aayesha natarasan - pannai yutham book review by shanmuga samy

இஸ்ரேல் கொடுங்கோல் ராணுவத்தால் குண்டு வீசப்பட்டு பாலஸ்தீன பள்ளிகளிலும் மருத்துவமனைகளிலும் இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட பாலஸ்தீன குழந்தைகளுக்கு வலியோடும்… விம்மல்களோடும்…”- ஆயிஷா இரா. நடராசன்

என்று தொடங்குகிற இந்நூலில் “பாலஸ்தீனத்தின் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மீது குண்டுவீசி ஆயிரக்கணக்கான அப்பாவிக் குழந்தைகளை இஸ்ரேல் எனும் ஆக்கிரமிப்பு ராணுவம் படுகொலை செய்கிறதே… அந்த வலியோடுதான், விம்மல்களோடுதான் இந்தப் படைப்பு உங்கள் கைகளுக்கு வந்துள்ளது. பண்ணை யுத்தத்தில் அப்பாவிக் கோழிகள் வெல்வதைப் போல பாலஸ்தீனமும் வெல்லட்டும். வாசிப்போம்… வாசிப்பை நேசிப்போம்…”
என்று தோழர் ஆயிஷா இரா.நடராசன் அவர்களின் முன்னுரையுடன் மிகச் சிறப்பாக பயணப்படுகிற இந்நூல்
நாம், நம்மிடையே, நம்மைச் சுற்றி நிகழும் இயல்பான வாழ்வியல் முறைகளை காண வேண்டும் என்பதற்காக கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவதற்கான அடையாளம் தான் இந்நூலில் காட்சியளிக்கும்.

72 பக்கமே கொண்ட நூல். ஆனால் குழுவாக செயல்படுதல்; தலைமை பண்பு; சுய உரிமைப் போராட்டம்; இன உரிமை போர்; யுத்த களத்தின் யுத்திகள்; நேசம்… நட்பு… தோழமை… உறவு… இப்படி நிறைய அவர் கற்றுக் கொண்டதை நமக்கு வழங்கியிருக்கிறார். நாம் அதை எடுத்துக் கொள்வதும் எடுத்துக் கொள்ளாதது நம்முடைய பாடு. ஆனால் எடுத்துக் கொண்டால் பல நன்மைகளோடு நாம் பொது சமூகமாக பரிணமிக்கலாம்.
நம் வாழிடமே எடுத்துக் கொள்வோமே. நம்மிடம் எப்போதும் அணுகியிருக்கும் உயிரினங்களை உற்று நோக்கினால் அவை தன் வாழ்விற்கான போராட்டத்தை மிகவும் சிறப்பாக முன்னெடுப்பதைக் காணலாம்.

இங்கே பண்ணை யுத்தமாக கோழிகளும், அவற்றை வேட்டையாடுவதற்கான நரிகளுமே கதாபாத்திரம்.
ஆம் கோழிகள் தங்களைத் தாங்களே ஒருங்கிணைத்து தங்களைக் காப்பதற்காக போராடுகின்ற காட்சியாக அமைத்து இந்நூலை வழங்கி இருப்பார் ஆசிரியர். மூலக்கதை டிக்கிஸ்-ஸ்மித். ஆம் அவரின் நூலை வாசித்து நெகிழ்ச்சி அடைந்த ஆசிரியர் தாம் உள்வாங்கியதை நமக்கு இங்கே அவருடைய பாணியில் கொடுத்துள்ளார்.

வாசிக்க வாசிக்க நாம் பார்க்கின்ற கோழியினம் நமக்கு வித்தியாசமாகத் தெரியும். ஆம் பாம்பு, பல்லி, பூச்சி எதுவாக இருந்தாலும் அவைகள் போராடுவதை நாம் பார்த்திருப்போம். இப்போதும் நமக்கு பல்வேறு காட்சிகள் வலைதளத்தில் கிடைக்கும். அப்படி இருக்கின்ற உயிரினங்களில் கோழிகள் எப்படி தனித்துவமாக போராடுகின்றன என்பதாக ஆசிரியர் காட்சி அமைத்து எழுதியுள்ள இந்நூலை அனைவரும் வாசிக்க வேண்டும்.

காட்சி ஒன்றுதான். ஆனால் அது நம்மை உலகம் முழுவதும் இழுத்துச் செல்லும். பாலஸ்தீனத்திற்குள் நுழைந்து அம்மக்களையே கொன்று துவம்சம் செய்து மீதம் இருக்கிற மக்களை வெளியேற்றி கொடூரமாக சிதைத்த இஸ்ரேலியே வெறியர்களின் சிந்தனை இங்கே நரிக்கு ஒப்பாக வருகிறது. ஆம் எவ்வளவு பாதுகாப்பாக கூண்டுகளில் கோழிகள் இருந்தாலும் நரிகள் நயவஞ்சகமாக எப்படி நுழைந்து தனக்கான உணவாகக் கோழிகளைக் களவாடிக் கொண்டு செல்கின்றன; அதை தடுத்து நிறுத்துவதற்காக கோழிகள் எப்படியெல்லாம் போராடுவதற்கான திட்டமிடலை செய்கின்றன என்பதாக விரிவாகச் செல்லும் இந்நூல். ஆனால் அது போல் பாலஸ்தீன காசா மக்கள் போராடுவதற்கு உரிமை இருக்கிறதா என்று நாம் இங்கே கேள்வி எழுப்பலாம். காசா மக்களுக்கு எதற்குமே உரிமை இல்லை. அவர்களுக்கு மூச்சு விடுவதற்கே உரிமை இல்லை.

இந்நூலை வாசிக்க வாசிக்க உலகில் அடாவடித்தனமாக பிற நாடுகளில் நுழைந்து அந்த மக்களை வதைக்கிற அதிகாரமிக்க பேர்வழிகளின் அயோக்கியத்தனங்கள் நம் கண்முன்னே விரியும்.கணக்கு போடுவதற்கு விதிமுறைகள் தேவை. அதுபோல் இந்நூல் உலக நயவஞ்சக தந்திர யுத்தங்களை காண்பதற்கான ஒரு விதிமுறை நூலாக நம் கண்ணுக்குத் தெரியும். இப்போது குறிப்பாக பாலஸ்தீனத்தை கவ்வியுள்ள இஸ்ரேல் நம் கண்ணுக்குத் தெரியும். கோழிகள் என்னென்ன வேலைகளை செய்கின்றன அருமையாக; அவை எப்படி நரிகளை எதிர்க்கின்றன; அவற்றை துவம்சம் செய்கின்றன என்பதை வாசிக்கும்போது மிகவும் உற்சாகம் பிறக்கும் நமக்கு. இந்நூலில் கோழிப் பண்ணையின் உரிமையாளர் ஒரு பார்வையாளர் மட்டுமே. அவருக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. என் பார்வையில் கோழிப் பண்ணையின் உரிமையாளர் அமெரிக்காகவேத் தெரிகிறார். ஆம் அமெரிக்காவும் அப்படித்தானே செய்கிறது. கோழிப்பண்ணை உரிமையாளருக்கு கோழிகளுக்கு என்னென்ன பிரச்சனை என்று தெரியாது. ஆனால் அமெரிக்காவுக்கோ அப்படியல்ல நரிகளுக்கு உதவி செய்வது போன்ற தந்திர வேலையைத்தான் இஸ்ரேலுக்கு சாதகமாக செய்து கொண்டிருக்கிறது அது. இஸ்ரேலுக்கு மட்டுமல்ல தனக்கான சுயநலத்துக்காக வளைத்து போடும் நாடுகளில் எல்லாம் இதுதான் நிலைமை. காரணம் கார்பரேட் சுயநல ராணுவ வெறி. ஒன்றை எடுத்துக் கொள்வோமே நாம் நமது வீட்டில் இருக்கிறோம். பக்கத்து வீட்டுக்காரர் வந்து நம்முடைய வீட்டை அவருடையது என்று கூறி வலுக்கட்டாயமாக நம்மை வெளியேற்றி அவர் உள்ளே நுழைந்து விடுகிறார் என்றால் எப்படி இருக்குமோ அதுபோலத்தான் இந்த பண்ணை யுத்தமும் இஸ்ரேலிய நயவஞ்சக வெறியும். இந்தப் பண்ண யுத்தம் நூல் நம் வாழ்க்கையில் ஊடு பாவாக இழைந்தோடி இருப்பதை அவ்வளவு அருமையாக வழங்கியிருப்பார் ஆசிரியர். பக்கம் 72 தான். ஆனால் பறந்துபட்ட பொருள் கொண்ட பொக்கிஷம். ஆசிரியர் தோழர் ஆயிஷா இரா. நடராசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! அவசியம் வாசியுங்கள் தோழர்களே மிகவும் அற்புதமான சுவாரசியம் காத்திருக்கிறது நூலில்.

வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!

நூலின் தகவல்கள் 

நூல் : “பண்ணை யுத்தம்”

நூலாசிரியர் : ஆயிஷா இரா நடராசன்

வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்

ஆண்டு : டிசம்பர் 2023

விலை : ரூபாய் 70/-

தொடர்பு எண்: 044 24332424

நூலறிமுகம் எழுதியவர் 

இரா. சண்முகசாமி

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *