நூல் அறிமுகம்: தடை செய் – பார தீய விரோத நூல் (ஆதி இந்தியர்கள்) | மதிவாணன் பாலசுந்தரம்

நூல் அறிமுகம்: தடை செய் – பார தீய விரோத நூல் (ஆதி இந்தியர்கள்) | மதிவாணன் பாலசுந்தரம்

 

ஒரு குட்டிக்கதையோடு தொடங்கலாம். இது கொசுறு.

மாறுவேடத்தில் சிற்றூர் ஒன்றில் வலம் வந்த இளவரசன் , வயலில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞன் ஒருவன் அச்சு அசலாகத் தன்னைப் போலவே இருப்பது கண்டு துணுக்குற்றான்.
” உங்கம்மா அரண்மனையில வேல பாத்தாங்களா? ” என்றான் இளவரசன்.
” இல்ல.எங்கப்பாதான்…” என்றான் அந்த இளைஞன்.
***********
இந்திய வரலாற்றை ஒற்றை மூலத்திலிருந்து கட்டமைக்கும் வெறி மேலோங்கி அதிகாரம் செலுத்தும் காலத்தில் வாழ்கிறோம்.

அரப்பா நாகரிகத்தோடு ரிக்வேதத்தை முடிச்சுப்போட்டுச்
சிந்து- சரசுவதி நாகரிகம் என்று பேசத்தொடங்கிவிட்டது அதிகாரம்.

கல்வியை ஒற்றை மையத்தின் கீழ்க்கொணர்ந்து சமற்கிருதம் >ரிக் வேதம் > சிந்துவெளி > ஆரிய வர்த்தம் > பாரதம் என்பதன் கீழ் ஒட்டுமொத்த இந்தியப் பண்பாட்டையும் கொண்டுவரும் வேலை தொடங்கிவிட்டது.

ஆனால், பண்டைய ஏடறிந்த வரலாற்றுக்கு முந்தைய இந்தியா, வாய்வழிப் பனுவல் உருவாக்கம், ஏட்டுப் பதிவு என்பனவற்றை இதுவரை,
தொல்லியல்
மொழியியல்
பண்டைப் பனுவல்கள்
நிலத்தியல், தட்பவெப்பவியல் முதலிய துறைகள்வழியாக ஆராய்ந்தார்கள்.

கடந்த பத்தாண்டுகளில் மரபியல் எனப் பரவலாக வழங்கும் ஈனியல் (Genetics)வளர்ச்சி
புதிய தெளிவுகளை உண்டாக்கியிருக்கிறது.

இந்த அடிப்படையில் , தொல்லியல் முதலிய பிறவற்றையும் கொண்டு இதழாளர் டோனி ஜோசஃப் ஆய்வு நூல்கள் பல பயின்றும் அறிஞர்களோடு மணிக்கணக்கில் உரையாடியும் ஆறாண்டுப் பேருழைப்பில் 2018இல் ஆங்கிலத்தில் Early Indians என்னும் நூலை எழுதினார்.

அதன் தமிழாக்கம் இரண்டே ஆண்டுக்குள் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.

ஏறத்தாழ இருநூறாண்டுக் காலமாக நிகழும் ஒரு தேடலை, அதில் இடம்பெற்ற ஊகங்களை , திட்டமிடப் படாமலும் , திட்டமிட்டும் நேர்ந்த திசைதிருப்பல்களை, புதிய ஆராய்ச்சிகளால் , ஆராய்ச்சி முறைகளால் சம்பந்தா சம்பந்தமற்றவை எனக் கருதப் பட்டவற்றுக்கிடையில் காணும் வியப்புக்குரியதொடர்புகளை, சிறிதுசிறிதாக வெளிச்சம் படர்ந்து தென்படும் துலங்கல்களை , பின்தொடரும்போது ஒரு துப்பறியும் கதையின் விறுவிறுப்பை உணரமுடிகிறது. கதை இன்னும் முடியவில்லை ; முடியாது. ஆனால் உண்மையின் பாதை புலப்பட்டுக்கொண்டே வருகிறது என்று சொல்லலாம்.

இது, ஆழமான ஆராய்ச்சி நூல்தான் என்றாலும், ஆர்வமுள்ள பெரும்பாலானோரை நோக்கி எழுதப்பட்டுள்ளது.

ஆசிரியர் ஓர் இதழாளர் என்பதால் மட்டுமன்றி, ‘ பதிப்பாசிரியர் பார்த் பி. மெஹ்ரோத்ராவின் பொறுப்பும் தொழில்நேர்த்தியும் இக்கதை கூறப்பட்டுள்ள விதத்தைப் பெரிதும் மேம்படுத்தியிருப்பதும் ‘ (ப.259)இதன் சரளத்திற்குக் காரணம் .

திரு. பிஎஸ்வி குமாரசாமி நூலின் தன்மையுணர்ந்து தமிழாக்கியிருக்கிறார். குறிப்பாக இதில் பரவலாக இடம்பெற்றுள்ள ஆய்வறிக்கைத் தலைப்புகளை ஆங்கிலத்திலேயே கொடுத்திருப்பதாகக் கூறுகிறார். காரணம் அவற்றைத் தேடிப் படிக்க வாய்ப்பாக இருக்கும் என்பது. இது சரியானது (தமிழாக்கிவிட்டு அடிக்குறிப்பில் ஆங்கிலத்தில் தரலாம்).

இறுதியில் தமிழ் அகரவரிசையில் தமிழ்-ஆங்கிலம் கலைச்சொல் பட்டியலும் பெயர்ப் பட்டியலும் தரப்பட்டுள்ளன. இவை பயனுடையன. இன்னும் சில சொற்களைச் சேர்க்கலாம்.
[ஆனால் ‘குறித்தச் சர்ச்சை’, ‘ கள்ளங்கபடமற்றத் தன்மை ‘, ‘இடைப்பட்டக் காலம்’ எனச் சுவையான உணவின் ஒவ்வொரு உருண்டையிலும் கல் தட்டுப்படுவதுபோல், எல்லா இடத்திலும் சகட்டுமேனிக்கு , வருமொழி வல்லினமாயின் அகர ஈற்று வல்லிரட்டுச் சொற்களின் பின் வலிமிகுத்து எழுதப்பட்டுள்ளது ( தமிழ் முனைவர் யாரேனும் ‘திருத்தம்’ செய்தார்களோ!)அடுத்த பதிப்பில் கட்டாயம் திருத்த வேண்டும்]

இந்த நூலினூடாகவே இவ்வகை ஆய்வுகளுக்கான ஈனியல் அடிப்படை பற்றி ஓரளவு புரிந்துகொள்ளலாம் . ஆம் ஓரளவு ! எனக்கு ஓரளவே புரிந்தது . மேலும் கருத்தூன்றிப் படிக்க வேண்டும் (‘எல்லாவற்றையும் குலோப்ஜாமூனாக்கித் தரவேண்டும் என்று கேட்கக் கூடாது’ – சுந்தர ராமசாமி)

இந்தியாவை ஒரு பீட்சாவாக உருவகப்படுத்துகிறார் டோனி ஜோசஃப். எச்சரிக்கையாக இது, எளிமைப்படுத்தப்பட்ட உருவகம்தான் என்பதையும் அவர் சொல்லிவிடுகிறார்.

ஆதி இந்தியர்கள் யார்? – ஹெரிட்டேஜர்

65,000 ஆண்டுகளுக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய நவீன மனிதர்கள் (அதாவது, தற்கால மனிதர்களின் முன்னோடிகள்) நுழைந்தபோது பீட்சாவின் அடித்தட்டு ஆயத்தமாயிற்று. பொதுக் காலத்துக்கு முந்தைய 7000 ஆம் ஆண்டுவாக்கில் ஜாக்ரோஸ் மேய்ப்பாளர்கள் பலுசிஸ்தானை அடைந்து பின்பு முதல் இந்தியர்களோடு கலந்தபோது பீட்சாவின் அடித்தட்டின் மீது சாஸ் பரப்பப்பட்டது. இருமக்கள் பிரிவும் இனங்கலந்து உருவாக்கியதுதான் அரப்பா நாகரிகம். பொ.கா.மு.2000ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆரியர்கள் வந்தபோது , பீட்சா மீது சீஸ் தூவப்பட்டது. இன்று ஆஸ்திரோ-ஆசிய, திபெத்திய-பர்மிய மொழிகள் பேசுவோரும் மேற்பரப்பின் சிறு தூவல்களாகச் சற்றே பரவினர்.
பின்னர் கிரேக்கர், யூதர், ஊணர், சிதியர், பார்சிகள், சித்தியர், மொகலாயர், போர்ச்சுக்கீசியர், ஆங்கிலேயர் போன்றோரும் பீட்சாவில் சிறு துணுக்குகளை விட்டுச்சென்றுள்ளனர்.

அரப்பா நாகரிகத்தை நான்கு யுகங்களாகக் காண்கிறார் ஜோசஃப்.

தொடக்ககால உணவு உற்பத்தி யுகம் (பொ.கா.மு. 7000 – 5500)
முற்கால அரப்பா யுகம் (பொ.கா. மு. 5500 – 2600)
முதிர் அரப்பா யுகம் (பொ.கா.மு. 2600 – 1900)
பிற்கால அரப்பா யுகம் (பொ.கா.மு. 1900 – 1300)
அரப்பா நாகரிக அழிவு போரால் நிகழ்ந்ததன்று; பெரும்பஞ்சத்தால் நிகழ்ந்தது.

ஆனால் ரிக் வேதம் வழிபாட்டு மரபுகளின் முரணை, பிறருடைய வழிபாட்டை இழிவாகப் பார்ப்பதைப் பதிவு செய்திருக்கிறது.

மொழிபற்றி மட்டும் பார்ப்போம்.

ஈரான் நாட்டின் வடமேற்கில் தொடங்கி , துருக்கியின் தென்கிழக்கு ஈராக்கின் வட கிழக்கு வரை படர்ந்தது ஜாக்ரோசிய(மலை)ப் பகுதி. அங்கிருந்து வந்த ஜாக் ரோசியர்களும் இந்தியத் துணைக்கண்ட முதல் இந்தியர்களும் பொ.கா.மு. 4700 – 3000ஆம் ஆண்டுகளுக்கிடையில் இனங்கலந்திருக்கவேண்டும் என டி.என்.ஏ. ஆய்வுகள் காட்டுகின்றன. இவ்வாறு கலந்த இனத்தினர் முற்கால, முதிர் அரப்பா நாகரிகத்தை உருவாக்கியவர்கள்.
ஜாக் ரோசியர் இடப்பெயர்வுக்குப் பின் , ஜாக்ரோசியப் பகுதியில் புழங்கிய ஈல மொழிக்கு முந்தைய முதனிலை ஈல/முதனிலை ஜாக்ரோசிய மொழியை அரப்பாவில் கலந்தவர்கள் பேசியிருக்கலாம். அப்போது அரப்பாவில் பேசப்பட்டது முதனிலைத் திராவிட மொழியாயிருக்கலாம் என்பதற்கான மொழியியல் சான்றுகளை டி.என்.ஏ. ஆய்வும் உறுதிசெய்வதாகக் கூறுகிறார் ஜோசஃப்.

ஈல , தமிழ் வரிவடிவ ஒப்புமை குறித்து 1853 இலேயே எட்வின் நாரிஸ் எழுதியுள்ளார்.
கால்டுவெல் நோரிசை மேற்கோள் காட்டுவதோடு , இருமொழிகளுக்குமிடையிலான தொடர்பு குறித்தும் எழுதியிருக்கிறார்.

மெக் ஆல்பின் 1981 இலேயே முதனிலை ஈல – திராவிடத் தொடர்பைச் சற்று விரித்து ஆணித்தரமாகக் காட்டினார். 2013 இல் சவுத் வொர்த்துடன் இணைந்து எழுதிய கட்டுரையில் 81 சொற்கள் கொண்டு தொடர்புகளை விளக்கினார்.
இவற்றுள் பத்துச் சொற்களை எடுத்துக்காட்டியுள்ளார் ஜோசஃப் (பக்.165 – 166)

சரி. அரப்பாவில் இந்திய- ஐரோப்பிய மொழிகளுள் ஒன்று பேசப்பட்டிருக்கு முடியாதா?
இந்திய- ஐரோப்பிய மொழிகளின் பரவல் கால அட்டவணைப்படி பொ.கா.மு. 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகே – அரப்பா நாகரிக வீழ்ச்சிக்காலத்தில் – தெற்காசியாவை அடைந்தது. இதனை டி.என்.ஏ. ஆய்வும் உறுதிசெய்கிறது.

பின்னிணைப்பாக உள்ள ‘கக்கர் – ஹக்ரா பள்ளத்தாக்கு ‘ என்னும் கட்டுரை மிக முக்கியமானது; ரிக்வேதம் குறிப்பிடும் சரஸ்வதி ஆறு பற்றியது.

இன்னும் சாதி உருவாக்கம், சமயங்கள், இந்திய- ஐரோப்பிய மொழிகளின் பெரும்பரவல், சமற்கிருத வளம் , வேத , உபநிடத வழி பிராமண மதம், சமண பௌத்தம், உணவுப்பழக்கமும் ஈனியல் பண்பும் என்று பலவற்றையும் பேசுகிறது இந்நூல்.

படித்துப் பாருங்கள்.

இந்தியர் அனைவருமே வந்தேறிகள்தாம். காலமும் வந்த வழிகளும்தாம் வேறுவேறு. இந்த வந்தேறிகளின் கலப்பில் உருவானதே இந்தியப் பண்பாடு என்று ஒரு சமரச நிலைப்பாட்டுடன் நூலை நிறைவு செய்திருக்கிறார் ஜோசஃப்.

ஆனால், வைதிக சமற்கிருதத் திணிப்பும் திராவிட மொழிகளை ஒடுக்குதலும் என்னும் போக்கும் டி.என்.ஏ.வில் ஊறி, வரலாற்றில் தொடர்கிறதோ என 2020 இன் முடிவிலும் எதார்த்த வரலாறு வினாவை முன்வைத்துக்கொண்டிருக்கிறது.
ஆரிய x திராவிடப் போராட்டத்தின் புதுப் போக்கு !

***********
தொடக்கத்தில் கொசுறாகத் தந்திருக்கும் குட்டிக்கதையின் புதிரை ஈனியல் எளிதாக விடுவித்துவிடும். இதே போன்ற தொல்வரலாற்றுப் புதிர்களையும் அது தீர்க்க முனைகிறது (கதையில் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கத் தன்மை பொறுத்திடுக).

மதிவாணன் பாலசுந்தரம்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *