ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள் புத்தகத்தின் ஆசிரியர் ஹஸ்தா சௌவேந்திர சேகர் ஜார்கண்ட் மாநிலத்தின் சந்தால் இனக்குழுவைச் சேர்ந்த ஒரு அரசு மருத்துவர். மருத்துவத்துறையில் பணியில் இருக்கும்போது பெற்ற அனுபவங்களும், பீகார் (இன்றைய ஜார்கண்ட்) நிலத்தில் உள்ள மற்ற சாதியினர் எப்படிச் சந்தால் இன மக்களை ஒடுக்கிவைத்திருக்கிறார்கள் என்பதையும் வாழ்வியல் கதைகளாக நம்மிடம் பகிர்கிறார்.
நிலம். ஆதியில் நிலம் தான் உருவானது. மதமும் அதன் அடிப்படையில் தான் தங்களது புனித நூல்களை உருவாக்கின. கோடி யுகத்தைக் கடந்தாலும் நிலம் அதன் வடிவ அமைப்பை மாற்றிக்கொண்டே இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது. இன்னும் கோடி வருடங்களும் அது உயிர் வாழும். ஆனால் அறுபதோ, எழுபதோ சொற்பமான சராசரி வயதைக் கொண்ட மனிதன் தான் அந்த நிலத்தின் மீது கணக்கற்ற அத்துமீறல்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறான். ஏனென்றால் நிலம் என்பது வெறும் நிலமல்ல. அது வளம் கொழிக்கும் ஊற்று. அது மனித வாழ்வின் உரிமையின் மீதான போரின் எச்சம். போனால் போகிறதென்று விட்டுவிட முடியாத தொன்மம்.
ஆதிவாசிகள் என்ற பெயரை எப்போது கேள்விப்பட்டோமோ அப்போதே நம் எல்லோருக்குள்ளும் ஒரு கேள்வி இருந்திருக்கும். ஆதிவாசிகள் எப்போது நிலமற்றவர்களாக ஆனார்கள்? நிலம் ஆதியில் உருவானபோது அந்த நிலம் யாரிடமிருந்தது? அவர்களிடமிருந்த நிலத்தை அபகரித்து அதே நிலத்தில் அவர்களை ஒடுக்கப்பட்டவர்களாக மாற்றி வைத்திருக்கும் அவலத்தை, அந்த நிலத்தில் வாழும் ஒருவர் சொல்லிக் கேட்டீர்களானால் அது தான் இந்த மொத்த சிறுகதைத் தொகுப்பும்.
“தட்டுல இருக்குற சோத்துல தான் மொதல்ல கை வைப்பாங்க” … உண்மை தான். உணவில் இருந்துதான் அவர்களின் யுத்தமே தொடங்குகிறது. ‘அசைவம் சாப்பிடுகிறார்கள்’ என்ற கதையில் வதோதராவுக்கு பணி மாற்றம் ஆகிப்போனதும் அவர்கள் வசிக்கும் வீட்டில் அசைவம் சாப்பிட வழியில்லாமல் வேறு பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டுக்குச் சென்று அசைவம் சாப்பிடுவதை வாசித்ததும் மனம் கனத்துப்போனது. ஒடுக்கப்பட்டவர்கள் என்றால் அவர்களுக்கு எந்த உரிமையும் இருப்பதில்லை.
‘புலம் பெயரத்தகுந்த மாதம் – நவம்பர்’ கதையில், பீகாரில் நிலக்கரிச் சுரங்க வேலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் போது, பெண்களானால் அவர்கள் அனைவரும் அங்கு இருக்கும் அனைவராலும் வன்புணரப்படுகிறார்கள். அந்தப் பெண்களும் ரயில் வண்டியில் ஏறி ஒரு குறிப்பிட்ட நிறுத்தத்தில் இறங்கியதும் , ரயில்நிலைய அதிகாரி ஒரு பெண்ணை தனி அறைக்கு அழைத்ததுச் செல்கிறான். அங்கு ஏதோ ஒரு நிச்சயச் சடங்கு போல ஒரு வன்புணர்வு நடந்தேறுகிறது.
விலைமகள்களாக விடப்பட்டவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று வரும் ஆண்கள் அங்குள்ள பெண்களிடம் காதல் வசப்படுவதும், இறுதியில் அவளும் விலைமகள் தானே என்று கழட்டிவிடுவதும் சாதாரண ஒரு நிகழ்வாக நடந்துகொண்டிருக்கிறது என்பதை ‘ அவள் ஒரு விலைமகளைத் தவிர வேறில்லை’ என்ற கதை பேசுகிறது.
உதவாக்கறையான முன்னாள் காதலன். அவனிலிருந்து விலகி விட பெற்றொர்கள் எச்சரித்து வேறொருவருடன் திருமணம் பேசிவிட, திருமணத்திற்கு முதல் நாள் இரவு காதலனுடன் கூடி அவன் பிள்ளையை வயிற்றில் சுமக்கும் ஒரு பெண். நல்ல அன்பான கணவன் என்று தெரிந்தும் கூட அவனை விட்டு அந்த உதவாக்கறையையே நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு பைத்தியக்காரி. அவளுக்கு இறந்தே பிறந்த ‘ நீலம் பூத்துப் பிறந்த குழந்தை ‘ என்று கதைகள் விரிகிறது.
தங்கள் குழந்தைக்கு நல்ல கல்வியைக் கொடுத்து நற்பிள்ளையாய் வளர்த்து ஆளாக்கி வைத்திருக்கும் ஒரு பெற்றோரும், அதைச் செய்யாமல் விட்டு அவதிப்படுகின்ற அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றவரும் என குடும்பங்களுக்குள் உள்ள யதார்த்த வாழ்வையும் ‘மகன்கள்’என்ற கதையில் கடத்துகிறார். அடிமைப்பட்டுக்கிடக்கிறோம் என்ற உணர்வைப் பெற்ற பெற்றோர்கள் , தங்களின் ஆயுதமாக்கிக் கொள்வதே கல்வியைத்தான் என்கிற உண்மையை அந்தக் கதை பேசுகிறது.
தனிப்பட்ட வாழ்வில் தோற்கும் மனிதர்கள், குடும்ப உறவுகளால் தொலைந்து போகின்ற மனிதர்கள், சமூக அவலங்களால் தினமும் சித்ரவதையை அனுபவிக்கும் பெண்கள், ஒடுக்குமுறைக்கே பழக்கப்பட்ட ஆதிக்குடிகள் என்று ஒவ்வொருவரையும் பிரித்துப் பகுத்து, அந்த நிலத்தின் அரசியலை ‘ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்’ என்ற இறுதிக்கதை வரையிலும் அழுத்தமாகப் பதிய வைத்துள்ளார் ஹஸ்தா சௌவேந்திர சேகர்.
நூலின் தகவல்கள்:
புத்தகம் : ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்
ஆசிரியர் : ஹஸ்தா சௌவேந்திர சேகர்
தமிழில் : லியோ ஜோசப்
வெளியீடு : எதிர் வெளியீடு
விலை: ரூ.
எழுதியவர்:
சாந்தி சண்முகம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.