விவரிக்கத் தெரியவில்லை
எல்லை தாண்டிய இசைவுடன்
என்னிதயத்தில்
உனது நினைவுகள்
இடைவெளிகள்
புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன
அடர்த்தியாக்குகின்றன
நம்
நேசத்தின் அழகினை
முடிவற்ற சங்கிலித் தொடரில்
முளைத்தபடியும்,
மலர்ந்தபடியும் இருக்கின்றன
நம் நேச மல்லிகை மொட்டுகள்
அதிகமாய் விரும்பித் தொலைத்துக் கொண்டேன்
இதயத்தை
உன் அடர்நேசத்தில்
உச்சகட்ட நேச அதிர்வில்
பலமாகும்
எனது சிறகடிப்பு…
உதிர்ந்து கொண்டே இருக்கும்
விண்மீன்களை
சிறகுகளில் ஏந்திக் கொள்கிறேன்
ஒருபோதும் ருசித்திராத
உணவாகவே இருக்கிறது
ஒவ்வொரு நாளும்
நீ பரிமாறும் நேசம்
காந்த அலைகளைக் கணக்கிலடங்காது வெளியேற்றும்
உன் கண்கள் என்னைக்
கவர்ந்திழுத்துக் கட்டிப்போடும்
வசியம் செய்து
வனாந்தரம் ஏகும் விந்தை புரியும்
உலகின் மிக அழகான
விடயம்
உனது நேரான,மறையான
எதையுமே
கருத்தில் கொள்ளாமல்
பற்றிக்கொள்ளும்
ஒரு நேசவிரலைக் கண்டெடுப்பது
விவாதங்கள் இல்லாத பொழுதுகள்
வெறுமையான நாட்கள்
கிழிந்து தொங்கும் கணங்களிலும்
என் நேச உறவை ஒட்டுப்போட்டுத்தைத்துக் கொண்டு
ஆன்மாவை முழுமையாக்கிக் கொள்கிறாய்
நீயொரு நதி
நீயோரு ஈரத்தைப் பிரசவிக்கும்
ஊற்று
தண்ணீரின் அலைகளாய்
சிறு நேசத்தின் கல்லில்
பன்மடங்கு பிரவாகித்து
என் பிரபஞ்சம் சூழ்கிறாய்
வேண்டும் என்றே
மூழ்கி முழுதும் நனைகிறேன்
சுவாசம் போர்த்தும்
குளிர்ச்சியை இழுத்தணைத்துக்
கொள்கிறேன்
விவரிக்க இயலாத வார்த்தை
உனது நேசம்
விவரிக்க முடியாத வாசனை
உனது நேசம்
விட்டுக்கொடுக்கவே முடியாத
ஆன்மாவின் பிரகாசம்
நீ!
எழுதியவர்
Dr ஜலீலா முஸம்மில்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

