சிறுகதை: "ஆண் மனம்" - சாந்தி சரவணன் | ஆண் மனம் சிறுகதை | Aan Manam Short Story Written By Shanthi Saravanan

சிறுகதை: “ஆண் மனம்” – சாந்தி சரவணன்

ஆண் மனம் சிறுகதை

அரசு அலுவலகம் வழக்கமாக பத்து மணிக்கு தான் துவங்கும். சொல்ல போனால் அனைவரும் ஒவ்வொருவராக 10 மணிக்கு மேல் தான் வருவார்கள். அன்றும் வழக்கம் போல ராகவன் சரியாக 9.55க்கு தன்னுடைய யமஹாவில் வந்து இறங்கினான்.

வாசலில் இருக்கும் காவலாளி பரத், “வணக்கம் சார், எப்பவும் நீங்க தான் சார் முதல்ல வருவது. உங்கள மாதிரி ஆளு இருக்கிறதால தான் அரசு அலுவலகம் நல்லா வேலை செய்து சார்” என்று புன்னகையோடு சொல்ல, புகழ்ச்சி மழையில் நினைந்தான் ராகவன். புகழ்ந்தால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் நமது ராகவனுக்கு கேட்கவா வேண்டும்…

“வணக்கம் பரத், டிபன் ஆச்சா’

“இல்லை சார். எப்படியும் நீங்கள் வந்துவிடுவிங்க என தெரியும். வந்தபிறகு போகலாம் என்று தான் இருந்தேன். இதோ 10 நிமிடத்தில் வந்து விடுகிறேன் என காவலாளி பொறுப்பை ராகவனிடம் ஒப்படைத்து விட்டு பதிலுக்கு கூட காத்திருக்காமல் பறந்தான்”, பரத்

ராகவன் பொறுமையாக “லல்லல்லா …..” என்ற பாட்டு பாடி கொண்டு படிக்கட்டில் மிக கவனமாக நடந்தான். கவர்மெண்ட் ஆபீஸ் என்றால் சுத்தமாகவா இருக்கும்.

கை தவறி கூட படிக்கட்டில் பக்கவாட்டில் பட்டு விட்டால் அவ்வளவு தான். ஒரு வருட தூசி முகத்தில் அப்பிக் கொள்ளும். மிகவும் உஷாராக மாஸ்கை போட்டுக் கொண்டு படிக்கட்டில் ஏறி தன்னுடைய இருக்கைக்கு சென்று அமர்ந்தான்.

சிறிது நேரத்தில் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். ராகவனின் தோழன் குமார் வேக வேகமாக உள்ளே வந்தான்.

‘வந்துட்டாரா வந்துட்டாரா …. ”

“யாரு… பா.. ”

“அது தான் பா.. நம்ம ஏஓ… ”

“வந்துட்டாரு வந்துட்டாரு இப்பதான் அட்டெண்டன்ஸ் உள்ள போச்சு ”

“ஏன்டா ராகவா நான தான் வரேன்னு சொன்னேன் இல்ல. கொஞ்ச நேரம் வச்சு இருக்கலாம் இல்ல உடனே வந்து கையெழுத்து போட போறேன் ” என்று பதட்டமான குரலில் குமார்

“நான் கொஞ்ச நேரம் கழித்து தான் கொடுக்கலாம் என்று சொன்னேன். நம்ம செக்யூரிட்டி பரத் இல்ல… என்னா சார் குமார் சாரா…. அவர் எப்போதும் லேட் தான்….. ஏஓ என்னை தான் வய்வாரு. நான் என் வேலையை கரெக்டா செய்து விடுகிறேன்…. என சொல்லி உள்ளே எடுத்து போய் வைத்து விட்டான் பா… என்றார்.. ”

ஆனால் அப்படி பரத் கொண்டு போய் வைத்ததில் ராகவனுக்கு மகிழ்ச்சி தான். இதை எல்லாம் எப்படி வெளியே காட்டிக் கொள்வது. “நம்ம எல்லாம் ரொம்ப நல்லவங்க இல்லை…… “.மைண்ட் வாய்ஸ் ஆப் ராகவன்.

“நினைவுக்கு வந்தவன் போல் என்ன செய்வது சரி போ நீயே போய் பக்குவமா பேசி கையெழுத்து போட்டு விட்டு வந்துடு” என்றான்.

எரிச்சலோடு ஏஓ அறைக்குள் , “வணக்கம் சார்” என சொல்லிக் கொண்டே நுழைந்தான், குமார்

குமாரு, “என்ன வழக்கம் போல இன்றைக்கும் லேட்டு தானா.. ”

“இல்ல சார் நான் ராகவன் கிட்ட சொல்லி உங்க கிட்ட சொல்ல சொன்னேன்.. ”

“உன்னை பத்தி தான் எனக்கு தெரியுமே சரிப்பா சரி போய் வேலையை பாருங்க குமார்” என்று கடுப்புடன் சொன்னார் ஏஓ

ராகவா, என்னப்பா பில் எல்லாம் காலையிலே பாஸ் செய்திட்டியா …. என்று கேட்டுக் கொண்டே இருக்கையில் வந்து அமர்ந்தான் குமார்

காலங்காத்தால ஏம்பா ஆரம்பிக்கிற. இப்பதானே வேலைக்கு வந்தே! அதுக்குள்ள உன்னோட வேலையை தொடங்கிட்டியா, என எரிச்சல் அடைந்தான் ராகவன்.

பக்கத்தில் இருந்த லட்சுமி , ” ஏன் குமார் சார் எப்ப பார்த்தாலும் ராகவன் சார் கிட்ட வம்புக்கே போயிட்டு இருக்கீங்க”

நான் எங்கங்க வம்புக்கு போறேன், அவன் என் நண்பன். நேத்து கூட அவங்க வீட்டுக்கு போலாம்னு போன சரியான ஆளு. வெளியே இருந்து தாங்க பேசிட்டு அனுப்பினான். வீட்டுக்குள்ள வா என கூட கூப்பிடல என்றான்.

ஏன்? ராகவன் சார் என லட்சுமி கேட்க பதில் எதுவும் சொல்லாமல் ராகவன் “உன்னை வீட்டுக்கு வேற கூப்பிடனுமா என நினைத்தான்”. அவன் அப்படி நினைக்க காரணம் உண்டு.

குமார் எப்போது பார்த்தாலும் உன் வீடு விற்க நினைத்தால் எனக்கு விற்று வீடு. எதற்கு நீ இந்த வீட்டில் இருக்கிற. அலுவலகம் பக்கத்தில் ஒரு வீடு வாங்கிக் கொண்டு வந்துடலாம் இல்லை என இயல்பாக சொல்லி செல்வான்.

ராகவன் எவ்வளவு ஆசை ஆசையாக வாங்கிய வீடு. வாழும் வீட்டை இப்படி கேட்டால் யாருக்கு தான் கோபம் வராது. ராகவன் என்ன விதிவிலக்கா.
குமார் குரல் அவனை நினைவுக்கு திரும்பியது.

லட்சுமி மேடம் ராகவன் தான் சொன்னான் வீட்டுக்குள்ளேயே வரக்கூடாது என்று

“ராகவன் சாரா அப்படியா சொன்னாங்க என்றார் மறுபடியும்… ”

“சும்மா விளையாடராருங்க.. ”

ஏஒ அந்த பக்கம் கடந்து போகையில் “காலையில் உங்கள் பஞ்சாயத்து ஆரம்பித்தாகிவிட்டதா? போங்க சார் எல்லோரும் வாங்கற சம்பளத்துக்கு 50℅ ஆவது வேலை செய்யுங்க..”என சொல்லிக் கொண்டே போனார்.

அதற்குள் மணி 11 ஆகிவிட்டது. “டீ சாப்பிட்டு வரலாமா என்றான் குமார்”

ஆபீஸ்க்கு வந்ததே இப்பதான் வந்தவுடனே டீ டைம் இன் கிளம்பிட்டா எப்படிப்பா கவர்மெண்ட் ஆபீஸ் எல்லாம் எப்படி நடக்கும் .

நம்ம நம்பியா இந்த ஆபீஸ் நடக்குது நம்ம இல்லனாலும் இந்த ஆபீஸ் நடக்கும் நேத்து ஒருத்தர். நாளைக்கு ஒருத்தர். நம்மள எப்ப வேண்டும் என்றாலும் மாத்திடுவாங்க அதனால வேலை எல்லாம் தானா நடக்கும். வாப்பா நம்ம போய் டீ குடித்து விட்டு வந்துவிடலாம்.

வழக்கமாக குமார் எதுவும் சாப்பிட மாட்டான்

ஏன் குமார் எதுவும் சாப்பிட மாட்டேங்கிற என கேட்டால் எனக்கு ஒத்துக்காது. சாப்பிட்டா எனக்கு வயிறு பொருமும் என்பான் குமார்

“வயிறு பொருமுமாம். காசு சிக்கனம் பண்ணுவேன்னு சொல்லு” என்றான் ராகவன். இது அவர்களின் தினசரி நடக்கும் உரையாடல்.

காசு சிக்கனம் எல்லாம் இல்லப்பா நிச்சயமாவே எனக்கு டீ ஒத்துக்காது. அப்ப பிளாக் டீ குடி சரிப்பா ஒரு பிளாக் டீ குடு என்றான் ராகவன்.

குமார் மறுபடியும் வீட்டை பற்றி பேச ஆரம்பித்தான்.

அன்னிக்கு உங்கள் வீட்டுக்கு வந்த அப்போ ஏதோ ஜாயிண்ட் வென்ச்சர் போடறதா பேசிகிட்டு இருக்காங்க.

“ஆமா பேசிட்டு இருக்காங்க 50 வருஷத்துக்கு பில்டிங் “.

“ஆமா பேசாம நீ உன் வீட்டை எனக்கு வித்துரு என சொன்னவுடன் ராகவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது” .

“குமார் என்ன நெனச்சிட்டு இருக்க என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா ”

“டேய் இதுல போய் என்னடா இருக்கு எனக்கு தோணுச்சு கேட்டேன் ” என்றான் குமார்.

“அதுக்கென்று வாழற வீட்டை கேட்பியா என்றான் ராகவன் கோபமாக”

“சும்மா விளையாட்டுக்கு கேட்டேன் டா இதுக்கு போய் இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிற” என்ற குமாரிடம் கோபத்தை எப்படி வெளி கட்டுவது என்று தெரியாமல் ராகவன், சரிப்பா நான் ஆபிஸ் போறேன் என கிளம்பினான்.

“நானும் வரேன் இருப்பா அதுக்குள்ள என்ன அவசரம் என்றான் குமார்”

இல்லப்பா நான் சீட்டுக்கு போறேன் அப்படின்னு சொல்லிட்டு வேகமாக ராகவன் சீட்டுக்கு வந்தான்.

சீட்டுக்கு வந்த ராகவன் மனம் ஏதோ ஒரு விதமாக நெருடலாக இருந்தது அவனுடைய எண்ணங்கள் சற்று பின்னோக்கி சென்றன

குமாருக்கு எப்பொழுதும் ராகவன் மேல் ஒரு கண் ஆனால் ராகவனை விட்டு விலகியும் போக மாட்டான். எப்பொழுதும் ராகவனோடு கூடவே இருப்பான்.
அப்படித்தான் ஒரு நாள் இருவரும் துணி கடைக்கு சென்றார்கள்.

ராகவன் ஒரு வையலட் கலர் சட்டை எடுத்தவுடன் டேய் ராகவா எனக்கு அந்த சட்டை குடுடா நான் ரொம்ப நாளா இந்த கலர தான் தேடிக்கிட்டு இருந்தேன் என அவனின் பதில் கூட எதிர்பார்காமல் டிரையல் ரூமுக்கு சென்று போட்டு பார்த்தது மட்டுமில்லாமல் ராகவா என்னை ஒரு போட்டோ எடு என கேட்டபோது வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு போட்டோ எடுத்து குரூப்பில் போட்டான்.

சரி இவனை விட்டு விட்டு வெளியே தனியாகப் போகலாம் என்றாலும் விடமாட்டான் எப்படியாவது நோட்டம் பிடித்து அவன் பின்னாலே போய்விடுவான்.
லஞ்ச் டைமிலும் இதே பிரச்சினை தான். இப்படி தான் ஒரு நாள்

ராகவா இன்னிக்கு என்ன சாப்பாடு…

மீன் குழம்பு இரா வறுவல்.

டேய் எங்க ஆத்துல இன்னிக்கு மோர் குழம்பு வடை. நீ என் சாப்பாடு எடுத்துக்கோ. எப்படியும் நீ இராத்திரி வீட்டுக்கு போய் அதே தானே சாப்பிட போற… எனக்கு கொடுத்துடுடா என்றவுடன்….குமார் உன்கிட்ட என்னால எதுவும் செய்ய முடியலா….என்றான் ராகவன்

உங்க வீட்டு மாமிக்கு தெரிந்தால் என்ன ஆகும்…

அது எல்லாம் இதுக்கு மேல தான் தெரிய போகுதா…. அவ கூட அவ ஆபிசில் மாமிசம் சாப்பிடறா….என சிரித்துக் கொண்டே சொன்னான் குமார்
எனக்கு தெரிந்த மாதிரி நான் காட்டிக்க மாட்டேன். அவளும் அப்படி தான் என்றான்.

ராகவன் எரிச்சலுடன் எடுத்துக்கோ என்றவுடன் டைப்பிஸ்ட் லக்ஷ்மி ஏன் சார் எப்ப பார்த்தாலும் எலியும் பூனையுமா இருக்கீங்க!

