புத்தக விமா்சனம் “ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை” |  மதிப்புரை எஸ்.சம்பத்

புத்தக விமா்சனம் “ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை” |  மதிப்புரை எஸ்.சம்பத்

1970 களில் பள்ளிப் படிப்பு படிக்கின்ற காலத்தில் சிந்துசமவெளி நாகரீகம், மொஹஞ்சதாரோ ஹரப்பா என வேண்டா வெறுப்பாக ஒன்றிரண்டு பாடங்கள். அதை சாய்ஸில் விடும் கேள்விகளில் புறந்தள்ளிவிடுவோம் என நகர்ந்த நினைவு. ஆனால் வேலைக்குச் சென்ற பிறகு சில சுற்றுலாத் தலங்களில் அருங்காட்சியகங்களை காண்கையில் அங்கு ஆங்கிலேயர்கள் காலத்தில், அதற்கு முன்னதான மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய ஆடைகள், ஆயுதங்கள், நாணயங்கள், வாகனங்கள் என பார்க்கிற போது இவையெல்லாம் சேமித்து வைக்கப்பட்ட தொல்லியல் ஆய்வுப் பொருட்கள் என பார்ப்பதோடு அவற்றின் மீதான ஆர்வம் நின்றுவிட்டதுண்டு.

புத்தக ஆசிரியர் இந்த நூலை எழுதுவதற்கு தனக்கு துவக்கப்புள்ளியாக அமைந்தது மதுரைக்கு அருகே அமைந்துள்ள கீழடியில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சி, அதன் மீதான நீதிமன்ற தலையீடு, தொடர்ந்து செய்தி ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வந்த செய்திகளால் ஏற்பட்ட உந்துதலினால் எழுத முனைந்ததாக தெரிவித்திருப்பார். அதே காரணம்தான், எனக்கு இந்த புத்தகத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. நமது ஊரின் வைகை கரையில் அமைந்துள்ள கீழடியில் தோண்டத் தோண்ட கிடைத்த அரிய பொருட்களைக் கொண்டு வந்த செய்திகளை படித்ததால், வைகை நதிதீர நாகரீகத்தின் மீதான ஆர்வம் என்பது இருந்தது.

                         ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் | நன்றி தினமலர்

இன்னமும் கீழடியில் தொல்லியல் ஆய்வு என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியூர் சென்று விட்டு மதுரை திரும்புகையில் கீழடி செல்லும் வழிகாட்டி நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்தது. மதுரையிலேயே இருந்தாலும் இன்னும் அந்தப் பகுதியை சென்று பார்க்கவில்லை. விரைவில் சென்று பார்த்து வர வேண்டும்.

நூலாசிரியர் ஏராளமான (உ-ம்)கரிமப்பகுப்பாய்வு) தமிழ்ச் சொற்களை பயன்படுத்தியிருப்பதோடு, அங்கங்கே ஒவ்வொரு கட்டுரையின் நடுவிலும் பெரும்பாணாற்றுப்படை, நெடுநல்வாடை, மற்றும் பெரியபுராணம் என பல தமிழ் இலக்கியப் பாடல்களைச் சொல்லி பல ஆய்வுகள் மேற்கொண்ட இடங்களுக்கு நம்மை கைபிடித்து அழைத்துச் செல்கிறார்.

நீலகிரிக்கும் எகிப்திற்கும் இடையிலான வாணிப தொடர்பு, பொன்னைக் கொடுத்து குங்கிலியம் வாங்கிய வணிகம், ஆதிச்ச நல்லூரில் கிடைத்த சிலைகளிலிருந்து தாய்மையைப் போற்றுகின்ற தாய் தெய்வம் என்கிற வழிபாட்டு விபரங்கள், வெள்ளலூரில் கிடைத்த மணற் சிற்பங்கள், ஆயுதங்களிலிருந்து பண்டைய போர் முறைகள், சேனைகள், குதிரைப்படை, காலாட்படைகள் போன்றவை செயலாற்றிய விதம், பையம்பள்ளி எனும் இடத்தில் கிடைத்த சான்றுகளை வைத்து மனிதனின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம் – குகைகளிலிருந்து வெளிவந்து விவசாயத்தை நோக்கி நகர்ந்தது, மற்றும் பல்வேறு தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த மண்டை ஓடுகளை கரிமப் பகுப்பாய்வு செய்ததில் 28 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பான சிம்பன்சியிலிருந்து, 60000 ஆண்டுகளுக்கு முன்பான ஹோமோ சேப்பியன்ஸ் வரையிலான ஆய்வறிக்கைகள் குறித்து என ஏராளமான செய்திகளுடன் படிக்க ஆர்வத்தை தூண்டுகிற வகையில் செய்திகளைச் சொல்லிச் சென்றுள்ளார்.

 கீழடி புதையுண்ட தமிழர் புதையல் | நன்றி Vanakkam America

கீழடி என்பது தலைப்பிலும், முன்னுரையிலுமான சொல்லாடலாக இருந்த போதிலும் கீழடி குறித்து இதுவரை ஊடகங்களில் படித்த செய்திகளை விட குறைவாகவே அது குறித்த செய்திகளைச் சொல்லியுள்ளார். கீழடியின் ஆய்வுகள் இன்னும் பல சென்றபின் அதைப்பற்றி தனியாக ஒரு புத்தகம் எழுதுமளவிற்கு எண்ணம் இருக்கும் என்றே எண்ணுகிறேன். பல்வேறு காலங்களில் அகழ்வாய்வுகள் நடந்திருக்கிறது. இருப்பினும் அவற்றையெல்லாம் தொகுத்து சுவைபட கதைகள் போல் சொல்லிச் செல்லும் ஆசிரியரின் எழுத்துக்கள் வியக்க வைக்கிறது.

நம் முன்னோர்களின் மொழியாற்றல், கைவினை, போர்க்கலை போன்ற நாகரிக பெருமைகளை அறிந்து கொள்ள முடிகிறது. தொல்லியல் ஆய்வுகளின் பாதையும் பயணமும் சார்ந்த ஏராளமான செய்திகளின் தொகுப்பு இந்நூல்.

                                 கீழடி அடையாளம் காணப்பட்டது எப்படி | நன்றி BBC

இந்த புத்தகத்தை படித்தபின் இனி வரும் நாட்களில் கீழடி செல்லும் போது, அருங்காட்சியகங்களில் ஆய்வுச் சான்றுகளை பார்க்கிற போது இன்னும் கொஞ்சம் ஆர்வத்துடன் பார்க்கத் தோன்றும் என்பதில் ஐயமில்லை.

நல்ல புத்தகத்தை அனுப்பி வைத்த தோழர் மருதனுக்கு நன்றி. தொல்லியல் ஆர்வலர் தோழர் நிவேதிதா லூயிஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

“ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை”

ஆசிரியர்: நிவேதிதா லூயிஸ்
பதிப்பு : கிழக்கு பதிப்பகம்

தோழமையுடன்,
எஸ்.சம்பத்

Show 1 Comment

1 Comment

  1. நா.வே.அருள்

    ஆதிச்சநல்லூரும் கீழடியும் இன்னும் நம் மனத்தில் அகழவேண்டிய ஆய்வுகள். தமிழனின் பெருமையைப் பறைசாற்றும் தரவுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *