தமிழ்நாடு திரைப்பட விழா(TNFF) இந்த ஆண்டு நவம்பர் 7-9  தேதிகளில் குறும்படம், ஆவணப்படம், முழுநீளப் படம் ஆகிய வகைகளில் பல திரைப்படங்களை இணையவழியில் திரையிட்டது. அதில் இரண்டு குறும்படங்கள் குறித்த ஒரு பார்வை.

சொல்லப்படாத காகிதக் கப்பல்களின் கதை (The Untold story of Paper Boats)

இருபது நிமிடங்கள் ஓடும் இந்தி குறும்படம். 2016இல் தயாரிக்கப்பட்டது. அமித் கன்னா என்பவர் இயக்கியுள்ளார். 2019,2020 ஆண்டுகளில் கல்கத்தா திரைப்பட விழாக்களில் தயாரிப்பாளர், இயக்குனர் விருது பெற்றது.  பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கும் ஒரு மாணவன். மற்றவர்கள் விளையாடும்போது கூட விளையாடுவதில்லை. அவன் தந்தை குடிகாரர். பள்ளிக் கட்டணம் கட்ட முடிவதில்லை. தட்டிக் கேட்கும் மனைவியை அடித்து நொறுக்குகிறார். அந்த கிராமத்திற்கு அருகில் தீவிரவாதிகளின் முகாம் நடக்கிறது. அதில் பல சிறுவர்கள், சிறுமிகள் இருக்கிறார்கள். இந்த மாணவனை கொஞ்சம் கொஞ்சமாக தீவிரவாதிகள்  தங்கள் பக்கம் சேர்த்து விடுகிறார்கள். முதல் மதிப்பெண் வாங்கிய தன் விடைத்தாளை கிழித்து கப்பல் செய்து ஆற்றில் விட்டுவிட்டு அந்த முகாமில் சேருகிறான். துப்பாக்கி பயிற்சி தருகிறார்கள். பணமும் தருகிறார்கள். அதையும் அவன் தந்தை குடிப்பதற்கு எடுத்துக் கொள்கிறான். முகாமில் ‘1947இல் கிடைத்தது சுதந்திரம் இல்லை. நம் நாடு தாய் போன்றது. அதை விடுவிக்க வேண்டும். அதை அவமானப்படுத்தும் யாரையும் பொறுத்துக் கொள்ளக்கூடாது.’ என்று மீண்டும் மீண்டும் சொல்லி மனதில் பதிய வைக்கிறார்கள். வீட்டிற்கு வரும் அந்த மாணவன், தன் தந்தை தாயை அடித்து நொறுக்குவதைப் பார்த்து கோபப்பட்டு துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொன்று விடுகிறான். இதுதான் கதை.

An Untold Story of Paperboats (2016) - IMDb

                    கடுமையான சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாகும் மக்களிடமிருந்துதான் ஆயுதப் போராட்டத்தை தீர்வாகக் கொண்ட தீவிரவாத குழுக்களுக்கு தொண்டர்கள் கிடைக்கிறார்கள். தன் தந்தை குடிக்கிறார், பள்ளிக் கட்டணம் கட்ட முடியவில்லை என்பதால் ஒரு மாணவன் தீவிரவாதக் குழுவில் சேருவானா? பலவீனமான கருவாகத் தோன்றுகிறது. தீவிரவாதம் ஏன் தோன்றுகிறது என்றோ, குடிப் பழக்கத்திற்கு என்ன தீர்வு என்றோ, குடும்ப வன்முறையை எவ்வாறு எதிர்கொள்வது என்றோ பார்வையாளர்களை சிந்திக்க வைக்க எந்த முயற்சியும் இல்லை.

மனைவியை அடிக்கும்போது ‘கணவனை எதிர்த்துப் பேசுகிறாயா? கணவனை எதிர்த்துப் பேசுகிறாயா?’ என்று திரும்ப திரும்ப கேட்டு அடிக்கிறான். இந்த இடம் இந்திய ஆண் உளவியலை சரியாக காட்டுகிறது.  

Vagupparai 4B Songs Download: Vagupparai 4B MP3 Tamil Songs Online Free on  Gaana.com

வகுப்பறை 4பி 

        2020ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட தமிழ் குறும்படம். ஜமீர் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். 2020 இந்தோ-ரசியன் குறும்பட விருது உள்பட பல்வேறு பரிசுகளை வென்றிருக்கிறது. செல்லூர் குமார் என்பவர் மாரி எனும் தந்தையாகவும் தென்னரசு எனும் பையன் அவரது மகன் குட்டியாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அரசு 800 பள்ளிகளை மூடிவிடுகிறது. அதில் குட்டி படிக்கும் தொடக்கப் பள்ளியும் ஒன்று. பள்ளி என்று திறக்கும் என்று ஆவலாக காத்திருக்கும் குட்டிக்கு பூட்டியிருக்கும் பள்ளிக் கதவுகள் அதிர்ச்சி அளிக்கிறது. சந்தேகம் தீராமல் மதில் ஏறி உள்ளே போய் பார்க்கிறான். ஒரு நாய் தவிர யாரும் இல்லை. அவனுடைய நண்பன் பக்கத்து ஊர் பள்ளியில் சேர்ந்துவிடுகிறான். இவனுடைய தந்தைக்கு அந்த வசதி இல்லை. பள்ளி மூடப்பட்டது என்பதும் அவனுக்குத் தெரியவில்லை. பள்ளி மூடினால் தன்னுடன் வேலைக்கு வந்து தினம் ரூ 250/  சம்பாதிக்கலாம் என்கிறான். குட்டி தான் படிப்பதை விட முடியாது என்று அழுத்தமாக சொல்லி விடுகிறான். 

குட்டியின் நண்பன் புதிய சீருடை அணித்து தன் தந்தையுடன்  பைக்கில் செல்கிறான். அவனிடமிருந்து ஒரு புத்தகத்தை பிடுங்கிக்கொண்டு குட்டி தினமும் தன் பள்ளியின் உள்ளே சென்று தனியாக உட்கார்ந்து படிக்கிறான். இதைப் பார்த்த மாரி கலங்கிப் போய் அவனை கடன் வாங்கியாவது எப்படியாவது படிக்க வைப்பேன் என்று சொல்வதுடன் கதை முடிகிறது.

பள்ளிகள் மூடுவது தொடர்பான தொலைகாட்சி விவாதம், மாரியை வேலைக்கு அழைக்கும் குமாரிடம் ஒப்பந்தகாரர்கள் தொடர்பான உரையாடல் போன்ற அரசியல் விசயங்களை இயக்குனர் வைத்திருக்கிறார். பள்ளி மூடல் தொடர்பாக அந்த கிராமத்தில் மக்கள் மத்தியில் எந்த சலசலப்பும் இல்லையா என்ற கேள்வி எழுகின்றன. மாரியின் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியும் அம்மா ஃபேனும் இருக்கிறது. கூடவே பழைய கால ரேடியோப் பெட்டி ஒன்றும் இருக்கிறது. இன்னும் கிராமபுற வீடுகளில் பழைய ரேடியோ இருக்கிறதா?

 கல்வி அடித்தட்டு மக்களுக்கு எட்டாக்கனியாகப் போய்விடுமோ என்ற நடப்பில் இருக்கும் ஒரு முக்கியப் பிரச்சினையையும் கிராமப்புற பொருளாதார நெருக்கடியையும் 25 நிமிடங்களில் விறுவிறுப்பாக காட்டியிருப்பதைப் பாராட்டவேண்டும். 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *