ஒரு வாசகன் பிறந்தான் – எழுத்தாளர் சுப்பாராவ்

ஒரு வாசகன் பிறந்தான் – எழுத்தாளர் சுப்பாராவ்

மூன்று வயதில் நாம் பேசும் மொழி இது, நாம் இருக்கும் ஊரில் பேசும் மொழி இது என்ற வித்தியாசங்கள் எதுவும்  உங்களில் யாருக்கேனும் தெரியுமா? எனக்குத் தெரிய வந்த்து. அதில் பெரிய கொடுமை எங்களுக்கு வீட்டில் தெலுங்கு. வெளியே தமிழ். அப்பா வேலைக்கு வந்த மன்சூர்பூரில் ஹிந்தி. இந்த லட்சணத்தில் நான் ஒரு பள்ளியிலும் சேர்க்கப்பட்டேன். என் வாழ்வின் மிக துக்கமான நாட்களாக அவைதான் இருந்திருக்க வேண்டும்.  மொழி தெரியாததால் யாரிடமும் பேசாமல் பள்ளிக்குப் போய் வந்தேன். என் வகுப்பு நண்பர்கள், பள்ளிக்கு தினமும் கொண்டு விட்ட ரிக்சாவண்டிக்காரர் எல்லோரும் நான் வாய்பேச இயலாத குழந்தை என்று நினைத்திருந்தார்களாம் என்று அம்மா பின்னால் சொன்னாள்.

பின்னர் அப்பாவிற்கு அங்கிருந்து அடுத்த வருடமே டில்லிக்கு பணி மாறுதல். சற்று பெரிய பள்ளி. தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு எல்லாமே அரைகுறை. ஹிந்தி, ஆங்கில போதனைப் பொறுப்பைப் பள்ளி ஏற்றுக் கொள்ள தமிழ் போதனையை அம்மா ஏற்றாள். முறைசாராக் கல்வியாகத் தமிழ் கற்கும் வேளையில்தான் கோகுலம் வர ஆரம்பித்தது.

கரோல் பாக்கில் தமிழ் கடைகளில் கோகுலமும், விகடனும் வாங்கி வந்த நாட்கள் மிக நன்றாக எனக்கு நினைவிருக்கிறது. வீட்டின் பக்கத்தில் ஒரு தமிழ் பிராமணக் குடும்பம். நாராயணன் என்ற தமிழ் மாமா. மாமியின் பெயர் மதுரம். இப்போது நினைத்துப் பார்த்தால் அந்த மாமி நடிகை தேவதர்ஷினி ஜாடையில், ஆனால் நல்ல குண்டாக இருந்தது தெரிகிறது. அவர்கள் வீட்டில் கல்கி.. அப்போது அலைஓசை ரீரன் வந்து கொண்டிருந்ததும் நினைவிருக்கிறது.

கோகுலத்தில் வாரியார் பிள்ளையார் பெருமை என்ற  தொடரை எழுதி வந்தார். பின்னர் கண்ணன் கனியமுது என்ற தொடர்.  இவைதான் நான் படிக்க ஆரம்பித்த முதல் தொடர்கள். அந்த தொடர்கள் வாசிப்பில் நான் நல்ல பக்திமானாக இருந்தேன். அப்போதுதான் பங்களா தேஷ் விடுதலைக்கான யுத்தம் வந்தது. டெல்லி எங்கும் பதட்டம். பிளாக் அவுட் என்று மின்சாரத்தைக் கட் செய்துவிடுவார்கள். வீட்டுக்குள் மெழுகுவர்த்தி, சிமினி விளக்கு எரியும் வெளிச்சம் கூட ஜன்னல் வழியே தெரியக் கூடாது என்று ஜன்னல் கண்ணாடிகளில் கறுப்புக் காகிதத்தை ஒட்டி வைக்க வேண்டும்.

வானில் திடீர் திடீரென்று போர்விமானங்கள் பெரும் ஓசையுடன் பறந்து திகிலூட்டும். அப்படியான நாளில் எல்லோருக்குமே தேச பக்தி பொங்கும் போது, குட்டிப் பையன்களின் எதிர்காலத்தை நல்லபடியாக செதுக்கும் பொறுப்பை ஏற்றிருக்கும் கோகுலம் சும்மா இருக்குமா என்ன? கோகுலத்தில் இந்த போர்ச் சூழலை வைத்தே ஒரு அருமையான படக்கதை வந்தது. நண்பர்களான இரண்டு சிறுவர்களும், (நவீன், ரஷீத் என்று ஞாபகம்) ஒரு சிறுமியும் அவர்கள் வளர்க்கும் நாய், பூனை, கிளி, குரங்கு, கழுதை போன்ற விலங்குகளும் சேர்ந்து முக்திவாஹினி படை வீர்ர்களுக்கு உதவி செய்யும்  அருமையான கதை. வாண்டுமாமா எழுதியது. படம் செல்லம். வாரியார் தொடர் உபயத்தில் பிள்ளையார், கண்ணன் பக்தனாக இருந்த நான் வாண்டுமாமா உபயத்தில் தேசபக்தனாகவும் மாறினேன்.

நாமும் ஏதாவது நாய் குரங்கு இப்படி வளர்த்தால் தேசத்திற்காகப் போராடும் வீர்ர்களுக்கு ஏதேனும் உதவி செய்யலாமே என்பது மாதிரியான கற்பனைதான் எப்போதும். அடுத்ததாக பலே பாலு வந்துவிட்டான். பிறகு நந்து சுந்து மந்து. எங்கள் வீட்டின் விகடனைத் தந்து மதுரம் மாமி வீட்டு கல்கி வாங்கி வரும் வழக்கமும் இருந்தது. கல்கியில் பிள்ளையார் நடந்து செல்வது போன்ற அந்த லோகோ எனக்கு ரொம்பப் பிடித்துப் போனதால் கல்கியும் படிக்க ஆரம்பித்தேன்.

அம்மாவும், மதுரம் மாமியும் டெல்லி வாழ்க்கைக்குப் பழகிக் கொண்டிருந்தார்கள். எப்போது பார்த்தாலும் கம்பளி நூல் வாங்கிக்கொண்டு வந்து ஸ்வெட்டர் பின்னுவார்கள். குரங்குக் குல்லா, கிளவுஸ், சாக்ஸ் என்று பலவும் பின்னி, போட்டு டெஸ்ட் செய்து பார்க்க நான் ஒரு குட்டி பொம்மையாக இருந்தேன். நாராயணன் மாமா ஆபீஸ் போன நேரங்களில் எல்லாம் மாமி எங்கள் வீட்டில்தான் இருப்பாள். மாமாவும் ஞாயிறு மாலைகளில் வருவார்.  அவர் இருபத்திநான்கு மணி நேரமும் சிகரெட் குடித்துக் கொண்டே இருப்பார். எங்கள் வீட்டிற்கு வரும் சமயங்களில் அவருக்கு சிகரெட் தவிக்கும். ஒரு மாதம் நாங்கள் கோகுலம் வாங்கச் செல்லும் போது அப்பா ஒரு ஆஷ் ட்ரே வாங்கி வந்தார். அந்த ஞாயிறன்று நாராயணன் மாமாவை ஆஷ் ட்ரேயுடன் வரவேற்றார். அம்மாவிற்கு செம கடுப்பு. ஆனால் அப்பாவோ, உன் வீட்டுக் கூடத்தில் என் அப்பா மூக்குப் பொடி போடலாம். உன் மாமா புகையிலை போடலாம். ஆனால் என் நண்பன் சிகரெட் மட்டும் குடிக்கக் கூடாதோ? இது என்ன லாஜிக்? என்றெல்லாம் சொல்லி நாராயணன் மாமா நம் வீட்டில் சிகரெட் குடித்தால் ஒன்றும் குடி முழுகிப் போகாது என்று சொல்லிவிட்டார். அம்மா அந்த ஆஷ் ட்ரேயைத் தொட மாட்டேன் என்று சொல்லி விட்டதால், அதை வாரம்தோறும் சுத்தம் செய்து எடுத்து வைக்கும் வேலை எனதானது. இப்படியாக எனது எடுபிடி வாழ்க்கையும் ஆரம்பித்தது.

