உலக உழைக்கும் மகளிர் தினமான மார்ச் 8 அன்று ‘மீதமிருக்கும் சொற்கள்’ என்ற பெயரில் அ.வெண்ணிலா தொகுத்த 1930 – 2014 கால இடைவெளியிலான தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பை வாசித்து முடித்தது ஓர் அழகான தற்செயல்.
மொத்தம் 54 பெண் எழுத்தாளர்களின் 54 கதைகள். இயன்றவரை அவை எழுதப்பட்ட கால வரிசைப்படியே கதைகளும் தொகுக்கப்பட்டிருப்பது தமிழ்ப் பெண் எழுத்து குறித்த வரலாற்று ஓர்மையை வாசிப்பவருக்கு அளிக்கவல்லதாக இருக்கிறது. கூடுதலாக, எழுத்தாளர்களின் புகைப்படங்களுடன் (குகப்பிரியை, எம்.எஸ்.கமலா, இந்திரபவாநி ஆகிய மூவருக்கு மட்;டும் படங்கள் இல்லை) அவர்களைப் பற்றிய சிறு அறிமுகமும் ஒவ்வொரு கதையின் முன்பும் கொடுத்திருப்பது தொகுப்பாசிரியர் இத்தொகுப்புக்காக மேற்கொண்ட உழைப்பையும் இத்தொகுப்பின்பால் அவருக்கிருந்த அக்கறையையும் எடுத்துக்காட்டுகிறது.
1930 முதல் 2014 என்ற 85 ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட வரலாற்று காலவெளியாகும். இக்கதைகள் மற்றும் எழுதியவர்களின் வழியே அக்காலகட்டத்தின் சமூக அசைவியக்கத்தையும் பெண்களின் சமூக இருப்பையும் சாதியத்தின் கலாச்சாரத் தாக்கத்தையும் புரிந்து கொள்வதை இத்தொகுப்பு சாத்தியமாக்கியுள்ளது.
54 பெண் எழுத்தாளர்களில், முதல் 24 பேர்களில், மூவலூர் இராமாமிருதம் அம்மையார் மற்றும் புதுமைப்பித்தன் இணையரான கமலா விருத்தாசலத்தைத் தவிர்த்து பிறர் அனைவரும் பிராமணப் பெண்களே என்பது அக்காலகட்டத்தில் நிலவிய பிராமணிய ஆதிக்கம், பிராமணப் பெண்களுக்கு மட்டும் வாய்த்த குறைந்தபட்ச கல்வியறிவு, எழுதுவதற்கான சுதந்திர வெளி போன்ற சமூக சூழலைப் புரிந்து கொள்ள முடிகிறது. 1990களிலேயே பல்வேறு வர்க்க, சாதிகளைச் சேர்ந்த பல்தரப்பட்ட பெண்கள் எழுத்துலகில் வீச்சுடன் நுழைந்து தடம் பதித்ததையும் தொகுப்பின்வழி தெரிந்து கொள்ளலாம்.
அதனாலேயே, தொடக்க காலக் கதைகளில் (1930 முதல் 1980 முடிய) பெரும்பாலானவற்றில் காட்டப்படும் கதைக்களமானது பிராமணக் குடும்பங்களாகவும், அவர்களது கலாச்சாரம் சார்ந்ததாகவும் மட்டுமே இருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. அவற்றிலும் கூட, நிலவும் ஆணாதிக்க ஒடுக்குமுறையைப் பெண்கள் உள்ளவாறே ஏற்றுக்கொள்வதாகவும், நிலைபெற்றிருக்கும் சனாதன தர்மக் கருத்தியலையும் அது சார்ந்த நம்பிக்கைகளையும் பெரிதும் கேள்வி கேட்காத வகையில் தனி மனித/குடும்ப உணர்வுகளுக்கு (மாமியார் x மருமகள் பிரச்சினை, கார்த்திகை சீர் உள்ளிட்ட வரதட்சிணை போன்ற சீர் முறையை பெருங்கஷ்டப்பட்டாவது செய்து பெண்ணுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவது, கணவன் மனைவி முரண்களில் மனைவி எத்தனை கஷ்டம் வந்தாலும் கணவன் அகமகிழ்ச்சி உண்டாகும் வண்ணம் நடந்து கொள்வதே பெண்ணுக்குப் பேறு உள்ளிட்ட விசயங்களுக்கு) மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாகவுமே பல கதைகள் எழுதப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதில் மூவலூர் இராமாமிருதம் அம்மையாரின் 1945ல் திராவிட நாடு வார இதழில் எழுதிய ‘தமயந்தி’ எனும் கதை அக்காலகட்டத்தில் நிலவிய மூடநம்பிக்கைகளுக்கும் சனாதன நடவடிக்கைகளுக்கு மாற்றான எதிர் நடவடிக்கைகளை முன்வைக்கும் கதையாக உள்ளது. ஆனால் கதை என்ற இலக்கிய வடிவத்துக்குள் இக்கதை அமையப் பெறாதது அதன் வலுவை சற்று குறைப்பதாக உள்ளது. அதே போல் ஜி.கே.பொன்னம்மாள் எழுதிய ‘யாரை நம்பி வந்தாய்’ கதையின் தளமானது அக்காலகட்டத்தில் வெளியான கதைகளின் தளங்களில் இருந்து விலகி விளிம்பு நிலை மாந்தர்களைப் பற்றியதாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அதே போல், கமலா விருத்தாசலம் (புதுமைப்பித்தன் மனைவி) 1937-ல் எழுதிய ‘திறந்த ஜன்னல்’ என்ற கதை கணவன் பிறன்மனை நோக்குவதை அறிந்து கிளைக்கும் மனைவியின் கொந்தளிக்கும் மனநிலை குறித்த நுட்பமான பார்வையும் விவரணைகளும் கொண்ட கதை நேர்த்தி, கோமகளின் ‘பால்மணம்’ கதையில் பிள்ளை வளர்ப்பில் பெற்றோரின் பொதுப்புத்தி சார்ந்த அறம் தவிர்க்கும் பார்வை, அநுத்தமாவின் ‘திண்ணை’யில் வீட்டில் உள்ள மூதாட்டி ஒருவருக்கும் அவ்வீட்டின் இடிக்கப்பட்ட திண்ணை ஒன்றுக்குமான நினைவுகள் பற்றிய சித்தரிப்பு, ஏழ்மையால் திருமண வயதிலும் மணம் தகையாத இளம் பெண்ணுக்கும் வீட்டில் உள்ள நாகலிங்க மரத்திற்குமான உணர்வுரீதியிலான பிணைப்பு குறித்துப் பேசும் ஆர்.சூடாமணியின் ‘நாகலிங்க மரம்’ போன்ற கதைகள் தம் வழமையான பிராமணீய தளத்தில் இயங்கினாலும்கூட அப்போதைய பிற கதைகளில் இருந்து சற்றே தனித்துத் தெரிபவை.
இத்தொகுப்பின் கதைகளின் காலவரிசைப்படி, வடிவரீதியாகவும் – கதை சொல்லும் மொழியிலும் – கதை பேசும் கருத்தியலிலும் – முதல் பெரிய உடைவை ஏற்படுத்தியது அம்பையின் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ கதையாகும். ஒரு பெண் ‘பூப்படைதல்’ எனக் குறிப்பிடப்படும் உடல்ரீதியாகப் பருவமாற்றத்துக்குள்ளாகும் நிலையை உணர்வுரீதியாகக் கடத்தியதிலும் நிலவிய சூழலில் பூப்படைதல் என்பது பெண்களுக்கு எவ்வாறு சுமையாக்கப்படுகிறது என்பதை சொன்னவிதத்திலும் முக்கியமான கதையாகிறது.
அதே போல், உஷா சுப்ரமணியத்தின் ‘எனக்கும் ஒரு கதை உண்டு’ என்ற கதையில் நான்கு தலைமுறை பிராமணப் பெண்களின் வாழ்வியல் நெருக்கடிகள், கலாச்சாரம்/பண்பாட்டின் பெயரிலான பெண்ணடிமைத்தனங்கள் – அவற்றுக்கிடையிலான கால மாற்றங்களுடன் – நுட்பமாக வெளிப்பட்டுள்ளது.
வாஸந்தி 1994-ல் எழுதிய ‘நஞ்சு’ கதையானது, தொகுப்பில் அது வரை பெரும்பான்மையாக வாசித்து வந்திருந்த குடும்பப் பிரச்சினைகளை மையப்படுத்தியதை தவிர்த்து, கிராமப்பகுதிகளில் நிலவிய பெண்சிசுக் கொலையைப் பேசிய வகையில் தனித்துத் தெரிகிறது. இக்கதையில் தொடங்கி அடுத்தடுத்த கதைகளில், சமூகத்தின் பல்வேறு தரப்பு மாந்தர்கள், நுட்பமான பெண் உணர்வுகள், மாறிவரும் பெண்ணியப் பார்வைகள் உள்ளிட்ட புள்ளிகள் துலக்கமாகின்றன.
குடிசை வாழ் மக்களின் வறிய வாழ்வினை அப்பட்டமாகக் காட்டும் நிஜ நாடக இயக்கப் பேராசிரியர் மு.ராமசாமியின் இணையர் செண்பகம் ராமசாமியின் ‘சரோசாதேவியின் கதை’, பிரேமா அருணாசலத்தின் முதலாளி தொழிலாளி வர்க்க முரண் குறித்துப் பேசும் ‘வேறுமனிதர்கள்’ கதை, கணவன் மனைவிக்குள் நிலவும் பாலியல் உறவில் கணவனுக்கு ஏற்படும் நாட்டமின்மையை காளி சிலையை முன்வைத்துப் பேசியதும் உடல் ரீதியாகக் குறைபாடுடைய ஆண் பாத்திரப் படைப்பும் கொண்ட அனுராதாவின் ‘காளி’ கதை, தன் முந்தைய காதல் குறித்து ஒரு பெண் கணவனிடம் பேசியதன் பின் விளைவுகளை நுணுக்கமாக விவரிக்கும் சாந்தாதத்தின் ‘எல்லைகள்’, தலித் வாழ்வில் – அன்றாடத்தில் – இயல்பிலேயே அமைந்திருக்கும் ஆதிக்க எதிர்ச் செயல்பாட்டு கலக உணர்வை அழகியலுடன் முன்வைக்கும் பாமாவின் ‘அண்ணாச்சி’, அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஆசிய/இந்தியர்களுக்கு எதிராக நிகழ்ந்த ‘டாட் பஸ்டர்ஸ்’ என்ற இனவாதக் குழுக்களின் தாக்குதல் மற்றும் கம்போடிய கண்ணி வெடி நிலங்களின் பின்னணியில் விரியும் காஞ்சனா தாமோதரனின் ‘கண்ணி’ கதை, பெருநகரத்தில் நிலையற்ற வருமானத்தில் அன்றாடத்தை பெரும் வலியுடனும் அவமானத்துடனும் கடத்த நேர்வதை இருத்தலியல் நோக்கில் அற்புதமாக உரைக்கும் ‘மழையும் தொலைவும்’ என்ற தமயந்தியின் கதை, வீட்டின் செலவுகளுக்கு முன்பணத்தைக் கடனாகப் பெற்றுக்கொண்டு வீட்டுச் சிறார்களை பண்ணையத்திற்கும் அடிமைக்கூலிக்கும் அனுப்பும் வலியைப் பேசும் இந்திரா (ஜோதிமணி எம்.பி.) எழுதிய ‘வண்ணத்துப்பூச்சிகளின் தேசம்’, தஞ்சை விவசாயக் கூலிகளின் பரிதாப வாழ்க்கையின் வலியை எழுத்தின் வழி கடத்தும் சு.தமிழ்ச்செல்வியின் ‘யதார்த்தம்’, பெண் உதவி இயக்குநர் பார்வையில் சினிமாவில் துணை நடிகைகளின் அவலங்களைப் பேசும் சந்திராவின் ‘கட் சொன்ன பின்னும் கேமரா ஓடிக்கொண்டிருக்கிறது’ கதை, பதின்பருவத்தில் நேர்ந்த அண்ணன் முறை ஆணுடனான நட்பு குறித்தும் அதன் தாக்கம் அந்த உறவின் புரியாமை குறித்தும் அழகுறப் பேசும் கவிதா சொர்ணவல்லியின் ‘நான் அவன் அது’ கதை போன்றவை தொகுப்பில் உள்ள வழமையான கதைத்தளத்தையும் வெளியையும் மீறிய நவீன புதிய சிந்தனை/பார்வை கொண்ட கதைகளில் சிலவாகும். இத்தகைய கதைகள் அனைத்தும் 1990களுக்குப் பின்னரே வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
54 கதைகள் கொண்ட 85 ஆண்டு காலவெளியிலான கதைகளில் மாலதி எழுதிய ‘ஆடிட்டர் கல்யாணமே’ என்ற கதை மட்டுமே உள்ளார்ந்த நகைச்சுவை தொனியோடு அமைந்திருந்த ஒரே ஒரு கதையாகும். (பாமாவின் கதையில் தலித் இலக்கியத்துக்கே உண்டான பகடி இழையோடுவது மட்டும் விதிவிலக்கு). தொகுப்பில் உள்ள இந்த நகைச்சுவை வறட்சி அக்காலகட்டத்திய பெண்கள் வாழ்வின் தன்மையை வெளிக்காட்டுவதாகவே எடுத்துக் கொள்ள முடியும் – வேதனையுடன்..! இவ்விடத்தில் கவின்மலரின் ‘இரவில் கரையும் நிழல்கள்’ கதையில் சுடர்மொழி, கயல்விழி ஆகிய பள்ளிப்பிராய நண்பிகளின் ஊரெங்கும் எதிரொலிக்கும் சிரிப்பானது அவர்கள் வளர வளரத் தேய்ந்து காணாமல் போவதை நினைவுப்படுத்திக் கொள்ளலாம்..
குட்டிரேவதியின் ‘கட்டுவிரியன்’ கதையானது தொகுப்பின் பெண் கதை வெளியில் காணக் கிடைக்காத இருளர்களின் வாழ்வியலையும் அவர்கள் பாம்பு பிடிக்கும் நுட்பமான லாவகத்தையும் அவர்கள் மீதான அதிகாரத்தின் ஒடுக்குமுறையையும் தீவிர கதை மொழியில் நேர்த்தியுடன் வெளிப்படுத்தி இருப்பதை இங்கு தனியே கவனப்படுத்தியாக வேண்டும்.
இந்துமதியின் ‘துணி’ கதை குடிசைப் பகுதிகளில் ‘சேவை’ செய்யும் தொண்டு நிறுவனங்கள் ‘உயர்ந்த’ எண்ணமும் சேவை மனப்பான்மை கொண்ட நல்லுள்ளங்களாகவும் இருப்பது போன்றும் ஆனால் குடிசை வாழ் மக்கள் கிஞ்சித்தும் மனிதாபிமானம் அற்றவர்களாகவும் திருட்டு குணம் உடையவர்களாகவும் மொண்ணைத்தனமாகச் சித்தரிக்கும் மோசமான கதையாகும்.
போலவே, ஆண்டாள் பிரியதர்ஷிணியின் ‘கழிவு’ கதையானது மலமள்ளும் துப்புரவுப் பணியாளர் சோமையாவின் வாழ்வைப் பேசுவதாகப் பம்மாத்துக் காட்டிக்கொள்ள முனைகிறது. சோமையாவின் கதையை உலகுக்கு எடுத்துவைக்க உதவும் ‘முரளி’ என்ற பாத்திரமும், சோமையாவின் வேற்று சாதி மருமகளும் சோமையாவின் இழி நிலையைப் பொருட்படுத்தாது அவரை ஏற்றுக்கொள்ளும் பரந்த மனப்பான்மை உடைய நல்ல மனிதர்களாகவும், சோமையாவின் மகனின் பாத்திரமானது தந்தையை சற்றேனும் ஏற்காதவனாகவும் கொடிய எண்ணமுடைய கெட்ட மனிதனாகவும் படைக்கப்பட்டிருப்பது கொஞ்சம் கூட களநிலவரமறியாத தன்மையும், வன்மம் நிறைந்த மேட்டிமைத்தனமும் சாதிய தடித்தனமும் கதையில் அம்பலப்பட்டு தன் ஆதிக்க மனநிலை சார்பைக் காட்டி முகமூடி கிழிந்து தொங்குகிறது. இத்தகு சூழலில்தான் ‘எங்கள் கதையை நாங்களே எழுதிக் கொள்கிறோம்’ என்ற தலித் படைப்பாளிகளின் குரலின் நியாயத்தைப் புரிந்து கொள்ளமுடிகிறது.
தமிழ்ப்பெண் எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுப்பாக்கும் முயற்சிக்கு வேறு முன்னுதாரணம் இல்லாத நிலையில், தமிழ்ப் பெண் சிறுகதை எழுத்து வரலாற்றின் ஒரு தீர்க்கமான சித்திரத்தை அ.வெண்ணிலாவின் இத்தொகுப்பு உருவாக்கியுள்ளதை மறுக்கவியலாது.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | மீதமிருக்கும் சொற்கள் – பெண் எழுத்தாளர்களின் கதைகள் |
| ஆசிரியர்: | அ.வெண்ணிலா |
| வெளியீடு: |
அகநி வெளியீடு
மின்னஞ்சல்: akaniveliyeedu@gmail.com – தொலைபேசி: 94443 60421 |
| விலை: | ₹.500 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 அன்புச்செல்வன் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
