சிவப்பு வானில் ஒரு நட்சத்திரம் – சுபாஷ் (இந்திய மாணவர் சங்கம்)

 “மெட்ராஸ்” என்ற வடசென்னையை மையப்படுத்திய படத்தில் அன்பு என்ற அரசியல் பிரமுகர் ஏரியாவில் உள்ள சுவரில் தன் கட்சி விளம்பரம் வரைய முயற்சி செய்து எதிர்கட்சியால்  கொல்லப்படுவார். அந்த சுவர் பலரின் உயிரை காவு வாங்கும்  “கொலைகார சுவராகவே” காட்டப்பட்டிருக்கும். அதுபோலவே  கேரள மாநிலம் மகாராஜாஸ்  கல்லூரியின் சுவர்களில் “மதவாதம் தகரட்டும், மனிதநேயம் மலரட்டும்” என்று எழுதியமைக்காக நிஜத்தில் ஒரு அன்பு(அபிமன்யு) வெட்டி படுகொலை செய்யப்பட்டது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்??
 உலகில் தினம் எத்தனையோ மனிதர்கள்  பிறக்கிறார்கள்! அதே எண்ணிக்கையில் இறக்கிறார்கள்!! ஆனால், ஒரு சிலரே மனதில் நிலைக்கிறார்கள். அப்படி என்ன அவர்களுக்கு சிறப்பு சலுகை? அது சிறப்பு சலுகை அல்ல, அவர்களை கொண்டாடுவதும், அவர்களின் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதும் நமது கடமை. அப்படியான மங்கா பேரொளிதான் அபிமன்யு..
abhimanyu-5 | Rashtradeepam
 இந்திய மாணவர் சங்கம் துவங்கிய 1970ஆம் ஆண்டு தொட்டு, இன்றுவரை 270க்கும் மேற்பட்ட மாணவர்களை மண்ணில் விதையாய் விதைத்து இன்று வெட்ட முடியாத விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.. ஆயிரமாயிரம் மாணவர்களின் ரத்தக் குளியலில் மிதந்து, கோடிக்கணக்கான மாணவர்களின் மூச்சுகாற்றினூடே சுவாசித்து யாரும் அசைக்க முடியாத மாணவர் அமைப்பாய்  திகழ்கிறது SFI.. sfi என்பது வேறல்ல நாங்கள் தான் அது. லட்சோப லட்ச அபிமன்யூக்கள்தான் SFI.. அந்த  மாணவர் களத்தில்  மலர்ந்து  மண்ணில் விதையான ஒரு சிவப்பு நட்சத்திரம்தான் அபிமன்யு..
 கேரளா மாநிலம் இடுக்கியில் 1998இல் மனோகரம்-பூவை தம்பதியரின் ஏழைத் தொழிலாளி குடும்பத்தில் மகனாய் பிறந்தான் அபிமன்யு.. பத்தாம் வகுப்பில் தோல்வியை தழுவினாலும் படிப்பில் நாட்டம் குறையவில்லை. அவன் படிப்பை தொடர தம்பிக்காரன் படிப்பை விட்டு வேலைக்கு போகலானான். குடும்ப சுமைகளோடு,புத்தக சுமையையும் ஒருசேர முதுகில் சுமந்தவாறு விருப்ப கல்லூரியான மகாராஜாஸில் இடம் பிடித்தான் அபிமன்யு. பொதுவாகவே கேரளாவின் மகாராஜா கல்லூரி நீண்ட நெடிய வரலாறு உடையது. பல அரசியல் தலைவர்களையும், ஆளுமைகளையும், போராளிகளையும் இந்த நாட்டிற்கு பரிசளித்த ஸ்தலம். குறிப்பாக, மகாராஜா கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் உருவாக்கிய  ஆளுமைகளில் ஒருவர் தான் இன்றைய கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக்.
அத்தகையபாரம்பரியமிக்க கல்லூரியில் இணைந்த அபிமன்யு ஒருபுறம் சகோதரி திருமணம், மறுபுறம் தனக்காக படிப்பை துறந்த சகோதரன் , ஏழைப் பெற்றோர்கள் என சுமைகள் அழுத்தினாலும் , “ஊர் கவலையை நினைத்தவனுக்கு, தன்  கவலை சுடவா செய்யும்” என்பது போல் சமூக ஏற்றத்தாழ்வுகளையும், வர்க்க வேறுபாடுகளையும் எதிர்த்து குரல் கொடுக்கும் கல்லூரி மாணவர் சங்கத்தில்(SFI)  இணைந்தான். படிப்பில் சுமாராகவும்,  பாடுவதில் வித்தகனாகவும், கால்பந்தாட்ட நாயகனாகவும் திகழ்ந்தான் அபிமன்யு. பல ஆண்டுகளாகவே மகாராஜாஸ் கல்லூரி இந்திய மாணவர் சங்கத்தின் கோட்டையாக திகழ்ந்து வந்தது. அந்த கோட்டையில் ஓட்டையிட காங்கிரஸ் மாணவர் சங்கமும்(KSU),  மதவாத அமைப்பான(CFI) யும் துடித்துக்கொண்டிருந்தன. அவ்வப்போது போலி மோதல்களை  மாணவர் மத்தியில் உண்டாக்கி சலசலப்பை ஏற்படுத்தினர். இதற்கெல்லாம் , அஞ்சாத SFIயும்,  அபிமன்யூவும் மதவாதத்திற்கு எதிரான, சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கெதிரான  சமரசமற்ற இயக்கத்தை கட்டிக் கொண்டிருந்தனர்..
CPI(M) all set to hand over keys to a house built for Abhimanyu's ...
மதரீதியாக மாணவர்களை பிரிக்கத்   துடித்த CFIக்கு SFIயின் சமத்துவ சித்தாந்தமும், யாரையும் எளிதில் ஈர்க்கும்  அபிமன்யூவின் கொள்கை பிடிப்பும் மிகுந்த தடையாகவும் அச்சுறுத்தலாகவுமே இருந்தது. சரியான நேரம் பார்த்து கொண்டிருந்த மத அடிப்படைவாதிகள் அபிமன்யு முதலாம் ஆண்டு முடித்து இரண்டாம் ஆண்டு துவக்கத்தில் புதிய மாணவர்களை வரவேற்று கொண்டிருக்கும் சமயத்தில் 15 குண்டர்கள்(அதில் 3 பேர் மட்டுமே மாணவர்கள்)  சேர்ந்து கல்லூரி வாசலிலே சமூக அநீதிக்கு எதிராக ஓயாமல் துடித்துக்கொண்டிருந்த அபிமன்யுவின் இதயத்தை குத்திக் கிழித்தனர். உடனிருந்த  தோழனும் கத்திக்குத்துக்கு ஆளாக்கப்பட்டான். ஆனால், அபிமன்யு என்ற மலரோ   கசங்கி பூமியில் விதையாய் விழுந்தது. அது, “சிவப்பு வானில் மின்னும் இன்னுமொரு நட்சத்திரமாக” இணைந்து கொண்டது. அவன் காட்டிய பாதையில் அவன் உயர்த்திப் பிடித்த கொள்கையை நாமும் தூக்கிப் பிடிப்பதே   மங்காமல்  அச்சுடரை ஒளிரச் செய்யும். அவர்கள் பூக்களை வெட்டலாம். ஆனால், ஒருபோதும் வசந்தம்(புரட்சி)  வருவதைத் தடுக்க முடியாது..