‘செத்தாலும் என் தீதார் உனக்கு ஆகாது’ எனச் சிறுவயதில் தனது ஊரில் நடந்த சண்டையில் ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் சொன்ன, அந்த வயதில் தன்னால் பொருள் புரிந்து கொள்ள முடியாத இந்த வரிகள் மனதுக்குள் படிந்து, ‘செத்தாலும் எம்மூச்சியில முழிக்காதே’ எனப் பொதுவழக்கில் சொல்வதைத்தான் தமிழ் முஸ்லீம்கள் இப்படிச் சொல்கிறார்கள் எனப்புரிந்த போது இருபது வயதைக் கடந்திருந்ததாகச் சொல்லும் நூலாசிரியர், தன் மனதில் படிந்த அந்த வார்த்தையே ‘ஆகாத தீதார்’ எனத் தனது முதல் சிறுகதைத் தொகுப்பிற்கு வைத்துவிட்டார்.
‘தீதார்’ என்ற வார்த்தையைப் பிடித்துக் கொண்டாரா அல்லது பிடித்துப் போனதா தெரியவில்லை புத்தகத்தில் இருக்கும் பதிமூன்று கதைகளும் இஸ்லாமிய சமூக மக்களின் சாவையும் அதன் முன்/பின்னான வாழ்வையும் பற்றியே பேசுகிறது. பெரும்பாலும் பாதிக்கப்பட்ட பெண்களின் கதையை மனவலியோடு, கண்ணீருடன் சொல்கிறது.
ஒரு சாவு வீட்டில் நடுநாயகமாகக் கிடக்கும் மனிதரைப் பற்றி பேசியபடி, அவரால் பாதிப்புக்குள்ளான, பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை நம் கண் முன்னே காட்டுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்து முஸ்லீம்களின் பேச்சு வழக்கில் கதைகளை எழுதியிருப்பது சிறப்பு என்பதுடன் கதை மாந்தர்களுடன் நாமும் ஒன்றிப் போக முடிகிறது.
இருட்சிறை – கணவனின் இறப்புக்குப் பின் தனது தாய் வீட்டில் பஷீரா படும் பாடுகளையும், அத்தனையும் சகித்துக் கொண்டு தன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய பின்னும் மருமகளிடமும் அதே வேதனையை ஒரு சிறு அறைக்குள் அனுபவிப்பதையும், அவளின் தோழியின் உதவியையும் பேசியிருக்கிறது. கணவன் என்பவன் எப்படியிருந்தாலும் அவன் இருக்கும் வரைதான் ஒரு பெண் ஒரளவேணும் மதிப்போடு வாழமுடிகிறது இச்சமூகத்தில் எத்தனைப் பொட்டிலடித்தாற்போல் சொல்லியிருக்கும் கதை இது.
ஆகாத தீதார் – தன்னை மீறித் திருமணம் செய்து கொண்ட மகளை, ஊருக்குள் பெரிய மனிதனாக வலம் வந்து கொண்டிருந்த அத்தா, ஊர் முன் தன் மானம் காக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்திலும் அவள் மீதான கோபத்திலும் சொல்லும் வார்த்தைதான் ‘செத்தாலும் என் முகத்தில் முழிக்கக் கூடாது’ என்பது. அத்தா செத்தபோது அவள் எதிர்ப்பை மீறி அங்கு வருவதும், ஏதோ ஒரு மூனாம் மனுசி போல் அமர்ந்திருப்பதும் என கதை, நம்மையும் அந்த இடத்தில் கேதம் கேக்கப்போன ஓருவராய் உட்கார்ந்து ஜைத்தூனின் மனவோட்டத்தை எல்லாம் கேக்க வைக்கிறது, பாத்திமா மாமி பற்றியும்தான்.
புகைப்படம் – இப்பவும் சிறு வயது போட்டோக்களையோ, அன்றைய திருமணப் போட்டோக்களையோ பார்க்கும் போது நம்மை அறியாமல் அதில் நாமிருக்கிறோமா எனத்தேடி, பள்ளிச் சிறுவனாய் ஒரு ஓரமாகவோ நடுநாயகமாகவோ சிரித்தபடி நிற்பதைப் பார்க்கும் போது மனதுக்குள் ஒரு பூ மலருமே அப்படித்தான் போட்டோவைத் தேட ஆரம்பிக்கும் இக்கதையில் நமக்குள் பூ மலருகிறது ஆனால் அது ஒரு சாவைப் பேசி, முடிவில் வலியுடன் போட்டோவைக் கிழிக்கும் போது இப்படியான மனிதர்களின் போட்டோக்களில் நாம் இருந்திருப்போமோ என யோசிக்க வைக்கிறது.
ரேகை போல் வாழ்க்கை – தாசில்தாராய் இருந்து ஓய்வு பெற்றவர், மனைவி மீது அதீத நேசம் கொண்டவர். படுத்த படுக்கையாகக் கிடக்கும் மனைவி தான் உம்ரா போய் வருவதற்குள் இறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் தெளிவாகச் சொல்லிவிட்டுச் சென்றாலும், அவரின் காதல் மனைவி அவர் வரும் வரை உயிரைப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். அவர் வந்தபின் அவள் இறந்தாலும் அவரால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தனக்கு நெருக்கமான மருத்துவரை அழைத்துப் பார்க்கச் சொல்ல, அவர் இறப்பை உறுதி செய்கிறார். இவர்களின் கதையைவிட இந்தத் தம்பதிக்கு உதவியாய் இருக்கும் நிஜாம் – ஜீனத்தின் வாழ்க்கையை நமக்கு காட்டியிருக்கிறது இக்கதை. ஒரே நாளில் வேறுபட்ட காட்சிகளை நமக்குப் பதிய வைக்கும் இருவேறு காதலைப் பற்றிப் பேசியிருக்கிறது என்பதே உண்மை.
கைப்பற்றப்பட்ட வஸ்ஸியத் – சாகும் தருவாயில் இருக்கும் ஒருத்தி, ரகசியத்தைச் சுமந்து செல்ல வேண்டாமென நினைத்தாளோ அல்லது அந்தப் பாவம் தனக்கு மறுமை வாழ்வில் நன்மை கிடைக்காமல் போய்விடுமே என்று பயந்தாளோ தெரியாது. தன் கணவன் சொன்ன ஒரு கதையை, அதில் தனக்குத் துரோகம் இழைக்கப்பட்டிருப்பதால் யாரிடமும் சொல்லாமல் மறைப்பவள், இறப்பதற்கு முன் மகனிடம் மட்டும் அதைச் சொல்கிறாள். தன் அம்மா சொன்னதை மகன் எப்படிக் கையாள வேண்டும் என்பதை அவளிடமிருந்து அறிந்தே வைத்திருக்கிறான் என்பதைச் சொல்லும் கதை இது.
இயலாமைக்கு இரு குணம் – தன்னை இருபது வருடத்துக்கு மேலாக பெரும் கொடுமை செய்த மாமியாரை அவள் உடல் நலமில்லாமல் விழுந்த ஆறே மாதத்தில் முடிந்தளவு கொடுமைகள் செய்து சமன் செய்த மருகளைப் பற்றி, அவள் அனுபவித்த துன்பங்களைப் பற்றியும், சாப்பாட்டில் கூட ரேசன் முறை இருந்ததைப் பற்றியும், அதிலும் ஓரவஞ்சனையும் அனுபவித்தவள் எப்படித் தன்னைக் கொடுமை செய்த நாத்தனார்களையும் தன்பால் ஈர்த்தாள் என்பதையும் சொல்கிறது.
தடமிழந்த ஆறு – ஊருக்குள் சர்வாதிரிகாரி போல் நடந்து கொள்ளும் ஒருத்தியை கணவன் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும் அம்மாவின் செய்கையால் மகள் வெறுத்து ஒதுக்குவதும் நிகழ்ந்தாலும், இப்படித்தான் உடை உடுத்தணும், வயசுக்கு வந்ததை வெளியில் சொல்லக்கூடாது என மகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்தே வளர்க்கிறாள். கணவன் இருக்கும்வரை சர்வாதிகாரி, அவனின் இறப்புக்குப்பின் எல்லாரும் அவள் மீது அதிகாரம் பண்ண ஆரம்பிக்க, நம்பிக்கை இழக்கும் அவள் மகளை என்ன செய்கிறாள் என்பதைப் பற்றிப் பேசுகிறது.
இப்படித்தான் அம்மா கணக்கு, ஊர் வாய், இன்ஸ்டண்ட் புனிதம், வீடென்ற உயிர், பொம்மக்குட்டி, மங்கா மாமியா செவத்தா என எல்லாக் கதைகளையும் சாவையும், பெண்களின் நிலையையும் பேசுகிறது.
இக்கதைகளை எழுதியிருக்கும் ஆமினா முஹம்மத் முஸ்லீம்களின் வாழ்க்கையை நம் கண் முன்னே விரித்திருக்கிறார். பல விசயங்களைத் தெளிவாக, பயமின்றி, எதிர்க்குரல் கேட்டாலும் இதுதானே நடந்தது என என்னால் சொல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் எழுதியிருக்கிறார். இக்கதைகளை வேறு யாரும் எழுதாமல் – அப்படி எழுதியிருந்தால் இந்நேரம் இதெல்லாம் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் என எங்காவது ஓரிடத்திலிருந்து குரல் வந்திருக்கும் – அந்தச் சமூகத்துப் பெண் எழுதியிருப்பது வரவேற்க்கத்தக்கது.
வெளிநாடுகளில் ஏற்படும் இறப்புக்களின் போது ஊருக்கு உடல் போகாவிட்டாலும் அந்தப் பெண்கள் படும் பாடுகளை எல்லாம் கதைகள் பேசியிருப்பது சிறப்பு. சொல்லப்போனால் அந்த மக்களைத் தவிர மற்றவர்கள் அறியாத கதைகளைத்தான் நம் முன் சொல்லியிருக்கிறார் ஆமினா. அவருக்கு வாழ்த்துகள்.
‘எத்தனையெத்தனையோ சாபங்கள், கோபங்கள், துரோகங்கள், ஏமாற்றங்கள், வேதனைகள் எல்லாமே திடுமென நிகழ்ந்து விடுகிற ஒரு மரணத்தோடு மறைந்து போய்விடுமென்கிற போலிப்படலங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சி, மனித மனங்களின் கருந்துளைப் பக்கங்களை இரக்கமின்றி வெளிப்படுத்தியிருப்பதுதான் இக்கதைகளின் வெற்றி’ எனச் சம்சுதீன் ஹீரா தனது அணிந்துரையில் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை.
‘என்னைப் பொறுத்தவரை நான் வாசித்த இஸ்லாமிய எழுத்துக்களில், என்னை வெகுவாகப் பாதித்து, கடற்கரையோர இஸ்லாமிய மக்களின் வாழ்வியலை என் கண்முன்னே நிறுத்தியது எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் படைப்புக்களே. அதற்குப்பின் இளையான்குடி, பரமக்குடி, இராமநாதபுரம் பகுதிகளில் வாழும் இஸ்லாமிய மக்களின் வாழ்வியல் முறையும் அவர்கள் எதிர்கொள்ளும் இன்ப துன்பங்கள் எல்லாவற்றையும் காட்டும் ஒரு தொகுப்பாக இச்சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கிறது. எழுத்தின் ஓட்டத்தில் பயணிக்கும் போது ஆங்காங்கே எள்ளலும் நகைச்சுவையும் மென்மையாக நம்மைப் புன்னகைக்க வைத்தாலும், கதை மாந்தர்களின் வழியே கடத்தப்படும் அழுத்தமான கருத்துகள் கொஞ்சம் நெஞ்சைக் கனக்க வைக்கும்’ எனத் தனது உள்ளத்திலிருந்து சொல்லியிருக்கிறார் இந்தப் புத்தகத்தை பதிப்பித்த கேலக்ஸி பதிப்பக உரிமையாளர் பாலாஜி பாஸ்கரன்.
சிறப்பான சிறுகதைத் தொகுப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நான் சாவுக் கதைகள் எழுதும் போது நண்பர்கள் நீ அதிகமாக இதைத்தான் எழுதுறே எனச் சொல்வதுண்டு. இந்தப் புத்தகத்தில் அனைத்துக் கதைகளும் சாவைப் பேசுவதைப் பார்க்கும் போது நாம் இன்னும் நிறைய இது போன்ற கதைகளை, வாழ்வியலை எழுத வேண்டும் எனத் தோன்ற வைத்தது.
முதல் புத்தகம் என்பது போலில்லாமல் மிகச் சிறப்பான எழுத்து. இஸ்லாமிய மக்களின் வாழ்வியலை எழுத நல்லதொரு எழுத்தாளரை தமிழ் எழுத்துலகம் கண்டடைந்துள்ளது. மகிழ்ச்சி.
‘கதை சொல்லும் போது கதை மாந்தர்களிடம் களத்தை ஒப்படைத்து விடவேண்டும், அங்கே எழுத்தாளன் தனது கருத்தையோ, என்ன நினைக்கிறேன் என்பதையோ புகுத்தக் கூடாது, அது கதையோட்டத்தைக் கெடுத்துவிடும். அதைச் செய்யக்கூடாது’ என்பது எங்கய்யா பேரா. மு. பழனி இராகுலதாசன் எனக்குச் சொல்லிக் கொடுத்த பாடம். இங்கே கதைகளின் இடையிடையே எழுத்தாளர் பேசுவதுடன் இதை இங்கே விட்டுடலாம், அங்கே விட்டோமே ஞாபகமிருக்கா, இப்படித்தான் அங்கே – என்றெல்லாம் எழுதியிருப்பது கதையை வாசிப்போருக்கு அயற்சியைக் கொடுக்கும். இனி எழுதும் கதைகளில் இதைத் தவிர்த்தார் என்றால் இன்னும் சிறப்பான கதைகளை நமக்கு அவரால் கொடுக்க இயலும்.
ஆகாத தீதார் – அருமை, வாசிக்க வேண்டிய புத்தகம்.
ஆகாத தீதார்
ஆமினா முஹம்மத்
கேலக்ஸி பதிப்பகம்
பக்கம் – 124
விலை ரூ. 130/-
——————————-
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்