“வால்பாறையின் கதை” நாவல் – நூல் அறிமுகம்
தமிழகத்தில் உள்ள மலைவாசஸ்தலங்களில் எனது மனசுக்கு நெருக்கமான இடம் வால்பாறைதான். ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்றவை வணிகத்தலங்களாக மாறிவிட்ட மாறிவரும் சூழலில், சூழலில் பெரிதும் மாற்றங்கள் இன்றியும் இன்னும் வனவிலங்குகளுக்கான வாய்ப்பான காட்டுச்சூழலைத் தன் வசம் கொண்டிருக்கும் வால்பாறை பகுதி எப்போதும் உவப்பானதுதான்.
வால்பாறையின் வனப்பானது அடிவாரத்தில் ஆழியார் அணையிலிருந்தே குறிப்பாகக் குரங்கருவி (இப்போது கவியருவி)யில் இருந்தே தொடங்கிவிடும். அட்டகட்டி, வாட்டர்பால் எஸ்டேட், ரொட்டிக்கடை, சோலையாறு, சின்னக்கல்லார், ஊமையாண்டி முடக்கு, அதிரப்பள்ளி அருவி, கூழாங்கல் நதி என்று தன்னகத்தே கொண்டுள்ள அழகும் ஆச்சரியங்களும் ஏராளம். அதனாலேயே ஆரா அவர்கள் எழுதிய இந்தப் புதினத்தை வலிந்து தேடி படித்தேன்.
கூப்புக்காடு என்பது மலைக்காட்டில் பல்லாண்டு காட்டு மரங்களை அழித்து செடி கொடிகளை வெட்டி சுத்தம் செய்து ஏலக்காய் பயிரிடும் நிலையில் உள்ள (அதாவது தேயிலைத் தோட்டம் அமைப்பதற்கான முதல்படி) காடு என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். மேலும் ஏலக்காய்க்கு நிழல் தேவை என்பதால், மரங்களை முழுதாக வெட்டமாட்டார்களாம். அடுத்த நிலை பல நூறாண்டு மரங்களை வெட்டி காப்பித் தோட்டங்கள் ஏற்படுத்துவது. பாதி நிழலும் பாதி வெயிலும் தேவைப்படும் காப்பித் தோட்டம் ஏற்படுத்துவது இரண்டாம் படிநிலை. அதற்குப்பின் முழுவதும் காட்டு மரங்கள், செடிகள் புதர்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு மலை மொட்டையாக்கப்பட்டு தேயிலைச் செடிகள் நடப்படுவது இறுதி நிலை. பல்லுயிரியத்தை மொத்தமாகப் புதைத்து நமக்கான பெருஞ் சவக்குழியைக் கட்டமைக்கும் நிலை.
டேனியல் எழுதிய ரெட் டீயின் தமிழ் மொழிபெயர்ப்பான எரியும் பனிக்காடு கடந்த 2009-ல் வாசித்திருந்தேன். பெரிதும் மனஅவசத்தை உருவாக்கிய படைப்பு என்றால் மிகையாகாது. அதிலும் தமிழ் மொழிபெயர்ப்புக்குச் சொந்தக்காரர் தோழர் இரா.முருகவேள். அவர் தன்னளவில் தேர்ந்த எழுத்தாளர் என்பதால் இலகுவான மொழிபெயர்ப்பு வாய்த்து எரியும் பனிக்காடு ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்பதே தெரியாத அளவுக்கு நெருக்கமாக இருந்தது. அதை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட இயக்குநர் பாலாவின் பரதேசி அப்புதினத்தின் ஆன்மாவையே சிதைத்து விட்டார்.
இந்நூலின் முன்னுரையில் ஆதவன் தீட்சண்யா சொல்லியிருப்பது போல எரியும் பனிக்காட்டில் சொல்லாததை ஆரா என்ன சொல்லி விடப் போகிறார் என்ற மனநிலையில்தான் புதினத்துக்குள் நுழைந்தேன். அந்த புதினத்தில் இல்லாத தேயிலைக் கூலிகளின் கொண்டாட்ட மனநிலையும், தேயிலைத் தோட்டம் தவிர்த்து கூப்புக்காட்டில்/கவாத்துக்காட்டில் கூலிகளின் நிலையும் இந்நாவலில் எடுத்தாளப்பட்டுள்ளது இப்பிரதியை கவனிக்க வைக்கிறது.
நூலின் நுழைமுகமாக தேயிலையில் வரலாற்றினை மார்க்சீய நோக்கில் ஆரா எழுதியுள்ளது மிகப் பொருத்தமானது. மேலும் புதினத்தின் வழிநெடுக முகரத்தரும் இடதுசாரி நெடி இதனை ஓர் இலட்சியப் படைப்பாகவும் மிளிரச் செய்கிறது – தேயிலைக் கூலிகளின் அடுத்த நடவடிக்கை எதை நோக்கி இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிச் செல்வதால்…!
பாடி எனப்படும் தேயிலைத் தொழிலாளர்கள் குடியிருப்பு வாழ்வியல் நாவல் முழுக்க விரிவாகவும் காட்சிபூர்வமாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. எல்லாரும் கூலித் தொழிலாளிகளாக இருந்தும் சமதளப் பகுதியில் இருந்து கொண்டு வந்த ‘சீதனமான’ சாதியை விட இயலாதது, சங்கம் வைத்து உரிமை கோரும் நிலை ஏற்பட்டாலும் தொழிலாளர்களுக்கு தனி சங்கம், ஸ்டாஃப் எனப்படும் அலுவலக ஊழியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு ஒரு சங்கம் என்று பிரித்து வைத்து படிநிலை அதிகாரக் கட்டமைப்பை உறுதிப்படுத்தி வர்க்க முரண் மழுங்காமல் பார்த்துக் கொள்ளும் முதலீட்டியம், சாதி கடந்த வாலிபால் அணியின் கேப்டன் தனக்குப் பிடித்த சரவணனை தனது மகள் சாராவுக்கு மணமுடித்து வைக்கும் முகமாக கிறித்துவத்தின் பக்கம் அவனை ஈர்க்க முயல்வது, காம்ரேடாக இருந்தாலும் தான் உயர்சாதி என்ற பெருமிதம் கொள்ளும் சிண்டிகேட் சங்கரன், இரு மாநிலங்களின் இணைப்பகுதியாக இருப்பதால் தமிழர் மலையாளிகள் என்னும் முரண்பாடு எனப் பல விசயங்களைப் பேசிச் செல்கிறது புதினம்.
எனக்கு மிக முக்கியமான பகுதியாக புதினத்தின் 12வது பிரிவான ‘நிலச்சரிவில் புதைந்த மனசாட்சி’ தோன்றுகிறது. இடமலைக்குடி காடன்குடிசையில் இருந்து வந்து வால்பாறை பள்ளியில் படிக்கும் முருகனின் கதை அது. தமிழ்நாடு கேரளா எல்லை பிரித்தபோது காட்டுப் பழங்குடியினரான முருகனின் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் வெள்ளவரைக்குடி கேரளாவிற்குள் போய்விட்டதால், முருகனின் குடும்பம் மட்டும் தமிழகத்திற்குள் தங்கிவிட்டது. எல்லைக்கோட்டுக்கு அந்தப்பக்கம் அனைத்து சொந்தங்களும் இருக்கின்றனர். அங்கு அவர்கள் தமிழ் பேசும் மலையாளிகள். இங்கு முருகன் குடும்பம் மலையாளம் பேசும் தமிழர்கள் என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள். மலையாளம் கலந்த தமிழ் பேசும் முருகன் தமிழனா மலையாளியா என்று யாருக்கும் தெரியாது என்ற ஆசிரியரின் சொற்றொடர் பல சிந்தனைத் திறப்புகளை ஏற்படுத்தக் கூடியது. இங்கு முருகன் குடும்பம் அகதி போல. கேரளாவில் இவன் உறவினர்கள் அகதிகள் போல. ஒரு பெரு மழையில் காடன்மார் குடிசைப்பகுதியில் இருந்த நாற்பது குடும்பங்களும் மண்ணுக்குள் போய்விடுகிறது. இரு அரசுகளும் இதை கண்டு கொள்ளவில்லை. இருந்த ஒட்டுமொத்த உறவுகளும் இழந்த நிலையில் முருகன் பள்ளி இல்லாத நாட்களில் மார்க்கெட்டில் மூட்டை தூக்கியும் பள்ளி விடுதி திறந்ததும் படிக்க வருவதாகவும் ஒட்டு மொத்த அகதி வாழ்வின் அரசியலையும் வலியையும் இரு பக்கங்களில் ஆரா எழுதிச் சென்று விடுகிறார். இது போல எண்ணற்ற வாழ்வுகள், வலிகள், கொண்டாட்டங்கள் என்று வால்பாறையின் மற்றொரு பரிணாமம் இப்புதினம்.
அழகு பொதிந்த தேயிலைத் தோட்டங்களின் பின் உறைந்து போயுள்ள தொழிலாளர்களின் குருதி வரலாறுகள் இன்னும் எத்தனை எத்தனையோ? நாம் சுவைக்கும் ஒரு மிடறு தேநீரின் நிறம் ஏன் கருஞ்சிவப்பாக இருக்கிறது என்ற கேள்விக்கான பதிலை கொண்டிருக்கிறது ஆராவின் கூப்புக்காடு.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “கூப்புக்காடு: வால்பாறையின் கதை” நாவல் |
| ஆசிரியர்: | ஆரா |
| வெளியீடு: | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| விலை: | ₹.210 (10% Discount Price ₹.189.00) |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 அன்புச்செல்வன் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

