அ.வெண்ணிலா அவர்கள் எழுதிய “இந்திர நீலம்” எட்டு சிறுகதைகள் தொகுப்பு பெண்ணின் உள்ளுணர்வுகளை பளிச்சென்று பேசுகிறது.
சொல்லித் தெரியவதில்லை மன்மத கலை என்பது காலம் காலமாக மன்மதன்களுக்கு மட்டுமே!. ரதிகளுக்கு இல்லையென்பதும், அப்படி அவர்கள் இருந்தால் இந்த உலகம் எப்படி பே(ஏ)சும் என்பதை பட்டவர்னத்தமாக விளக்கியுள்ளார் எழுத்தாளர்.
எவரும் பேசாத, பேச தயங்கும் உணர்வுகளை அதிலும் பெண் எழுதுவதற்கு துணிச்சல் மட்டும் போதாது.! ஆண்டுக்கணக்கில் அமுங்கி கிடக்கும் பெண்ணின் கேண்மை உணர்வின் மீதான அக்கறையும் கரிசனமுமே இந்திர நீலம் . இதிலென்ன அக்கறையென கேட்போர்கள் அனைவரும் இந்நூலை வாசிக்க வேண்டுகிறேன்.
இங்கே பலரும் முற்போக்கு பேசிக் கட்டுடைக்கனும் என பிதற்றுகிறார்கள். ஆனால் உண்மையிலேயே ரதிகளின் ஆதங்கத்தை தனது ஆதர்ச எழுத்துக்களால் கட்டுடைத்துள்ளார் எழுத்தாளர்.
பெண்ணின் மெனோபாஸ் காலகட்டத்தில் உடலில் ஏற்படும் இரசாயன மாற்றங்களை துயர்களை உணர்வுகளை அங்குலம் அங்குலமாக விவரித்துள்ளார் இந்திர நீலம் கதையில்.
திருமணம் முடிந்த கையோடு கையில் குழந்தையை எதிர்பார்க்கும் சமூகத்தில் பெண்களுக்கான தாம்பத்ய விருப்பமென்பது ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று அதோடு முடிந்து விடுகிறது.
பெண் தான் நேசித்து விரும்பி மணந்த ஆண் மகன் என்றாலும் குடும்பம் என்ற வரையறைக்குள் (பெண்) தன் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத கட்டமைப்பிற்குள் (ஆண்) கணவன் வந்து விடுகிறான்.

குடும்பங்களில் அல்லும் பகலும் அயராது பாடுபடும் பெண் அவளுக்கு அத்திபூத்தாற் போல் தோன்றும் உணர்வுகளின் விருப்பம் நிறைவேறமாலே கடந்து போகும் பொழுதுகள். அன்பாக கணவனுக்கு முத்தமிட கூட வாய்ப்பதில்லை . அதற்கான தருணங்களை ஆணாதிக்க சமூகமும், குடும்பமும் கொடுப்பதில்லை . அவளின் இரவு நேர ஆசைகள் யாவும் இலவு காத்த கிளியாக கழிந்து போவதையும், முத்தங்களின் இனிமைப்பற்றி தெரிந்து கொள்ளாமலே பல பெண்களின் வாழ்நாள் நிரசையிலே சிதைந்துள்ளன என்பதை கசிந்துருகி யதார்த்தமான முறையில் பதிவு செய்துள்ளார் .
ஒருவனை மணந்த கண்ணகியானாலும், ஐந்து பேரை மணந்த திரெளபதியானாலும் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படாமல் காமம் ஒரு வழி பயணமாகவே தொடர்கிறது இன்றும்.
பெண் தன்னை விட அறிவில் கூடுதலாக பக்தியில் திளைத்தவளாக இருந்தால் அவளை வென்றெடுக்க முடியாத கோழைகள் கதைகட்டிவிடுகின்றனர்,
தெய்வ பிறவியென்றும் சேவை செய்ய பணித்தவள் என்று போற்றி விட்டு பிரிகின்றனர் ஆண்கள் .
கணவனை பிரிந்த பெண்கள் தங்களின் மினுமினுக்கும் அழகும் இளமை பொங்கும் உடலை சுமந்து கொண்டு பாவம் என்னதான் செய்வார்கள்.
ஒருத்தி மதுரையை எரிக்கிறாள் இன்னொருத்தி வேள்வி தீயில் குதித்து தன் காதலை எரித்து கொள்கிறாள். மணி மேகலையோ அட்சய பாத்திரத்திற்காக துறவறம் புகுகிறாள்
புனிதவதியோ பேயாக உருமாறுகிறாள்,
நக்கனோ கன்னி தன்மையிலே நித்திய சுமங்கலி ஆக்கப்படுகிறாள் !
இப்படி காலம் தோறும் பெண்கள் சமூகத்தின் சூழல் கேற்ப ஏதோ ஒன்றாக ஆக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறாள்.
இது எதனால்? கோபுரங்களில் கற் தூண்களில் ரசனையுடன் சிற்பங்கள் வடித்திருந்தாலும் பெண் என்பவள்
நுகர மட்டுமே! என்ற ஆணாதிக்க மனோபாவமே என்பதை ஆணித்தரமாக பதிவிட்டுள்ளார்.
கோயில்களில் இறை சேவை செய்ய நேர்ந்து விடப்பட்ட பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகி பின்னாளில் தாசியாக்கப்பட்ட துயர சம்பவம் யாரால்?
தாசியானாலும் அவள் உடலின் அவளது அல்ல , அவளின் வயிற்றுப் பசிக்காக இன்னொருவரின் உடல் பசியை தீர்க்கிறாள் குஷ்டரோகமுள்ள காமுகனின் காம பசியை போக்கியவள் எப்படி பாபியாக முடியும் என ஏசுநாதரை கேள்வி கேட்கும் விலக்கப்பட்ட கனி நெஞ்சுருகவைக்கிறது.
இதிகாச காலந்தொட்டு இப்போதுள்ள காலம் வரை பெண்ணின் காம பசியை தன் எழுத்திற்குள் அழகியலோடும் வரலாற்று இலக்கிய மொழியில் நடையில் மிகுந்த வர்ணனையுடன் ரசித்து எழுதியுள்ளார்.
நூலின் விவரங்கள்:
நூல்: “இந்திர நீலம் – எட்டு சிறுகதைகள் தொகுப்பு”
ஆசிரியர்: அ.வெண்ணிலா
வெளியீடு: அகநி வெளியீடு
பக்கங்கள் : 216
விலை: ரூ.150
எழுதியவர் :
✍🏻 க.பாண்டிச்செல்வி
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

