ஆறை விட ஐந்தே பெரிது! கவிதை – செ.கார்த்திகைசெல்வன்

Aarai vida Ainthe Periyathu Poem By Se Karthigaiselvan. ஆறை விட ஐந்தே பெரிது! கவிதை - செ.கார்த்திகைசெல்வன்




ஆம், நான் அரும்பாத
மலரே…
பால்மணங்கூட இன்னும்
என்னிலிருந்து
மறையவில்லையே
அதற்குள்
பாலியல் வண்புணர்வா?

தவழும் நிலையிலிருந்து
தற்பொழுதுதானே
தத்தித் தத்தி நடக்கும்
பரிணாமம் பெற்றேன்
அதற்குள் என்னைத்
தழுவ நினைத்தது
எவ்விதத்தில் நியாயம்?

எங்களின் புன்னகையில்
இறைவனல்லவா
தெரிந்திருக்க வேண்டும்
எப்படித் தெரிந்தோம்
உங்களின் பாலியல்
பசிக்கு இரையாக?

நல்லவர் தீயவர்
அறியாது யாவரிடமும்
அன்பைத்தானே
செலுத்துகின்றோம்
அதற்கு நன்றிக்கடனாய்
கொடுமையின் உச்சமா?

உங்களுக்கு மதத்தில்
மதமென்றால்
மழலை நாங்களென்ன
செய்தோம்?
மலரவிடாமல் இப்படி
நசுக்கி நாளும்
வதம் செய்கிறீர்களே!

ஐந்தறிவு
ஜீவிகளிடத்தில்கூட
இவ்வளவு வன்மம்
இல்லையே
ஆறறிவர் மனிதயினம்
என இனி எதைக்கொண்டு
நிரூபணம் செய்வீர்?

பத்துமாதம் சுமந்தவள்
பதறி அழுகிறாள்
கொஞ்சி விளையாடி
தோளில் சுமந்தவன்
மார்பிலடித்துக் கதறுகிறான்
இதற்கான ஆறுதல்
இங்கென்ன உண்டு?

மதா பிதா குரு தெய்வம்
என்றறிந்த உங்கள்
மனிதமனம் – மதா பிதா
குழந்தை குரு தெய்வம்
என்பதை மட்டும்
உணராதது ஏன்?

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.