ஒரு போராட்டக்காரியின் வெடிச் சிரிப்பு கவிதை – கோசின்ரா

ஒரு போராட்டக்காரியின் வெடிச் சிரிப்பு கவிதை – கோசின்ரா



காவல் துறை அதிகாரியே
கன்னத்தில் என்னை  ஓங்கி அறைந்த போது
நான் போராட்டக்காரியாக இருந்தேன்
காவல் நிலையத்திற்குள்
அழைத்து சென்ற போது
நான் போராளியாக இருந்தேன்
அதிகாரத்தின் சிவப்புக் கட்டடத்தில்
சமூகத்தின் சாட்சியாக  நின்றேன்
ஒழுக்க நியதிகளை  வெளியேற்றி
என் ஆடையைக் களைந்த போது
உன் மகளாக இருந்தேன்’
பெருத்த மார்பில் கை வைத்த போது
உன் தாயாக இருந்தேன்
என்னை இன்னும் என்ன செய்யப்போகிறாயென்று தெரியாது
இருட்டு எங்கேயும் இருட்டு
என் மீது கிழிக்கப்பட்ட முள்ளின் காயம்
எரிந்துக்கொண்டிருக்கிறது
ஒரு பெண்ணிடம் எப்படிப் பேசுவதென்று
நீ இத்தனை வயதிலும் கற்றுக்கொள்ள வில்லையா
உன் தாய் சகோதரிகள் சொந்தங்கள்
எதையும் உனக்குக் கற்றுத்தரவில்லையா
பின்பு யாரிடம்
இந்த வன்முறையைக் கற்றுக்கொண்டாய்
யாரிடம் இந்த சித்ரவதையைப்  பயிற்சி கண்டாய்
பெண் எப்பொழுதும்
உனக்குப் பசியின் இரையா?
பசியெடுக்கும் போது மட்டும்
பெண்ணைப் பார்ப்பாயா
அன்பாக இருக்கும் போது
அவள் உனக்கு அன்னையாகத் தென்படவே இல்லையா
தோழமையாக இருக்கும் போது
பெண் அருகில்  நீ இருந்ததில்லையா
இன்றிரவு வீட்டுக்குச் சென்றவுடன்
இந் நினைவுகளை
யாரிடம் பகிர்ந்துக்கொள்ள போகிறாய்
உன் மகளிடம்
என்னைப்பற்றி என்ன சொல்வாய்
உன் தாயிடமும் மனைவியிடமும்
என் உடலைப் பற்றி சொல்வாயல்லவா
அவர்கள் என்ன சொன்னார்களென்று கூறு
நான் எங்கேயும் போகமாட்டேன்
இன்னொரு போராட்டத்தில்
என்னை நீ சந்திக்கலாம்
கொடிகளை உயர்த்திய படி
கோஷமிட்டுக் கொண்டிருப்பேன்
என்னை சந்திக்கும் துணிச்சல்
உனக்கு இருக்கிறதா
நீ என் எதிரில் வா
தலை குனிந்து
என்னைக் கடந்து போவதைப் பார்த்து
நான் பெரிதாக வெடித்து சிரிக்க வேண்டும்.
– கோசின்ரா

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *