘செத்த ‘கெடந்துட்டு’னாச்சும் செத்துப் பூடுவமா?’ என்று எண்ணுவது கதையை மற்றொரு திறப்பின் வழி வேறொரு மாற்றுப்பிரதியாகப் புனைவாக்கம் செய்து கொள்கிறது.
களவு குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கதைகளில் ஒன்றை இணைத்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது போல், வாசகர்களுக்கு அவரவர் வாசிப்பிலான தொடர்புடைய கதைகள் நினைவுக்கு வரக்கூடும் என்பது ஒரு குறையே..!
ஆனாலும், பாலைத்திணை ஆறலைக்கள்வர் தொடங்கி சனிக்கிழமை தோறும் புடவை மட்டும் திருடும் முத்துராஜ் வரை திருட்டையும் திருடர்களையும் அதன் நுட்பத்தையும் வலியையும் பேசும் புனைவுகளைத் தொகுத்த வகையில் – எனக்குத் தெரிந்தவரை இது முதல் முயற்சி என்பதோடு – அதற்கொரு சிறப்பான தொகுப்புரையும் எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளும் வழங்கிய தொகுப்பாசிரியர் ஆ.பூமிச்செல்வத்துக்கு பாராட்டுகள்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | பாதரஸ ஓநாய்களின் தனிமை |
| ஆசிரியர்: | ஆ.பூமிச்செல்வம் |
| வெளியீடு: | அன்னம் – அகரம் வெளியீட்டகம் |
| விலை: | ₹.270 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 அன்புச்செல்வன் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

