நூல் அறிமுகம்: ஆடு ஜீவிதம் – அ.கோவிந்தராஜன்.



2009ல் கேரள சாகித்திய அகாடெமி விருது பெற்ற நாவல் இது.
பாலை நிலத்தில் வாழ்விற்கும் சாவிற்கும் நடக்கும் போராட்டத்தை மிக தத்ரூபமாக எழுத்தில் வடித்தெடுத்து இந்நூல் நமக்கு அளித்துள்ளது. வளைகுடா நாடுகளுக்கு வேலைவாய்ப்பைத் தேடி லட்சக்கணக்கான மக்கள்   இந்தியாவில் இருந்து  செல்கின்றனர். அங்கு அவர்களின் வாழ்வு எத்தகையது என்பது குறித்த எந்த புரிதலும் பொதுவாக நமக்கு இருப்பதில்லை.

ஒரு திரைப்படத்தில், வளைகுடாவில் வேலை பார்த்து திரும்பியிருக்கும்  நடிகர் வடிவேலுவை இயக்குநர் பார்த்திபன் நையாண்டி செய்வதாக ஒரு காட்சி வரும். அதில்,  ” நீ அங்க கக்கூஸ் கழுவுற வேலைய தான செஞ்ச” என்று. இது எவ்வளவு வலி மிகுந்த வரிகள். இவ்வசனங்களைக் கூடக் கேட்டு விட்டு நமது பங்கிற்கு சிரித்துக் கொண்டே தான் கடந்தோம். ஆனால் வளைகுடாவிற்கு பணி நிமித்தம் செல்லும் ஒவ்வொரு ஏழை, எளிய மனிதனின் வாழ்வு எவ்வளவு  வலியும், வேதனையும் மிகுந்தது என்று தெரிந்திருந்தால் இது போன்ற காட்சிகளை தவிர்த்திருப்போம்.

வளைகுடாவிற்கு சென்றவர்களின் வாழ்வு குறித்த இரு நாவல்களை சமீபத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்தது.
1. முஹம்மது யூசுப் எழுதிய “மணல் பூத்த காடு”.  இந்நூல் குறித்த விமர்சனத்தை பிறகு எழுதுகிறேன்.
2. ஆடு ஜீவிதம் – மலையாளத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட நாவல்.

“மணல் பூத்த காடு” தூத்துகுடியிலிருந்து வளைகுடாவிற்கு 2000ம் ஆண்டுகளுக்கு பின் சென்ற படித்த தமிழக இளைஞனின் கதை என்றால் “ஆடு ஜீவிதம்” 1990 களில் வளைகுடாவிற்கு சென்ற படிக்காத கேரள இளைஞனின் கதை.

ஆடு ஜீவிதம் : நாவல் ஒரு பார்வை |

1990 என்பது அரசாங்கத்தின் பழைய பொருளாதாரக் கொள்கைகள் எல்லாம் தோல்வியுற்று, புதிய தாரளமய, தனியார்மய கொள்கைகள் நடைமுறை படுத்தப்பட்ட காலம். பல நேரங்களில் விவசாயமும்  பொய்த்துப் போன காலமும் கூட. அத்தகு தருணங்களில், கிராமங்களில் வேலைவாய்ப்பு என்பது அரிதான விசயமாகவே இருந்தது. எனவே, தேசம் முழுவதும் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள்  தங்கள் வாழ்விற்காக புலம் பெயர்ந்து செல்லுதல் என்பது பல வழிகளில் நடைபெற்றது. கேரளாவில் அது வளைகுடா நாடுகளுக்கு செல்வதாக இருந்தது. அப்படி வளைகுடாவிற்கு  சென்று ஆடு மேய்த்த ஒரு இளைஞனின் அவல கதை தான் ஆடு ஜீவிதம்.

தன் எதிர்காலம் பற்றிய ஏராளமான கனவுகளுடன் கேரள கிராமம் ஒன்றிலிருந்து பறந்துச் செல்கிறான் நஜீப் எனும் இளைஞன்.  விமான நிலையத்தில் இறங்கியதில் இருந்து ஒவ்வொரு கணமும் அவனது வாழ்விற்கான போராட்டம் துவங்கி விடும். போனது கட்டிடப் பணிக்கு. செய்ததோ ஆடு மேய்ப்பு பணி. கொடூம் பாலை நிலத்தில் மழைத் துளி விழுந்தவுடன் காய்ந்து வெடித்துக் கிடக்கும் நிலத்துக்குள் ஆழப் புதைந்திருக்கும் பச்சையம் உயிர்த்து துளிர்ப்பது போல, சாவின் விளிம்பு வரை அவன் நிறைய முறைச் சென்றாலும் அவனுக்குள் உறங்கி கிடக்கும் உயிர் வாழ வேண்டும் என்ற வெறி தான் மீண்டும் அவனை சொந்த ஊருக்கு திரும்பச் செய்யும். இதற்கு இடைப்பட்ட நிகழ்வுகளின் விவரிப்பு தான் இந்நாவல்.

வறண்டுப் போன அத்துவான காட்டில் தனிமையில் உழல்கையில்  அடுத்தவரிடம் ஒரு வார்த்தை பேசி விட மாட்டாமோ? என்று தவிக்கும் தவிப்புகள், கேரள ஆற்றங்கரையில் தண்ணீரிலேயே புரண்டு எழுந்து விட்டு 10 மாதத்திற்கும் மேல் குளிக்காமல் ஒரு சொட்டு நீருக்காக  ஏங்கும் ஏக்கங்கள்  எல்லாம் மிக அழகாக  பேசப்பட்டிருக்கும். அடிமை வாழ்க்கையின் அவலச் சுவையை இந்நாவல் பதிவு செய்தது போல் வேறொன்று செய்திருக்குமா? என்பது சந்தேகமே.

“நீ ஆடு மேய்க்க தான் லாயக்கு” என சர்வ சாதரணமாக நாம் கேலி பேசுவோம். ஆனால், ஆடு மேய்ப்பதிலும், வளர்ப்பதிலும் எவ்வளவு நுணுக்கமான விசயங்கள் உள்ளன என்பதும் மிக அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

“பால் கறக்க வேண்டிய ஆட்டை எப்பொழுதும் பின்னாலிருந்து அணுகக்கூடாது. முன்னாலிருந்து அணுக வேண்டும். உடனேயே பால் கறக்க தொடங்க கூடாது. ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போல் அதன் கன்னங்களை, காதுகளை, முதுகை தடவித் தர வேண்டும். அதன் பக்கத்தில் வருடிக் கொடுத்து பின்னால் தட்டிக் கொடுத்து மெதுவாக பக்கத்தில் அமர வேண்டும். அதன் அடிப்பக்கத்தை இரண்டு மூன்று முறை வருடிக் கொடுக்க வேண்டும். பின்பு மெதுவாகக் காம்புகளை தொட வேண்டும். ஆடு இழுத்துக் கொள்ளும். ஆடுகளுக்கும் கூச்சம் ஏற்படும். கன்னிப் பெண்ணைப் போல. பின்பு மெதுவாக அதன் அசெளகரியத்தைப் போக்க அதன் காம்புகளை வருடிக் கொடுக்க வேண்டும். ஊரில், இந்த வேலையை குட்டி ஆடு செய்யும். தாய்- சேய் ஆடுகளின் பிணைப்பு கூச்சத்தைக் குறைத்த பிறகு, சேயின் மீதான பாசத்தில் தாயின் மடியிலிருந்து பால் பீய்ச்சியடிக்கும் போது தான் ஒருவர் பால் கறக்க வேண்டும்.”

அதே போல் பாலை நிலத்தின் கொடூரத்தையும் அந்நிலத்திற்கே உரித்தான விலங்கான ட்டகம்  மூலம் நாவல்  காட்சிப்படுத்தியிருக்கும்.



“அவைகளின் உருவத்தைப் பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்ட அதே வேளை அவைகளிடமிருந்து வெளிப்பட்ட விலகலைக் கண்டு பயந்து போனேன். ஒர் ஒட்டகத்தின் கண்களை சில நொடிகள் ஆழ்ந்து நோக்கினேன். சூரியனைப் பார்த்தால் பார்வையை விலக்கிக் கொள்வதைப் போல் என் பார்வையை விலக்கிக் கொண்டேன். இந்தப் பாலையின் அகலமும் ஆழமும், தீவிரமும், முரட்டுத்தனமும் அந்த கண்களில் உறைந்திருந்தது போல் அவை விளங்கின. ஒர் ஒட்டகத்தின் இத்தகைய உணர்ச்சியற்ற முகத்தின் பின்னால் ஒளிந்திருப்பது தன் நிலைமையின் சாத்தியமற்ற தன்மை தான் என்று தோன்றியது. பற்றின்மைக்கான உருவகமாக நான் ஒட்டகத்தைத் தான் குறிப்பிட விரும்புகிறேன்.”

இந்நாவல் மலையாளத்தில் ஏற்படுத்திய தாக்கத்தினால் நடிகர் பிருத்விராஜைக் கொண்டு திரைப்படமாக்க முயற்சி எடுக்கப்பட்டதாக தெரிகிறது. திரைப்படம் வந்ததா என்று தெரியவில்லை. ஆனால்  நாவலில் சொல்லப்பட்டுள்ள பல நுட்பமான விவரணைகள் திரைப்படத்தில்  காட்சிபடுத்த இயலுமா? என்பது சந்தேகமே.

நாவலை வாசித்தப் பொழுது மொழி பெயர்ப்பு நாவல் என்ற உணர்வே எழவில்லை. அந்தளவிற்கு மொழி பெயர்ப்பு சிறப்பாக இருந்தது.
சிறப்பான நாவலை தந்த ஆசிரியருக்கும், நல்லதொரு மொழிபெயர்ப்பை அளித்த மொழி பெயர்ப்பாளருக்கும் வாழ்த்துகள்.

ஆடு ஜீவிதம்
பென்யாமின்
தமிழில்: விலாசினி
எதிர் வெளியீடு
216 பக்கங்கள்
விலை: 250.