அ. உமர் பாரூக் எழுதிய ‘மிர்சாத்தின் சிறிய புத்தகம்’ நாவல் | A.Umar Farook's Mirzathin Siriya Puthagam Tamil Novel Book Review | கு. ஹேமலதா | www.bookday.in

அ. உமர் பாரூக் எழுதிய “மிர்சாத்தின் சிறிய புத்தகம்” நாவல் – நூல் அறிமுகம்

‘மிர்சாத்தின் சிறிய புத்தகம்’.. நூலின் தலைப்பை வாசித்தவுடனே கவிஞர் புவியரசு மொழிபெயர்த்த மிகெய்ல் நைமியின் ‘மிர்தாதின் புத்தகம்’ தான் முதலில் நினைவில் வந்தது. அதன் தொடர்ச்சியாக இந்நூல் இருக்குமா என்ற கேள்வியோடு வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் எந்த அனுமானமோ, முன் முடிவும் இல்லாமல் வாசிப்பது தான் சிறந்தது எனக் கொஞ்ச நேர வாசிப்பிலேயே புரிந்து கொள்ள முடிந்தது.

நாவல் என்ற வகைமை என்பதால் ஒரு முழு நீள கதையை எதிர்பார்த்து வாசிக்கத் துவங்கினேன். ஆனால் மூன்று வெவ்வேறு பகுதிகளாக பகுத்து இருந்தது இந்நூல். ஒவ்வொரு பகுதியிலும் பெரும்பாலும் தத்துவ தர்க்க உரையாடல்களை கொண்டதாக உள்ளது.

பெத்தார் கிராமத்தில் இருந்து ஆரம்பமாகிறது கதை. பசுமையை இழந்து தணலாக எரியும் கிராமத்தை மீட்க நினைக்கும் மீருவின் தாத்தா சொல் கேட்டு தன் நண்பர்களுடன் கர்து மலையை நோக்கி பயணம் செல்ல திட்டமிடுகிறான் மீரு. எதை நோக்கிய பயணம் என்ற கேள்விக்கு, மீருவின் தாத்தா, ‘மிர்சாத்தின் கதை ‘ யை சொல்லத் துவங்குகிறார். மிர்சாத் யார்.. அவரது பிறப்பு முதல் மடாலயத்தில் துறவியாக வந்து சேர்ந்தது வரை அவரை பற்றிய வரலாற்றை மீருவிற்கு எடுத்துக் கூறுகிறார் தாத்தா. தாத்தாவின் சொல்லிற்கு மதிப்பளிக்கும் வகையில் மீரு மலையின் உச்சியை நோக்கி புறப்படுகிறான். அங்கு அவனுக்கு என்ன கிடைத்தது என்பது மற்ற இரண்டு பகுதிகளாக விரிகிறது.

கர்து மலையில் இருக்கும் பசுமை ஏன் அதன் அடிவாரத்தில் இருக்கும் பெத்தார் கிராமத்தில் இல்லை என்ற மீருவின் சந்தேகத்திற்கு தாத்தாவின் பதில்கள் மீருவிற்கு மட்டுமல்ல நமக்கான பாடமாக இருக்கிறது. மனித மனங்களின் இருண்மையும், மனிதர்களிடம் குறைந்துள்ள உதவும் மனப்பான்மையும், பகிர்தல் குணமும் முழுதாக அற்று போனதன் விளைவே இதற்கான காரணமாக தாத்தா சொன்னது மீருவிற்கு உண்மையாக பட்டது.

“இயற்கை எதையும் கொல்வதில்லை.. சில காலம் தன்னை உள்ளிழுத்துக் கொள்கிறது..” என்று இயற்கையின் சுழற்சியில் இந்த புவி எப்படி பயணிக்கிறது என்பதை புரிந்த மீருவிற்கு, வெம்மையில் காய்ந்து கிடக்கும் தன் கிராமமும் துளிர் விடும் என்ற நம்பிக்கை பிறந்தது. அவனது மலையேற்ற பயணம் பெத்தார் கிராம மக்களுக்கானது மட்டுமல்ல நம் உள்ளத்து பூட்டை திறக்கும் சாவிகளுக்காகவும் தான் என இறுதியில் புரிகிறது.

மிர்சாத், அவருடைய சீடர் அசேராவுடன் பேசிய உரையாடலின் தொகுப்பு தான் இந்நூலின் முக்கியமான பகுதியாக உள்ளது. அசேராவின் ஒவ்வொரு கேள்வியும் நம் வாழ்வில் நாமும் கடந்து வந்திருப்போம். பல குழப்பமான பதில்களால் தடுமாற்றத்துடன் கடந்து வந்த கேள்விகளுக்கு எதார்த்தமான ஆழ்ந்த விளக்கத்தை கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.

ஆன்மீகத் தளங்களில் அதிகமாக பேசப்படும் சொல் ‘ஆன்மா’. இறை நம்பிக்கைக்கு மேலாக ஆன்மாவின் தாத்பரியங்கள் பற்றி பேசுபவர்கள் அதிகம். ‘ஆன்மா தூய்மையானது, இறைவனை அடைவதே அதன் இலக்கு’ போன்ற உயரிய பார்வையில் தத்துவங்களை உதிர்ப்பவர்கள் இந்நூலை வாசிக்க சிரமப்படுவார்கள். ‘ஆன்மா’ சல்லிசல்லியாக நொறுக்கப்பட்டிருக்கிறது. நாம் கற்பனை செய்து வைத்திருக்கும் ஆன்மாவின் வேலைகள் எதுவும் அது செய்வது கிடையாது. மனம் மட்டுமே இங்கு பிரதானம் என அழுத்திச் சொல்கிறார். அதுபோல் பிரார்த்தனை, சரணாகதி, விதி, மறுபிறப்பு என நாம் இறை நிலை தன்மையில் இருந்து புரிந்து கொண்ட விஷயங்களை வேறு கோணங்களில் நமக்கு புரிய வைக்கிறார். தத்துவங்களுக்கு அப்பாற்பட்டு நடைமுறை எதார்த்தத்தோடு ஒப்பிட்டு விளக்குவது நமக்கு மேலும் புரிதலை கொடுக்கிறது. இவ்வளவு எளிமையாக புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை ஏன் நாம் சிக்கலாக்கி தத்துவ குழப்பங்களில் சிக்கிக் கொள்கிறோம். தத்துவங்கள் வெறும் சொற்களாக இருக்கும் பொழுது உண்மை புலப்பட மறுக்கிறது என்றும் புரிகிறது.

‘மனம் மட்டுமே பேரரசி’ என ஆசிரியர் ஒவ்வொரு உரையாடலிலும் கூறுகிறார். மனநலம், உடல் நலம், நமது செயல் திறன் என அனைத்துக்கும் மனம் மட்டுமே காரணம் என்றும், உடல், உயிரை விட மனதின் பணியே பிரதானம் என்றும் புரிகிறது.

சொர்க்கம், நரகம் பற்றிய பார்வை ‘அட ஆமால்ல’ போட வைக்கிறது. நேர்மறை, எதிர்மறை எண்ணங்களை பற்றிய விளக்கமும் புதுமை. எண்ணங்கள் எங்கிருந்து வருகிறது..எது சிந்தனையை தூண்டுகிறது.. எது செயலாக மாறுகிறது, நம் வாழ்வின் அடுத்தடுத்த நகர்வுகள் அனைத்தும் நம் செயல்களே தீர்மானிக்கிறது என்றும் செயலின் வலிமையை வலியுறுத்துகிறார் ஆசிரியர்.

“சாத்தியங்கள் அனைத்தும் சிந்தனையின் வழியாகத் தொடங்கும். செயல்களிலேயே அது முடிவு பெறும் ”

ஏனோ மிர்சாத்திற்கு பிரார்த்தனை, சரணாகதி போன்ற வார்த்தைகள் பிடிக்கவில்லை போலும். ஒரு மனிதன் துன்பப்படுகிற போதும், கதறும் போதும் கேட்பாரற்று கிடக்கும் கடவுளை, எந்த பிரார்த்தனை எழுப்பி விடும் என்ற கோபம் மிர்சாத்தை போல நமக்கும் எழுகிறது. பிரார்த்தனை நமது பயணத்திற்க்கு தடையாகவும், நமக்கு பலவீனத்தையும் கொடுக்கிறது என்பதை கோடிட்டுக் காட்டுகிறார்.

தாத்தா கூறிய ‘மிர்சாத்தின் கதை’ ஒரு fantasy கதையாக நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது. மீருவின் நிஜபெயர் வெளிப்படும் இடமும் எதிர்பாராத திருப்பமாக அமைந்துள்ளது.

நாவல், கட்டுரைகளை வாசிப்பது போல் ஒரு அமர்வில் இந்நூலை வாசித்து முடித்து விடலாம் என்ற எண்ணத்தில் இந்நூலை ஆரம்பிக்க முடியாது. ஒவ்வொரு வரியும், வாக்கியமும் நம் வாழ்வின் ஒவ்வொரு நகர்வுகளையும் சம்பந்தப் படுத்திப் பார்க்க வைக்கிறது. நம் எண்ணமும், சிந்தனையும், செயலும் ஒவ்வொன்றோடும் தொடர்புடையதாக உள்ளதா, இல்லை பல முன்முடிவுகளோடு நீர்த்து போக வைக்கிறதா என்ற பகுப்பாய்வு செய்ய வைக்கிறது.

துருப்பிடித்து, இறுகிக் கிடக்கும் மனித மனங்களின் பூட்டை எந்த சாவியை கொண்டு திறக்க முடியும் என்பதை வாசகர்களின் முடிவுக்கு விட்டு விடுகிறார். தத்துவார்த்தமாக வெளிப்படும் ஒவ்வொரு கருத்தும் அறிவுரைகளாக இல்லாமல் நமது உள்ளார்ந்த கேள்விகளுக்கு பதிலாக அமைகிறது. தேர்ந்தெடுத்த அழுத்தமில்லாத மென்மையான சொற்களால் ஆசிரியர் இந்நூலை தொகுத்திருக்கிறார் .

நாவல் என்ற genre ல் வந்திருந்தாலும் பாதிக்கு மேல் கட்டுரை நூல் வாசிப்பது போன்று தான் இருந்தது.

முழு நூலையும் வாசித்து முடித்தவுடன், நாம் இவ்வளவு நாள் நம்பிக்கொண்டிருந்த பல விஷயங்களை எப்படி விட்டு வெளிவருவது என்ற யோசனையை கொடுக்கிறது. அப்படி யோசிக்க வைப்பதே இந்நூலின் வெற்றியாக இருக்கும் என்று கருதுகிறேன். நன்றி.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:மிர்சாத்தின் சிறிய புத்தகம்
ஆசிரியர்:அ. உமர் பாரூக்
வெளியீடு:
டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
விலை:₹.250
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 கு. ஹேமலதா, தேனி

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Show 1 Comment

1 Comment

  1. Sangeetha Shanmugam

    Thanks for the review of the book . iam eagerly waiting to read the book.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *