பிரசாந்து வே (Prashant V) எழுதிய ஆனைமலை (Aanaimalai) - நூல் அறிமுகம் - எதிர் வெளியீடு - https://bookday.in/

ஆனைமலை – நூல் அறிமுகம்

ஆனைமலை – நூல் அறிமுகம்

நான் ஒரு நகரவாசி. மரம் என்றால் வாழை, தென்னை மட்டும் தெரியும். விலங்குகள் என்றால் என் பேரனுக்குத் தெரிந்த அதே வைல்ட் அனிமல்ஸ், டொமஸ்டிக் அனிமல்ஸ்தான். பறவைகளில் காக்கை, புறா, கிளி, கழுகு என்று பத்திற்கு மிகாமல் தெரிந்து வைத்திருப்பவன். சமீபத்தில் பிரசாந்த் வே எழுதிய ஆனைமலை நாவலைப் படித்த போதுதான் நாம் அறியாதது எவ்வளவு என்று தெரிந்தது.

நம் உலகில் நம்மோடு வாழ்பவர்கள் தான் என்றாலும், பழங்குடி சமூகங்கள் குறித்து நமக்கு குறைந்தபட்ச அறிமுகம் கூட இல்லை என்று ஆரம்பிக்கும் நாவலின் நன்றி நவிலல் பகுதி, நாகரீக சமூகம் இதுவரை அறிந்திராத காட்டின் பக்கங்களை ஆனைமலை உங்களுக்குத் திறந்து காட்டும் என நம்புகிறேன் என்று முடிகிறது. இந்த வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை.

புள்ளிமான், மயில், கரடி, குரங்கு, புலி, யானை, சிறுத்தை என்று எனக்குத் தெரிந்த வைல்ட் அனிமல்ஸோடு, கடமான், சப்பைத்தலைப் பாம்பு, சருகுமான், பறக்கும் மலை அணில், மிளா, சோலைமந்தி, வரையாடு, கேளை. பாறன் (மரநாய்) என்று எத்தனை எத்தனையோ விலங்குகள் வருகின்றன. பச்சை பஞ்சுருட்டான், காட்டுச் சேவல், மந்திப்புறா, நீலஇறகு கிளி, ஆந்தை, தவிட்டுக் குருவி. பச்சைகுக்குறுவான், நாகணவாய் (மைனா), கரிச்சான் குருவி, உண்ணிக்கொக்கு, நீலச்சிட்டு, பொன்முதுகு மரங்கொத்தி, தேன்சிட்டு, கருப்பு வெள்ளை வாலாட்டி, ஊதாப்பிட்டு தேன்சிட்டு, பனங்காடை, வாலாட்டிக் குருவி, ஆள்காட்டிக் குருவி, மரகதப்புறா என்று பலப் பல பறவைகளின் கீச்சொலிகள் நாவல் முழுவதும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. மஞ்சணத்தி மரம், நீர்மத்திமரம், இலவமரம், இலுப்பைமரம், புங்கன்மரம், கருமருதுமரம், தேக்கு, பரம்மைமரம், குச்சிக்கிழங்குச் செடி, ஆட்டுக்கால் கிழங்குச்செடி, வட்டக்கண்ணி, சீமார்ப்புல், யானைப்புல், கூவன்கிழங்குச் செடி, காட்டுத்துவை, ஈஞ்சம்பனை, தும்பைச்செடி, முள்வேங்கை என்று எத்தனை எத்தனையோ தாவரங்கள் அடர்ந்த அந்த வனத்தில் பயணித்துக் கொண்டேதான் நான் நாவலில் வாழ்ந்தேன்.

நிஜமாகவே இந்த நாவல் நான் அறியாத ஒரு புது உலகை, வாழ்க்கை முறையை, அதிகாரவர்க்கத்தால் அது சீரழிக்கப்படுவதைக் காட்டுகிறது. விரட்டி வரும் காட்டு யானை முன் யானை மிரட்டி இலையைக் கசக்கி எறிந்து விரட்டுகிறார்கள் ! வட்டக் கண்ணி இலையை சுருட்டி கப் மாதிரி செய்து தண்ணீர் குடிக்கிறார்கள். மூங்கில்களை வெட்டி நிமிஷத்தில் குடிசை கட்டிவிடுகிறார்கள். மழை வருவதை முன்னுணர்ந்த பத்தாயிரக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் பத்திரமான இடத்திற்கு இடம் பெயர்ந்து பறந்து செல்கின்றன. அவை ஓரிடத்தைக் கடக்க அரைமணி நேரத்திற்கு மேல் ஆகிறது.

காட்டை உணர்ந்து கொள்ள காட்டிலிருந்து கற்றலை சுவக்க வேண்டும் என்று நாவலில் ஒரு வரிவருகிறது. அப்படிக் கற்க, வனம், வனப்பாதுகாப்பு, பற்றிய ஏராளமான தகவல்கள் நாவலில் உண்டு. டாப்சிலிப் பெயர்க் காரணம், தேக்கு மரங்களை நட்ட ஆங்கிலேய வனஅதிகாரி ஹியூகோ வுட்டின் கதை, பரம்பிக்குளம் ஆழியாறு அணைகள் கட்டப்பட்ட கதை, கும்கி பானைகளின் கதை, பழங்குடியினரின் பிறப்பு, திருமணம், இறப்பு சடங்குகள், ( அதிகார வர்க்கம் தலையிட்டு, இந்த இறப்பு சடங்குகளைக் கூட மாற்றித் தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி மாற்றச் செய்யும் கொடுமையும் நடந்துள்ளது !), அவர்களது பாடல்கள் என்று எத்தனை எத்தனையோ நுட்பமான அரிய தகவல்கள். எல்லாமே நான் இந்த நாவலுக்காக எவ்வளவு தகவல்கள் சேகரித்திருக்கிறேன் பார் ! என்று வாசகனுக்குக் காட்டுவதற்காகத் திணிக்கப்படாது, கதையின் ஓட்டத்தையொட்டி, இயல்பாக ஆங்காங்கே சொல்லப்படுவது சிறப்பு.

வனத்திற்குள் வாழ்வது இயற்கையை எதிர்த்துப் போராடும் போராட்டம் மட்டுமல்ல. அது சுரண்டல் சமூகத்தின் ஆதிக்கம் மற்றும் அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் சவாலும் நிறைந்தது என்று பின்னட்டையில் ச.பாலமுருகன் குறிப்பிடுகிறார். அந்தப் போராட்டத்தில் அந்த மக்கள் படும் துயரம் கொஞ்ச நஞ்சமல்ல. மேடு, பள்ளம், மலையிறக்கம், வனப்பாதை, வண்டிப்பாதை, தோட்டச் சாலை என பலவற்றையும் கடந்து தினமும் 8 கிமீ நடந்து குழந்தைகள் பள்ளி செல்கிறார்கள். பள்ளி விட்டதும் மீண்டும் அதே 8 கி மீ. பிரசவ வலி வந்த கர்ப்பிணிகளை தொட்டில் கட்டித் தூக்கிக் கொண்டு இதே மாதிரி வரவேண்டும். அதில் உயிர் பிழைத்தோரும் உண்டு. உயிரை விட்டோரும் உண்டு. காட்டில் புலி இறந்து கிடந்ததற்கு நீங்கள்தான் காரணம் என்று வனத்துறை அந்த மக்களை அடித்துச் சித்ரவதை செய்யும் கொடுமையும் உண்டு. அந்த சித்ரவதையை சாவால் தவிர வேறு எதனாலும் கடக்க இயலாது என்று நாவலில் வரும் வரியைக் கடக்க முடியாது நான் திண்டாடினேன்.

இத்தனைக்கும் நடுவில், புலிகள் பாதுகாப்பு, கானுயிர் பாதுகாப்புன்னு சொல்றது எல்லாம் வணிகம் சார்ந்த அதிகார அரசியல். இந்தக் காடு, டைகர் ரிசர்வா இருந்தா புலிக மட்டுந்தான் வாழும். அதுவே டிரைபல் ரிசர்வா மாறுனா டிரைபல்ஸ் கூட சேர்ந்து புலிகளும் வாழும் என்று சொல்லி பழங்குடி மக்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சி போராடுவதை நாவல் பதிவு செய்திருப்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது.

அதிகாரிகளின் ஊழல், மரம் வெட்ட அனுமதித்தல், வனத்தில் ரிசார்ட் கட்டுதல், சுற்றுலாவை அனுமதித்தல் என அதிகார வர்க்கத்தின் வரைமுறையற்ற செயல்களால் வனமும், அந்த வனத்தின் மக்களும் ஒவ்வொரு நாளும் அழிந்து கொண்டே இருக்கிறார்கள்.
நாவலில் ஓரிடத்தில் ‘இப்போ காட்டுல மனுசங்களும் நல்லா இல்ல, விலங்குகளும் நல்லா இல்ல,‘ என்று வரும்.
அதை நம் மனதில் மிக ஆழமாகத் தைக்கும் வண்ணம் சொல்லி, பொது சமூகத்திற்கு இப்படியெல்லாம் பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை மிக அழகாகக் கூறும் நாவல் ஆனைமலை.

நூலின் தகவல்கள் : 

நூல் : ஆனைமலை
ஆசிரியர் : பிரசாந்து வே
வெளியீடு : எதிர் வெளியீடு
பக்கம் : 240
விலை : ரூ320
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/aanai-malai/

நூல் அறிமுகம் எழுதியவர் :

ச.சுப்பாராவ்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 3 Comments

3 Comments

  1. இளங்குமரன்

    மனதில் இருந்து எழுதிய அறிமுகம். தோழர் சுப்பாராவ் இனி சூழல் அறிவியலிலும் கொடி கட்டிப் பறப்பார்.

    வனத் துறை என்று ஒன்று வராத காலத்தில் காடுகள் 100 சதவீதமாக இருந்தன. அங்கே நுகர்வு மட்டும்தான் இருந்தது. வணிகம் இல்லை.

    வனத்துறை ஆங்கிலேயர் காலத்தில் வந்த பிறகுதான் வனங்கள் அழியத் தொடங்கின.

    சுதந்திரம் (?) பெற்ற பிறகாவது அந்த மக்களை வாழ விட்டார்களா? ஆங்கில வனத் துறையை விட இந்திய வனத் துறையால் பல மடங்கு வனங்கள் அழிக்கப் பட்டு தற்போது 50 சதவீதத்துக்கும் கீழே போய் விட்டது.

    குற்றம் சாட்டுவது அப்பாவி மக்கள் மீது….

    • நளினி

      ஆனை மலை ஈரோடு ஷர்மிளா வா எழுதி உள்ளார்?சற்று சரிபார்க்கவும்

    • நளினி

      ஆனை மலை ஈரோடு ஷர்மிளா வா எழுதி உள்ளார்?சற்று சரிபார்க்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *