18 தலைப்புகளில் பல்வேறு வகையான உணர்வுகள், தகவல்கள், நபர்கள் தொடர்பான கட்டுரைகள் அடங்கிய நூலே இது.
80’ஸ் கிட்ஸின் நினைவலைகளாகவே இக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் அமைந்துள்ளதாகத் தோன்றுகிறது.
முதல் பதிப்பாக வெளிவந்த ஆண்டு 2016. ஆனால் இதில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் யாவுமே எழுத்தாளர் அவர்களின் பால்யகால நினைவலைகளின்  மீட்சியாகவே மிளிர்ந்துள்ளன.
எண்பதுகளில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்நூலைப் படிக்கும்போது தமது வாழ்வனுபவத்தை அசைபோடக் கிடைக்கும் எண்ணற்ற தகவல்கள் விரவியுள்ளன எனலாம்.
தத்தமது வாழ்வியல் சூழலுடன்  பொருத்தி பார்த்தும் வேறுபட்டு நிற்பதை அனுசரித்து ஆராதனை செய்து மகிழும் பேரானந்தம் கிட்டுவது உறுதி.
சில நேரங்களில் நாம் அனுபவிக்க தவறிய தருணங்களை படிக்கும் போது எழுத்தாளரின் மேல் பொறாமை மேலிட்டு எழுவதையும் தவிர்க்க இயலவில்லை என்பதே நிதர்சனம்.
இசை, புத்தகம், காதல் , பாடல்கள், வாசனை, மரணம், கலைக் கூத்தாடிகள், திருநங்கை, இரவு என பல்வேறு உணர்வுகளின் பகிர்தலுடன் டைரி, டிரங்க் பெட்டி, சாவியிலிருந்து குழந்தைகளின் பொம்மை மற்றும் கைபேசி வரையிலான நினைவு பரிமாற்றங்கள் ஒவ்வொன்றையும் கலைநயத்துடன் காட்சிப்படுத்தி நமது உள்ளுணர்வை சிலாகிக்க வைப்பதாகவே படைத்துள்ளார்.
“குழந்தைகளின் வங்கிகளில் பொம்மைகளைத் தானே சேமிக்க முடியும்?”
என்பது போன்ற அறிவார்ந்த ஆக்கப்பூர்வமான சிந்தனையைத் தூண்டும் கருத்துக்கள் ஒவ்வொரு கட்டுரையிலும் பல இடங்களில் விரவிக் கிடக்கின்றன.
பள்ளி பருவத்தில் தான் அனுபவித்த, சந்தித்த நபர்கள், தருணங்கள் ஒவ்வொன்றையும் ஆழ்ந்து அனுபவித்து வாழ்தலின் மீது ஒருவித பிடிப்பை ஏற்படுத்தும் வண்ணம் எடுத்தியம்ப விதத்தில் தனித்துவமிக்கவராகத் திகழ்கிறார் எழுத்தாளர்.
– ஈர்ப்பு என்னும் ...
ஆத்மார்த்தி
இக்கட்டுரை நூலின் மற்றொரு தனிச்சிறப்பு என்னவென்றால் பல்வேறு கவிஞர்களின் கவிதைகளை கட்டுரைகளின் தொடக்கத்தில் வழங்கி அதனினூடே தனது கருத்துக்களை வலுப்படுத்தும் யுக்தி அலாதியான இன்பத்தை ஊட்டுவதாகவே அமைந்துள்ளது.
” பொன்மூக்குத்திப் பூக்களால் சிரிக்கும்
வேம்பின் புண்ணியத்தில்
அத்தனை கசப்பாக இல்லை
இந்தக் கோடை”
          -கதிர்பாரதி.
“வாடகைக்கும் வட்டிக்கும்
சீக்கு இல்லை லீவு இல்லை”
            – மு.சுயம்புலிங்கம்.
” சொல்லிக் கொள்ளும்படி
எதுவும் இல்லை
வாழ்தலின் நிமித்தம்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்”
             – கவிதா முரளிதரன்
    போன்ற எண்ணற்ற கவிதை வரிகளும் இந்நூலில் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன.
எழுத்தாளரின் சுய தம்பட்டமாக மாறிவிடும் சூழல் பல இடங்களில் இருப்பினும் அவற்றையெல்லாம் வெகு லாவகமாக மடைமாற்றி உணர்வுகளைக் கடத்தும் பாங்கு கவனிக்கத்தக்கது. எழுத்தாளரின் கவன வீச்சும், ஞாபக சக்தியும் மிரட்டும் வகையில் உள்ளதாகவே தொனிக்கிறது.
நல்லவோர் வாழ்வனுபவக் கட்டுரை நூல். அசை போட்டபடியே நமது வாழ்வனுபத்தை எழுதத் தூண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள். நன்றி.
ஆத்மார்த்தி எழுதிய 'வாழ்தல் இனிது ...
“வாழ்தல் இனிது”
ஆத்மார்த்தி.
யாவரும் பப்ளிஷர்ஸ்.
பக்கங்கள்: 116
₹.100/-.
பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *