புத்தகத்தின் பெயர் : ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது (Aangal Samaippadhu Athaninum Inidhu)
ஆசிரியர் : ச.தமிழ்ச்செல்வன்
பக்கங்கள் : 108
பதிப்பகம் : வாசல் பதிப்பகம்
விலை : 79
தலைப்பு : சமூகநீதி
(குறிப்பு: இது சமையல் குறிப்பு புத்தகம் மட்டுமல்ல…)
அரிசிக்கும் பருப்புக்கும் தெரியாது சமைப்பது ஆணா பெண்ணா என்பது. யார் மூட்டினாலும் அடுப்பு எறியத்தான் செய்கிறது. அரிசி வேகத்தான் செய்கிறது .ஆனாலும் சமைப்பது பெண்களின் வேலை தான் என்று நினைப்பு ஆண்டாண்டு காலமாக நமக்குள் அழுத்தமாக கிடக்கிறது. இது ஏன்..?
அம்மாவையும் மனைவியையும் மகளையும் உயிரினும் மேலாய் நேசிக்கிற நாம் அவர்களை அடுப்பங்கரையிலிருந்து விடுதலை செய்வது பற்றி நிஜமாகவே அக்கறை கொண்டுள்ளோமா.! சற்று சிந்தியுங்கள்..!!
சிந்தித்தப் பின் பிறகு வாசிக்கலாம்…
இந்த கேள்வி இதை வாசிக்கும் ஆண்களுக்கு மட்டுமல்ல. இதற்கான வாய்ப்பை நம் வீட்டு ஆண்களுக்கு நாம் கொடுத்திருக்கிறோமா என்று பெண்களும் சிந்திப்பதற்கே.
சரி விடையை இறுதியில் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இப்போது புத்தகத்திற்கு வருவோம்.
புத்தகத்தின் ஆரம்பம் விக்ரமாதித்தினுக்கும் வேதாளத்திற்கும் இடையே நடக்கும் கலந்துரையாடலாக ஆரம்பிக்கிறது. வேற எத பத்தினு நினைக்கிறீங்க. அதே … அதே தான்…
சமையல் கட்டுக்குள்ளே கால் வைக்கிறது பத்தி தான்.
நாம சமையல்கட்டுக்குள்ள கால் வைக்கிறதுக்கு முன்னாடி , ஆரம்ப காலத்தில் இருந்த சமையல் அப்படிங்கறது எப்படி உருவானதுனு ஒரு சின்ன வரலாற்று அலசல். வாங்க ஆதியிலிருந்து ஆரம்பிக்கலாம்.
சமையல் கலை ஆரம்பம் :
ஆதிமனிதன் உணவை சமைக்க வில்லை . ஆண் பெண் பேதம் இன்றி நமது முன்னோர்கள் காடுகளிலும் மலைகளிலும் இரை தேடி அலைந்தார்கள். உணவை பாதுகாக்கும் விஞ்ஞானத்தை கண்டுபிடித்திருக்கவில்லை. ஆகவே சாப்பிட முடிந்தவரை சாப்பிட்டுவிட்டு மீதியை சக மனிதர்களுக்கு பங்கு போட்டு கொடுத்து ஆக வேண்டிய கட்டாயம்.
ரத்த உறவினால் மட்டுமின்றி தின்ற உணவின் அடிப்படையிலும் கூட இனக்குழுக்கள் தோன்றின என்கிறார் வரலாற்று அறிஞர் டி.டி கோசாம்பி. இந்தியாவில் உயிர் கொலை செய்யாமலே சரிவிகித கலப்பு உணவு பெறுவது சாத்தியம் என்று நிலை கற்காலத்திலேயே இருந்திருக்கிறது. இந்திய நாட்டில் காய்கள், பழங்கள் என எல்லாமே கிடைக்கும் இடமாதலால் , ஒரு நிலையில் அசைவ உணவுகளை தவிர்த்து சைவத்தை கையில் எடுக்க ஆரம்பிக்கிறார்கள் . அப்பொழுதுதான் மதம் என்று ஒன்று உருவாகிறது.
ஆதி உணவு பழக்கத்தை விடாமல் தொடர்கிற சாதிகள் தான் இருப்பதிலேயே அடிமட்டம் என்று நிலைக்கு ஆளாகி , உணவு சாதி அடையாளங்களில் ஒன்றாகிறது. சாப்பாட்டில் உயர்வு தாழ்வு என்று ஏதுமில்லை. பழக்கம்தான் காரணம் என்பது எப்போது நமக்கு உரைக்கப்போகிறதோ தெரியவில்லை.
மனிதனுக்கு “ கட்டுப்பட்ட நெருப்பு “ எப்போது வந்ததோ அப்போது இருந்துதான் மனிதகுல நாகரீகம் பாய்ச்சல் வேகம் பெறுகிறது. அதற்கு முன்னர் சூடாகி இருக்கும் பாறைகளில் போட்டு இறைச்சியை சுட்டும் சாப்பிட்டுருக்கிறார்கள். வேட்டையாடுதலில் ஆணுக்கு இணையாக பெண்ணும் இரைத்தேடி காடுகளில் அலைந்திருக்கிறாள்.
அதற்கு பின்பு தான் உணவை தயாரிக்கிற முறையிலும் அவித்தல் சுடுதல் வாட்டுதல் ஊறவைத்து இடித்தல் உருவாகி , இன்று மாற்றம் கண்டு விசில் சத்தம் வந்து நம்மை தொலைக்காட்சியில் இருந்து மீட்டெடுத்துச் செல்கிறது.
காய்கறிகள் வரலாறு :
கிரீஸில் இருந்து வெங்காயம் அரேபிய வழியாக நம் நாட்டுக்குள் வந்துள்ளது . வெள்ளைப்பூண்டு வெந்தயம் போன்றவை மகா அலெக்சாண்டர் படையெடுத்து வந்த போது இந்தியாவுக்கு வந்தவை. பெருஞ்சீரகம் சீனாவில் இருந்து வந்தது . இந்திய சமையலில் மிக அதிகமான தாக்கம் ஏற்படுத்தியவர்கள் போர்ச்சுகீசியர்கள். வினிகர் எனப்படும் புளிக்காடி அவர்கள் கொண்டு வந்ததே. ஊறுகாய் போடும் பழக்கமும் அவர்கள் தந்தது தான்.
தென் அமெரிக்கா மிளகாய் வெத்தலை இந்தியாவுக்கு கொண்டுவந்து இந்திய சமையலையே தலைகீழாக மாற்றிவிட்டனர். உருளைக்கிழங்கையும் தக்காளியையும் கூட போர்ச்சுகீசிர்களே கொண்டு வந்தனர். எத்தியோபிலாவிலிருந்து இவர்கள் கொண்டு வந்த காப்பியையும் , (பிரிட்டிஷ்) வெள்ளைக்காரன் டீ கொண்டு வந்ததையும் நாம் அறிய வேண்டும். (இதற்கு முன்னர் எழுதிய புத்தக விமர்சனமான வாஸ்கோடகாமா புத்தகத்தில், போர்ச்சுகீசியர்கள் எவ்வாறெல்லாம் இந்தியாவுக்கு வர துடித்தார்கள் என்பது பற்றி எழுதி இருந்தேன் வாய்ப்பு கிடைத்தால் வாசித்து பாருங்கள்)
மொத்தத்தில் நம்முன் உள்ளே சாப்பாட்டு தட்டில் கிரேக்கமும் போர்ச்சுகளும் அரேபியாவும் சீனமும் பௌத்தமும் சமணமும், கிறிஸ்தவமும் இஸ்லாமும் பிராமணமும் ஒன்றாக கலந்து கிடக்கின்றன. அது உண்டு செரித்து உயிர் வாழும் நாம் , வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு எடுத்துக்காட்டான உடலோடு மட்டுமின்றி உள்ளத்தோடும் வாழ வேண்டும் என்கிறார் ஆசிரியர்.
இப்படி எல்லாம் ஆதி முதல் அனைத்தையும் ஆரம்பித்து , சமையல் என்பது சமைப்பது மட்டுமல்ல சமையல் கட்டு ஒழுங்கு (kitchen discipline) , பாத்திரங்களை எப்படி உபயோகிப்பது சுத்தம் செய்வது, எந்தெந்த சமையலுக்கு எந்தெந்த பாத்திரங்களில் சமைக்க வேண்டும் , அது தற்பொழுது எப்படி எல்லாம் பரிணாமம் கண்டுள்ளது என்பதை பெண்களுக்கு கூறும் விதமாக அல்லாமல் , ஆண்களுக்கு அடிப்படை அறிவு தரும் புத்தகமாக இந்த புத்தகம் இருக்கிறது.
எளிமையான நடையில் நகைச்சுவை உணர்வோடு நம் வீட்டு அடுக்களையில் ஒரு ஆண் இருந்து சமைத்தால் எப்படி ஒரு உணர்வு தோன்றுமோ அது போன்ற உணர்வை தருமாறு ஆசிரியர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார் . இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகள் , சமையல் கலை அறிவுரைகளை எல்லாம் அப்படித்தான் என்னால் வாசிக்க முடிந்தது.
குறிப்பாக, காதல் மலரும் சமையலறைகள்… என்ற தலைப்பில் காதலிக்க எல்லோரும் பீச் பார்க் சினிமா தியேட்டர் என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள் . சமையல் அறையை விட அன்பும் காதலும் செழித்து வளர பொருத்தமான இடம் உலகத்தில் வேறு ஏதும் இல்லை என்கிறார் . பத்து நாள் சேர்ந்து சமைத்தால் சண்டை போட்டுக் கொண்டிருந்த கணவனும் மனைவியும் கூட அன்பு முற்றி வாடா போடா என்று பேசிக்கொள்வார்கள் என்கிறார் . உண்மையில் இது சத்தியமான வார்த்தைகள் அல்ல சாத்தியமான வரிகள்.
சமையல் அழகியல்... என்ற தலைப்பில் தாளிக்கும் போது சடசடவென ஒரு சத்தம்..
அப்பளம் பொரியும் போதும் பூரி விரியும் போதும் தோசை ஊற்றும்போது வருகிற மென்மையான ஸொவைங்… என்கிற சத்தம்
குழம்பு கொதிக்கிற போது கேட்கிற களப்புளா… சத்தம்
சாதம் கொதிக்கிற ததாபுதாவில்…. தான் எத்தனை அழகு கொட்டி கிடக்குது. இந்த வரிகளில் கூட . இத்தனை அழகியலையும் பெண்கள் மட்டுமே அனுபவிப்பதா ஆண்களும் சற்று சமையலுக்குள் நுழைந்து அழகியலை பாருங்களேன் என்கிறார்.
பெரும்பாலான வீடுகளில் டிவி பார்க்கும் இடம் நல்ல விசாலமாகவும், சமைக்கும் அறை விதிவிலக்கு இன்றி இத்துனுண்டாகவும் இருப்பதை பார்க்கலாம் . அது பெண்ணின் சேரி தானே என்று சமையல் கட்டை பெண்ணுக்குரிய ஒதுக்குப் புறமான இடம் என்கிறார். இன்று பல ஆண்கள் தங்கள் மனைவிகளுக்கு உதவுகிறார்கள் என்றாலும் , பெரும்பான்மையான ஆண்கள் அந்த எண்ணம் கொள்ளவில்லை என்பதால் இந்த புத்தகம் எந்த காலத்திலும் சமுதாயத்தில் மாற்றம் வரும் வரை வாசிக்க வேண்டிய புத்தகம் தான்.
சமையலறை என்றால் சமைத்துத் தான் சாப்பிட வேண்டும் என்று கிடையாது . சமைத்து சாப்பிட்டால் சாவு நெருக்கத்தில் வரும் என்று ஒரு சொலவடை உண்டு. பச்சையாக சாப்பிட்டால் பலகாலம் வாழ முடியும் என்பது புதுமொழி . ஆம் , இயற்கை வைத்தியம் , இயற்கை உணவை நோக்கி பலர் நகர்ந்து கொண்டிருக்கும் காலம் அல்லவா இது.
மனிதன் சமைத்து சாப்பிட துவங்கிய பிறகு தான் சகல வியாதிகளும் அவனுக்கு வந்து சேர்ந்தன என்கின்றனர் இன்றைய இயற்கை மருத்துவர்கள். ஆகையால் அடுப்பில்லா சமையலறையும் நீங்கள் வடிவமைக்கலாம் என்கிறார்.
இது போல பல ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை சமையல் சார்ந்த கருத்துக்களை கூறி இறுதியாக ஒரு ஆண் அடுக்களை சென்றால் சாதம் வடிப்பது முதல் குழம்பு வைப்பது , பொரியல் அவியல் செய்வது வரை உதாரணமாக ஒரு சில சமையல் குறிப்புகளையும் கொடுத்துள்ளார்.
முக்கியமாக நான் சொல்ல வருவது என்னவென்றால், வெளிநாடு வாழ் ஆண்கள் மற்றும் வெளியூர்களில் வாழும் பேச்சுலர்ஸ்… எங்களுக்கெல்லாம் இது தேவை இல்லை என்று சொன்னாலும் …
திருமணம் என்ற ஒன்று எப்போது நடக்கிறதோ அப்போதே சால்சாப்பு சொல்லிக்கொண்டு அதை பெண்கள் மீது கட்டிவிட்டு ஒதுங்குவதற்கு பொது புத்தியில் சிந்தனை வரும். ஒருவேளை இந்த விமர்சனம் உங்கள் மனதில் ஒரு ஓரத்தில் ஒரு சின்ன உறுத்தலை தந்திருந்தாலும் நாளை முதல் சமையல் கட்டில் நீங்களும் இருப்பீர்கள்.
பெண்களே, ஆண்கள் சமைத்தால் அடுக்களை அசுத்தமாகிவிடும் . அது ஒரு வேலைக்கு இரண்டு வேலை , கேட்கின்ற கேள்விகளுக்கு விடை சொல்ல பயந்து கொண்டு சமையல் கட்டை உங்கள் கைகளுக்குள் மட்டும் வைத்துக் கொள்ள விரும்பாதீர்கள். உங்களது தனித்திறமைகள் சமையல் கட்டையும் தாண்டி வெளிவர வேண்டும் என்றால் உங்களுக்கான இடத்தில் அவர்களுக்கும் சமபங்களியுங்கள்.
தேவைப்பட்டால் ஆண்களுக்கான சமையல் பயிற்சி பட்டறைகளை ஏற்பாடு செய்வதற்கு இப்புத்தகத்தின் எழுத்தாளர் தயாராக இருப்பார் என்று தோன்றுகிறது..
அப்படி என்றால் ஆண்கள் சமைப்பது அதனிலும் இனிது (Aangal Samaippadhu Athaninum Inidhu) தானே..!!
நூல் அறிமுகம் எழுதியவர்:
✍️பா.விமலா தேவி
பட்டுக்கோட்டை
Click to Join WhatsApp Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.