ஆனந்தவல்லி – நூல் அறிமுகம்
எழுத்தாளர் லஷ்மி பாலகிருஷ்ணன் எழுதிய வரலாற்று நாவல் ‘ஆனந்தவல்லி’ வாசித்து முடித்து, ஒரு வாரம் ஆனபிறகும், மனம் அதன் பாதிப்பிலிருந்து வெளிவராமல், அதிலேயே சுழன்று கொண்டிருக்கின்றது. அடுத்த வேளை சோற்றுக்கு உத்தரவாதமில்லாத பரமஏழை வீட்டில் பிறக்கும் குழந்தைக்குக் கோடீசுவரன் என்று பெயர் வைப்பதைப் போல, இந்நாவலில் மருந்துக்குக் கூடத் துளி ஆனந்தமின்றி, அவல வாழ்வில் உழலும் ஓர் அபலைப் பெண் மீனாட்சிக்கு, ‘ஆனந்தவல்லி’ என்று பெயர் சூட்டுகிறாள் ருக்மணி! பெயரிலாவது ஆனந்தம் இருக்கட்டுமே என்று நினைத்திருப்பாளாயிருக்கும்!
இது ஆசிரியரின் முதல் நாவல் என்பதை, நம்பவே முடியாத அளவுக்குத் அந்தக் காலத்துப் பேச்சு வழக்குடன் கூடிய, தங்குத் தடையில்லா ஆற்றொழுக்கு நடை! தஞ்சையைக் கடைசியாக ஆண்ட மராட்டிய மன்னர் கால வரலாறு, முற்றிலும் எனக்குப் புதிதென்பதால், கத்திக் கல்யாணம், அக்காமார் பதவி, சேடிப்பெண்கள் வாழ்க்கை போன்று, நான் தெரிந்து கொண்ட புதிய செய்திகள் ஏராளம். சில சொற்களுக்கு, எனக்கு அர்த்தம் தெரியவில்லை. கடினமான சொற்களுக்குப் பின்னால் அர்த்தம் கொடுத்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்.
நம் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு மனிதர்களை அடிமையாக விற்கப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உள்நாட்டிலேயே பெண்களைப் பணத்துக்கு விற்றிருக்கிறார்கள் என்பது, இதுவரைக் கேள்விப்படாத அதிர்ச்சி தரும் செய்தி. இந்நாவலின் ஆழமும், அடர்த்தியும், ஆசிரியரின் கடின
உழைப்பையும், தரவுகளின் தேடலையும் பறைசாற்றுகின்றன.
மீனாட்சிக்கு ஐந்து வயதான போது, சபாபதிக்கும் அவளுக்கும் திருமணம் நடக்கிறது. பெரிய பெண்ணான பின், மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்புவதாகச் சொல்லி, அவளைப் பிறந்த வீட்டிலேயே வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவளுக்கு 12 வயதானபோது, பொறுப்பற்ற தகப்பன், மராட்டியர்களின் தஞ்சாவூர் அரண்மனையில், அவளைப் பணத்துக்கு விற்றுவிடுகின்றான். மனைவியை அழைத்துப் போய்க் குடும்பம் நடத்தலாம் என்று சபாபதி வரும் போது தான், அவள் விற்கப்பட்ட செய்தி தெரிகிறது. அவளை மீட்க வேண்டி, அவன் அலைவது தான் கதையின் மையக் கரு. சபாபதி, மதராஸ் மாகாண கவர்னருக்கு எழுதிய உண்மையான கடிதத்தை அடிப்படையாக வைத்து, இந்தப் புனைவை எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
அரண்மனையில் விற்கப்பட்ட தன் மனைவி, இதுவரை எப்படிப்பட்ட வாழ்வு வாழ்ந்திருப்பாள்? அவளை மீட்டு வீட்டுக்குக் கூட்டி வந்து குடித்தனம் நடத்தினால், சுற்றியிருக்கும் சமூகமும், சுற்றமும் எப்படியெல்லாம் காறித் துப்பும்? என்ற உண்மைகளைச் சபாபதி நன்கு அறிந்திருந்தும், தன் மனைவியை மீட்டுத் தரச் சொல்லிக் கவர்னருக்குக் கடிதமெழுதுகிறான் என்றால், அவன் எப்பேர்ப்பட்ட காவிய நாயகனாக இருந்திருப்பான்? அதுவும் ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணம் செய்ய, எந்தத் தடையும் இல்லாத, அந்தக் காலத்தில்! அவள் தகப்பன் செய்த குற்றத்துக்கு, ஒரு பாவமுமறியாத அவளைத் தண்டிக்கக் கூடாது என்ற உயர்வான பரந்த குணம் படைத்தவனாக, அவனிருந்த காரணத்தினால், சபாபதியே இந்நாவலில் மறக்க முடியாக் கதாபாத்திரமாக, என் மனதில் உயர்ந்து நிற்கிறான்!
இரண்டாவதாக எனக்குப் பிடித்த கதாபாத்திரம், அமரசிங்க ராஜாவின் ஆசைநாயகி ருக்மணி. ராஜா முறைப்படி மணந்து, அரண்மனைகளில் வசிக்கும் ராணிகளை விட, அரசர்மேல் பக்தியும், விசுவாசமும், உண்மையான அன்பும் கொண்டவள். அரசருக்கு அரசியல் பிரச்சினையிலும், அறிவுபூர்வமாக யோசித்துத் தீர்வு சொல்பவளாக இருக்கின்றாள். ராணி பவானிபாயி உடன்கட்டை ஏறுவதற்கு முன்பு, அவள் இதுநாள்வரை கேவலமாக நினைத்து வெறுத்தொதுக்கிய போகஸ்திரீ ருக்மணியுடன் பழகிய சில மணி நேரத்தில், அவள் மதிநுட்பத்தையும், மனஉறுதியையும் கண்டு அதிசயிக்கிறாள். தம் கணவரான அரசரின் மரியாதைக்கும், அன்புக்கும் ருக்மணி உரியவள் தான் என்று, சாகுந்தறுவாயில் உணர்ந்து கொள்கிறாள். உடன்கட்டை ஏறுதலைத் தடுக்க நினைக்கும் பிரிட்டிஷ் படையின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டுத் தான் நினைத்தது போலவே, ருக்மணியும், ராணி பவானிபாயுடன், தீயில் பாய்ந்து உயிரை விடுகிறாள்.
உடன்கட்டை ஏறுதல் தமிழ்நாட்டிலும், தஞ்சை மராட்டியர் ஆட்சிக் காலத்தில் நடந்திருக்கிறது. இம்முடிவைப் பெண்கள் தாங்களே விரும்பி ஏற்கும் வகையில், அவர்களுக்கு அகத்தூண்டுதல் இருந்திருக்கிறது. கணவனை இழந்த பெண்கள், எப்படிப்பட்ட துன்பம் அனுபவிக்க வேண்டுமென்பதற்கு, நமக்குப் பெருங்கோப்பெண்டு எழுதிய பாடல் சான்றாக இருக்கின்றது. “தீயில் இறங்கி இறந்தால், உன்னைத் தெய்வமாக வழிபடுவார்கள்; உனக்கு மோட்சம் கிடைக்கும்; உன் பிள்ளைகளுக்குக் குடிப்பெருமை கிடைக்கும்; உன் பிள்ளைக்கு ஆட்சியுரிமை கிடைக்கும்” என்றெல்லாம், பெண்ணுக்குப் போதனை செய்து, அவள் மூளையை மழுங்கச் செய்து, அவளைத் தீயில் இறக்கிச் சாகடிக்கச் ‘சதி’ செய்திருக்கிறது, இச்சமூகம். ‘அமங்கலி’ என்ற சமூகத்தின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் பயந்து கொண்டு, வாழ்நாள் முழுக்க வீட்டின் மூலையில் முடங்கி, குடும்பத்துக்குப் பாரமாகயிருந்து, சபிக்கப்பட்ட வாழ்வு வாழ்வதை விடத் தீயில் இறங்கி உயிர்விடுவது எவ்வளவோ மேல் என்ற முடிவை, வேறு வழியின்றி, அக்காலப் பெண்கள் எடுத்திருக்க வேண்டும். அதனால் தான் இந்நாவலிலும்,பிரிட்டிஷாரின் தடையையும் மீறித் தீயில் இறங்கி உயிர்விடுவதைப் பெண்கள் சாகசம் செய்வது போலப் பெருமிதமாக நினைக்கிறார்கள்.
உடன்கட்டை ஏறும் சமயம், பெண்கள் அணிமணிகள் பூண்டு மாமங்கலையாக, நெருப்பில் நுழையவேண்டுமாம்; அப்போது அவர்கள் அணிந்திருக்கும் நகைகள், அவள் குடும்பத்தைச் சேராதாம். மறுநாள் சிதைச்சாம்பலிலிருந்து, ஈமக்கடனை நடத்திய புரோகிதர் எடுத்துக் கொள்வாராம். இதுவும் இந்நாவல் மூலம், நான் தெரிந்து கொண்ட, மிக முக்கிய செய்தி!
பெண் தீயில் பாய்ந்து செத்தால், புரோகிதருக்குத் தங்கம் கிடைக்கும் என்றால் சும்மாவா? இதற்காக எத்தனைப் பெண்களை வேண்டுமானாலும் சாகடிக்கலாமே! எனவே இந்த வைதீக மதம், இப்படிப்பட்ட கொடுமையான வழக்கத்தை உண்டாக்கி, அதைப் புனிதமாக உயர்த்திப் பிடித்து, அது தடைபடாமலிருக்க, என்னவெல்லாம் தகிடுதத்தம் பண்ணியிருக்கும்? வெள்ளையரின் ஆட்சியால் நமக்குக் கிடைத்த, ஒரு சில நன்மைகளில், இந்த உடன்கட்டை ஏறுதல் தடைச்சட்டமும் ஒன்று.
இந்நாவலில் உடன்கட்டை நிகழ்வுக்கு, ஈமச்சடங்கு செய்யும் புரோகிதரின் நினைவோட்டம் குறித்து வரும் பத்தி:-
“அவரது கைகளும், வாயும், அடுத்தடுத்த சடங்குகளில் ஈடுபட்டாலும், மனதின் ஒரு மூலை, இருவரின் உடலிலும் இருக்கும் நகைகளைக் கணக்கெடுப்பதைத் தவிர்க்க முடியவில்லை. மற்ற நாட்களிலெல்லாம் இந்த அரச குடும்பத்துப் பெண்கள், வெளிக்கிளம்புகையில் உடலில் அவர்களின் எடைக்கு சமமாகவே, நகைகளும் இருக்கும். சதிக்கென்று கிளம்பி வருகையில் மட்டும், அங்கத்திற்கொன்று என்று, கணக்காகத்தான் பொறுக்கியெடுத்து அணிந்து கொள்கிறார்கள் என்ற உள்மனதின் பொருமலை, மந்திரங்களை ஓங்கி உச்சரிப்பதன் மூலம், அடக்கிக் கொண்டார்”. (பக் 177)
வரலாற்று நாவலென்றால், பெரும்பாலும் ராஜா,ராணி குறித்த கதைகள் தான் இருக்கும். மாறாக அரசரின் அரண்மனையில் பணிபுரியும் பரிதாபத்துக்குரிய ஏவல் பெண்டுகளின் வாழ்வை முன்னிறுத்தி, இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது சிறப்பு! நாவலின் கடைசிப் பகுதியில் கல்யாணமகாலில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகித் தற்கொலைக்கு முயலும் சந்திரா, மரகதம் என்ற பெண்களிடம், ஆனந்தவல்லி பேசும் பகுதி, ஏவல் பெண்டுகளின் அவல நிலையை விளக்குகிறது:-
“இந்த பத்தினியா இருக்கறதுன்றதெல்லாம், பெரிய மனுஷங்க குடும்பத்து பொண்டுகளுக்குத் தான். பெரிய மனுஷனுக்கு வாழ்க்கப்பட்டவங்க எவ்வளவுக்கு எவ்வளவு, புருஷனுக்கு விசுவாசமா இருக்காங்களோ அவ்வளவுக்கு அவங்க பெத்த புள்ளைங்களுக்கு, மதிப்பும் மரியாதையும் கூடும். இப்ப நம்ம பவானியம்மா சிதையேறினாத் தான், யுவராஜா பிரதாபசிங்கருக்கு மதிப்பு. அதுக்காவத்தான் இது மாதிரி சம்பிரதாயமெல்லாம் வச்சிருக்காங்க. நம்மள மாதிரி, வயத்து பொழப்புக்கு அடுத்தவன அண்டியிருக்கிறவங்களுக்கு, இந்த மாதிரி கெளரமெல்லாம் கிடையாது.”
மராட்டிய அரசர்கள் கும்பினி அரசிடமிருந்து, மானியம் பெற்றுக் கொண்டு அதிகாரம் சிறிதுமின்றிப் பொம்மை அரசர்களாகவும், சிற்றின்பத்தில் திளைப்பவர்களாகவும் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற உண்மையை, இந்நாவல் பதிவு செய்துள்ளது. குழந்தைத் திருமணம் வழக்கிலிருந்ததையும், திருமணச் செலவுக்கு மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டுக்குப் பணம் கொடுத்ததையும், அறிய முடிகிறது. தஞ்சை மராட்டிய மன்னர் வரலாற்றுடன், அக்காலச் சமூகத்தில் பெண்களின் நிலை, பெண் வணிகம், உடன்கட்டை ஏறுதல் போன்று பல செய்திகளை, இந்நாவல் மூலம் அறிந்து கொள்ள முடிவது சிறப்பு.
முதல் நாவலிலேயே சதமடித்துச் சாதனை படைத்த ஆசிரியருக்கு, என் பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
நூலின் தகவல்கள்:
நூல் : ஆனந்தவல்லி
ஆசிரியர் : லஷ்மி பாலகிருஷ்ணன்
விலை : ரூ.230
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
நூலின் எழுதியவர் :
ஞா.கலையரசி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.