கதைக்குள் நுழையும் முன்பே ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அது, 7 வயதான சமர்சேந்தனின் நூல் பற்றிய மதிப்புரை ஆகும். சிறுவர் நூலொன்றை ஒரு சிறுவன் எப்படி உள்வாங்கிக் கொண்டான் என்று அறிந்து கொள்ள முடிந்தது. அதுவும் அச்சிறுவன் பொறாமைப்பட வைக்குமளவு மிகச் சிறந்த வாசகன். கடையில் வாங்கிய புத்தகத்தை, வீட்டுக்குப் போகும் வழியிலேயே படித்து முடிக்குமளவு அதி தீவிர புத்தகக் காதலன். அவனது மதிப்புரையில் இருந்த ஓர் அட்டகாசமான கேள்வி மிகவும் யோசிக்க வைத்தது.
“சுறா மட்டும் ஃப்ரெண்ட்லியா இல்லாமல் ஏன் வயலன்ஸா இருக்குது?”
‘கதையில் ஏன் வில்லன் வேண்டும்?’ என்பதாக அந்தக் கேள்வியைப் புரிந்து கொண்டேன். வில்லன்களைச் சிருஷ்டிப்பது பெரியவர்கள் தானோ? சிறுவர்கள் உலகில் அனைவருமே நண்பர்கள் தான் போலும். ஆக, எழுத்தாளரினுடைய ஜம்பம், பிரயத்தனம் எல்லாம் சமர்சேந்தனின் ஒரே ஒரு கேள்வியில் நொறுங்கி விட்டதாகவே பட்டது. சமரைப் போலவே, கதையில் வரும் அமீருக்கும் சுறா மீது ஒரு பரிதாபம் எழுகிறது. ஆனால் பாலபாரதி மிகச் சாதுரியமாக, சமர் அமீர் என இருவரையுமே சமாதானப்படுத்தும் விதமாக, சுறாவின் அத்தியாயத்தில் ஒரு திருப்பத்தை வைத்துள்ளார். அன்பையும், பிறருக்கு உதவிடும் குணத்தையும், உயிர் நேசிப்பையும் வலியுறுத்திவிடுகிறார் பாலபாரதி.
‘ஆமை பேசுமா?’ என்று ஒரு கேள்வியை எழுப்பி, அதை லாஜிக்கலாக ஏற்றுக் கொள்ள ஒரு பதிலையும் தந்துள்ளார் பாலபாரதி. ஆமை பேசுகிறது, துடைப்பம் பறக்கிறது, பறவை கோபப்படுகிறது, பாண்டா கரடி குங்ஃபூ மாஸ்டராகிறது என்பவையெல்லாம் சிறுவர்களை மிகவும் குதூகலிக்கச் செய்யும். ‘அதெப்படிப் பேசும்? பறக்கும்?’ என்ற குதர்க்கமும், லாஜிக் தேடலும் இல்லாத மனம் வாய்த்ததால் தான் சிறுவர்களால் கதையை மனதார ரசித்து மகிழ முடிகிறது. முதல் அத்தியாயத்தில் மட்டுமே இப்படி லாஜிக்கல் குறையை நீக்க மெனக்கெட்டுள்ளார் பாலபாரதி. அதன் பின் சிறுவர்களின் கை பிடித்துக் கொண்டு, அதி அற்புதமான உலகத்திற்குள் நுழைந்து விடுகிறார். அனேகமாக கதையில் வரும் ஜுஜோ எனும் ஆமை, எழுத்தாளர் என்றே நினைக்கிறேன்.
கதையினோடு, தகவல்களையும் கொடுத்து சிறுவர்களின் சாகச உள்ளத்துக்கு மட்டுமல்லாமல் அறிவுக்கும் தீனியிடுகிறார் பாலபாரதி. உதாரணம், ஜூஜோ (ஜூனியர் ஜோனதன்) என்ற பெயரை ஆமைக்கு ஏன் வைத்தார் என்ற தகவலைக் கட்டம் கட்டியுள்ளதைச் சொல்லலாம்.
இந்நூல், மிக முக்கியமான நூலாகக் கொள்ள இன்னுமொரு சிறப்புக் காரணம் உள்ளது. சுற்றுச் சூழல் பற்றிய புரிதலை மிக எளிமையாகச் சிறுவர்கள் மனதில் இந்நூல் விதைக்கிறது. வாசிக்கும் பழக்கமுடைய சமருக்கு சுற்றுச் சூழல் பற்றி முன்பே சொல்லப்பட்டிருந்தாலும், கதையோடு வரும் நீல்ஸ் எனும் திமிங்கலத்தின் மூலம் மாசுபடாத சுற்றுச் சூழலின் அவசியம் மிக ஆழமாக சமரின் மனதில் பதிந்ததாகச் சொல்கிறார் அவனது அம்மா சுந்தரி நடராஜன். அடுத்த தலைமுறையினரிடம், இன்றைய சூழலின் நிலையைப் பற்றிக் குற்றவுணர்வோடும், அவற்றைப் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தைப் பற்றிப் பொறுப்புணர்வோடும் பெரியவர்கள் உரையாட வேண்டியது மற்ற அனைத்தையும் விடப் பிரதானமாகிறது. அதை இலகுவாகச் சாத்தியமாக்கும் பாலபாரதியின் இந்நூல் கொண்டாடப்பட வேண்டிய ஒரு பொக்கிஷமே!
கொண்டாடித் தீர்க்க மற்றுமொரு காரணத்தையும் உள்ளடக்கியுள்ளது புத்தகம். அது, கி.சொக்கலிங்கத்தின் ஓவியங்கள். கடல் குதிரை, திருக்கை மீன்கள், ஜெல்லி மீன்கள், திமிங்கலம், ஆக்டோபஸ், சுறா, டால்ஃபின்கள் போன்ற ஓவியங்களால் நம்மை அற்புத உலகில் திளைக்க வைத்துள்ளார்.
கடல் சூழ்ந்த ராமேஸ்வரத்தில் பிறந்த பாலபாரதிக்கு, கடலுக்குள் சென்று பார்க்க வேண்டுமென்பது அவரது சிறுவயது கனவு. அந்தக் கனவு எளிமையான வார்த்தைகளால் நிறைவேறியுள்ளதா என அறியவே, சமருக்கு இக்கதையின் அத்தியாயங்களை அனுப்பியுள்ளார் பாலபாரதி. பாலபாரதியின் கனவையும், நூலின் எளிமையையும் ஒருங்கே அங்கீகரித்துள்ளான் சமர்சேந்தன்.
– தினேஷ் ராம்
நன்றி ithutamil.com