காலம்தான் எவ்வளவு பொய்மைகளின் தோலுரிக்கின்றது. நீங்கள் உண்மை என்று நம்பிக்
கொண்டிருக்கும் பல செய்திகள் பொய்மையாகவும் பொய்மை என்று கடந்து போய்க் கொண்டிருந்த
பல செய்திகள் உண்மையாகவும் மாறுகிற ஒரு ரசவாதத்தை இந்நூலின் பல கட்டுரைகள் நம்முன்
கட்டுடைத்து போடுகிறது. வாசிக்கின்ற நாம் வாயடைத்து நிற்கிறோம்.
உண்மைக்கும் புனைவிற்கும் ஒரிரு நூல் இடைவெளி இருக்கலாம். அதற்காக நீண்ட காத தூர
இடைவெளியெல்லாம் இருந்தால் அதை செங்குத்தாக நிறுத்தி உண்மைகள் யாவும் விழுந்து
தற்கொலை செய்து கொண்டே இருக்கும்.
ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள், ஆளுமைகள் பற்றி துலாபாரமாக புலனாய்வு செய்து கண்டு,
கேட்டு, உண்டு, உயிர்த்த அத்தனையையும் புறம் தள்ளி தீர விசாரித்து, உண்மையான தரவுகளை
மட்டும் சேகரித்து மிகச்சிறந்ததொரு கட்டுரையை ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள்
எழுதியிருக்கிறார்.
மொத்தம் 13 ஆளுமைகளைப் பற்றிய கட்டுரை. கட்டுக் கதைகளை எல்லாம் நீக்கிய கட்டுரை.
மேலோட்டமான செய்திகள் எவற்றிலும் இல்லை. அடி ஆழம் வரை தேடிச் சென்று சேகரித்த
தகவல்களை கோர்த்துச் செய்த அழகிய சொற்கோவையென திகழ்கிறது.
ஜி.யு.போப் பற்றிய ஒரு உலகளாவிய பொய்யை அவரது கல்லறையில் நின்று உடைத்தெறிகிறார்.
இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கி கொண்டிருப்பதாக அவரது கல்லறையில்
பொறிக்கப்பட்டிருப்பதாக இதுகாறும் நாமறிந்த பொய்யை படம்பிடித்து போட்டிருக்கிறார். அரசு
பாடநூற்களிலிருந்து, பேச்சாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் யாவர் வாயிலிருந்தும் எப்படி இப்படி ஒரு
பொய் பரவியது என்பதையும் தேடுகிறார். ஜி.யு.போப் அவர்கள் இறந்த சமயம் சித்தாந்த தீபிகை
என்ற மாத இதழில் அதன் ஆசிரியர் சைவ சித்தாந்த பேரறிஞர் ஜே.எம்.நல்லசாமிப் பிள்ளை
அவர்கள் எழுதிய இரங்கல் கட்டுரையில் ஜி.யு.போப் அவர்களைப் பற்றி எழுதிய ஒரு வார்த்தையே
கட்டுரைக்கு தலைப்பாகவும் சூட்டப்பட்டுள்ளது. அதுவே திரிந்து பறந்து இன்று உண்மை போல்
கல்லறையில் கிளை பரப்பி நிற்கிறது.
அது போல் ஆஷ்துரையின் குடும்பம், வாரிசுகள், வாஞ்சிநாதன் குடும்பம், அவரது கடிதம், உவேசா
வைப் பற்றிய சுவாரசியத் தகவல்கள், வ.உ.சி.யும் திலகரும் பற்றிய செய்திகள், ஏ.கே.செட்டியார்
குறித்த தகவல்கள், பொது உடமையர் சி.எஸ் சுப்பிரமணியம் குறித்த செய்திகள், பாரதம் தந்த
பகீரதன் ம.வி. இராமனுஜாசாரியர் அவர் மொழிபெயர்ந்த மகாபாரத புத்தகத்தின் மொழிபெயர்ப்பு
செலவுகள், யாவற்றையும் துல்லியமாக பதிவு செய்திருக்கிறார்.
அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு அற்புதமான புத்தகத்தை எழுதிய ஆ.இரா.வேங்கடாசலபதி
நிச்சயம் பாராட்டிற்குரியவர்.
நூலின் தகவல்கள்
நூல் : ஆஷ் அடிச்சுவட்டில் :அறிஞர்கள் ஆளுமைகள் (கட்டுரை நூல்)
ஆசிரியர் : ஆ.இரா.வேங்கடாசலபதி
பக்கம் : 255
விலை : ரூ .275
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
நூலறிமுகம் எழுதியவர்
செ. தமிழ் ராஜ்
வண்டியூர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.