தாய்மொழியை பெருமைப்படுத்தும் சமூக அறிவியல் ஆய்வு நிறுவனம் -A social science research institution that prides itself on its mother tongue

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (எம்.ஐ.டி.எஸ்.) அண்மையில் தனது பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டத்தை நிறைவு செய்துள்ளது. 1971ஆம் ஆண்டு சென்னை அடையாறு காந்தி நகரில் மேனாள் யுனெஸ்கோ துணை இயக்குநர் நாயகமாகத் திகழ்ந்த மால்கம் ஆதிசேசய்யா-எலிசபெத் ஆதிசேசய்யா ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், 1977ஆம் ஆண்டு தேசிய சமூக அறிவியல் ஆய்வு நிறுவனமாக ஐசிஎஸ்எஸ்ஆர் எனும் இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டு, ஒன்றிய அரசும், தமிழக அரசும் இணைந்து வழங்கும் நிதியுதவியுடன் இயங்கி வருகிறது.

இந்திய அளவில் பல்வேறு நீடித்த வளர்ச்சி குறித்த முக்கிய ஆய்வுகளை நிகழ்த்தி வந்தாலும் மாநில அளவிலும் வறுமை, பாசன மேலாண்மை, நீர்வளம், இயற்கை வளம், கல்வி, ஊரக வளர்ச்சி, பழங்குடியினர், சமூகப் பண்பாட்டு வரலாறு, பாலினம் குறித்த ஆய்வுகளைத் தொடர்ந்து இந்நிறுவனம் செய்து வருகிறது.

சமூக அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் பயிலும் ஆய்வு மாணவர்களுக்கு அளிக்கப்படும் நிதியுதவித்தொகை படிப்படியாக நான்கு வருடங்களிலிருந்து இரண்டு வருடங்களாக ஒன்றிய அரசால் குறைக்கப்பட்டது போலவே, அந்நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் ஒன்றிய அரசின் நிதியும் கணிசமாகக் குறைக்கப்பட்டது. இதனால் இந்நிறுவனம் மாநில அளவில் செய்துவந்த ஆய்வுகளுக்கும் முன்னெடுப்புகளுக்கும் மாநில அரசின் நிதியுதவியையே நம்ப வேண்டிய சூழல்
ஏற்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பொன் விழா நேரத்தில் தலைவராக மேனாள் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. நீ. கோபாலசுவாமி ஐ.ஏ.எஸ். அவர்கள் பொறுப்பேற்ற பின் பல்வேறு தமிழ்  சார்ந்த மற்றும் மாநில அளவிலான ஆய்வுகளும் வெளியீடுகளும் வரப்பெற்றுள்ளன. தாய்மொழிக் கல்வியையும், தாய்மொழியில் வரும் வெளியீடுகளையும் தமது வாழ்நாள் முழுவதும் முன்னெடுத்தவர் ஆதிசேசய்யா. அவற்றைச் செயல்படுத்தும் விதமாக நிறுவன பொன்விழா ஆண்டில் தமிழ் வெளியீடுகளையும் தமிழ்ச் சொற்பொழிவுகளையும் இந்நிறுவனம் நடத்தியது. முதன்முறையாக ‘உலகத் தாய்மொழி நாள்‘ சிறப்புச் சொற்பொழிவை ஏற்பாடு
செய்தது. இதில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் கோ. பாலசுப்பிரமணியம் அவர்கள் ‘மொழி அடையாளமும் சமூக மேம்பாடும்’ என்கிற தலைப்பில் உரையாற்றினார்.

பெருந்தொற்று காலத்தில் இந்நிறுவனப் பேராசிரியர்களைக் கொண்டு அவரவர் துறைசார்ந்த சாதக பாதகங்களைக் கட்டுரையாகத் தொடர்ந்து (பொது முடக்கக் காலத்திலேயே) நிறுவன வலைத்தளத்தில் வெளியிட்டார் அப்போதைய நிறுவன இயக்குநர் பேராசிரியர் ப.கு. பாபு அவர்கள். அப்படி வெளியிடப்பட்ட ஆங்கிலக் கட்டுரைகளைத் தொகுத்து ‘Economic policy in Covid 19 times’ என்ற பெயரில் ஆங்கிலத்திலும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பை ‘பெருந்தொற்றும் பொருளாதாரக் கொள்கையும்’ என்ற பெயரில் தமிழிலும் நூலாக வெளிக்கொணர்ந்தது இந்நிறுவனம். இந்திய அளவில் எந்த ஒரு மாநில ஆய்வு நிறுவனமும் முன்னெடுக்காத இந்த
முயற்சியைத் தமிழ் மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பயன்பெறும் வகையில் இந்நிறுவனம்

2
வெளியிட்டது. இந்நூலை வெளியிட்டு, “பல்வேறு தரவுகளைக் கொண்டு வெளிவரும் இதுபோன்ற நூல்களை சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் இன்னும் அதிகமாய் வெளிக்கொண்டு வரவேண்டும்” என்று அப்போதைய தமிழ்நாடு நிதியமைச்சர் திரு. பழனிவேல்  தியாகராஜன் அவர்கள் பாராட்டிப் பேசினார். இந்நூலின் உள்ளடக்கத்தின் முக்கியத்துவம் கருதி இந்நூலை வெளியிட ஹைதராபாத்தில் உள்ள இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழக(தெற்கு
மண்டல)ம் நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தைத் தோற்றுவித்த மால்கம் ஆதிசேசய்யா எழுதிய கட்டுரைகள் தமிழில் தனியொரு நூலாக இதுவரை வரவில்லை என்ற குறையைப் போக்கும் வகையில் ‘இந்தியப் பொருளாதாரம்: வரலாறு காட்டும் வழிகள்’ என்ற நூலை பொன்விழா ஆண்டில் இந்நிறுவனம் வெளியிட்டது. இந்நூல் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் 2021ஆம் ஆண்டுக்கான பொருளியில் பிரிவில் மிகச் சிறந்த நூலாகப் பரிசு பெற்றதோடு ஆதிசேசய்யாவின் ஆய்வு ஆழத்தை தெரிந்துகொள்ள அருமையான நூல் என்றும் சொல்லவேண்டும்.

பேராசிரியர் எஸ். நீலகண்டன் அவர்கள் எழுதிய ‘ஆடம் ஸ்மித் முதல் காரல் மார்க்ஸ் வரை’, ‘நவசெவ்வியல் பொருளியல்’ ஆகிய நூல்களை ஏற்கெனவே இந்நிறுவனம் தமிழில் வெளியிட்டிருந்தாலும் தற்போது தமிழ்வழிப் பயிலும் மாணவர்கள் எளிதில் வாங்கிப் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழகம் மறுபதிப்பாக இவ்விரு நூல்களையும் வெளியிட ஒப்பந்தம் செய்ய, அரசு அந்நூல்களை குறைந்தவிலையில் வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் பொன்விழா ஆண்டில் இப்படியான ஓர் ஒப்பந்தம் இன்னும் பல நூல்களை வெளிக்கொணர்வதற்கு முன்னுதாரணமாகத் திகழும்.

பொன்விழா ஆண்டில் இந்நிறுவனத்தின் நூலகத்துறை மூன்று முக்கியமான நிகழ்வுகளை நடத்தியது. நிறுவனத்தில் சேகரிக்கப்பட்டுள்ள பழங்குடியினர் குறித்த நூல்களை பொதுமக்கள் பார்வைக்காக வைத்ததோடு, பழங்குடியினப் போராளி பிர்சா முண்டா பிறந்த நூற்றாண்டு நினைவாக அவரைப் பற்றிய ஒரு சொற்பொழிவையும் நடத்தியது. இரண்டாவதாக, 75ஆம் ஆண்டு இந்திய சுதந்திரக் கொண்டாட்டத்தை நினைவுறுத்தும் வகையில் நிறுவன நூலகத்தில்
உள்ள அனைத்து சுதந்திரப் போராட்ட வரலாற்று நூல்களையும், சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் வரலாறு குறித்த நூல்களையும் கால வரிசைப்படி பொதுமக்கள் பார்வைக்காகக் காட்சிப்படுத்தியது; அது பெரிய அளவில் வரவேற்பும் பெற்றது. மூன்றாவதாக ‘சென்னை தினம்’ குறித்த நூல்களையும் தனியாக காட்சிப்படுத்தியிருந்தது. இரண்டு வாரங்கள் நடைபெற்ற இந்தப்புத்தகக் காட்சியைப் பார்க்க பல்வேறு ஆய்வாளர்களும், பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் திரண்டு வந்து பயன் பெற்றனர்.

தமிழ்நாடு முழுவதும் பொருளியல் துறையில் இளங்கலை, முதுகலை, ஆய்வு மாணவர்களுக்கு பொருளியல் தொடர்பான கட்டுரைப் போட்டியை ஆங்கிலத்திலும், தமிழிலும் முதன்முறையாக பொன்விழாவை ஒட்டி இந்நிறுவனம் நடத்தியது. இப்போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆதிசேசய்யா பெயரில் ரொக்கப் பரிசும், புத்தகப் பரிசும் அளிக்கப்பட்டன.

இந்நிறுவனப் பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாக முதன்முறையாக உ.வே.சாமிநாதையர் நூலகத்துடன் இணைந்து ஐந்து நாள் சுவடியியல் பயிலரங்கத்தை நிறுவன ஆதிசேசய்யா அரங்கத்தில் நடத்தியது. இப்பயிலரங்கம் மூலம் 50க்கும் மேற்பட்ட ஆய்வு

தமிழகத்தில் நீர்ப்பாசனம் - முனைவர் கி.சிவசுப்பிரமணியன் - போதி வனம் | panuval.com

3
மாணவர்கள் பயன்பெற்றனர். பயிலரங்க நிறைவுநாளில் நூலகத்துறை இயக்குநர் திரு. இளம்பகவத் ஐ.ஏ.எஸ். அவர்கள் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார். ‘புதிய வெளிச்சத்தில் வ.உ.சி.: ஆ.இரா. வேங்கடாசலபதி ஆய்வுகளை முன்வைத்து’ என்ற ஒரு நாள் கருத்தரங்கை கடந்த ஜனவரி 4ஆம் தேதி நடத்தியது. இக்கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிப் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் ஆ.இரா. வேங்கடாசலபதியின் வ.உ.சி. குறித்த ஆறு நூல்களைப் பற்றி உரையாற்றினார்கள். இக்கருத்தரங்க நிகழ்வில் ஆ.இரா. வேங்கடாசலபதி ஆங்கிலத்தில் எழுதி பென்குவின் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள ‘Swadeshi Steam’ நூலை
மேனாள் மேற்கு வங்க ஆளுநர் திரு. கோபாலகிருஷ்ண காந்தி வெளியிட சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் திரு. கோபாலசுவாமி ஐ.ஏ.எஸ். அவர்கள் பெற்றுக்கொண்டார்.

“இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழியாமல், குறையாமல் நிலைத்திருக்கும் தமிழ் மொழியே தமிழ்மக்களின் இடையறாத தொடர்ச்சிக்குப் பெரிதும் காரணமாகும். கற்றோர் கவனத்தைக் கவர்ந்த மற்றொரு தனிச்சிறப்பும் இம்மொழிக்கு உண்டு; இது சமுதாயத்தின் சிறப்பு மொழியாக, மதம், கல்வி போன்ற துறைகளுக்கு மட்டும் பயன்படவில்லை; மக்களின் அன்றாட வாழ்வோடு இரண்டறக் கலந்து ஜீவசக்தியுடன் இன்றும் விளங்குகிறது” என்று பாரீசில்
நடைபெற்ற மூன்றாம் உலகத் தமிழ்மாநாட்டில் ஆதிசேசய்யா பேசியதற்கு இணங்க மேற்சொன்ன நிகழ்வுகள் அனைத்தும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பொன் விழா நிகழ்ச்சிகளில் தமிழ்சார்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் மட்டுமே.

இந்தியா முழுமைக்குமான பொருளியல், சமூக அறிவியல் துறை மாணவர்கள், ஆய்வாளர்கள் பயன்பெறுமாறு நாற்பதுக்கும் மேற்பட்ட கருத்தரங்குகள், பயிலரங்குகளை இந்நிறுவனம் இந்தப் பொன்விழா தருணத்தில் நிகழ்த்தியுள்ளது.Navaseviyal Poruliyal: Buy Navaseviyal Poruliyal by S.Neelakandan at Low Price in India | Flipkart.com

தென்னிந்தியாவில் உள்ள சமூக அறிவியல் ஆய்வு நிறுவனங்களின் இயக்குநர்கள் தத்தமது நிறுவன ஆய்வுப் பணிகள், தொடர்ந்து செய்ய வேண்டிய ஆய்வுப் பணிகள், இப்படிப்பட்ட ஆய்வு நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து செயலாற்ற வேண்டியப் பணிகள் ஆகியவற்றை கலந்துரையாட ஒரு கருத்தரங்கை இந்நிறுவனத்தின் பொறுப்பு இயக்குநர் பேராசிரியர் எல். வெங்கடாசலம் அவர்கள் கடந்த மார்ச் மாத இறுதியில் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வு மூலம் தென்னிந்திய சமூக அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட வழி ஏற்படும் என்றும், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன பொன்விழா இறுதி நிகழ்வான இக்கருத்தரங்கு தென்னிந்தியாவை நீடித்த வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்செல்லும் என்றும் நம்பலாம்.

 

எழுதியவர்

ஆ. அறிவழகன்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *