2019இல் கிறிஸ்துமஸ் அன்று, ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங் என்னும் ஆர்எஸ்எஸ், இந்தியாவில் தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத் நகரின் வீதிகள் வழியே, ஊர்வலமாகச் சென்றது. கைகளில் காவல்துறையினர் பயன்படுத்துவதைப் போன்ற இரும்புப்பூண் சொருகியுள்ள மூங்கில் கம்புகளுடனும், ஆர்எஸ்எஸ் சீருடைய அணிந்த சேவக்குகள் டிரம் ஓசையை எழுப்பிக்கொண்டும், கொம்பு ஒலியால் எக்காள முழக்கமிட்டுக்கொண்டும் சென்றனர். தெலங்கானாவில் இருக்கும் 3,500 ஆர்எஸ்எஸ் கிளைகள் மூன்று நாட்கள் நன்கு பயிற்சி பெற்றபின் இந்த ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் சுமார் எட்டாயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு தெரிவித்துள்ளது. பார்ப்போர் வியக்கும் அளவிற்கு, மிகவும் துல்லியமான ராணுவக் கட்டுப்பாட்டோடு இந்த ஊர்வலம் நடைபெற்றது. “ஆர்எஸ்எஸ் இன்றையதினம் நாஜிக்கள் பாணியில் பிரம்மாண்டமான ஊர்வலத்தை நடத்தியுள்ளார்கள்,” என்று இந்த ஊர்வலம் தொடர்பாக ஸ்வீடன், உப்சாலா பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் அசோக் ஸ்வெயின் கூறியுள்ளார்.
கவிஞர் மீரா கந்தசாமி, “ஆர்எஸ்எஸ் நாஜிக்களால் உத்வேகம் பெற்றுள்ளது” என்று எழுதியுள்ளார்.
இந்த ஊர்வலம் மற்றொரு காரணத்திற்காகவும் விமர்சனத்தை ஈர்த்தது. அந்த சமயத்தில் மற்ற அனைத்து ஊர்வலங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஹைதராபாத் ஜனத்தொகையில் 30 சதவீதத்தினர் முஸ்லீம்கள். இது நாட்டின் சராசரியைவிட இரு மடங்கு ஆகும். ஆர்எஸ்எஸ்-க்கு அனுமதி வழங்கியதுபோல் அவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தால் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான பேரணிகள் மிகவும் வலுவானவைகளாக அமைந்திருக்கும். ஆனால், அரசாங்கம் அதற்குத் தடை விதித்திருந்தது. ஆர்எஸ்எஸ்-க்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
அநேகமாக ஆர்எஸ்எஸ், உலகின் பழைய மற்றும் பெரிய அளவிலான துணை ராணுவக் குழுவாகும். ஒரு ரகசியமான, பதிவுசெய்யப்படாத அமைப்பாகும். இதன் அளவு எவருக்கும் தெரியாது. ஆனால், 60 லட்சம் சேவக்குகள் இருக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்குத் தனியே பதிவேடுகள் எதுவும் கிடையாது. வங்கிக் கணக்கும் கிடையாது. சீருடையணிந்த, ஆயுதபாணியான, ஆண்கள் மட்டுமே உள்ள ஓர் அமைப்பு. பெண்கள், தனியாகவுள்ள பெண்கள் பிரிவுக்கு மட்டும் அனுமதிக்கப்படுவர். குறிப்பிட்ட நோக்கத்தை மட்டும் கொண்ட எண்ணற்ற பல துணை அமைப்புகள் உண்டு.
இவற்றில்,
‘அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி), என்னும் மாணவர் அமைப்பு, 1949இல் நிறுவப்பட்டது.
விசுவ இந்து பரிசத் (விஎச்பி), மதப் பிரிவு, 1964இல் நிறுவப்பட்து.
பாரதீய ஜனதா கட்சி (பாஜக), இதன் அரசியல் அங்கம், 1980இல் நிறுவப்பட்டது.
பஜ்ரங் தளம், விஎச்பி-யின் இளைஞர் அணி, 1984இல் நிறுவப்பட்டது.
இந்தக் குழுக்கள் அனைத்தும் மிகவும் முக்கியமானவைகளாகும். இவைகள் அனைத்துமே ஆர்எஸ்எஸ்-உடன் பிணைப்புகளைக் கொண்டவைகள்தான். ஆர்எஸ்எஸ்-இல் ஸ்தாபனத்திறமைகளை நன்கு வெளிப்படுத்தியவர்களைத்தான் சுயம் சேவக்குகளாகத் தேர்ந்தெடுப்பார்கள் என்று வரலாற்றாசிரியர்கள் வால்டர் ஆண்டர்சன் மற்றும் ஸ்ரீதர் தாம்லே கூறுகின்றனர். எனவே “ஆர்எஸ்எஸ்-இன் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகக்கூடிய அளவிற்கு உத்தரவாதம் உடையவர்களைத்தான் இந்த ஸ்தாபனங்களின் பொறுப்புகளில் நியமிக்கப்படுவார்கள்,” என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் 1940 முதல் 1973வரை இரண்டாவது மற்றும் நீண்டகாலம் உச்சபட்சத் தலைவராக இருந்த எம்.எஸ். கோல்வால்கரின் கூற்றுப்படி, இந்த அமைப்புகள், அவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளைச் செய்வதோடு, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தத்துவார்த்த நிலைப்பாட்டின் அடிப்படையில் சேவக்குகளைத் தேர்வுசெய்யும் மையங்களாகவும் விளங்கும். அனைத்துத்துறைகளையும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தால் கைப்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் ஆணை பிறப்பித்தார். இவர்களுடைய சித்தாந்தம் என்பது இந்துத்துவா.
அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம், (The US Commssion on International Religious Freedom), “இந்துத்துவா என்பது இந்தியாவில் உள்ள இந்துக்கள் அல்லாத அனைவரையும் அந்நியர்கள்.” என்ற கொள்கையைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது. “இந்துத்துவா என்பது இந்து தேசத்திற்கான பிரத்யேகமான அரசியல் சித்தாந்தம்,” என்று ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் கூறுகிறது. இந்தியா பிரத்யேகமாக இந்துக்களுக்கான தேசமாகத்தான் இருக்கிறது, இருக்க வேண்டும் என்று இப்போதுள்ள ஆர்எஸ்எஸ் தலைவரான மோகன் பகவத்தும் வலியுறுத்துகிறார். பலதடவைகள் இதைக் கூறியுள்ள மோகன் பகவத், 2019 அக்டோபரிலும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அமைப்புதினத்தைக் கொண்டாடும் நிகழ்வில் இதனை மீண்டும் வலியுறுத்தினார்.
“தேசத்தின் அடையாளம், நம் அனைவரின் சமூக அடையாளம் மற்றும் நாட்டின் இயற்கையான அடையானம் அனைத்துமே, இந்தியா என்பது, இந்துஸ்தான் மற்றும் இந்து தேசம் என்றும் அதுதான் சங் பரிவாரத்தின் தொலைநோக்குப் பார்வை” என்றும் பிரகடனம் செய்திருக்கிறார்.
அப்போது அவர் மேலும், “நான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவராக 2009இல் இருந்து இருக்கிறேன். ஆனால் என் பேச்சை ரொம்ப பேர் அப்போதெல்லாம் கேட்பதில்லை. இன்றையதினம், நிறைய பேர் இருக்கிறீர்கள். ஏனெனில் பல துறைகளிலும் ஆர்எஸ்எஸ் வளர்ச்சி பெற்றிருக்கிறது,” என்று கூறினார்.
உண்மைதான். ஆர்எஸ்எஸ் வளர்ந்திருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் நோய்க்கிருமிகள் வேகமாகப் பரவுவதுபோல் பரவியிருக்கிறது.
“சமூகம் அனைத்துவிதங்களிலும் நம் தத்துவத்தைச் சுற்றி ஒத்திசைவானமுறையில் வலுவாக மாறும்,” என்று ஆர்எஸ்எஸ் நம்புவதாக, இதழாளர் ஹர்டோஷ் சிங் பால் விளக்குகிறார். இந்திய வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்திலும் அவர்களின் ஆதிக்கம் இருக்கக்கூடிய விதத்தில் நாட்டிற்கான அடித்தளத்தை அளிப்பதே அவர்களது நோக்கமாகும். பகவத்தின் தலைமையின்கீழ், இன்றையதினம், ஆர்எஸ்எஸ் அரசுக்குள் ஓர் அரசாக செயல்படுகிறது. அது ஒரு நிழல் அரசாங்கமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நாவலாசிரியர் அருந்ததிராய் மேலும் ஓரடி முன்னே சென்று, “நிழல் அரசாங்கமோ அல்லது இணையான அரசாங்கமோ கிடையாது, அதுதான் அரசாங்கம்.” என்கிறார். மேலும் அவர், “நாளுக்கு நாள், ஊடகங்கள், காவல்துறை, உளவு ஸ்தாபனங்கள் அனைத்தும் அதன் கட்டுப்பாட்டுக்குள் சென்றிருப்பதற்கான உதாரணங்களை நாம் பார்க்கிறோம். இப்போது ராணுவத்தினர் மீதும் அதன் செல்வாக்குக் கணிசமான அளவில் இருப்பதுபோல் தோன்றுவது மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது,” என்றும் அவர் எழுதியிருக்கிறார்.
ஆர்எஸ்எஸ் இயக்கம் சமூக-அரசியல் கட்டுப்பாட்டை இந்த அளவிற்கு எய்திட, பல பத்தாண்டுகளாகக் கடுமையாக வேலை செய்திருக்கிறது. குஜராத் மாநிலத்தில், நீண்ட காலமாகவே, துணை ராணுவப்படைகள் மிகவும் சுறுசுறுப்பாகவே இயங்கி வந்திருக்கின்றன. “உதாரணமாக, 2002இல், காவல்துறையிலும், நிர்வாகத்திலும் ஒவ்வொரு மட்டத்திலும் அதன் அரசியல் ஊழியர்கள் குஜராத் மாநிலத்தில் படிப்படியாகத் திட்டமிட்டு நுழைக்கப்பட்டிருந்தார்கள்,” என்று ராய் குறிப்பிடுகிறார். குஜராத் மாநிலத்தில்தான் மோடி பாஜக அரசியல்வாதியாக தன்னை வெளிப்படுத்தினார். மேலும் இங்கேதான் ஆர்எஸ்எஸ் 21ஆம் நூற்றாண்டில் முதல் இனப்படுகொலைகளை மேற்கொண்டது. இது குறித்து விஎச்பியின் முன்னாள் தலைவர், “ஒரு வெற்றிகரமான பரிசோதனை” என்றும், “இவ்வாறு நாடு முழுவதும் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்படும்,” என்றும் கூறினார்.
“பாஜகவின் புஜ பலமாக, எப்போதும் ஆர்எஸ்எஸ் இருந்து வந்திருக்கிறது,” என்று இந்தியாவின் முன்னாள் அமெரிக்கத் தூதர் கூறினார். “பாஜக இல்லாமல் ஆர்எஸ்எஸ்-ஆல் ஜீவித்திருக்க முடியும். ஆனால் ஆர்எஸ்எஸ் இல்லாமல் பாஜக-வால் நீடித்திருக்க முடியாது. இதுதான் பாஜகவிற்கும், ஆர்எஸ்எஸ்-இன் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலுக்கும் இடையேயுள்ள பிரிக்கமுடியாத இணைப்புச் சங்கிலிகளாகும். பாஜக, இந்துத்துவா வெறியைக் கிளப்பாவிட்டால், ஆர்எஸ்எஸ் இந்து வாக்காளர்களை அணிதிரட்டாது,” என்றும் அவர் கூறினார்.
எனினும், இன்றைய தினம், வாக்காளர்களை அணிதிரட்டுவதோடு மட்டுமல்லாமல் ஆர்எஸ்எஸ்-இன் பங்கு மேலும் பரந்து விரிந்த அளவில் இருக்கிறது. தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான சூழ்ச்சித் திட்டங்களை மட்டும் அது அளித்திடவில்லை. கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளையும் அது இழுக்கிறது. ஆர்எஸ்எஸ்-இன் உருவாக்கம்தான் பாஜக. அது இல்லையெனில் பாஜக நிலைகுலைந்து வீழ்ந்துவிடும். ஆர்எஸ்எஸ் இயக்கமானது, புஜபலம், ஊழியர்களை அளித்து, தேர்தல் சமயங்களில் முக்கிய பங்களிப்புகளைச் செய்ததோடு மட்டுமல்ல, உயர் அதிகாரிகளையும் அமர்த்தி இருக்கிறது,” என்று இந்திய மூத்த வழக்குரைஞர் ஏ.ஜி- நூரணி கூறுகிறார்.
இப்போது நாட்டின் தலைமையின் பின்னணி இதனை நன்கு பிரதிபலிக்கிறது. 2014இல் மோடி முதன்முதலாகப் பிரதமாக பதவியேற்றபோது, மொத்தம் உள்ள 66 கேபினட் அமைச்சர்களில் 41 பேர் ஆர்எஸ்எஸ் பின்னணியைச் சேர்ந்தவர்கள். 2017இல் அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கு முன் பாஜக, ஆர்எஸ்எஸ்-உடன் “ஒரு முக்கியமான ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்தியது.” இன்றையதினம், மொத்தம் உள்ள 53 அமைச்சர்களில் 38 பேர் – சுமார் 75 சதவீதத்தினர் – ஆர்எஸ்எஸ்-இலிருந்து வந்தவர்கள். இவர்களில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இரட்டையர்களும் அடக்கம். 1982இல், மோடிக்கு 31 வயதாகவும், அமித் ஷாவுக்கு 17 வயதாகவும் இருந்தபோது, அவர்களிருவரும் சந்தித்துக் கொண்டார்கள். இன்றையதினம் அவர்களிருவரும் எவராலும் பிரிக்கப்படமுடியாத பங்காளிகளாக மாறியிருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ்-இன் உழைப்பின் விளைவாக அதிகாரத்தின் உச்சிக்கு உயர்ந்திருக்கிறார்கள். அமித் ஷா இப்போது பாஜக-வின் தலைவர். மோடியின் லெப்டினன்டாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், அநேகமாக அவருடைய வாரிசுதாரர். ஆர்எஸ்எஸ்-இன் பின்னணியுடன் கூடிய மற்ற கேபினட் அமைச்சர்கள், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி, மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் முதலியோராவார்கள்.
“இவ்வாறு தங்கள் கைகளில் அளவிற்கு மீறிய அதிகாரம் பெற்றிருப்பதுடன், துணை ராணுவப் படையினரை விமர்சிப்பதே தேசத்துரோகச்சட்டத்தின் கீழ் மாறியிருக்கிறது. ஆர்எஸ்எஸ், பாஜக அல்லது பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்களைக் கேள்வி கேட்கும் முயற்சியோ அல்லது எவ்விதத்திலும் கருத்து வேறுபாடோ ஏற்படுமானால், அது தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாகக் குற்றமாக்கப்படும்,” என்று ஹர்டோஷ் சிங் பால் எழுதுகிறார். “இதன் விளைவு, இன்றையதினம், தேசம் என்பதன் சிந்தனையே ஒரு சித்தாந்தத்துடன், ஒரு அரசியல் கட்சியுடன், அல்லது ஒரு தனிநபருடன் இணைக்கப்படக்கூடிய விதத்தில் வந்திருக்கிறது,” என்றும் அவர் எழுதுகிறார்.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் ஆணிவேர், இந்துக்கள் மட்டுமே இந்தியாவில் பிறப்புரிமை உடையவர்கள், எனவே இந்த நாடு ஓர் இந்து ராஷ்ட்ரமாக (இந்து தேசமாக) மட்டுமே இருக்க முடியும் என்பதாகும்.
இருந்தபோதிலும், இந்தியா அதிகாரபூர்வமாக ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக இருப்பதால், ஏற்கனவே இந்து தேசமாக நம்பப்பட்ட ஒரு நாட்டுக்கு இந்து தேசமாக மாறுவதற்கான நாடாளுமன்ற மற்றும் நீதித்துறைகளின் நடவடிக்கைகள் தேவைப்படுவதால் அவற்றுக்கான அடித்தளங்களைப் பெறுவேண்டியது அவசியமாகின்றன. 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, அதன் இந்துத்துவா வெறி ஒரு குறுகிய தோல் பையில் வைக்கப்பட்டிருந்தது என்கிறார் கெனன் மாலிக் என்னும் இதழாளர். எனினும், அடுத்து இரண்டாவதாக மகத்தான முறையில் வெற்றி பெற்றபின்பு, எவ்விதத் தடையுமின்றி தங்களுடைய வெறித்தனமானக் கொள்கைகளைப் பின்பற்றுவதற்கு அவை மோடிக்கு உரிமம் கொடுத்துள்ளது. 2019 மே மாதத்தில் மோடியின் அரசாங்கம் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை அமல்படுத்திட மின்னல் வேகத்தில் நடவடிக்கைகள் எடுத்தது.
“இருந்தபோதிலும், இந்தியா, அதிகாரபூர்வமாக ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக இருப்பதால், ஏற்கனவே இந்து தேசமாக இருக்கும் இதனை அதற்கான அடித்தளங்களைப் பெறுவதற்காக, நாடாளுமன்ற மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது தேவை என்று அவர்கள் நம்புகிறார்கள்,” என்று இதழாளர் கெனன் மாலிக் எழுதுகிறார். “2014இல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, தன்னுடைய இந்துத்துவா மதவெறி நடவடிக்கைகளை கிடப்பில் போட்டு வைத்திருந்தது. எனினும், இப்போது இரண்டாவது தடவை மகத்தான வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, தங்களுடைய வெறிபிடித்த கொள்கைகளை தங்குதடையின்றி நடைமுறைப்படுத்திட மோடிக்கு உரிமம் அளிக்கப் பட்டிருக்கிறது. 2014 மே மாதத்திலிருந்து மோடி அரசாங்கம் மின்னல் வேகத்தில் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை அமல்படுத்தத் துவங்கியிருக்கிறது. பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் அனைவரும் மிகவும் பிரச்சனைக்குரிய நடவடிக்கைகளில் இறங்கி, ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரலின் கேந்திரமான கொள்கைகளை அமல்படுத்தத் துணிந்துள்ளனர்.
- இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம், முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக இருந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கிழித்தெறியப்பட்டது.
- உத்தரப்பிரதேசம், அயோத்தியில் பிரச்சனைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட பச்சை விளக்குக் காட்டப்பட்டிருக்கிறது.
- இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு, மதத்தை அடிப்படையாகக் கொண்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
- ஒவ்வொரு பிரஜையும் தான் இந்தியாவில் வசிப்பவர் என்பதை மெய்ப்பிப்பதற்குத் தேவைப்படும் விதத்தில் தேசியக் குடிமக்கள் பதிவேடு முன்மொழியப்பட்டிருக்கிறது.
2019 டிசம்பரில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்தும், தேசியக் குடிமக்கள் பதிவேட்டை அறிமுகப்படுத்துவதை எதிர்த்தும், இந்தியாவின் வீதிகள் அனைத்தும் அதற்கு எதிரான கிளர்ச்சிப் போராட்டங்களால் நிறைந்திருந்தன. அடிப்படையில், இப்போராட்டங்கள் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரலை அமல்படுத்துவதற்கு எதிரானவைகளாகும். கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் மிகவும் கொடூரமான முறையில் நசுக்கப்பட்டார்கள். சுமார் 70 பேர் கொல்லப்பட்டார்கள். அமைதியாகப் போராடிய கிளர்ச்சியாளர்கள் மீது காவல்துறையினர் அடக்குமுறைகளை ஏவியதுடன், அவர்கள் மீது மிருகத்தனமானமுறையில் தாக்குதலைத் தொடுத்து, வழக்குகளும் பதிவு செய்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் துவங்கிய ஒருசில நாட்களிலேயே பாஜக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கிளர்ச்சியாளர்கள்மீது “பழிக்குப்பழி வாங்குவேன்” என சபதம் செய்தார். அவர் “பழிக்குப்பழி” வாங்கும் செயல்கள், மாநிலம் முழுதும் முஸ்லீம்களுக்கு எதிராக குறிவைத்து வன்முறை வெறியாட்டங்களை மேற்கொள்வதன் மூலம் நடைபெற்றது.
ஆதித்யநாத்தின் காவல்துறை, முஸ்லீம்கள் அதிகமாக வாழும் இடங்களில் ராணுவ பாணியிலான தாக்குதலைத் தொடுத்தன என்றும், அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தின என்றும், குழந்தைகளை அடித்து நொறுக்கின என்றும், வீடுகளுக்குள் புகுந்து, சொத்துக்களை நாசப்படுத்தின என்றும் குற்றம் சாட்டப்பட்டது. நள்ளிரவுகளில் முஸ்லீம் வீடுகளுக்குள் புகுந்து, அவர்கள் தேடிவந்துள்ள ஆண்கள் எங்கிருக்கிறார்கள் என்று கேட்டு பெண்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தி மிரட்டியதாகவும் குற்றஞ் சாட்டப்பட்டிருக்கிறது. முஸ்லீம் இளம் வயதினர் காவல்துறையினரால் பொறுக்கி எடுக்கப்பட்டு, மணிக்கணக்கில் அல்லது நாட்கணக்கில் பல்வேறுவகையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதற்கு ஏராளமான ஆவணச்சான்றுகள் இருக்கின்றன.
ஒரு சம்பவத்தில், 73 வயதுடைய முஸ்லீம் வழக்கறிஞர் ஒருவரைக் கைது செய்து, காவல்நிலையத்திற்கு கொண்டுசென்று, காவலில் வைத்து நையப் புடைத்திருக்கின்றனர். அதிகாரிகள் அவருடைய குடும்பத்தாரையே அழித்து ஒழித்துவிடுவோம் என்றும், அவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்து வாழ்க்கை பூராவும் அழுகச் செய்துவிடுவோம் என்றும், அவருடைய தாயாரை வன்புணர்வு செய்து விடுவோம் என்றும் மிரட்டியிருக்கின்றனர்.
நாடு முழுவதும் காவல்துறை, கிளர்ச்சியாளர்களை காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்கி இருக்கின்றனர். தில்லியில் 2020 பிப்ரவரியில் வன்முறை வெறியாட்டங்கள் வெடித்தபோது, காவல்துறையினர் முஸ்லீம்களின் வீடுகளுக்குள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து, உள்ளேயிருந்தவர்களை வெளியே இழுத்து வந்து, அங்கே தயாராக நின்றுகொண்டிருந்த குண்டர் கும்பல்களிடம் ஒப்படைத்திருக்கின்றனர். குண்டர் கும்பல்கள் இளம் முஸ்லீம்களை அடித்து நொறுக்குவதும், அவர்களைத் தேசிய கீதம் பாடச்சொல்லி வற்புறுத்துவதும் வீடியோக்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு அடித்து நொறுக்கப்பட்டவர்களில் ஒருவர் பின்னர் மரணம் அடைந்தார். மற்றொரு சம்பவத்தில், குண்டர் கும்பலில் இருந்த ஒரு நபர், தாங்கள் முஸ்லீம்கள் மீது கற்களை வீசிக்கொண்டிருந்தபோது கற்கள் தீர்ந்துவிட்டன என்று கூறியதும், உடனே காவல்துறையினர் கற்களைக் கொண்டுவந்து எங்களிடம் கொடுத்து வீசச் சொன்னார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
1984இல் தில்லியில் சீக்கியர்கள் மீதான இனப்படுகொலைகள் நடைபெற்றபின்னர், இப்போது நடைபெற்ற மதவெறி வன்முறை நிகழ்வுகள் மிகவும் மோசமானதாகும். ஒருசில தினங்களிலேயே 50க்கும் மேற்பட்டவர்கள் – இவர்களில் முஸ்லீம்கள் அதிகம் – கொல்லப்பட்டார்கள் என்று இதழாளர் மீரா கம்தார் கூறுகிறார். அவர் இதனை முஸ்லீம்கள் மீதான இனப்படுகொலை என்றே விளிக்கிறார். “குண்டர் கும்பல்கள் ஒரு குறிப்பிட்ட மதக்குழுவினர் மீது கலகம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர், இவர்களைக் காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் இதனை இனப்படுகொலை என்று வரையறுக்கிறேன்,” என்று மீரா கம்தார் கூறுகிறார்.
இந்த இந்துத்துவா மதவெறிக் கும்பல்கள், பாஜகவின் முக்கிய அரசியல்பிரமுகரால் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று அறைகூவல் விடுத்து, அதனைத் தொடர்ந்து காவல்துறையும் அவர்களுக்கு உடந்தையாக இருந்து உதவி செய்ததால், வீதிகள் குண்டர் கும்பல்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தன. இவ்வாறு இவர்கள் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டதற்கு ஆர்எஸ்எஸ் மீதுதான் விரிவானமுறையில் குற்றம் சுமத்தப்படுகிறது. எப்படி கிறிஸ்துமஸ் அன்று ஹைதராபாத் நகரில் வீதிகள் குண்டர் கும்பல்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தனவோ அதேபோன்று இங்கேயும் இருந்தன.
வீதிகளை ஆர்எஸ்எஸ் தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரும்போது வன்முறை அதன் தவிர்க்கமுடியாத விளைவாகும். கடந்த பல பத்தாண்டுகளில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில் சர்வதேச சமூகம் இதனை ஒப்புக்கொள்வது அதிகரித்திருக்கிறது.
ஐ.நா. மன்றம், கிறித்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிராக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகவும், மதத்தை “அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவதற்கு” எதிராகவும், தேசியவெறியைக் கிளப்பிடும் “இந்து தீவிரவாதிகளுக்கு” எதிராகவும் எச்சரித்திருக்கிறது. ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் மற்றும் மனித உரிமைகள் காவல்குழு (Amnesty International and Human Rights Watch) ஆகிய இரண்டும் ஆர்எஸ்எஸ்-உம் அதன் கீழ் இயங்கும் அதன் துணை அமைப்புகளும் மதச் சிறுபான்மையினருக்கு எதிராக ஏவிடும் வன்முறை வெறியாட்டங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன என்று எச்சரித்திருக்கின்றன. அமெரிக்காவின் அரசுத்துறையும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஒரு “தீவிரவாதக்” குழு என்று சித்தரித்திருப்பதுடன், சங் பரிவாரங்கள் கிறித்தவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறை மற்றும் பாகுபாடு காட்டும் நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்றும் எச்சரித்திருக்கிறது. 2018இல் அமெரிக்க உளவு ஸ்தாபனமான சிஐஏ (Central Intelligence Agency), விஎச்பி-யும், பஜ்ரங் தளமும் தீவிரவாத மத ஸ்தாபனங்கள் என்று வகைப்படுத்தி இருக்கிறது.
ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் கீழ் உள்ள இந்து தேசியவாத இயக்கங்கள் பலவற்றில் பயன்படுத்தப்படும் வன்முறைகளின் வடிவங்கள் பலவாகும். படுகொலைகள், வெடிகுண்டுகள் வீசுதல், கிறித்தவர்கள், முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலைகளைச் செய்தல் போன்றவை மட்டுமல்ல, தங்களுடைய வெறிபிடித்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரலுக்கு எதிராக எவர் வந்தாலும் அவரைக் கொலை செய்வது உட்பட பலவற்றில் இவை சம்பந்தப்பட்டிருக்கின்றன.
உதாரணமாக, 2017இல் கர்நாடக மாநிலத்தில், இதழாளர் கௌரி லங்கேஷ் இந்து தேசியவெறியன் ஒருவனால் துப்பாக்கிக் குண்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவன் கைது செய்யப்பட்டபோது இதேபோன்று ஆர்எஸ்எஸ்-க்கு எதிரான அறிவுஜீவிகளில் மேலும் இருவரைக் கொன்றது குறித்தும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறான். ஆர்எஸ்எஸ் ஒரு விஷப்பாம்பு என்று சிலர் அறிந்திருந்தபோலவே, கௌரி லங்கேஷ் அவர்களும் தான் படுகொலை செய்யப்படக்கூடிய ஆபத்திருப்பதை அறிந்திருந்தார். அவர் கொலை செய்யப்படுவதற்கு ஓராண்டுக்கு முன்பு அவர், “மோடியின் பக்தர்கள் மற்றும் இந்துத்துவா நபர்கள் கொலைகளை வரவேற்பவர்கள்…மரணங்களைக் கொண்டாடுபவர்கள்…அவர்களின் சித்தாந்தங்களை எதிர்ப்போரை, அவர்களின் அரசியல் கட்சியை, அவர்களின் உச்சபட்சத் தலைவர் மோடியை எதிர்ப்பவர்களை … அவர்கள் எப்படியாவது என் வாயை அடைக்கவும் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்,” என்று கூறினார்.
பயங்கவரவாதத் தாக்குதல்களும் உண்டு
ஆர்எஸ்எஸ்-இயக்கத்தின் வன்முறை வெறியாட்டங்களில் பயங்கரவாதத் தாக்குதல்களும் இடம் பெற்றிருக்கின்றன. உதாரணமாக, 2006 முதல் 2008 வரையிலும் இந்தியாவில் பல பகுதிகளில் முஸ்லீம்களுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் ஹர்யானா, மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவற்றில் மிகவும் கொடூரமான சம்பவம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஓடிக்கொண்டிருந்த ‘நட்புறவு ரயில்’ (‘friendship train’) சம்ஜுதா எக்ஸ்பிரஸ் ரயில் மீதான வெடிகுண்டுத் தாக்குதலாகும். இதில் 70 பேர் கொல்லப்பட்டார்கள். புலனாய்வில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முழுநேர ஊழியர் ஸ்வாமி அசீமானந்த் சம்பந்தப்பட்டிருந்தார். அவர் கேரவன் இதழுக்கு அளித்திருந்த நேர்காணல் ஒன்றில் இந்த வன்முறையை நடத்துவதற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நேரடியாகவே அனுமதி வழங்கியிருந்ததாகக் கூறியிருந்தார். இந்துக்களின் பெயரில் சில வன்முறைகளில் ஈடுபட வேண்டியது அவசியம் என்று மோகன் பகவத் கூறியதாக அசீமானந்த் அந்த நேர்காணலில் கூறியிருந்தார். ஆனாலும் அவரை மோகன் பகவத் எச்சரித்திருந்தார். “இதனை சங் பரிவாரத்துடன் இணைக்காதீர்கள். … நீங்கள் அவ்வாறு செய்தால்தான், பின் நாம் குற்றங்களைப் புரிய வேண்டும் என்பதற்காகவே குற்றங்களைப் புரிகிறோம் என்று மக்கள் சொல்ல மாட்டார்கள். இது சித்தாந்தத்துடன் சம்பந்தப்பட்ட விஷயம். இது இந்துக்களுக்கு மிகவும் முக்கியம். தயவுசெய்து செய்திடுங்கள். உங்களுக்கு எங்கள் ஆசிகள் உண்டு.” என்று மோகன் பகவத் அறிவுறுத்தி இருந்தார்.
சிறுபான்மையினருக்கான படுகொலைகள் என்பவவை ஆர்எஸ்எஸ் இயக்கம் அதிக அளவில் முயற்சிகள் மேற்கொண்டதும் மற்றும் நம்பக்கூடியதுமான உத்தியாகும். உண்மையில், ஒரு டஜன் படுகொலைகளுக்கும் மேல் அதனுடைய தொடர்புகள் உண்டு. 1947இல் இத்துணைக்கண்டத்தின் பல பகுதிகளிலும் ஊடுருவி, சுமார் 50 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்திருப்பதாக அது பீற்றியது. பிரிட்டிஷார் வெளியேறிக் கொண்டிருந்தனர். இந்தியத் துணைக் கண்டம் பிளவுபட்டுக்கொண்டிருந்தது. ஜம்மு-காஷ்மீர் மகாராஜா, பாகிஸ்தானுடன் சேர்வதா அல்லது இந்தியாவுடன் சேர்வதா அல்லது தனித்தே சுதந்திர நாடாக இருப்பதா, எதைத் தேர்ந்தெடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார். அவர் இவ்வாறு ஊசலாடிக்கொண்டிருந்த நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவர் அவரைச் சந்தித்து, இந்தியாவுடன் சேரும்படி நிர்ப்பந்தம் கொடுத்தார். இவரது சந்திப்புக்குப்பின், ஜம்முவில் இருந்த முஸ்லீம்களைப் ஆர்எஸ்எஸ்-உடன் சேர்ந்து கொண்டு மகாராஜாவின் துருப்புக்கள் கொன்றுகுவித்தன. இறுதியில், கொல்லப்பட்டோர் எண்ணிக்கை மிகவும் அதிகம். குறைந்த மதிப்பீடுகளின்படியே இறந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரமாகும். 1948இல் தி டைம்ஸ் ஆப் லண்டன் இதழ், “2,37,000 முஸ்லீம்கள் திட்டமிட்டே அழிக்கப்பட்டனர்” என்று குறிப்பிட்டிருந்தது.
1969இல் குஜராத்தில் நாடு பிரிவினை அடைந்தபின் மிகவும் மோசமான முறையில் வகுப்புக்கலவரங்கள் நடைபெற்றன. ஆர்எஸ்எஸ் மூன்று நாட்கள் நடத்திய பேரணியில் அதன் தலைவர் “இந்து தேசத்திற்கு” அறைகூவல் விடுத்திருந்தார். அந்தப் பேரணியில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரும் இதர இந்து தேசியவாதக் குழுக்களும் கைகளில் கத்தியை ஏந்தியவண்ணம் வந்தனர். அவர்கள் முஸ்லீம்களை மாநிலம் முழுதும் தாக்கினர். இதில் 400 பேர் இறந்ததாக அதிகாரபூர்வமாகச் சொல்லப்பட்டது. எனினும் அதிகாரபூர்வமற்றமுறையில் இறந்தோர் எண்ணிக்கை 2,000 ஆகும்.
இதற்கு அடுத்த இருபதாண்டுகளில் எண்ணற்ற படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்றுள்ளன. 1970 முதல் 1989 வரை, பீகார், குஜராத், மகாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். எனினும் ஆர்எஸ்எஸ் இயக்கம் இவை எதற்கும் தங்களுக்குச் சம்பந்தம் இல்லை என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆயினும் சாட்சிகளும் புலனாய்வுகளும் இவற்றின் துணை ராணுவப் படைகளும், இதன்கீழ் இயங்கும் அமைப்புகளுமே இவற்றிற்குக் காரணங்கள் என்று காட்டுகின்றன.
எனினும், இறுதியில் ஆர்எஸ்எஸ் வெளிப்படையாகவே இயங்க ஆரம்பித்துவிட்டது.
பாபர் மசூதி
பாபர் மசூதி அயோத்தியில் 1500ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே இருந்து வந்தது. 1980களின் மத்தியில், விஎச்பி மசூதி இருக்கும் இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது. விரைவில் இந்தப் பிரச்சாரத்துடன் பாஜகவும் தன்னை இணைத்துக் கொண்டது. கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி தலைமையில் 1992 டிசம்பரில் மசூதியைச் சுற்றி ஊர்வலங்கள் நடைபெற்றன. அத்வானியும் இதர பாஜக தலைவர்களும் அவற்றில் உரைநிகழ்த்தினார்கள். அவர்களின் வெறிப்பேச்சுக்களைக் கேட்ட கும்பல்கள் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கின. பின்னர் முஸ்லீம்களைப் படுகொலைகள் செய்வதும் நடைபெற்றன. வட இந்தியா முழுவதும் முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலைகள் நடந்தன. இவை அடுத்த ஆண்டு வரை நீடித்தன. இறந்தோர் எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டியது. இந்த வன்முறைச் சம்பவங்கள் எதுவும் தன்னெழுச்சியாக நடந்தவை அல்ல. ஐ.நா. ஸ்தாபனத்தின் புலன்விசாரணை, “சங் பரிவாரம் கூட்டத்திற்குள் ஊடுருவி, மசூதியை இடிப்பதற்குத் திட்டமிட்டன மற்றும் முஸ்லீம்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தன. முஸ்லீம்களின் வீடுகள் மற்றும் கடைகள் சூறையாடப்பட்டன. இவற்றுக்குப்பின் விரிவான அளவில் வன்முறைகள் நடைபெற்றன,” என்று கூறியிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம், ஆர்எஸ்எஸ், விஎச்பி மற்றும் பஜ்ரங் தளம் ஆகியவற்றைத் தடை செய்தது. ஆனாலும் 1998இல் பாஜக முதன்முதலாக தேசிய அளவில் அதிகாரத்திற்கு வந்தது. அத்வானி துணைப் பிரதமர் ஆனார்.
2002 பிப்ரவரியில் குஜராத்தின் முதலமைச்சராக மோடித் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும், பாஜக மத்தியில் அதிகாரத்தில் இருந்தது. மூன்று நாட்கள் கழித்து, குஜராத் மாநிலத்தில் படுகொலைகள் அரங்கேறின. அயோத்தியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த ஒரு ரயில் கொளுத்தப்பட்டது, இந்து யாத்ரிகர்கள் 59 பேர் கொல்லப்பட்டார்கள். மோடி உடனடியாக இதனை ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்றும் இதற்கு பாகிஸ்தான் காரணம் என்றும் பிரகடனம் செய்தார். பின்னர் அவருடைய அரசாங்கம் எரிந்த சடலங்களை மாநிலத்தின் தலைநகருக்குக் கொண்டுவந்து விஎச்பியிடம் ஒப்படைத்தது. அவர்கள் மாநில அளவில் பந்துக்கு அறைகூவல் விடுத்தனர். பின்னர் மாநிலம் முழுதும் ரத்தக்களறி தொடங்கியது. மூன்று நாட்களாக, குண்டர் கும்பல்கள் குஜராத்தில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டன. மாநிலத்தில் உள்ள 12 பெரிய நகரங்களில் இவ்வாறு வன்முறைகள் வெடித்தன. இவற்றின் முடிவில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். குண்டர் கும்பல்கள் தங்கள் கைகளில் வாக்காளர் பட்டியல்களை வைத்துக்கொண்டு, முஸ்லீம்கள் இருக்குமிடங்களைக் குறிவைத்துத் தாக்கியதாக கண்ணால் கண்ட சாட்சிகள் கூறியுள்ளனர். சில கும்பல்களுக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்களே தலைமை தாங்கியிருக்கின்றனர். ஆயுதங்களை அளித்துக் கட்டளைகளும் பிறப்பித்திருக்கின்றனர். வன்முறைத் தாக்குதலில் தப்பிப்பிழைத்தவர்கள் காவல்துறையினரிடம் தங்களைக் காப்பாற்றுங்கள் என்று உதவி கோரியபோது, அவர்கள் சில சமயங்களில், “உங்களைக் காப்பாற்றுமாறு எங்களுக்கு உத்தரவு எதுவும் இல்லை,” என்று கூறியதாகத் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரில் சிலரும் துப்பாக்கியால் சுட்டதாகச் சில சாட்சிகள் கூறியுள்ளனர்.
வன்முறை சம்பவங்கள் முடிந்தவுடன், பாஜக மாநில அமைச்சர் (இவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினருமாவார்) விசில் ஊதினார். அவர் ஊடகங்களிடம் தானும் இதர அமைச்சர்களும், காவல்துறை அதிகாரிகளும் மோடியின் வீட்டில் இன்றிரவு நடக்கும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவர்களிடம் குண்டர் கும்பல்கள் கலவரங்களை மேற்கொள்ளும்போது, “நீங்களும் அங்கே அவர்களுடன் நிற்க வேண்டும்” என்றும், “அப்போதுதான் குண்டர் கும்பல்கள் தங்கள் விரக்தியை வெளிப்படுத்த முடியும்” என்றும் கூறினாராம். இக்கூற்று சரியானதே என்று உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் ஒத்துரைத்திருக்கிறார். இந்திய இதழ் ஒன்று கலவரங்களைப் புரிந்திட்ட நபர்களைச் சந்தித்துப் பேட்டி கண்டபோது, ஆர்எஸ்எஸ், விஎச்பி மற்றும் பாஜக-வினர் பலர் தாங்களும் அப்படுகொலைகளைச் செய்ததாகக் பீற்றிக்கொண்டுள்ளனர். மோடி அவர்களிடம், “மூன்று நாட்கள் கால அவகாசம் தருகிறேன் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்,” என்று கூறியிருந்தாராம்.
2008இல் ஒடிசாவில் சிறுபான்மையினருக்கு எதிராகப் படுகொலைகள் நடைபெற்றிருக்கிறது. அங்கே விஎச்பி தலைவர் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். இதற்கு கிறித்தவர்களே காரணம் என்று அங்குள்ள குழுவினர் குற்றம் சுமத்தி இருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் தலைமையின்கீழ் குண்டர் கும்பல்கள் கிறித்துவர்களின் வீடுகளையும், சர்ச்சுகளையும், அநாதை ஆசிரமங்களையும்கூட தாக்கி இருக்கின்றன. இச்சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கிறித்துவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர், பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் இது குறித்து ஒடிசா முதல்வர், “ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங் தள் ஆட்கள் இந்த சம்பவங்களில் ஈடுபட்டதாகக்” கூறியிருக்கிறார்.
இன்றைய ஆர்எஸ்எஸ்-இன் தலைவரான மோகன் பகவத், ஆர்எஸ்எஸ் குடும்பத்தினருடனேயே வளர்ந்தவர். அவருடைய தந்தை, ஹெக்டேவாருக்கம், கோல்வால்கருக்கும் மிகவும் நெருக்கிய கூட்டாளி. அவரே கோல்வால்கரின் மரணத்திற்குப் பின் இரு ஆண்டுகளில் அதன் பிரச்சாரகராக மாறினார்.
பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் 1950இல் தன்னைப் பிணைத்தக் கொண்டார். 1971இல் கோல்வால்கரின் தலைமையின்கீழ் அதன் பிரச்சாரகராக மாறினார்.
இன்றைய தகவல் தொழில்நுட்பக் காலத்தில் ஆர்எஸ்எஸ் மிகவும் எச்சரிக்கையாக தன் சித்தாந்தத்தை முன்னெடுத்தச் சென்று கொண்டிருக்கிறது. 2006இல் ஆர்எஸ்எஸ், தன்னுடைய குரு எழுதிய “நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம்” (“We or Our Nationhood Defined”) என்னும் நூலைத் தங்களுடையது அல்ல என்றும், அதில் உள்ள கருத்துக்கள் குருஜியினுடையதோ அல்லது ஆர்எஸ்எஸ்-இனுடையதோ அல்ல என்றும் கூறி வந்தது. ஆயினும், 1950களிலேயே, அறிஞர்கள் அதுதான் சங் பரிவாரத்தின் “பைபிள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். 1970களில், மூத்த ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இந்து தேசத்திற்கான கோரிக்கைகளை “அறிவியல் அடிப்படையில்” அளிப்பதாக எழுதியிருக்கிறார்கள். எனவே அந்நூல் தங்களுக்கானது அல்ல என்று மறுப்பது ஏமாற்று வேலையேயாகும்.
கோல்வால்கரின் செல்வாக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் உறுப்பினர்களிடம் இப்போதும் ஆதிக்கம் செலுத்துகிறது. அவர்கள் நடத்திடும் ஊர்வலங்களில் எல்லாம் சேவக்குகள் அவரின் படத்தை ஏந்தி வருவதைக் காண முடியும். மோடி, தனக்குப் பிரதானமாக உத்வேகம் அளித்துவருபவர் கோல்வால்கர் என்றும், அவர் ஒரு மாணிக்கம் (gem) என்றும் “கும்பிடும் அளவிற்கு மதிப்புமிக்க தலைவர்” (“Guru worthy of worship”) என்றும் குறிப்பிடுகிறார். அமித் ஷா, “பாரதத் தாய்க்கு சேவகம் செய்திட எங்களை ஊக்குவித்துவருபவர் குருஜி கோல்வால்கர்,” என்று புகழ்ந்திருக்கிறார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றின்பின்னால் உந்து சக்தியாக இருந்து வரும் அமித் ஷா, வெளிப்படையாகவே முஸ்லீம்களுக்கு எதிராக வெறிச்சொற்களை உதிர்த்து வருகிறார். உதாரணமாக, சமீபத்தில் அவர், இந்தியாவில் குடியேறியுள்ள முஸ்லீம்களை “ஊடுருவலாளர்கள்” (“infiltrators”)” என்றும், “கரையான்கள்” (“termites”) என்றும் விளித்திருக்கிறார். இப்போது “அயலார்களுக்கு” எதிராக தாக்குதல் தொடுக்கும் இந்த சமயத்தில் ஹெக்டேவாரை மேற்கோள் காட்டுவது அவசியம் என்று கருதுகிறார்.
ஆர்எஸ்எஸ்-இன் எதிர்காலம் என்ன?
ஆர்எஸ்எஸ் இயக்கம் இப்போது முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று அதன் தலைமை கூறியிருக்கிறது. “இது தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்க வேண்டும்,” என்று ஹெக்டேவார் கூறினார். “அது தொடர்ந்தும் விரைந்தும் வளர்ந்தால் மட்டுமே நம் இலக்கினை நாம் எய்திட முடியும்,” என்று மோகன் பகவத் 2018இல் கூறினார். அப்போது மேலும் அவர், “ராணுவம் ஒருவரைத் தயார் செய்திட 6, 7 மாதங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய அதே சமயத்தில் நாம் அதேபோன்று ஒருவரை 3 நாட்களுக்குள் தயார் செய்திட முடியும்,” என்றும் கூறினார். உண்மையில், அவர்களின் அடுத்த இலக்கு இந்திய ராணுவத்தையும் தங்களுடையதாக மாற்றுவதே என்பதுபோல் தோன்றுகிறது. உத்தரப்பிரதேசத்தில், அது ராணுவத்தில் அதிகாரிகளாக மாறக்கூடிய விதத்தில் குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய முதல் ராணுவப் பள்ளிக்கூடத்தை துவக்கி இருக்கிறது.
எதிர்காலம் எப்படி இருக்கும் என்று இப்போது சொல்லமுடியாவிட்டாலும், ஒன்றுமட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஆர்எஸ்எஸ்-இன் ஆட்சியின்கீழ் இந்தியாவில் இன்றையதினம் இந்து தேசியவாத இயக்கத்தை நிறுவிய முன்னோர்களின் பாசிச சித்தாந்தம், அதன் நாசகர விளைவுகளுடன் மிகவும் விரைவாக அமல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. எவ்வளவு காலத்திற்கு அது ஆட்சியில் நீடிக்கிறதோ அவ்வளவு காலத்திற்கு அதரன் நாசகர விளைவுகளும் தொடரும்.
(கட்டுரையாளர், தெற்காசியாவில் நடைபெற்றுவரும் நடப்பு வரலாற்று நிகழ்வுகளை ஆழமாக ஆய்வு செய்துவருபவர். அமெரிக்காவில் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர். அவருடைய கட்டுரைகளை @Friedrich Pieter என்னும் ட்விட்டர் பக்கத்தில் காணலாம்.)
நன்றி: The Polis Projct.