பல நேரங்களில் சில மனிதர்கள்-ரவிசுப்பிரமணியனின் ‘ஆளுமைகள் தருணங்கள்’ குறித்து – ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

நண்பர், கவிஞர் ரவிசுப்பிரமணியன் அவர்களின் ‘ஆளுமைகள் தருணங்கள்’ நூலைப்படித்தேன். அவர் இந்தியாடுடேவில் எழுதிய விமர்சனக் கட்டுரைகளில் சிலவற்றை பலஆண்டுகளுக்கு முன்பு படித்ததைத் தவிர, இதுதான் நான் படிக்க நேர்ந்த அவருடைய முதல்நூல்.

‘வாழும் காலத்தில் அங்கீகரிக்கப்படாததினால் ஏற்படும் சோகம் போல வேறு எதுவும் இருக்கமுடியாது’ என்ற உலுக்கும் வரியுடன் துவங்கி, ‘படைப்பாளி எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றிச்சதா இழை இழையாய்த் தன் படைப்பின் நெசவைத் தொடர்ந்தபடி இருக்கிறான்’ என்றுவிரியும் கட்டுரைகள் கலை இலக்கிய ஆளுமைகளை ஆர்பாட்டமில்லாத தகவல் தளத்தில்வாசகனுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றன.

எம்.வி.வி, கவிஞர் அபி, மதுரை சோமு, ஓவியர் ஜே.கே, ருத்ரய்யா போன்ற ஆளுமைகளைஅவர்களின் பின்புலத்தோடு அறிந்ததில் நெஞ்சில் பிரமிப்பு நிழலாடுகிறது.

Image

‘சம்பாத்தியமில்லாத, செல்வாக்கில்லாத புருஷனை வீடு சகித்துக்கொள்ளாது.சகித்துக்கொள்ள முடியாது தான். இப்படி ஆதார இருப்பிடத்திலிருந்து வீசி எறிந்துகலங்கடிக்கும் காற்றுக்கு மத்தியில்தான், ஒரு கலைஞன் தன் படைப்பின் சுடரைஅணையாமல் காத்துக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது.’ இப்படி, கட்டுரைகள் வெறும்புகழுரைகளாக அமையாமல் ரத்தமும் சதையுமான மனிதர்களையும் அவர்களின் அசாதாரணதிறமைகளையும், மனுஷீக பலவீனங்களையும் பேசுவதில் இலக்கிய நேர்மை பக்கத்துக்குபக்கம் அச்சு மையோடு கலந்திருக்கிறது.

எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களின் சுயசரிதையை மாணவப்பருவத்தில் வாசித்திருக்கிறேன்.அதனால் அவரைப் பற்றிய கட்டுரையோடு சட்டென்று பிணைப்பு வந்தது.

ஓவியர் மருதுவை ஒரு வித்தியாசமான வெளிச்சத்தில் காட்டுகிறது ‘கோடுகளில் அதிரும்வேகம்’. ‘இருநூறு ஆண்டுகளாக நமக்குச் சொல்லித்தரப்பட்ட கலை இலக்கிய வரலாறுமுழுமையானதல்ல. தமிழர்களின் பங்களிப்பை மறைப்பதால் நம் வரலாற்றின் ஒரு பகுதிமறைக்கப்பட்டுள்ளது’ என்ற மருதுவின் பதிவு, ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒருஆரோக்கியமான சவால். ‘தென்னிந்தியக் கோட்டோவிய வரலாற்றினைச் சென்னையிலிருந்தேநாம் தொடங்க வேண்டியிருக்கிறது’. ஆளுமைகளோடு இது போன்ற மிகமுக்கியதரவுகளையும் ஆங்காங்கே பதிவு செய்திருப்பது நூலின் ஆழத்தை அளக்காமலேயேகாட்டுகிறது.

‘ஒன்றை அடைந்ததும் அதில் தேங்கி நில்லாமல், அடைய முடியா இலக்கொன்றைத்தனக்குத்தானே நிர்ணயித்துக்கொண்டு, சதா அவர் பயணப்பட்டுக்கொண்டே இருந்தார்’.திரு.பாலுமகேந்திரா அவர்களை சுட்டும் இவ்வரிகள் அவருடைய வெற்றியின் சூட்சமத்தைசுலபமாக புரியவைக்கின்றன.

Image

‘எந்தவொரு கவன ஈர்ப்பையும் ஏற்படுத்தாத உருவமும் அசைவுகளும் ரவியுடையவை’ என்றுஅணிந்துரையில் பாரதிபுத்திரன் சொன்னது நிஜமென நானறிவேன். ரவிசுப்பிரமணியன்திறமைகளின் அடர்த்தி. ஆயிரம் குறுப்படங்களுக்குமேல் இயக்கிய இயக்குனர்.புதுக்கவிதைகளுக்கு மெட்டமைத்து பாடும் பாடகர். அவரின் உருவமும் அசைவுகளும்ஏற்படுத்தாத கவன ஈர்ப்பை அவரது ‘ஆளுமைகள் தருணங்கள்’ நிகழ்த்தியிருக்கிறது.

‘காத்திரமான பங்களிப்பைச் செய்துவிட்டு தன்னை முன்னிருத்தும் யத்தனங்கள் இல்லாத சிலஉன்னத கலைஞர்களையும் சிந்தனையாளர்களையும் தமிழ்ச் சமூகம் தனித்தேவைத்திருக்கிறது’ என்று ரவிசுப்பிரமணியன், இயக்குனர் ருத்ரய்யாவைப் பற்றி குறிப்பிடுகிறார். நூலின் இந்த கடைசி பத்தி ரவிக்கும் பொருந்தும்.

ஜன்னலோர மழையாய் நுண்ணிய வாசிப்பனுபவத்தை வாய்க்கச் செய்கிறது ‘ஆளுமைகள்தருணங்கள்’. நீங்கள் தயாரா?

போர்முனை டூ தெருமுனை | war corner to street ...

மதிப்புரை: ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

தலைப்பு: ஆளுமைகள் தருணங்கள்

ஆசிரியர்: கவிஞர் ரவிசுப்பிரமணியன்,

வெளியீடு: காலச்சுவடு