1.
உனைத் தவிர
வேறு யாரெனக்கு
பெரிய மன்னிப்பு
வழங்கிட முடியும்.
உன்னை விட
வேறு யாருக்கு
நான் பெரிய அநீதி
இழைத்திட முடியும்!!
2.
பழைய கவிதை நோட்டில்
கூச்சத்துடன்
ஏதோ ஒரு பக்கத்தில்
கிறுக்கல்களாய்
ஒளிந்திருக்கும்
முதல் காதல்
கடைசி வரை
கிறுக்கனாகாமல்
பார்த்துக்கொள்கிறது.
3.
ஓயாமல் அவரோடே
ஓடியவன் அவன்!
அவன் வீட்டில் இருக்கிறான்
எனில்
அப்பாவும் வீட்டில்
இருப்பார் என்பது தெளிவு.
ஓடவே முடியாத
அளவு ஓடியபின் காயலான்
கடை போகும் முன்
அவன் மட்டும் ஒரு வாரம்
வீட்டில் இருந்தான்.
அப்பா வெளியிலிருந்தபோதும்
வீட்டில் இருந்தாற்போல் இருந்தது.
அப்பாவையாவது
ரிப்பேர் செய்ய முடியாத அளவு
நலிவதற்கு முன்பே
வீட்டில் இருக்க வைத்திருக்கலாம்.
அப்பா மாடு போல் அல்ல
டிவிஎஸ்50 போல் உழைப்பார்.
அ.சீனிவாசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


போகிற போக்கில் சொல்வது போல் என்பார்களே அப்படியானது இக்கவிதைகள்.
மெல்லத் தைத்தாலும் மிக ஆழம் போகக்கூடியவை.