கிளார்க் புனிதா உடன் சேர்ந்து கொண்டார், ” அங்கங்க லேடிஸ் தான் சார் இது மாதிரி பொறாமைப்படுவாங்க”

குமார் சார் நீங்க ஏன் எப்ப பார்த்தாலும் ராகவன் சார் கிட்ட வம்புக்கு போறாங்க…

யார் மேடம் சொன்னாங்க பொறாமைபடுறேன் என்று…

யார் சொல்லனும் உங்க பேச்சே சொல்லுதே….

பதில் ஏதும் சொல்லாமல் சாப்பிட ஆரம்பித்தான் குமார்.

அனைவரும் ஒருவழியாக அவர் அவர்கள் டேபிள் போய் வேலை பார்க்க போனார்கள்..

அதே போல் ஹோட்டலுக்கு சென்றாலும் நீ என்ன சாப்பிட போற….ராகவா என்பான்

பொங்கல் என்றவுடன் அவன் தோசை ஆர்டர் கொடுப்பான்.

டிபன் வந்தவுடன்… டேய் எனக்கு கொஞ்சம் பொங்கல் கொடு என சொல்லி விட்டு எடுத்துக் கொள்வான். அனுமதி எல்லாம் இல்லை. அது ஒரு தகவல் தான். பில்லை கொடுக்கும்போது ராகவா நீயே கொடுத்துடு என்று சொல்வான்

ராகவனுக்கு இவனை எப்படி கழட்டி விடுவது என்றே தெரியாமல் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தான்.

அன்று பவுர்ணமி. ராகவன் வந்த தபால்ளை பிரித்து பதிவு செய்து கொண்டு இருந்தான்.

அப்போது தான் அந்த ஒரு நல்ல செய்தி கிடைத்தது குமாருக்கு டிரான்ஸ்பர் ஆர்டர். அந்த தபால் செக்ஷனில் வேறு யாரும் இல்லை. நமது ராகவனுக்கு மட்டும் தான் இந்த தகவல் தெரியும். ஆனந்தத்தில் தத்தளித்தான் ராகவன். எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தான்.

வழக்கம் போல் ஒவ்வொருவராக அலுவலகம் வந்தார்கள் . அன்றும் குமார் தாமதமாக தான் வந்தான்

குமார் உள்ளே வந்தவுடன் ராகவன், குமார் நான் உனக்கு பிரியாணி ட்ரீட் கொடுக்கிறேன் இன்னிக்கு என்னோட ட்ரீட்டு தான் சரியா. மதியமா வெளியே போயிட்டு சூப்பர் பிரியாணி சாப்பிடலாம் என்றான்.

எதுக்கு ராகவன் வந்ததும் வராதுமாக என்ற குமாரிடம் சும்மா தான் என்றான் ராகவன்.

என்ன சார் அவருக்கு மட்டும் தான் பிரியாணியா எங்களுக்கெல்லாம் இல்லையா என்று டைப்பிஸ்ட் சரண்யா கேட்க, என்ன மேடம் மொத்த ஆபீஸ்க்கு இன்னைக்கு நான் பிரியாணி வாங்கி தரேன் என்றான்.

மதியம் அனைவருக்கும் பிரியாணி வாங்கிட்டு வந்து கொடுத்தான் ராகவன். குமாருக்கு ஒரே ஆச்சரியம் ஏன் ராகவன் இன்று பிரியாணி வாங்கி கொடுத்தான் என குழப்பத்தில் இருந்தான்.

அன்று மாலை தபால் அனைத்து செக்ஷ்னுக்கு பகிரப்பட்டது.

“குமார் கவரை பிரித்தான்”.

“அப்பாடா என்று அமர்ந்தான் ராகவன்”

குமார் மெதுவாக ராகவனை பார்த்து இதற்கு தான் ட்ரீட் கொடுத்தாயாடா என்றான்

சிரித்துக் கொண்டே ராகவன் வேற என்ன பண்றது டா. எப்படியும் போக போறேன்னு முடிவாயிடுச்சி சந்தோசமா பிரியாணி சாப்பிட்டுட்டு போ என்று சொன்னவுடன் மொத்த நண்பர்களும் சிரித்தார்கள் கவர்மெண்ட் ஆபீஸ் சிரிப்பு ஆபிஸ் ஆனது.

இருந்தும் ராகவன் மனமும் குமார் மனமும் மட்டும் ஏதோ இனம் புரியாத உணர்வுகளில்….. ஆணின் மனதில் ஒரு பெண் மனம் ஒளிந்திருக்கும் என்பார்களே அது

இது தானோ? என நினைத்துக் கொண்டே வீட்டை நோக்கி பயணித்தான் ராகவன்.

நன்றி

எழுதியவர்:

திருமதி. சாந்தி சரவணன்
சென்னை – 40



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *