நூல் அறிமுகம்: வே. இறையன்புவின் *ஆத்தங்கரை ஓரம்* – இளம்பிறைநூல்: ஆத்தங்கரை ஓரம்
ஆசிரியர்: வெ. இறையன்பு
வெளியீடு: New Century Book House
விலை: Rs. 110

வாசிப்பிலிருந்து..
புத்தக வாசிப்பின் அருமை பெருமைகளை வாசித்து மகிழ்ந்துவிட்டு புத்தகங்களை ஓரங்கட்டி மறந்து விடுகிறோம் என்ற கசப்பான உண்மை புத்தக நாளான இன்று மிகவும் உறுத்தியது. புத்தக காட்சியில் வாங்கிய பல நூல்கள் ‘ எங்களை எதற்காக வாங்கினாய்’ எனக் கேட்டு வருந்துவது போல் பார்வையில் படும் போதெல்லாம் சங்கடம் தந்துகொண்டிருப்பதால் இன்றொரு நூலினை முழுமையாக படித்துவிடுவதென தீர்மானித்தேன்.

பக்கங்கள் குறைவாக உள்ள நாவலான எழுத்தாளர் இறையன்பு அவர்களின் ‘ ஆத்தங்கரை ஓரம் நாவல். 203 பக்கங்கள். ஜெயகாந்தனின் அணிந்துரையைப் படித்ததும் நான் யூகித்த ஆத்தங்கரை கதையல்ல இக்கதை என்ற அறிதலுடன் வாசிக்கத் தொடங்கினேன்.

நாவலின் முற்பகுதியிலேயே ஒரு மிகச்சிறந்த நாவலை படித்துக்கொண்டிருக்கிறோம் என்ற நினைவு மகிழ்வைத் தந்தது. ஒரு நதியையும் அந்நதிக்கரையில் இயற்கையின் போக்கில் இயல்பாக வாழ்ந்த மலைவாழ் மக்களின் வாழ்வையும் அரசின் அணைகட்டும் திட்டத்தால் அம்மக்களின் வாழ்வு சிதறடிக்கப்பட்டதையும் வருத்தத்தோடு சொல்லும் கதையே’ ஆத்தங்கரை ஓரம்’ ஏற்கெனவே வசதி வாய்ப்புகளில் பெருகித் திளைக்கும் பணம்படைத்தவர்களின் கூடுதல் வசதிக்காக மலைவாழ் மக்கள் வாழ்வின் அமைதியும் வளங்களும் அரசால் சூறையாடப்பட்டு, கண்டங்கத்திரி களை மண்டிய வறண்ட நிலங்களில் அவர்களின் வாழ்வைத் தள்ளி வதைக்கும் அரசு எந்திரத்தின் அதிகார கோரப்பற்கள் எளிய மக்களின் வாழ்வை மென்றுத் துப்பும் கொடுமையை உளச்சான்றோடு பேசும் பாத்திரங்களும் காட்சிகளுமாக அதிர்வுகளை ஏற்படுத்துகிறது ஆத்தங்கரை ஓரம் நாவல்.

நதி ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன்மீது நிகழ்த்தப்படும் பேச்சுகளால் அது வறண்டுபோனது போன்ற மாயையில் வருந்தும் அம்மக்களின் சோகம் . மாலை நேரங்களில் மரங்களில் வந்து ஒட்டடையைப்போல் ஒட்டிக்கொண்டு சப்தமிடும் பறவைகள், கூந்தல்களைப்போல் பரவியிருக்கும் விழுதுகளை மரத்தின் உச்சி குளிர்விக்கும் நதியின் அழகு என சித்தூர் கிராமத்தின் எழில் கண்களில் தெரியும் காட்சியாக விரிகிற நுட்ப வருணனைகள் .சக அதிகாரிகளின் மத்தியில் தனிமைப்பட்டுப்போனாலும் மக்களுக்கு உறுதுணையாக நியாத்தின் பக்கம் நிற்கும் நிற்கும் ஓர் அதிகாரி. தனிப்பட்ட தன்வாழ்வை உதறி அரசு அணைகட்டுவதற்கு எதிரான மக்கள் போராட்டத்தை நெறிப்படுத்தி வழிநடத்தும் ராதா படங்கர் என்றப் பெண் , தன் எழுச்சியாக போராடத் தொடங்கிய இளைஞன் ,அவனது காணாமல் போன காதல் ,உயிரிழப்புகள் சிறைபடுதல் என போராடுபவர்களின் அத்தனைத் துன்பங்களும் வலிகளும் இழப்புகளும் தத்ரூபமாக நேர்மையாகப் பேசப்பட்டிருக்கிறது இந்நாவலில்.

மொழிகளைவிடப் பரிவர்த்தனைக்கு மிகவும் உதவியாக இருப்பது நம்மிடம் இருக்கும் யதார்த்தமான உண்மைதான்” என்ற எழுத்தாளர் குறிப்பிட்டுள்ள உண்மையே ஆத்தங்கரை ஓரம் நாவலின் கரை புரண்டோடும் வெள்ளமாகப் பெருகுகிறது. நியூ செஞ்சரியின் பத்தொன்பதாவது பதிப்பாக வந்திருக்கும் இந்நாவல் எளிய மக்களுக்கு எதிரான அரசின் சூழ்ச்சியை அப்பட்டமாக உரத்துப்பேசும் மிக முக்கியமான நாவலாக மனம் கனக்க வைத்துவிடுகிறது. புத்தக நாளில் மறக்க முடியாத நாவலொன்றைப் படித்த நல்அனுபவ நிறைவைப் பகிர்வதில் பெரிதும் மகிழ்கிறேன்.

இளம்பிறை

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)