கொரோனா காலத்தில் படித்த புத்தகங்களில் மிகவும் என் மனதை ஈர்த்த புத்தகம் ‘ஆண்பால் உலகு’ என்ற நாவல். சிலோன் தமிழில் எழுதப்பட்ட புத்தகம் ஒரு புது உலகத்தை, சிலோனின் கிராமங்களை கண்முன் கொண்டு தந்தன. தமிழின் இன்னொரு அழகை இதில் பார்க்க முடியும். சிலோனின் தமிழ் கிராமங்களின் வாழ்க்கையை மிக நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது இந்த நாவலில்.
வறுமை எவ்வளவு கொடூரமான ஒரு பேரிடர் என்பதும் வறுமையும் ஆணாதிக்கமும் பெண்ணை எப்படி கொடுமை படுத்துகிறது, பெண்ணை எப்படி அடிமைப்படுத்துகிறது என்பதை மிகச் சரியாக வரைந்து காட்டுகிறது ஆண்பால் உலகம்.
இலக்கிய உலக ‘தம்பிராக்கள் ‘கூறும் காவிய அழகியலின் பட்டியலில் புத்தகம் சந்தேகத்தில் நிற்கும் என்றாலும் எதார்த்தவாத அழகியலை அருமையாக பயன்படுத்தி இருக்கிறது எழுத்தாளர்.
உருவம் புதுமையாக இல்லை என்றாலும் உள்ளடக்கம் அதை சரி செய்கிறது.
அருந்ததி என்ற அருளானந்த ராஜா ஒவ்வொரு வார்த்தையையும் எழுதுவதற்கு தன் இதயத்தை உருக்கி மை தயார் செய்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

தமிழ் புலிகளின் இன்னொரு முகத்தை நமக்கு இங்கு சரித்திர நிகழ்வுகளை சுட்டிக்காட்டி தெளிவுபடுத்தி தருகிறார். தமிழ் இனம் என்று வீராப்பு பேசுகிற இனத்தம்பட்டத்தை எழுத்தாளர் மிகச்சரியாக சாதுரியமாக உடைக்கிறார்.
வளர்ச்சிபெற்ற நாடுகளில் தஞ்சம் புகுந்ததற்கு பிறகும் ஒரு மத்திய வர்க்க பிரஜையாக உருவெடுத்த பிறகும் இனத்தீட்டும் குறுகிய சுயநல எண்ணங்களையும் கைவிடாத தமிழினத்தை நோக்கி வேதனைப்படுகிறார் . நாவல் ஆசிரியரின் சுய வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து முன்னேறும் இந்த நாவல் எல்லோராலும் வாசிக்கப்பட வேண்டுமென்பது எனது வேண்டுகோள்.
பிரமையூட்டும் கற்பனை வாத குப்பைகளின் மத்தியில் இது மாறுபட்ட முயற்சி. ரியலிஸ்டிக் இலக்கியத்தின் எதிர்காலத்தில் சந்தேகப்படுகிறவர்களுக்கு இது ஒரு பதில் ஆகும்.
எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.
நூல்: ஆண்பால் உலகு
ஆசிரியர்: அருந்ததி
வெளியீடு: கருப்பு பிரதிகள்
விலை: 260/-
விலை: 260/-
-ஜெயகாந்தன்.


ஆம் நானும் வாசித்தேன் கண்கலங்கினேன்…. இலங்கையில் இப்படி எத்தனையெத்தனை இவர்கள் போல்…. அதில் நானும் ஒருத்தி….. அவர்கள் குடும்பம் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும்.