A trek by bike to Sujjilkarai சுஜ்ஜில்கரைக்கு பைக்கில் ஒரு மலைப்பயணம்

“சுஜ்ஜில்கரைக்கு பைக்கில் ஒரு மலைப்பயணம்” : பயணக்கட்டுரை – வே.சங்கர்

பேருந்துப் பயணம், ரயில் பயணம், விமானப்பயணம், நடை பயணம் போல பைக்-பயணம் சற்றே வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்பது எனது கணிப்பு.

எனது பைக் பயணத்திற்கு அடித்தளமாக இருந்த எனது நண்பர் வெள்ளியங்கிரியைப் பற்றிக் கூறவேண்டும். அவர் இல்லையென்றால் இந்த பைக் பயணம் சாத்தியமாகி இருக்காது. அவர் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர். தீவிர வாசிப்பாளர், எழுத்தாளர், சமூக சிந்தனையாளர். யாரிடமும் அதிகம் அதிர்ந்து பேசாதவர். பல நூல்களைப் பற்றிய அறிமுகம் அவரிடமிருந்தே நான் பெற்றிருக்கிறேன்.

ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடியில்  இருக்கும் ஒரு மலை உச்சியில் அமைந்திருக்கிறது சுஜ்ஜில்கரை. ஆம், அதுவொரு மலைக்கிராமம். அந்த ஊருக்கே உரித்தான ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி இருக்கிறது. குறைந்த அளவு மாணவர்களும் அதைவிடக் குறைந்த அளவு ஆசிரியர்களும்  கொண்டதொரு பள்ளிக்கூடம். சமவெளியில் பணியாற்றும் பல ஆசிரியர்களுக்கு அவ்வளவு பரிச்சயம் இருக்க வாய்ப்பில்லை.

அப்படிப்பட்ட மலைக்கிராமப்பள்ளியில் கடந்த ஒரு வருடமாக எனது நண்பர் பணிபுரிந்து வருகிறார். அவரும் அந்தப் பள்ளிக்கூடத்திற்குச் சென்ற நாளில் இருந்து என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த ஊர் மக்களின் வாழ்வியலையும், அந்த மலைக்கிராமத்தின் அழகியலையும் சொல்லிக்கொண்டே இருப்பார். எனக்கும் அந்த மலைக்கிராமத்தை ஒருமுறையாவது பார்த்துவிடவேண்டும் என்ற ஆர்வம் இருந்துகொண்டே இருந்தது. செல்வதற்கான வாய்ப்புக் கிடைக்காமலே இருந்து வந்தது.

ஒரு கட்டத்தில், நீங்கள் எழுதப்போகும்  அடுத்த கதைக்கு இந்த நிலப்பரப்பு ஏதாவது ஒருவகையில் சிறப்பு சேர்க்கும் என்று உசுப்பேத்திவிட்டார். அவர் கொழுத்திப்போட்ட தீப்பொறி ஆழ்மனதிற்குள் கனன்றுகொள்ள ஆரம்பித்தது. சந்தர்ப்பம் வாய்க்கும்போது விடக்கூடாது என்று முடிவுசெய்துகொண்டேன்.

இந்த 2024 லீப் வருட, பிப்ரவரி மாத இறுதியின் ஒரு வெய்யில் நாளில் அவரிடமிருந்து அழைப்பு. ”இந்தவருடம் எங்கள் பள்ளியில் ஐம்பெரும் விழா நடைபெற இருக்கிறது.. அவற்றில் ஒன்றாக எனது பணி நிறைவு பெறும் விழாவும் நடக்கிறது.. கட்டாயம் நீங்கள் கலந்து கொள்ளவேண்டும்”. அவ்வளவுதான் ஃபோனை வைத்துவிட்டார். அவரது அன்புக்கட்டளைக்கு மறுப்பு தெரிவிக்கமுடியவில்லை.

சுஜ்ஜில்கரை மலைக்கிராமத்திற்குச் செல்ல கூகுள் மேப்பில் தேடியதில் ஒவ்வொரு ரூட்டிலும் ஒவ்வொரு தொலைவைக் காட்டியது. ஈரோட்டிலிருந்து சத்தியமங்கலம், சத்தியமங்கலத்திலிருந்து கடம்பூர், பசவனாபுரம் வழியாக இருட்டிபாளையம் அங்கிருந்து சுஜ்ஜில்கரை, எனக் கிட்டத்தட்ட 100 கிலோமீட்டருக்குமேல் காட்டியது.

பேருந்துப்பயணம் நான்கிலிருந்து ஐந்து மணிநேரத்திற்கு மேலாகும் என்றார்கள். தனியொருவனாகக் காரில் பயணம் செய்வது சற்றே ஆடம்பரமாகப் பட்டது. பைக்கில் பயணம் செய்தால் எப்படியிருக்கும் என்று யோசிக்க வைத்தது. தூரம் பெரிதில்லை என்ற போதிலும் மலைப்பகுதியில் தனியொருவனாகப் பைக்கில் பயணம் செய்த அனுபவம் இதுவரை எனக்கு வாய்க்கப்பெறவில்லை.

சரி, துணிந்து பைக்கில் பயணித்துத்தான் பார்ப்போமே என்று முடிவெடுத்து நான் வைத்திருக்கும் யுனிக்கான் பைக்கிற்கு போதுமான அளவு பெட்ரோல் நிரப்பியாயிற்று. டேங்கின் மேல் தட்டிக்கொடுத்தால் போதும் நான் சொன்ன திசையெல்லாம் பறக்கும். அத்தனை நம்பிக்கை அதன் மேல். என் வாழ்வின் எல்லா சோதனைக்கட்டங்களிலும் என்னைச் சுமந்துகொண்டு வீடுவந்து சேர்த்திருக்கிறது.

ஒற்றை ஜோல்னா பை. ஒரு பாட்டில் தண்ணீர். இடையிடையே சர்க்கரையில்லாமல் டீ குடிக்க, சுகர் ஃப்ரீ டேப்லெட், ஒற்றைப் புத்தகம், தேவைப்பட்டால் சிரமம் இல்லாமல் வாசிக்க மூக்குக்கண்ணாடி, இவை மட்டும் போதும் என்றெண்ணிக் கொண்டு  காலை ஒன்பது முப்பது மணிக்குப் பயணத்தைத் தொடங்கிவிட்டேன்.

எஸ்.ரா அவர்களின் நாவலில் வரும் ஒரு புகழ்பெற்ற வரியைப் போல ’காலைநேர வெய்யில் பார்க்கும் இடங்களில் எல்லாம் ஊர்ந்துகொண்டிருந்தது’. சமவெளியில் பயணம் செய்யும் போதெல்லாம் மனதிற்குள் மானசீகமாக ரீங்காரமிடும் ”செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா” என்ற பாடல் வரிகள் பயணத்தை மெருகூட்டியது.

சமவெளிப் பகுதியை (ஈரோட்டிலிருந்து கோபிச்செட்டிபாளையம். கொடிவேரி அணைக்கட்டிலிருந்து கெம்பநாயக்கன் பாளையம் வரை) ஐம்பது அறுபது கிலோமீட்டர் வேகத்தில் கூட்டிக்குறைத்துக் மலை அடிவாரத்தை தொட்டுவிட்டு நேரத்தைப் பார்த்தபோது ஒன்றரை மணிநேரம் கடந்திருந்தது.

இனி மலைப்பயணத்தைத் தொடங்க வேண்டியதுதான். என் கண் முன்னால் ஓங்கி உயர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலை உற்சாகத்தோடு நின்றுகொண்டிருந்தது. மேகத்தை முக்காடாக்கிக் கொண்டு ஒற்றைக் கண்ணால் பார்ப்பதுபோல் இருந்தது. எனக்குள் எழுந்த சிலிர்ப்பை மிடருமிடராக உணர்வதற்குச் சற்று நேரம் பிடித்தது. ஆரம்பத்தில் நான் பயணம் செய்யப்போவது ஒற்றை மலை என்ற எண்ணம்தான் இருந்துகொண்டிருந்தது. அடர்ந்து வளர்ந்த மரங்கள், மோதிச்செல்லும் மெல்லிய காற்று, வளைந்து நெளிந்து செல்லும் தார்ச்சாலை மனதிற்கு இதமளித்தது.

”என்னுள்ளில் எங்கோ, ஏங்கும் கீதம் 

ஏன் கேட்கிறது?….., ஏன் வாட்டுது?….. 

ஆனால், அதுவும் ஆனந்தம்” என்ற பாடலை மனம் முணுமுணுக்கத்தொடங்கியிருந்தது.

 

இன்னும் கொஞ்சம் நேரம் இந்த மலையை இப்படியே பார்த்துக்கொண்டு இருந்தால் ஒரு கவிதை, அல்லது ஒரு சிறுகதை எழுதிவிடலாம் என்று தோன்றியது. இப்பொழுது அதற்கான நேரமல்ல. ஓஷோ சொல்வதைப்போல “காலைப் பொழுதின் கடைசி நட்சத்திரத்தை” அடைவதுதான் ஒரே நோக்கம்.

அதற்கு முன்னதாகக் கொஞ்சம் தண்ணீர், கொஞ்சம் தேநீர் நாக்கிற்கும், கொஞ்சம் இளைப்பாறல் உடலுக்கும் தேவையாக இருந்தது. சுஜ்ஜில்கரைக்குச் செல்லும் வழியில் என்னென்ன ஊர்கள் எல்லாம் இருக்கிறது என்று கேட்டுத் தெரிந்துகொண்டேன். கூடவே யானை பயம் இருக்குமா? என்றும் கேட்டுவைத்தேன்.

நேற்றுகூட அந்தப் பாதையில் ஒரு யானை நடமாடியதாகச் சொல்லி வயிற்றில் புளியைக் கரைத்தார்கள். போதாக்குறைக்கு நான் செல்லும் மலைப்பாதையில் அதிக வாகனங்கள் செல்லவில்லை. அவ்வப்போது என்னைப் போலவே பைக்கில் பயணம் செய்யும் மனிதர்களைப் பார்த்தேன்.

அவர்கள் தனியாகச் செல்லவில்லை. ஜோடியாகச் சென்றார்கள். கொஞ்சம் பொறாமையாகக்கூட இருந்தது. ஆனால், அவர்கள் நான் செல்லும் பாதைக்கு எதிர் திசையில் இருந்து வந்தார்களே ஒழிய என்னைப் போல் மலையேறவில்லை.

ஆரம்பத்தில் மலையேற்றப் பாதை அவ்வளவு செங்குத்தாகச் செல்லவில்லை. ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகள் இல்லை. பெரிய நிம்மதி.. ஆனால், மேலே செல்லச் செல்ல சாலை குறுகிக்கொண்டே சென்றது. எதிரில் ஏதாவது ஒரு கார் வந்தால்கூட முற்றிலும் வேகத்தைக் குறைத்துப், பாதுகாப்பாக ஒதுங்கிச் செல்ல வேண்டியிருந்தது.

மலைச் சரிவுகளில் துருத்திக் கொண்டிருக்கும் பாறைகள் ஒவ்வொன்றும் பின்புறங்களைக் காட்டிக்கொண்டிருக்கும் யானைகளைப் போலவே தெரிந்தது. எல்லாம் மனப்பிரம்மைதான் என்ற போதிலும் லேசான நடுக்கம் உள்ளூர இருந்துகொண்டே இருந்தது.

கடம்பூர் வரை மலையேற்றம் தான். எந்தவித அலட்டலும் இல்லாமல் சென்றுகொண்டே இருந்தது. பைக்கும் மிகச்சாதுவாக அதன் போக்கில் சென்றுகொண்டே இருந்தது. அங்கிருந்து பார்த்த போது மிகப்பெரிய தட்டத்தில் ’ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பச்சை நிற இட்லிகளைப் போலவே இருந்தது’.

சமவெளிகளில் பாதை தவறிச் சென்றால் ஏதாவது ஒரு ஊருக்கு சென்றுவிடலாம். பிறகு, அந்த ஊரிலிருந்து நாம் செல்ல வேண்டிய சரியான ஊருக்கு எப்படியும் ஒரு குறுக்குப் பாதை இருக்கும் திரும்பிச் சென்றுவிடலாம்.

ஆனால், மலைப் பாதை அப்படிப்பட்டதல்ல. கொஞ்சம் கவனக்குறைவாக பாதை மாறிவிட்டாலும் அது வேறு எதாவது ஒரு மலைக்கிராமத்திற்குக் கொண்டு சென்று விடும். ஒரு மலையில் இருந்து மற்றொரு மலைக்குக்  குறுக்குப்பாதையெல்லாம் கிடையாது. திரும்பவும் அதே வழிதான். தொடங்கிய இடத்திற்கே மீண்டும் திரும்பி வந்து, சரியான பாதையில் செல்ல வேண்டும்.

கடம்பூரைத் தாண்டியவுடன் மிகப்பெரிய ஆச்சரியம் நீண்ட நெடிய சமவெளிப் பகுதி. ஒரு சரியான வ்யூ பாயிண்டில் நின்று பார்த்த போதுதான் தெரிந்தது. மலை உச்சியை சென்றடைந்தாகிவிட்டது என்பதை. எந்தப் பகுதியில் இருந்து பார்த்தாலும் மலைகள். சுற்றிலும் மலைகள். மலைகளில் இருக்கும் மரங்களும் புற்களும் பெரும்பாலும் காய்ந்து ஒருவித மஞ்சள் நிறத்தை அப்பிக் கொண்டிருந்தன.  அடர்ந்த காடு என்று சொல்வதற்கில்லை. ஆனாலும், அது காடுதான்.

கீழே இருந்து பார்த்தபோது தெரிந்த பச்சை நிறப் போர்வை இப்பொழுது பழுத்த இலைகளைக் கொண்ட மரங்களாகத் தெரிந்தன. ஓரிரு இடங்களில் விவசாயம் செய்வதாகப்பட்டது. வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் விவசாய நிலத்தை சேதப்படுத்தாமல் இருக்க மின்வேலி அமைத்திருந்தார்கள். எது சரி? எது தவறு? என்று தெரியாமல், எதையெதையோ மனதிற்குள் யோசித்துக் கொண்டே வந்ததில் இருட்டிபாளையம் என்றொரு ஊர் வந்தது. அதைக்கடந்ததும் ஒரு வழிகாட்டிப் பலகை சுஜ்ஜில்கரை என்று எழுதப்பட்டுத் தரையை நோக்கித் தொங்கிக்கொண்டிருந்தது.

எனக்கு முன்னால் ஒரு நேர் பாதை. அதிலிருந்து வலதுபுறம் பிரிந்து செல்லும் மற்றொரு பாதை. கொஞ்சம் தொலைவில் இடதுபுறம் கோவித்துக் கொண்டு செல்லும் வேறொரு பாதை. இதில் எந்தப் பாதையில் செல்வது?

குழப்பமாகிவிட்டது. சற்று தொலைவில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவரிடம் பைக்கைவிட்டு இறங்கிப் போய்க் கேட்கவேண்டியிருந்தது. ”இதோ, இந்த புரட்டிப்போட்டிருக்கிற ரோட்டிலேயே போங்க”.  ”ஆம், அவர் அப்படித்தான் சொன்னார்”. திரும்பிப்பார்த்தேன். அவர் சொன்னது சரிதான். முழுரோடும் புரட்டித்தான் போடப்பட்டிருந்தது.

சாலையைக் கடும் கோபத்தில் கொத்தி ஒரு வழி செய்திருந்தார்கள். புதிதாக சாலை போடப்போகிறார்கள் போலும். எப்போது பறித்துப் போட்டார்கள்? என்று தெரியவில்லை. எப்போது இந்தப் பணி முடிவடையும்? என்றும் தெரியவில்லை. எத்தனை கிலோமீட்டருக்கு இப்படியே புரட்டிப்போடப்பட்ட ஜல்லிக்கற்களாக இருக்கும்? என்றும் தெரியவில்லை.

”இந்த வழியைத் தவிற வேறு வழி இல்லிங்களா?” இது நான். ”ம்ஹூம்”. உதட்டைப் பிதுக்கினார். சுருக்கம் நிறைந்த அவரது முகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்திருந்த அவரது தாடி என்னை வசீகரித்தது. “எல்லோரும் இந்த ரோட்டிலதான் போறாங்க. நீங்களும் போங்க” என்றார் மிக நம்பிக்கையோடு.

இவ்வளவு தூரம் என்னைச் சுமந்துவந்த என் பைக்கைப் பார்த்தேன். “டேய், என்ன சொல்றே? உன்னால் முடியலேன்னா வேற யாரால முடியும்?” என்றபடி  பார்வையை ஓட்டினேன். ஏற்கெனவே புழுதி படிந்திருந்தான் என் மனமுவந்த யுனிகான். மற்றபடி எந்த சலனமும் இல்லை அதனிடமிருந்து.

வழியெல்லாம் ”இது யானை நடமாடும் பகுதி. கவனமாகச் செல்லவும்” என்ற பெயர்ப்பலகைகள் பயமுறுத்திக் கொண்டே இருந்தன. சாலையின் இருபுறங்களிலும் முறித்துத்தள்ளிய மூங்கில்கள் கொத்துக் கொத்தாய்க் காய்ந்துபோய் தொங்கிக் கொண்டிருந்தன. எல்லாம் யானைகள் செய்த மாயம். ஒருவேளை நான் நின்று கொண்டிருப்பதைக்கூட மறைந்திருந்து யானைகளோ அல்லது மற்ற மிருகங்களோ பார்த்துக் கொண்டிருக்கலாம். யார் கண்டது?

பத்து கிலோ மீட்டர் வேகத்தில்கூடச் செல்ல முடியவில்லை. கொஞ்சம் தவறினாலும் கை, கால்களில் சிராய்ப்பு இல்லாமல் தப்ப முடியாது. பிரேக் பிடித்தால் நான் எதிர்பார்த்த இடத்தில் நிற்காமல் வேறொரு இடத்திற்குச் சென்று நின்றது. அல்லது சரளைக் கற்களில் சறுக்கிக்கொண்டே சென்றது.

உள்ளங்கைகள் வேர்த்து வேர்த்துக் கொட்டியது. வெளியில் தைரியசாலியைப் போலக் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருக்கும் பயம் வாய்வழியே வெளியே வந்துவிடும் போல் இருந்தது. பயணம் நீண்டுகொண்டே இருந்தது.

ஏழு கிலோ மீட்டர்தான். ஆனால், எழுபது கிலோ மீட்டரைக் கடப்பது போல் இருந்தது. எக்கச்சக்க நேரம் பிடித்தது. இஞ்ச் இஞ்சாக நகர வேண்டியிருந்தது. ஒரு கிலோ மீட்டருக்கு ஒருத்தரைத் தான் எதிரே பார்க்க முடிந்தது. அவரும் அதே போல் சாகசம் செய்துகொண்டே தான் சென்றார். ஆனால், அவர் சாலையின் நெளிவு சுழிவுக்கு ஏற்ப செல்வதாகப் பட்டது. தினசரி வந்து செல்லும் பாதையாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

தேர்த்திருவிழா சமயங்களில் மரணக்கிணற்றில் வாகனம் ஓட்டி “கரணம் தப்பினால் மரணம்” என்று சொல்லிச் சிலிர்க்க வைப்பார்களே அதற்கு ஒப்பான பயணமாக இருந்தது இந்த ஏழு கிலோ மீட்டர் பயணம். எனக்கு வழிகாட்ட ஒற்றைப் பறவை மட்டும் கூடவே வந்துவிட்டு அதன் இடத்திற்குப் பறந்து சென்றுவிட்டது.

புரட்டிப்போடப்பட்ட சாலை ஒரு வழியாக முடிவடைந்த இடத்தில் இருந்து மேலும் இரண்டு பாதைகள் பிரிந்தன.. எந்தவிதப் பெயர் பலகையும் இல்லை. மீண்டும் மனிதர்களைத் தேட வேண்டியிருந்தது. வழியில் ஒரு டீக்கடையோ அல்லது நிழல்கூடமோ கிடையாது. ஒரு மரத்தடியில் சாவகாசமாக அமர்ந்து இருந்த இருவர் என்னை விநோதமாகப் பார்த்தார்கள். பிறகென்ன, எப்போதும் போல் “சுஜிஜ்ல்கரைக்கு எப்படிப் போவது?” என்ற கேள்வியைத்தான் கேட்டுவைத்தேன்.

”நான் வழிகாட்டுகிறேன். ஆனால், போகிற வழியில் என் மகளின் வீடு இருக்கு, அங்கே இறங்கிக்கிறேன்” என்ற நிபந்தனையோடு என் வாகனத்தின் பின்னால் ஏறி அமர்ந்துகொண்டார் ஒருவர்.

வழிநெடுக யானை போட்டுச் சென்ற சாணத்தைச் சுட்டிக்காட்டிக் கொண்டே வந்தார். ”இந்த நேரத்திற்கெல்லாம் வராது. பொழுதோடத்தான் வரும்” என்று ஆறுதல் வேறு சொன்னார். ஹெல்மெட் போட்ட தலையை ஆட்டிவைப்பதைத் தவிற வேறு வழி?

”இங்கே நிறுத்துங்க” என்று நடு வனாந்தரத்தில் இறங்கிக்கொண்டார். என்னை ஒரு சுற்று சுற்றி வந்து எனது வலது கையைத் தொட்டு ” இந்தக் கைப்பக்கம் திரும்பாத. சாமி”, எனது இடது கையைத் தொட்டு ”இந்தக் கைப்பக்கம் போ. ஒரு ஊர் வரும். அங்கே கேட்டா சொல்லுவாங்க” என்றபடி ஒரு ஒற்றையடிப் பாதையில் சென்று மறைந்துவிட்டார். கொஞ்ச தூரம் துணைக்கு வந்த ஒரு மனிதரும் சென்றுவிட்டார் என்ற கவலை எனக்கு.

மிகப்பெரிய பெருமூச்சு விட்டுக்கொண்டேன். அவர் சொன்ன படியே சற்றுதூரம் சென்றவுடன் வலதுபக்கம் பிரிந்த ரோட்டில் செல்லாமல், இடதுபக்கம் சென்ற திசையில் என் பைக்கை செலுத்தினேன். சோளம் விளைந்து அறுவடை செய்யப்பட்ட நிலப்பரப்பு கண்முன்னால் பரந்து விரிந்து கிடந்தது. ஒற்றைச் சாலை தார்ச்சாலைதான் என்று அடையாளம் தெரியாதபடி கரடுமுரடாக நீண்டு சென்றது. வழிநெடுக கொத்துக் கொத்தாய்ப் பூத்திருந்த சிவப்பு நிறப்பூக்கள் என்னைப் பார்த்துச் சிரித்தன.

”கண்டேன் எங்கும் பூ மகள் நாட்டியம்

காண்பதெல்லாம்

அதிசயம், ஆனந்தம்

காற்றினிலே வரும் கீதம்” 

என்ற பாடல் என் மனதிற்குள் ரீங்காரமிடத்தொடங்கியது. குலுங்கிக் குலுங்கிச் சென்று கொண்டிருந்தது பைக். சாலை ஓரத்தில் நெருக்கமாக நான்கைந்து வீடுகளைப் பார்த்ததும் அப்பாடா! என்றிருந்தது.  வீடுகளுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த மனிதர்களிடம் கேட்டதும் சுட்டிக்காட்டிய திசையில் ஒரு பள்ளத்தில் நான் தேடிவந்த அந்தப் பள்ளிக்கூடம் தென்பட்டது.

வாசலிலேயே நான் சந்திக்கவேண்டிய நண்பர் எனக்காக காத்திருந்தார். வீட்டில் இருந்து கிளம்பி சற்றேரக்குறைய மூணேமுக்கால் மணிநேரம் ஆகியிருந்தது.  பைக் பயணம் ஒரு சாகசப்பயணம்தான் என்பதை ஒருபோதும் மறுப்பதற்கில்லை. பள்ளி வளாகத்தில் விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது.

பள்ளிக்கூட விழாவிற்கு ஒரு ஊரே திரண்டு வந்திருந்தது. காலையில் இருந்து விழா நடப்பதாகச் சொன்னார்கள். நான் பள்ளிக்கூடத்து வாயிலுக்குள் நுழைந்தபோது நான்கைந்து சிறுமிகள் ஏதோ ஒருபாட்டுக்குக் குழுவாக ஆடிக்கொண்டிருந்தார்கள். அத்தனை நேர்த்தி.

ஊர்த்திருவிழாவைப் போல பள்ளிக்கூட விழாவைக் கொண்டாடும் மக்கள். வருகிற போகிற பெரும்பாலான மக்களுக்கு சால்வை போத்தி மரியாதை. மதிய உணவு. அழகழகான உடை அலங்காரத்துடன் அடுத்த பாடலுக்கு மேடையில் ஆடக் காத்திருக்கும் சிறுமிகள். யார் என்றே தெரியாதவர்கள் கூட கைகூப்பி வரவேற்கும் பாங்கு அவர்களிடம் கற்றுக்கொள்ள ஏராளமாக இருந்தது.

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தபோதே அருகில் இருந்தவர் சொன்னார். ”இன்றைக்கே ஊருக்குத் திரும்புவதாக இருந்தால் நாலு மணிக்கு முன்னாடியே இங்கிருந்து கிளம்பிடுங்க. பைக்கில் வந்திருக்கீங்க. யானை பயம் அதிகம்”. சற்றே பகீரென்றது. ஆனாலும் மனம் ஆறுதல் சொன்னது “இப்போது வந்த பைக் சாகசத்தைவிடவா பயம் நிறைந்தது?”

”சரி, ஊருக்குத் திரும்பிச் செல்ல இந்த சாலைக்குப் பதிலாக வேறு சாலை இல்லையா?” என்றேன். ”இருக்கிறது. ஆனால் அது இன்னும் கொஞ்சம் திக் ஃபாரஸ்ட்டுக்குள்ள போய்த் திரும்பனும். இருபது கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்லனும். பைக்கில் தனியாகச் செல்வது அவ்வளவு நல்லதல்ல” என்றார் அவர்.

எனது முடிவை அப்போதே மாற்றிக்கொண்டேன். ”எல்லோருக்கும் கரணம் தப்பினால் தான் மரணம். ஆனால், எனக்கோ மரணம் தப்பினால் கரணம். அவ்வளவுதான்”

அழைத்திருந்த நண்பரின் விருந்தோம்பல். புத்தகப் பறிமாற்றம். சால்வை அணிவிப்பு. பரஸ்பர விசாரிப்பு என எல்லாம் முடிந்த பிறகு சுஜ்ஜில்கரைக்குப் பிரியாவிடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அதே பைக், அதே பாதை, அதே பயணம், அதே பதை பதைப்பு. அதே மாதிரி மனதிற்குள் ரீங்காரமிடும் பாடல். ஆனால், ஒரே மாற்றம்,  மலைப்பயணம் மேலிருந்து கீழாகத் தொடங்குகிறது அவ்வளவுதான். சுஜ்ஜில்கரையை விட்டு அரைக்கிலோ மீட்டர் கூட வந்திருக்க மாட்டேன் ஆளரவமற்ற ரோட்டின் எதிரில் வந்த நான்கு சக்கர வாகனம் (டெம்போ) என்மேல் மோதுவது போல் வந்ததும், இதயம் நொடியில் தொண்டையைத் தொட்டுவிட்டுக் கீழே இறங்கியது. என் பைக் சடாரென்று ரோட்டைவிட்டு இறங்கி சரளைக் கற்களில் சறுக்கிக் கொண்டு போய் நின்றது.. வண்டியைக் கட்டுபடுத்துவதே பெரும்பாடாகிவிட்டது.

ஓட்டிவந்த டிரைவர் கத்தினார். “அண்ணே, அந்தத் திருப்பத்திலே யானை நிக்குது. எதாவது வாகனம் வந்த பிறகு சேர்ந்து போங்க. தனியாப் போகாதீங்க”. தற்போதுதான் யானையிடமிருந்து தப்பிவந்த பதற்றம் அவரது குரலில் தெரிந்தது.

எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பதற்றம் நீங்கும் வரை ரோட்டிலேயே நின்று கொண்டிருந்தேன். பத்தடி தூரத்தில் அந்த சாலை திரும்புகிறது. சாலை வளைவில் என்ன இருக்கிறது? எத்தனை யானைகள் நிற்கின்றன  என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டுமானால் அருகில் நெருங்கிச் சென்றால்தான் தெரியும்.

நீண்ட நேரம் நின்று கொண்டே இருந்தேன். எனக்குப் பின்னாலும் யாரும் வருவதாகத் தெரியவில்லை. எனக்கு எதிரிலும் யாரும் வரவில்லை. தைரியத்தை? வரவழைத்துக் கொண்டு பைக்கை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தினேன். முதல் வளைவில் எந்த யானையும் தட்டுப்படவில்லை. அடுத்த வளைவு, அடுத்த வளைவு என்று எதிர்பார்ப்புக் கூடிக்கொண்டே சென்றது.

யானைகளுக்கு என்னைப் பார்க்க விருப்பம் இல்லை போலும். மனதிற்குள் பயமாக இருந்த போதிலும், யானையைப் பார்க்காமல் போகிறோமே என்ற வருத்தம் இருக்கவே செய்தது. ஒருவேளை யானைகளுக்குப் பதிலாக வேறு ஏதாவது வனவிலங்குகள், புலி, கரடி, சிறுத்தை, அட அட்லீஸ்ட் ஒரு குள்ளநரி அல்லது காட்டெருமை தட்டுப்படுமா? என்று கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்த்துக்கொண்டே வந்தேன். நான் இந்த ஊருக்கு வருவது அந்த விலங்குகளுக்கு ஏற்கெனவே தெரிந்துவிட்டதோ? என்னவோ என்று எண்ணிக்கொண்டேன். இருந்தாலும் எனக்கு அதிகப்பிரசிங்கித்தனம் அதிகம்தான் இல்லையா?

மீண்டும் சோதனை அதே புரட்டிப் போடப்பட்ட ஏழு கிலோமீட்டர் தூரச் சாலை. சாலை தொடங்கும் இடத்தில் இரண்டு சிறுமிகள். அநேகமாக இரண்டாம் வகுப்பு அல்லது மூன்றாம் வகுப்பு படிப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆண்கள் அணியும் பச்சைநிறக் கட்டம்போட்ட  சட்டையும், அதே பச்சைநிறக் குட்டைப்பாவடையும் அணிந்திருந்தார்கள்.

அவர்களைப் பார்த்ததும் நான் சிரிப்பதற்கு முன்னதாக அவர்கள் என்னைப் பார்த்து சினேகமாகச் சிரித்தார்கள். “வீடு எங்கே? ரெண்டு பேரும் எங்கே போகனும்?” போகும் வழியாக இருந்தால் துணைக்கு இந்தச் சிறுமிகளிடமாவது பேசிக்கொண்டே செல்லலாம் என்பது என் எண்ணம்.

ஆனால், அவர்களது மொழி எனக்குப் புரியவில்லை. ஒருவேளை நான் நிற்பது கர்நாடகாவின் எல்லைப் பகுதி என்பதால், கன்னடமாக இருக்குமோ என்றெண்ணி, மீண்டும் அவர்களிடம் “எங்கே போறீங்க?” என்று சைகை மொழியில் கேட்ட சிறிது நேரத்திற்குப் பிறகுதான் அவர்கள் பேசுவது ஹிந்தியை ஒத்த மொழி என்று தெரியவந்தது.

மீண்டும் முகத்தைக் கோணல் மாணலாக்கி, கைகளால் அபிநயம் பிடித்து எந்த மாநிலம் என்று புரியவைத்தேன். ”கொல்கத்தா” என்றார்கள். ”கொல்கத்தாவா, கொல்கத்தா எங்கே இருக்கு? தமிழ்நாடு எங்கே இருக்கு? அதுவும் சமவெளி மனிதர்களே வந்து போகச் சிரமப்படும் இந்த ஊரில்  என்ன செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வம்தான். ஆனால் எனக்குத்தான் பெங்காலி மொழி தெரியாதே என்ன செய்ய?”

இருந்தாலும் மனம் தளராமல் ”இங்கே என்ன செய்யறீங்க?” என்றேன். “திம்ரிக்கா, திம்ரிக்கா” என்றார்கள் தொலைதூராத்தைக் காட்டி. அங்கே சிமெண்ட் சீட் வீடு மற்றும் பேனர் துணிகட்டிய பந்தல் தெரிந்தது. ’திம்ரிக்கா’ என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை அதைவிட, நான் பேசுவது அவர்களுக்குச் சுத்தமாகப் புரியவில்லை என்பது கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. அவர்கள் அந்த வீட்டை நோக்கி பள்ளத்தில் நடக்கத் தொடங்கினார்கள். கைகளை ஆட்டி ‘டாட்டா’ காட்டிவிட்டு எதிரில் இருந்த சோதனையான சாலையை ஒரு பெருமூச்சோடு பார்த்தேன்.

வேறுவழியில்லை மீண்டும் சாகசப்பயணத்தைத் தொடரவேண்டியதுதான். மனம் துவளாமல் தொடர்ந்தேன் இரண்டு இடத்தில் பைக் ஆஃப் ஆனது. முன்சக்கரம் சறுக்கி வண்டியைக் கீழே கவிழ்க்கப்பார்த்தது. பின்புற ஸ்பிரேக்கெட் செயின் சலசலத்தது. இவ்வளவு நடந்தும் சாலையில் ஒரு மனிதனையும் பார்க்கவில்லை. டயர் பஞ்சர் ஆனாலோ, வண்டி பழுதானாலோ என்னாவது? என்ற கவலை என்னைத் தொற்றிக்கொண்டது.

ஒரு கட்டத்தில் என் பைக்கை நிறுத்தித் தட்டிக்கொடுத்தேன். அது எனக்கு நானே தன்னம்பிக்கையை வளர்த்திக் கொள்வதற்கான செயலாகப்பட்டது. சைடு ஸ்டேண்ட் போட்ட பைக்கில் சற்றே சாய்ந்து நின்றுகொண்டு அந்தக் கரடுமுரடான சாலையை உற்றுப்பார்த்தேன். இந்த வழியில்தானே இந்த ஊர் மக்கள் எதுவொன்றுக்கும் ஏறி இறங்குகிறார்கள்? எத்தனை சவால்களைத் தினசரி சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்? ஒரு நாள் வந்ததற்கே இப்படியென்றால்? இந்த ஊர் குழந்தைகளின் படிப்பு? அவர்களது எதிர்காலம் எப்படி? என்ற சிந்தனை ஓடிஓடி மறைந்தது.

வெய்யிலின் தாக்கம் சற்றே குறைந்திருந்தது. மீண்டும் நான் பார்த்த அதே குருவி எனக்கு வழிகாட்ட என் முன்னால் சென்றது. என் கவனம் முழுவதும் சாலையில் விரவிக்கிடந்த ஜல்லிக்கற்களின் மீதே இருந்தது. சாலையின் முடிவில் காட்டுச் செடியில் பூத்திருந்த மஞ்சள் நிறப் பூ என் மனதைக் கவர்ந்தது. அதைப் பறிக்காமல் கேமரா ஃபோனில் படம் எடுத்துக் கொண்டேன்.

மலையேறும் போது ஒருவித அனுபவம் என்றால் இறங்கும் போது வேறுவிதமான அனுபவமாக இருந்தது. திடீரென எதிரில் வந்த பேருந்திற்கு வழிகொடுக்க பிரேக் பிடித்தால், பின் சக்கரம் மட்டும் வழுக்கிக் கொண்டே சென்றது. க்ளட்ச்சை விட்டு விட்டு பிரேக்கைப் பிடித்திருக்க வேண்டும் என்ற அறிவு அப்போது எட்டவில்லை.  அடுத்த திருப்பத்தில் சமாளித்துக் கொண்டேன். என்னதான் எச்சரிக்கையாக பிரேக் பிடித்தாலும் பைக் என் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.

கொண்டு வந்த குடிநீர் முற்றிலும் தீர்ந்துவிட்டது. மழைக்காலங்களில் பாறை இடுக்குகளில் வழிந்தோடிய தண்ணீர்த் தாரையைத் தவிர வேறொன்றையும் காணோம். மிருகங்களுக்கான இயற்கையான நீர்த்தேக்கங்கள் ஏதேனும் இருக்குமா? என்று கொஞ்சம் சிரமம் எடுத்துத் தேடிப்பார்த்தேன்.  சற்று தொலைவில் இருந்தது. ஆனால், நெருங்கிச் செல்ல பயமாக இருந்தது. எந்த நேரத்தில் எந்த விலங்கு எங்கிருந்து தாக்குமோ என்ற பயம்தான் எனக்குள் மேலிட்டு இருந்தது.

போகிற வழியில் ஏதாவது ஒரு டீக்கடை இருந்தால் பாட்டில் தண்ணீர் வாங்கி தாகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது. கூடவே, மனிதர்களான நாம் தான் பாட்டில் தண்ணீரைத் தேடி அலைகிறோம் விலங்குகளும் பறவைகளும் என்ன செய்யும்? பாவம் என்ற அங்கலாய்ப்பும் வந்துபோனது. ஒரு வளைவில் இருந்து பார்த்தபோது பெரும்பள்ளம் அணை மிகக்குறைந்த தண்ணீருடன் காய்ந்துபோய் தெரிந்தது

மலையில் இருந்து சமவெளிச் சாலையை அடைந்ததும் ஏறி இறங்கிய மலையை அண்ணாந்து பார்த்தேன். என்ன கம்பீரமாக நிற்கின்றன மலைகள்?. செல்லும் போது வெட்கப்பட்டு முக்காடாய்ப் போட்டிருந்த மேகக்கூட்டங்களைக் காணவில்லை. மீசையை முறுக்கிக் கொண்டு மிரட்டலாய் நிற்கும் மலைக்கு அருகில் உதடு பிரியாமல் சிரிக்கும் மற்றொரு மலைப் பெண் என்னை மயக்கவே செய்தாள்.

தற்பொழுது ஏராளமான வாகனங்கள் முன்னும் பின்னும் சென்று கொண்டே இருந்தன. ஆனால், இரைச்சலே இல்லாமல் எல்லா வாகனங்களும் செல்வதைப் போல இருந்தது. பிறகுதான் தெரிந்தது மலையேறி இறங்கியதில் என் காதுகள் இரண்டும் அடைத்துக் கொண்டிருக்கிறது என்பது. ஹெல்மெட்டைக் கழற்றி இரண்டுமுறை வாயை அகலமாகத் திறந்து கொட்டாவி விட்டுக்கொண்டேன். காதுகளுக்குள் டப் என்ற சத்தத்துடன் காதுகள் விழித்துக் கொண்டன. இரைச்சல் கேட்கத் தொடங்கியது.

கொடிவேரி அணைக்கட்டிலிருந்து பிரிந்து சென்ற ஒரு கால்வாயில் இறங்கி முகம், கை, கால்களை ஈரமாக்கிக்கொண்டேன். மலையேறி இறங்கிய அலுப்பு சற்றே குறைந்திருந்தது. சற்று தொலைவில் இருந்த டீக்கடையில் ஆவிபறக்கும் சூடான டீயை அருந்திக்கொண்டே தொலைவில் இருள்கவியத் தொடங்கியிருந்த மலைகளைப் பார்த்தேன். மீண்டும் உன்னைக் காணும் சந்தர்ப்பம் எப்போது வாய்க்கப்பெறுமோ? அப்படியே வாய்க்கப்பெற்றாலும் பைக்கில் பயணம் செய்யும் சந்தர்ப்பம் கிடைக்குமா? என்ற சந்தேகம் மனதிற்குள் வந்தது. கண்களில் நீர்த்துளி திரண்டு பார்வையை மறைத்தது.

மங்கிய வெளிச்சத்தில் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது இன்னும் வீடு சென்றடைய ஒரு மணி நேரத்திற்கு மேலாகும். அடுத்தடுத்த திருப்பங்களில் நான் கண்ட, எதிர்கொண்ட விசயங்களை அசைபோட்டுக்கொண்டே வீடு வந்தடைந்ததில் எனது பின்புறங்கள் சூடான தோசைக்கல்லின் மீது தெரியாமல் அமர்ந்து எழுந்ததைப் போல எரிச்சலாக இருந்ததை உணர்ந்தேன். பைக் பயணம் என்றால் அப்படி இப்படி இருக்கத்தானே செய்யும்? அதுவும்கூட ஒரு சுகானுபவம்தான்.

எழுதியவர் 

வே.சங்கர்


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 6 Comments

6 Comments

  1. Gobinath

    Would have loved to be your companion on this trip but still your words made me have that experience

    • Vijayapoopathi.A

      எனது கனவு நினைவு ஆனது போன்ற ஒரு நிறைவு..ஆகா. மலைப் பாதைகளில் அனாயசமாக எனது மகிழ்வுந்தை இயக்கி இருக்கிறேன். இருந்தாலும் உங்களுடைய சாகச பயணம்
      அருமை நண்பரே. என்னையும் அறியாமல் எனது பயண நினைவுகளை நினைவு படுத்தி விட்டீர்கள்..மீண்டும் ஒரு பயணம் செல்ல உந்துதலை ஏற்படுத்தி விட்டது.

  2. Kalabharathi

    Super narration sir. Took us to the hills through your narration sir.

  3. A. விஜயபூபதி

    எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியது போன்ற ஒரு உணர்வு. நானே பயணம் செய்தது போன்று இருந்தது.சென்ற பாதை கரடு முரடாக இருந்தும் மனம் தவறாமல் சென்ற உங்கள் பயணம் விக்கிரமாதித்தன் மனம் தளராமல் செய்த செயல் போன்றதொரு நேர்த்தி. மிக நேர்த்தியான நடை. இடை இடையே கற்பனை குதிரையை தட்டி விட்டீர்கள்.எனது பயண நினைவு .மிக அருமை நண்பரே..வாழ்த்துகள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *