ஆசிரியர் நாட்குறிப்பு Aasiriyar Natkurippu

 

 

 

ஆசிரியரைப் பற்றி..

காஞ்சிபுரம் மாவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர். புத்தக வாசிப்பில் ஆர்வமுள்ளவர். பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம், தமுஎகச எனப் பல தளங்களில் இயங்குபவர். வீட்டில் தேன் மிட்டாய் என்ற நூலகத்தை நடத்தி வருபவர். வெற்றிக் கொடியில் புத்தக அறிமுக கட்டுரைகளை எழுதி வருகிறார்.

பெருந்தொற்று காலத்தில் நடைபெற்ற கல்வியில் நாடகப் பயிற்சியில் அறிமுகமானார்.. எந்த ஒரு நிகழ்வையும் வித்தியாசமான கோணத்தில் யோசித்து சரியான வினாக்களைத் தொடுப்பவர்…TNSF கள்ளக்குறிச்சி இணைய நிகழ்வில் தொடர்ந்து பங்கேற்பவர்.

நூலைப் பற்றி..

மனதைக் கவர்ந்த நட்பின் முதல் நூல்.. நாட்குறிப்பு என்றால் நான் சிறுவயதில் படித்த ஆனந்தரங்கப் பிள்ளையின் டைரிக் குறிப்பு மட்டுமே நினைவுக்கு வந்தது.. கூடவே, கலகலவகுப்பறை சிவா சாரின் புத்தகங்களிலும் நாட்குறிப்பின் முக்கியத்துவம் பற்றிப் படித்திருக்கிறேன். மலாலா, ஆனி ஃபிராங்க் நாட்குறிப்புகள் பற்றிய அறிமுகம் உண்டு.

நம் பழைய வரலாற்றை அறிந்து கொள்ள உதவுவதே இத்தகைய நாட்குறிப்புகள் தான்..

ஆசிரியர் உடைய நாட்குறிப்புகள் இந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக தான் இருக்கும்.. பணி புரியும் இடங்கள், வருடம் தோறும் புதிய மாணவர்கள், சந்தித்த சவால்கள், தீர்வுகள் எனப் பல பேருக்கு வழிகாட்டுவதாக அமையும்.. அப்படித்தான் உதயா அவர்களின் இந்த நூலும் நமக்கு வழிகாட்டுகிறது..

பெருந்தொற்றுக் காலத்தில் தொடங்கும் இந்த நாட்குறிப்பு, அவருடைய வீதி வகுப்பறை மாணவியைக் குறித்து எழுதி,

//நானும் கூட பூமியின் இருப்பில் அவசியமான உயிர் என்று எனக்கே தோன்றியது//

என்று பிறருக்கு உதவுவது எப்படி நமக்கே ஊக்கம் தரும் என்பதை மனதை தொடும் வகையில் கூறுகிறார்.

வகுப்பறைத் தூய்மை செய்தல் என்பது நமக்கு சாதாரண நிகழ்வாக இருக்கலாம்.. அதற்காக இட ஒதுக்கீடு பற்றிப் பேசி, கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து மத்திய அரசின் பட்டியலில் எப்போது சேர்ந்தது? என்று வினவி ,பெரியார், அம்பேத்கர் போன்றோரை துணைக்கழைத்து, ஒடுக்கு முறை பற்றிப் பேசி மாணவர்கள் தாங்களாகவே தூய்மை பணியை செய்ய முன்வரச் செய்வது உதயாவால் மட்டுமே முடியும்..

திரு.. இராஜேந்திரன் தம்புரா அவர்களின் கல்விச் செயல்பாடுகளை தான் பின்பற்றுவதாகக் கூறி, அதை நடைமுறைப்படுத்துவதையும் பதிவு செய்துள்ளார். மாணவர்களுக்காக புதிய வனவற்றை தேடிக் கொண்டு சேர்க்க வேண்டியதன் அவசியத்தைப் புரிய வைக்கிறார்.

பெண் கல்வியைப் பற்றி பேசும் அதே நேரத்தில் ஆண் குழந்தைகளையும் சரியாக கவனித்து அரவணைத்து சென்றால் ஒரு நல்ல சமுதாயம் அமைந்திடும் என்ற கருத்தையும் முன்வைக்கிறார்.

அவர் வகுப்பில் உள்ள குழந்தைகளின் பேச்சு படிப்பதற்கு அவ்வளவு இனிமையாக, ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் நாட்குறிப்பில் எழுதும் வினாக்களும் கூர்மை..// ஏன் மா படிக்கல?
ஏன் என்கிட்ட அன்பா இருக்க மாட்டேங்கற?
எல்லா கடையும் மூடினீங்க.. மதுக்கடையை மட்டும் திறந்தே வச்சிருக்கீங்க? //.

அடுத்து,
//நான் கொம்பு வைத்துக்கொண்டு அடித்ததில்லை . மாணவர்களை அன்பு வழியில் மட்டுமே நம்பிக்கை உண்டு எனக்கு // என்று ஒரு நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார். ஏன் அடிப்பதில்லை என்பதற்கான விளக்கங்களும் அருமை..

தன்னைப் பக்குவப்படுத்திய பகல் கனவு போன்ற நூல்களையும் நமக்கு அறிமுகம் செய்கிறார். வே டூ ஸ்கூல், தாரே ஜமீன் பர் போன்ற திரைப்படங்களையும் அறிமுகம் செய்கிறார் .

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தேவைகளைப் பற்றிப் பேசுவது மட்டுமல்லாமல் முகநூல் நட்புகளின் மூலம் அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளார்.

குழந்தைகளைப் புரிந்து கொண்ட ஆசிரியராக, கேள்வி கேட்கத் தூண்டும் ஆசிரியராக, அவர்களுக்குக் காது கொடுக்கும் ஆசிரியராக, கை கொடுக்கும் ஆசிரியராக பல கோணங்களில் மிளிர்கிறார் உதயா. தன் அனுபவங்களை மற்றவர்களுக்கும் பகிர்ந்து ஊக்கமளிக்கும் வகையில் நூலாக வெளியிட்ட உதயாவிற்கு வாழ்த்துகள். அனைவரும் வாசிக்கலாம்.

புத்தகம்: ஆசிரியர் நாட்குறிப்பு
வெங்களத்தூர் பள்ளி,
ஆசிரியர்: உதய லட்சுமி
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்.. 136

வகை: கட்டுரை

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *