கதைக்கு உள்ளே வெளியே என்று மனம் இருக்கக் கூடாது என்று ஆதிரை என்ற திடீர் பிரவேசக் குழந்தை சொல்வதைப்பற்றி பல நாட்கள் நினைத்துக் கொண்டிருந்தேன், பூடகமாயும், அபத்தமாயும் பல விசயங்கள் மனதில் தோன்றின.காற்றில் கரைந்து போகிறவளாயும் காற்றாகவும் இருக்கும் ஒரு மாயக்குழந்தை ஆதிரை. அவளோடு கதை குறித்து சொல்லியும் , கதை சொல்லியும் உரையாடலை மேற்கொள்ளும் க.வை. பழனிச்சாமியின் மனம் ” ஆதிரையின் கத சாமி” நூலில் வெளிப்பட்டிருக்கிறது. இரண்டு நாவல்கள், ஒன்பது கவிதைத் தொகுதிகள் , சிறுகதைத் தொகுப்பொன்று வெளியிட்டிருக்கும் க.வை.பழனிசாமியின் சிறுவர் நூல் இது.

அட்டைப்படத்திலேயே ” குட்டி இளவரசன் “ பாதிப்பு தெரிந்து விடுகிறது.இது பிரதி முழுக்க எப்படியோ ஆக்கிரமித்து விடுவதையும் கவனிக்க முடிகிறது. கடவுளை வைத்து உலகப் படைப்புகள் உருவானக் கதைகள் நிரம்ப உண்டு . அந்தக் கடவுளை கற்பனை மூலம் கத சாமி கட்டுடைக்கிறார். கற்பிதம் என்பதும் கட்டுடைக்கப்படுகிறது. பழைய கற்பிதங்கள் கொஞ்சம் உடைபட்டு புது கற்பிதங்கள் கிடைக்கின்றன. வழிபடும் கடவுள் விளையாட்டுப் பொருளாகிறார். அதை உடைத்து வேடிக்கையும் பார்க்க முடிகிறது. அதிலிருந்து தொன்மம் ஒன்று உருவாக்கப்படுகிறது. கதைகளை பிரதிகளை வாசிப்பவனே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்,கிளைக்கதைகளுக்கும் இது போன்ற நிறைய சாத்தியங்களை உருவாக்கும். மரப்பாச்சி பொம்மை நிறைய பொம்மைகளை உருவாக்குகிறது.நாம் வழக்கமாய் வாசிக்கும் சிறுவர் கதைகளிலிருந்து மாற்றாய் ஒரு பிரதி உருவாக்க நினைத்திருக்கிறார். புராணம், யதார்த்த, நீதி போன்ற அம்சங்களை மீறி பேண்டசி இதில் விளையாடுகிறது.



பல இடங்களில் நீள நீள வாக்கியங்கள் சிறுவர் நூலுக்கு கட்டுப்படவில்லை. கவிதையின், கவிஞரின் பாதிப்புகள் வார்த்தைப் பிரயோகங்களீல் தென்படுகின்றது. 110 பக்க புத்தகத்தில் 40 பக்கங்களுக்கு பிறகே கதை ஆரம்பிக்கிறது. அதுவரைக்கும் தன்க்குள்ளே பிரமித்துப் போகும் வார்த்தைகள், விளையாட்டுகள். விஞ்ஞானம் கூறும் உலகம் உருவான விதம் இல்லாமல் வெற்றிடமான உலகத்தை இவர் உருவாக்கும் போதே முரண் தோன்றிவிட்டது எனக்கு. அதிலும் இந்த விநாயகர் வந்து ஏன் இப்படி இம்சிக்கிறார். அதுவும் விரதம் இருந்து சாதிக்க வேண்டியவை பற்றிய விசயங்கள் வேறு வந்து விடுகின்றன. ” கடவுளும் கத சாமியும் “ என்று தலைப்பு வைத்திருக்கலாம் போலிருக்கிறது. மதங்கள் தீண்டாத தூயக் கடவுளுக்கான வேண்டுகோள் தென்படுவது ஆறுதலாக இருக்கிறது. பூவில் கூட பேண்டசி தன்மையை வலிந்து சொல்ல மனோரஞ்சிதம் இருக்கிறது . தமிழ் மண் சார்ந்த பூ காணாமல் போய் விட்டது. முகர்ந்தால் நாம் விரும்பும் மணமும், சுவைத்தால் நாம் விரும்பும் சுவையும் கிடைத்து விடுகின்றன இந்தக் குழந்தைகளுக்கு. சுதி பாட்டி,சுந்தரி பாட்டி என்று வந்து போகிறார்கள்.காற்றால் ஆன கதவு திறந்து விடும் உலகு கொஞ்சம் வித்தியாசமானது.

பூக்களின் உலகம், பொம்மைகளின் உலகம் என்று விரிவது வியக்கிறது ( எல்லாம் பார்த்து வியந்து வியந்து போவது பற்றி மாய்ந்து மாய்ந்து நிறைய வரிகள் ). “ நீங்கள் பார்க்கும் இந்தக்கடல் பூமியில் பார்க்கும் கடல் அல்ல. இது கதா சமுத்திரம் . கதா சமுத்திருக்கும் கதை மீன்கள் நாங்கள். கதை மரத்தில்தான் எங்கள் உலகம் பழமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது “ என்கிறார். பல இடங்களிலான நீளவாக்கியங்கள், உரையாடல் தவிர்த்த இடங்களில் ஹோட்டல், பஸ், வாக்கிங் போன்ற பல ஆங்கில வார்த்தைகள் நெருடுகின்றன.கதைகள் அதிகமில்லாத வியக்கும் பிரதி குழந்தையின் பேரன்பால் விரிகிறது ஆதிரையின் கதை மொழி கவை பழனிசாமியின் வியப்பிலும், சிறுவர்களுக்கான புது கதை மொழியை முன் வைக்கும் ஆசையிலும்இந்நூலில் காணப்படுகிறது. புது எல்லையை அவர் உருவாக்கும் ஆசையை நம்முள்ளும் கிளப்பி விடுகிறார்.

நூல்: ஆதிரையின் கதசாமி
க.வை.பழனிசாமி

110 பக்கங்கள்
விலை ரூ 225
காலச்சுவடு பதிப்பகம்
நாகர்கோவில்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *