ஆசிரியருக்கு அன்புடன் (AASIRIYARUKKU ANBUDAN) - கலகல வகுப்பறை சிவா

தபுல ரசா உளவியல் கொள்கையானது இந்த உலகத்திற்கு குழந்தை வரும் போது அதன் செயல்பாடுகள் மற்றும் அதன் அறிவு, ஒரு வெள்ளைத் தாளை போல இருக்கிறது. இந்தச் சமூகத்தில் பார்க்கும் விஷயங்களை, போலச் செய்து அந்த வெள்ளைத்தாளை நிரப்புகிறது குழந்தை.

வீடு, அதன் சூழல், பெற்றோர்கள் என்று குறுகிய பாதுகாப்பு வட்டத்திற்குள் இருந்து, முதன் முதலாக பள்ளிக்கூடம் என்ற சமூகத்துக்குள் குழந்தை தன் காலடியை வைக்கிறது.

அந்தப் பள்ளிக்கூடச் சூழலும், ஆசிரியர்களும் அந்தக் குழந்தையைச் செதுக்குவதில் மிக முக்கியமானவர்கள். ஆரோக்கியமான ஒரு தலைமுறையை உருவாக்கக் கூடியவர்கள். ஆசிரியர் என்பவர் குற்றங்களைக் களைபவர் மட்டுமல்ல; குற்றங்கள் புரியாமல், குழந்தைகளுக்கு முன்மாதிரியாய் இருப்பவர்.

அந்த ஆசிரியர்கள் இந்தச் சமுதாயம் தரும் புற அழுத்தத்தில் மீள முடியாமல் தவிக்கும் போது, புத்தக வாசிப்பு எப்படி அவர்களை மீட்சிப்படுத்துகிறதோ, அதேபோல ஆசிரியர் சார்ந்த திரைப்படங்களும் அவர்களை ஆற்றுப்படுத்தும்.

அப்படி உலக அளவில் இருக்கக்கூடிய ஆசிரியர் திரைப்படங்களைப் பற்றி இந்து தமிழ் திசையில் தொடராக எழுதியவற்றைத் தொகுத்து ஆசிரியருக்கு அன்புடன் என்ற நூலாகத் தந்திருக்கிறார் ஆசிரியர் கலகல வகுப்பறை சிவா. சீருடை, கரும்பலகைக்கு அப்பால் , கரும்பலகைக்கு அப்பால் (குறும்படங்கள்) என்ற ஆசிரியர் திரைப்படங்கள் சார்ந்த நூல்களை ஆசிரியர் ஏற்கனவே எழுதி இருக்கிறார்.

இந்த நூல் தொடராக வந்த போது அனைத்துத் தொடர்களையும் வாசித்து, அது சார்ந்த பெரும்பான்மையானத் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனாலும் ஒட்டுமொத்த தொகுப்பாக, ஒரு நூலாக வாசிக்கும் பொழுது, அதன் நெகிழ்ச்சி தனித்துவமானது.

இதில் மொத்தம் 30 கல்வி சார்ந்த திரைப்படங்களைப் பற்றிய தன்னுடைய பார்வையை ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

அமைதியான வகுப்பறை தான் நல்ல ஆசிரியரின் அடையாளமா? ஆசிரியர் மட்டுமே பேசிக்கொண்டு, மாணவர்கள் கிளிப்பிள்ளை போல் அதை கவனித்துக் குறிப்பேட்டில் எழுதுவது தான் கல்வியா? வகுப்பறையைக் கலகலப்பாக்கி, உரையாடல்களின் களமாக மாற்றி, மாணவர்களின் தேடலை ஊக்கப்படுத்தும் வகுப்பறைதான் இன்றைய தேவை. அந்த புரிதலை சொல்லக்கூடிய படம் 1967 லில் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமான To Sir with love ( இதன் தமிழாக்கம் தான் ஆசிரியருக்கு அன்புடன் என்று நூலின் தலைப்பு.)

இருட்டை இருட்டால் விரட்ட முடியாது வெளிச்சம் தான் இருட்டை விரட்டும் என்பதை சொல்லும் இந்தி மொழித் திரைப்படம் Notebook.( Teacher’s diary என்ற தாய்லாந்து மொழிப் படத்தை, உரிமம் வாங்கி இந்தியில் வெளியிட்டவர் சல்மான்கான்)

தேர்வும், மதிப்பிடும் முறை மட்டுமே ஒரு மாணவனின் தரத்தை நிர்ணயிக்கும் சூழல் பெரும்பான்மை மாணவர்களுக்கு இறுக்கத்தையே தருகிறது. அப்படி இல்லாமல் சுதந்திரமான ,சுமையற்ற கற்றலைத் தரும் கல்வியே அவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் நீடித்து, அவர்களை மேம்பட்டவர்களாக மாற்றுகிறது என்பதைச் சொல்லும் படம் summer hill.

இன்றளவும் கூட மாணவர்களுக்கிடையே இனப் பாகுபாடும் குழு மனப்பான்மையும் இருக்கிறது. அதை எவ்வாறு களையலாம் என்பதை சொல்லும் படம் Freedom writers..

இந்தப் பள்ளியில் நீட் கோச்சிங் சிறப்பாக இருக்கிறது. இந்தப் பள்ளி இந்த பிராந்தியத்திலேயே தரம் வாய்ந்த ஒன்று என்று தேடித்தேடி நம் குழந்தைகளை, நம் அந்தஸ்தின் அடையாளத்தைக் காட்டக்கூடிய பள்ளிகளில் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்னும் எளிய குழந்தைகளின் கனவுகளை சிதைக்காமல், அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டக்கூடியது அரசு பள்ளிகளே என்பதைச் சொல்லும் படம் The Rainbow Troops.

மாணவர்களை எவ்வாறு புரிந்து கொள்வது என்பது காலம் காலமாக ஆசிரியர்களின் தேடலாக இருக்கிறது. அந்தத் தேடலுக்கான விடை வேண்டுமானால் பார்க்க வேண்டிய படம் Goodbye Mr.chips..

அடைப்பட்ட நான்கு சுவர்களான வகுப்பறைக்குள் இயந்திரத்தனமாக கல்வியை திணிப்பதை விட, விளையாட்டு மைதானம், மரத்தடி , ஆய்வகங்கள், கலந்துரையாடல் என்று செயல்பாடுகளால், கல்வியில் ஆர்வம் குறைந்த மாணவர்களைச் சிறந்த மாணவர்களாக மாற்றும், டூரெட் சிண்ட்ரோம் நரம்பியல் நோய் கொண்ட நைனா மாத்தூர் என்ற ஆசிரியை பற்றிய படம் Hitchki..

சிக்கலும், குழப்பமும் நிறைந்த பருவம் வளர் இளம் பருவம். அந்தப் பருவத்தினரை வாழ்க்கையில் தடம் புரண்டு விடாமலும், விழுந்து விடாமலும் வழி நடத்த வேண்டிய கடமை பெற்றோர்களைப் போன்று ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. அந்தக் குழந்தைகளுக்குத் தர வேண்டியது அக்கறையான காதுகளை தான் என்பதை உணர்த்தும் படங்கள் Detachment, The class, blackboard jungle, jagrithi, shala, The – 400 blows, Dahavi Fa..போன்றவை..

தனக்கு இருக்கக் கூடிய வெண்புள்ளி நோயால், ஒரு கூட்டுப் புழுவைப் போல தன்னை சுருக்கிக் கொண்டு, மற்றவர்களின் கிண்டல்களுக்கு பயந்து ஒதுங்கி கிடந்த நம்ரூதா என்ற மாணவி பட்டாம்பூச்சி ஆகி தன்னுடைய கூட்டைப் பிரித்துச் சிறகடித்துப் பறப்பதைச் சொல்லும் படம்..Imago பொதுவாக நம் கல்வி முறையில் சமவெளிப் பகுதி மக்களுக்குள்ள கல்வி முறை தான் மலைப்பகுதி, கடல் பகுதிகளிலும் திணிக்கப்படுகிறது. ஆனால் தேவையானவர்களுக்கு என்ன தேவையே அதைக் கொடுப்பது தானே கல்வி.. தமிழர் நில வாழ்வியல் சார்ந்த கல்வியை எப்போது நாம் வடிவமைக்க போகிறோம்? என்ற கேள்வியோடு நம்மை யோசிக்க வைக்கும் படம் Sokola Rimba.

அறிவியலை வாழ்க்கைக்குப் பயன்படும் வகையில் ஆக்க வேண்டும். சூழலையும் காக்கும் வழிகளைக் கண்டறிய வேண்டும் என்பதைக் கூறும் படம் Egise Taara Juvvalu.

குழந்தைகளுக்குப் பெரும் கனவை விதைப்பதோடு மட்டுமல்லாமல், அந்தக் கனவை நினைவாக்க தேவையான கடினமான உழைப்பைப் பற்றியும் எடுத்துரைப்பதோடு, அன்பான ஆசிரியர்களின் கவனிப்பும், குழந்தைகளின் கனவை சாத்தியமாக்கும் என்பதைச் சொல்லும் படம் The Dreamer.
மாற்றங்கள் என்பது ஒரே நாளில் விளைந்து விடாது. அதற்கு மாபெரும் பொறுமை வேண்டும் என்பதை சொல்லும் படம் Manikkakallu.

பொதுவாக வரலாறு என்றாலே கடினமான பெயர்களையும் வருடங்களையும் , கஷ்டப்பட்டு மனனம் செய்து நினைவில் வைத்துக் கொள்வது என்பதல்லாமல், வரலாற்றில் இருந்து வாழ்க்கையை குழந்தைகளுக்கு புரிய வைத்தோம் என்றால் வரலாறு எப்போதும் தகராறு ஆகாது என்பதைச் சொல்லும் படம் The wave..
கல்வியில் இட ஒதுக்கீடுகள் குறித்து இன்றளவும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில் , அறிவு சார்ந்த புரிதல்களை நாம் பெற வேண்டுமானால் பார்க்க வேண்டிய படம் Aarakshan..

கல்விதான் வலிமையான ஆயுதம். வரலாற்றில் இருந்து கற்று அடுத்த நிலைக்கு நாம் உயர வேண்டுமானால் கல்வி அவசியம் என்று சொல்லும் படம். 84 வயதான மருகே அந்த வயதில் தன் அடிப்படை கல்விக்காக உரிமையைக் கோறும் படம் The First Grader..

அனைவருக்கும் கல்வி என்று உலக நாடுகள் அனைத்தும் திட்டங்கள் தீட்டினாலும், கல்வி என்பது பெரும்பான்மையோருக்கு இன்றும் எட்டாக் கனியாகவே இருப்பதற்குக் காரணம், அணுகல் சிக்கல்.. அருகமைப் பள்ளிகள் இல்லாததுதான் காரணம். பல்வேறு தடைகளை தாண்டி கல்வி கற்க வரும் கிராமத்து மாணவர்களையும், மலைப்பகுதி மாணவர்களையும் பற்றி யோசிக்க வைக்கும் படம் Walking to school..

குழந்தைகளின் கற்றல் குறைபாடுகளை புரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், கற்பித்தல் குறைபாடுகளையும் பெரியவர்களாகிய நாம் உணர வேண்டும் என்பதைச் சொல்லும் படம் The White Bridge.

குழந்தைகளை மதித்து கொண்டாட விரும்பும் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் Korczak. காலை எழுந்தவுடன் படிப்பு ,பின்பு மாலை முழுவதும் விளையாட்டு என்று நம் முப்பாட்டன் பாடி வைத்துள்ளார். குழந்தைகளின் அகமும் புறமும் மகிழ்ச்சியும் ஆரோக்கியமாய் இருக்க வேண்டும் என்றால் விளையாட்டு மிக முக்கியமானது. இன்று எதார்த்தத்திலோ, எத்தனை பள்ளிகளில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கிறார்கள்? அந்தப் பாட வேளையையும் கைப்பற்றிக் கொண்டு பாடம் நடத்தக்கூடிய ஆசிரியர்கள் இருக்கிறார்கள் தானே? ஆனால் விளையாட்டு என்பது மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்பதை உணர்த்தும் படம் The Nomadas.

இப்படி இந்த நூலில் இருக்கும் அத்தனை திரைப்படங்களைப் பற்றி வாசிப்பதோடு மட்டுமல்லாமல், அந்தத் திரைப்படங்களையும் பார்த்தோம் எனில் , ஆசிரியருக்கு குழந்தைகளின் புன்னகை தான் மிகப்பெரிய விருது என்பதை உணர்வோம்.

உலகின் வலிமைமிக்க ஆயுதம் கல்வி . அந்தக் கல்வியை பயன்படுத்தி ஒரு ஆரோக்கியமான இளைய தலைமுறையை உருவாக்க, வாசிப்பும் இது போன்ற திரைப்படங்களும் நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்லும் என்பது நிதர்சனமான ஒன்று.

நூலின் தகவல்கள் 

நூல் : ஆசிரியருக்கு அன்புடன்

ஆசிரியர் : கலகல வகுப்பறை சிவா

பதிப்பகம்: இந்து தமிழ் திசை

பக்கங்கள்: 132

விலை : ₹160.00

 

நூலறிமுகம் எழுதியவர்

May be an image of 1 person

பூங்கொடி பாலமுருகன் 

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *