சிறார்களுக்கான வாசிப்பு அனுபவப் பயணம்
கடந்த 30.9.24 திங்கள் கிழமை அன்று தூண்டில் மாணவர் இயக்கம் மற்றும் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் முன்னெடுத்த நடத்திய “சிறார்களுக்கான வாசிப்பு அனுபவப் பயணம்” சிறப்பாக நடந்தது.
இந்த நிகழ்வில் கடலோர கிராமங்களைச் சேர்ந்த 25 குழந்தைகள் சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் “உதயசங்கர்”அவர்களுடைய ஆதனின் பொம்மை நூலை வாசித்து அவரோடு கடந்த விடுமுறையில் கலந்துரையாடல் செய்தார்கள். அதன் தொடர்ச்சியாக கீழடிக்கு நேரில் சென்று தமிழரின் தொன்மை நாகரீகத்தை பற்றி அறிந்து கொள்ளவும், நூலில் தாங்கள் வாசித்த ஆதனை பற்றிய செய்திகளைச் சேகரிப்பது என்று, இந்த விடுமுறை நாளில் பயணம் செய்து கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார்கள்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தமிழருடைய நாகரீகம் எப்படி இருந்தது என்பதை நேரில் கண்டு வியந்து மகிழ்ந்தார்கள். அகழ்வாய்வு நடைபெற்ற இடத்தையும் நேரில் சென்று பார்த்து தெளிவு பெற்றார்கள்.
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நேரில் சந்தித்துப் பார்த்து வியந்துதொடு மட்டுமல்லாமல் சிறார்களுக்கான பிரிவில் அரை மணி நேரம் அமர்ந்து சிறார் நூல்களை வாசித்தார்கள். அங்குள்ள காட்சி ஊடக அரங்கில் தப்பு கணக்கு என்ற குறும்படத்தையும் பார்த்து விவாதம் செய்தார்கள்.
தமுஎகச வின் 2023 ஆம் ஆண்டு சிறுகதைத் தொகுப்பிற்கான விருது பெற்ற எழுத்தாளர் கி. அமுதா செல்வி அவர்களோடு எழுத்தாளர் சந்திப்பையும் சந்திப்பில் பங்கேற்றார்கள். பசி கொண்ட இரவு மற்றும் வால் முளைத்த பட்டம் குறித்து மாணவர்கள் அவர்களோடு உரையாடினார்கள்.
இரண்டாம் நாள் (01.10.24) ஆத்தூர் தோழர் சண்முக வடிவு அவர்களுடைய இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள அறிவுச்சுடர் நூலகத்தைப் பார்வையிட்டு அங்குள்ள சிறார் நூலகத்தில் நூல்களையும், எழுத்தாளர்களையும், பதிப்பகங்களையும் பற்றி விரிவானதொரு உரையைக் கேட்டார்கள்.
அடுத்து முக்காணி வானவில் சிறார் நூலகத்தை ஆய்வு செய்து அங்குள்ள சிறார்களோடு கலந்துரையாடல் செய்தார்கள். குழந்தைகள் மகிழ்ச்சியோடும் விருப்பத்தோடும் நூல்களை வாசிப்பதும் நூலகங்களை சந்திப்பதும் பண்பாடாகியுள்ளது. இவைகள் எல்லாம் நாம் முன்னெடுக்கக்கூடிய முன்னெடுப்பில் தான் வளரும். வாசிப்பைப் பண்பாடாக்குதல் என்பது வார்த்தை ஜாலமல்ல அது வாழ்வாக்கப்பட வேண்டிய மிக முக்கியமானதொரு இயல்பு.
பள்ளிகளிலும் வீடுகளிலும் வாசிப்பை முன்னெடுக்கக்கூடிய பண்பாட்டை நாம் வளர்க்க வேண்டும் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட நூலகம் நோக்கிய பயணத்தை ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.
எழுதியவர் :
ரா. பி. சகேஷ் சந்தியா
கல்லாமொழி
நூலின் தகவல்கள் :
நூல் : ஆதனின் பொம்மை
ஆசிரியர் : உதயசங்கர்
வெளியீடு :வானம் பதிப்பகம்
விலை : ₹72.00
நூலைப் பெற : thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.