அப்பாவும், நாராயணன் மாமாவும் அலை ஓசை பற்றி, கல்கி பற்றி என்னென்னமோ பேசுவார்கள். எனக்கு அது ஒன்றும் புரியாது. நான் கல்கியில் அலை ஓசை படிக்கவில்லை. உண்மையில் எல்லோரும் நான் கோகுலம் மட்டுமே படிக்கிறேன் என்று நினைத்திருந்த போது நான் யாருக்கும் தெரியாமல், விகடன், கல்கி இரண்டிலுமே சிறுகதை, தொடர்கதை எல்லாமே படித்து வந்தேன். அம்மாவும் மாமியும் கல்கி, விகடன்களின் மற்ற தொடர்கதைகள் பற்றித்தான் எப்போது பார்த்தாலும் பேசிக் கொண்டிருப்பார்கள். அப்படித்தான் ஒருநாள் அப்பாவும் நாராயணன் மாமாவும் ஹாலில் அலை ஓசை பற்றி ரம்பம் போட்டுக் கொண்டிருக்க, அம்மா கிச்சனில் டீ போட்டுக் கொண்டிருக்க, பக்கத்தில் மதுரம் மாமி கல்கியின் ஒரு தொடர்கதை பற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். அந்தத் தொடர்கதையின் பெயர் மூன்று முடிச்சு என்பதாக ஞாபகம். அதில் கணவனுக்கு கால் ஊனம். மனைவிக்கு வேறொரு காதலன் இருப்பான். இந்தக் கதையையும், விகடனில் வந்து கொண்டிருந்த ஒரு தொடர்கதையையும் போட்டுக் குழப்பி மதுரம் மாமி ஆள்மாறாட்டம் செய்து கொண்டிருக்க, நான் என்னையறியாமல், நீங்க சொல்றது விகடன் கதைல வரும் மாமி.. . மூன்று முடிச்சுல கால் இல்லாம போனது பரமேஸ்வரனுக்கு என்பது மாதிரி ஏதோ சொல்லிவிட்டேன்.

மதுரம் மாமி  ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டதாக அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டாள். ஒண்ணாவது படிச்சுண்டு என்னடா கல்கிலயும், விகடன்லயும் தொடர்கதை படிச்சுண்டு இருக்க? கோகுலத்துல பலே பாலு படிச்சா போதாதா? என்ன பெரியவா மாதிரி தொடர்கதை படிக்கற அதிகப்பிரசங்கித்தனம்? என்று என்னென்னமோ அதட்டினாள். அதுவரை என்னை யாருமே அதட்டியதில்லை. துக்கம் பொங்கியது. கண்ணில் அப்படியே கண்ணீர் அருவியாக. டீ போட்டுக் கொண்டிருந்த அம்மா, கல்கி விகடன் எல்லாம் படிக்கற அளவுக்கு தமிழ் தெரிஞ்சுடுத்தா என் கன்னுக்குட்டிக்கு? ஹிந்தி, தமிழ், தெலுங்கு, இங்கிலீஷ் எல்லாம் அரகொரையா இருக்கேன்னு நா  தமிழ் சொல்லித் தந்து, கல்கில, விகடன்ல தொடர்கதை படிக்கற அளவுக்கு வந்துட்டான் பாருங்கோ! அழாதடா கண்ணா! புரியறதோ, புரியல்லயோ, நீ பாட்டுக்கு கைக்குக் கெடச்சதப் படிச்சுண்டே இரு! மாமி ஒண்ணும் சொல்லமாட்டா, என்றவாறு இடக்கையால் என்னை இழுத்து தன் வயிறோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். அம்மாவின்  மெத்தென்ற பெரிய தொப்பையின் கதகதப்பு இன்னும் என் வலது கன்னத்தில் அப்படியே இருக்கிறது.

நானும் அன்றிலிருந்து இன்றுவரை புரிகிறதோ, புரியவில்லையோ, கைக்குக் கிடைத்ததைப் படித்துக் கொண்டே இருக்கிறேன்….

-நன்றி எழுத்தாளர் சுப்பாராவ்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *