பென்யாமின் எழுதிய (Benyamin) ஆடு ஜீவிதம் (Aadujeevitham) : நூல் அறிமுகம் | கோட் டேஸ் (Goat Days)

ஆடு ஜீவிதம் : நூல் அறிமுகம்

ஆடு ஜீவிதம் : நூல் அறிமுகம்

வளைகுடா நாடுகளுக்கு சென்று கைநிறைய பணம் சம்பாதித்து வசதியாக வாழ வேண்டும் என்று எத்தனையோ மக்கள் பல ஆசைகளோடும் கனவுகளோடும் செல்கின்றனர். ஆனால் அவர்கள் கண்ட கனவு ஆசைகளும் உண்மையில் நிறைவேறுகிறதா? என்ற கேள்வி தான் இந்த ஆடு ஜீவிதம்.

கேரளாவில் இருக்கும் நஜீபிற்கு பெரிய ஆசை எல்லாம் ஒன்றும் இல்லை. வீட்டில் இன்னொரு அறை, ஒரு சில கடன்கள் அடையும் வரை சம்பாதித்தால் போதும் என்று தான் தன்னுடைய ஊரை விட்டு அந்த வறண்ட பாலைவன நிலத்தில் அடி எடுத்து வைக்கிறான் நஜீப்.

நஜீப்புடன், ஹக்கீம் என்றொரு நண்பரும் சேர்ந்து பயணத்தை தொடங்குகின்றனர். அந்த வறண்ட பாலை வன நிலத்தில் இறங்கிய பின்பு ஒவ்வொருவரையும் ஒவ்வொரு அர்பாப்புடன் (முதலாளி போன்று) பிரித்து தனித்தனியே விடப்படுகின்றனர்.

வெளிநாடு வேலை என்றாலே ஒரு மகிழ்ச்சியிலும் நிறைய எதிர்பார்ப்பிலும் தான் மக்கள் செல்கின்றனர். அந்த எதிர்பார்ப்பு தான் நஜீப்புக்கும் இருந்தது .ஆனால் நஜீப் விடப்பட்ட இடமும் ஆடுகளும் ஒட்டகங்களும் இருக்கும் ஒரு பண்ணையில்.

3வருடங்கள் 4 மாதங்கள் 9 நாட்கள் நஜீப் தன்னை சுத்தபடுத்திக்கொள்ள வில்லை.காலை கடன் முடித்தபின்பு அதை கழுவ கூட தண்ணீர் மறுக்கப்பட்டது.ஒரே ஒரு உடுப்பு மட்டுமே இத்தனை நாட்களும் அவன் உடுத்தி இருக்கிறான்.ஆடுகளின் காய்ச்சாத பாலும் குபூஸ் என்ற ஒரு வகை உணவு மட்டுமே இந்த மூன்று வருடங்களாகவும் மூன்று வேளைகளாகவும் தின்று கொண்டு இருக்கிறான்.

பாலை வனத்தில் அடிக்கும் வெயிலில் இருக்கும் நிழல் இன்றி படுக்க இடம் இன்றி பாலைவன மணலில் படுத்து உறங்கி அங்கே இருக்கும் ஆடுகளுக்கும் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் காட்டி அவை பசி ஆர உணவை நிரப்பி அங்கே இருக்கும் இடத்தை சுத்தப்படுத்தி என அடுக்கடுக்கான வேலைகள். குனிந்தவன் நிமிர முடியாத அளவிற்கு வேலைகள் வந்து கொண்டே இருக்கிறது.

அரபிக் நாடுகள் என்றாலே வாசனை திரவியங்கள் தான் பிரதானம். ஆனால் நஜீப் ஒரு சாதாரண மனிதன் மீது வரும் அந்த வியர்வை கூட சுவாசிக்க முடியவில்லை. ஆண்டாண்டு காலமாக தன் உடல் மீது ஒரு துளி நீர் விழாமல் தன்னை சுத்தப்படுத்தாமல் ஆடுகளிடமும் ஒட்டகங்களிடமும் புரண்டு அந்த அருவருப்பான வாசனை அவனுக்கு பழக்கமாகிவிட்டது. அவனிடம் ஒரு கண்ணாடி கொடுத்தால் அவன் முகத்தை அவனுக்கே அடையாளம் தெரியாத அளவுக்கு உருமாறி இருந்தான். பாலைவன வெயில் அவனை கருகறுக்க வைத்து தலைமுடியும் தாடியும் மிக நீளமாக வளர்ந்து உடல் முழுவதும் ஆங்காங்கே தோலுடன் மண்ணும் கலந்து அடை அடையாக மாறி சிராய்ப்புக்கு ஆளாகி அல்லல் பட்டான்.

அர்ப்பாப் என்றழைக்கப்படும் அவன் முதலாளி கையில் ஒரு தொலைநோக்கியும் துப்பாக்கியும் வைத்துக் கொண்டு நஜீப் எங்கு சென்றாலும் அவனை கண்டுபிடித்து தன் பண்ணையில் அடைத்து விடுவான்.மனிதர்களின் வாடையே இல்லாத அந்த நிலத்தில் பேசுவதற்கும் அழுவதற்கும் சிரிப்பதற்கும் கூட யாருமற்று பித்து பிடித்து அலையும் போது அந்த ஆடுகள் தான் அவனுக்கு ஆறுதலாக இருந்தன. ஆடுகளுடன் அவன் பேசினான்,அழுதான்,சிரித்தான்,தன் அந்தரங்க உணர்ச்சிகளை கூட அந்த ஆடுகளிடம் தான் வெளிக்காட்டினான்.

நாவல் முழுவதும் பல இடங்களில் எல்லாம் அவன் செயல் என்று கடவுளை குறிப்பிடுவது சற்று பிற்போக்கு தனமாக இருந்தாலும் சாகும் தருவாயில் கூட ஒருவன் கடவுளையே நம்பி கொண்டிருப்பது அபத்தமாக இருக்கிறது.இந்த மலையாளி எந்த கடவுளின் பெயரை சொல்லி தொழுகிறானோ யாரை அழைத்து அழுகிறானோ அதே கடவுளை தான் தன்னை சித்திரவதை செய்யும் அரக்கணும் தொழுகிறான். அரக்கனுக்கு காட்டும் கரிசனம் கடவுள் ஏன் அந்த அப்பாவி ஜீவன்களுக்கு காட்டவில்லை.

நஜீப் மற்றும் ஹக்கீம் இருவரும் இப்ராஹிம் என்ற மற்றொரு அடிமையின் மூலம் அந்த பண்ணைகளில் இருந்து தப்பிக்கின்றனர்.வாலிப வயதான ஹக்கீமால் வறட்சியை பொருக்கமுடியவில்லை.பசியை பொறுக்கமுடியவில்லை.காணல் நீரை பார்த்து ஓடுகின்றான் ஓடுகின்றான் ஆனால் அவனால் நீரை பார்க்க முடியவில்லை. தண்ணீருக்காக அலைகின்றான், ஏங்குகின்றான். பசி ஒருபுறம் அவனை மண்ணை தின்னும் அளவிற்கு பைத்தியம் ஆக்குகிறது.

பாலைவனம் என்றால் ஏதோ சுற்றுலா செல்வதும் அங்கு இருக்கும் மணலை ரசிப்பதும் சினிமாவில் வரும் அழகிய காட்சிகளாக தான் நாம் பார்த்திருப்போம்.ஆனால் அதற்கு இன்னொரு அகோர முகம் உண்டு என்பதை இந்த நாவலை படித்து தான் தெரிந்து கொண்டேன்.

மனிதம் என்பது எங்கோ ஏதோ ஓரிடத்தில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி அந்த ஒரு சிலரிடம் இருக்கும் அந்த மனிதம் தான் உலகை இயக்கிக் கொண்டிருக்கிறது. வெயிலும் பனியும் மழையும் என்று மாறி மாறி சுழன்று அடிக்கும் இந்த வறண்ட பூமியில் சிக்கித் தவிக்கும் எத்தனையோ அப்பாவி மக்களின் கதை தான் இந்த ஆடு ஜீவிதம்.

தன் உடலில் உயிர் மட்டுமே ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில் கூட எப்படியும் இந்த கல்ஃப்பில் இருந்து தாய்நாடு சென்று சேர வேண்டும் என்ற ஒரே நம்பிக்கையோடு போராடிக் கொண்டிருக்கும் ஒரு ஆடு. தாய்நாடு சென்று சேர்ந்ததா? இல்லையா? என்று கேள்விகளுக்கும் அயல்நாடுகளுக்கு சென்று வேலை செய்யும் மக்களின் நிலைமைகளையும் அறிய அந்த புத்தகத்தை வாசியுங்கள். தமிழில் மொழிபெயர்த்துள்ள விலாசினி அவர்களின் எழுத்து நடை வாசிப்பதே தெரியாத அளவுக்கு மிக தெளிந்த நீரோட்டமாக இருந்தது.

இந்த நாவலை இன்னும் விரிவாக விவரிக்க வேண்டுமானால் எனக்கு வார்த்தைகள் போதவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நாவல் முழுவதுமே கண்ணீரும் காட்சியுமாகவே இருக்கும்.

நூலின் தகவல்கள் : 

புத்தகம்: ஆடு ஜீவிதம்
ஆசிரியர்: பென்யாமின்
தமிழில்: விலாசினி
வெளியீடு: எதிர்
பக்கங்கள்:216
விலை:300/-

நூல் அறிமுகம் எழுதியவர் : 

✍️நளினி மூர்த்தி

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *